படித்துப் பாருங்களேன்... History as a site of struggle - K.N.Panikkar 2014. Essays on history, culture and politics

தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான வரலாற்று அறிஞர் கே.என்.பணிக்கர், இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றுப் பேராசிரியர்களில் ஒருவர். சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் கேரளத்தின் சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆகவும் பணியாற்றியவர். இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் இவரது பங்களிப்பு உண்டு. கேரள வரலாற்று ஆய்வுக் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

kn panikkar 450தனிமனிதர்களையும், நிகழ்வுகளையும் கால வரிசைப்படிப் பட்டியலிடும் வரலாற்று வரைவிலிருந்து விலகி நின்று வரலாற்றை ஆராயும் வரலாற்று அறிஞர்கள் வரிசையில் இவருக்கும் இடமுண்டு.

வரலாற்றை மத அடிப்படையில் திரித்து, தம் வகுப்புவாத அரசியலுக்குப் பயன்படுத்தும் போக்கிற்கு எதிராக இடைவிடாது, அறிவுத்தளத்தில் இவர் போராடி வருகிறார். வகுப்புவாதத்திற்கு எதிராகப் போராடி வருவோர்க்கான போர்க் கருவிகளாக இவரது நூல்கள் விளங்குகின்றன. இதனால் கல்விப்புல எல்லையைக் கடந்து நிற்கும் சிறப்பு இவரது நூல்களுக்கு உண்டு.

இங்கு அறிமுகம் செய்யும் இந்நூல் இவரது எழுபத்தியேழு கட்டுரைகளின் தொகுப்பாகும்.

இவை பல்வேறு காலக்கட்டத்தில் நாளிதழ்கள், பருவ இதழ்கள், ஆய்விதழ்கள் ஆகியனவற்றில் வெளி யானவை. அவரது நேர்காணல்கள் சிலவும் இவராற்றிய தலைமையுரைகள் சிலவும் இவற்றில் அடங்கும்.

இவை அனைத்தையும் உள்ளடக்கத்தின் அடிப் படையில் ‘வரலாறும் வரலாற்று வரைவியலும்’ (15), ‘வகுப்புவாதமும் தேசிய அரசியலும்’ (21),‘வகுப்புவாத அரசியல்’ (20), ‘கல்வி’ (9), ‘பண்பாடு’ (12) என்ற தலைப்புகளில் தொகுத்துள்ளனர். (அடைப்புக்குறிக்குள் கட்டுரைகளின் எண்ணிக்கை இடம்பெற்றுள்ளது). இவை அனைத்தையும் படித்து முடித்தால் வரலாறு என்பது கடந்த காலத்தை மட்டுமே குறித்த ஓர் அறிவுத் துறை என்ற கருத்துநிலையிலிருந்து நாம் விடுபடுவோம்.

வரலாறும் வரலாற்று வரைவியலும்

இத்தலைப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலானக் கட்டுரைகள் கோட்பாடு சார்ந்தவை. ஆனால் வழக்க மான பாடத்திட்டம் சார்ந்த வரலாற்றுக் கோட்பாடு களை இவை போதிக்கவில்லை. இவ்வாறு போதிக் காமைக்கு அடிப்படைக் காரணமாக அமைவது, நூலாசிரியரின் முற்போக்கான தத்துவச் சார்புதான்.

வரலாற்று வரைவியலில் ஒன்றுக்கொன்று மாறு பாடான வரையறைகளும் விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன. இவ்வேறுபாடுகளுக்கான காரணம் என்ன என்பது குறித்து நம் கல்விப்புல பாடநூல்கள் குறிப்பிடுவதில்லை. இதனால் இப்பாடத்தை நடத்தும் பேராசிரியர்கள் பெரும்பாலோர் இவ்வேறுபாடுகள் குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் விளக்கம் அளிப்பதில்லை.

பணிக்கர் இது தொடர்பாக மாற்றுவரலாற்று வரைவியல் (Alternative Historiographics) என்ற கட்டுரையில், இவ்வேறுபாடுகளுக்கானக் காரணம், கல்விப்புலம் சார்ந்திருத்தலோ அறிவார்ந்த வேறு பாடுகளைக் கொண்டிருத்தலோ அல்ல என்கிறார்; அதிகாரத்திற்கான போராட்டத்தைப் பெரிதும் பிரதிபலிப்பதுதான் என்கிறார்.

இனவாத அடிப்படையில் இந்திய வரலாற்றை அணுகுவோர், ஐரோப்பியரைவிட இந்தியர்கள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்தை முன்வைக்கின்றனர். பணிக்கர் இக்கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஐரோப்பியரின் தொழில்நுட்ப மேலாண்மையே இந்தியரின் தோல்விக்குக் காரணமாய் அமைந்தது என்கிறார்.

போராட்டக்களமாக வரலாறு ((History is a site of Struggle)) என்ற தலைப்பிலானக் கட்டுரை, வரலாறு என்ற அறிவுத்துறையின்மீது செலுத்தப்படும் சித்தாந்த போராட்டங்களைச் சார்ந்தே இந்தியாவின் வரலாற்று வரைவு அமையும் என்ற கருத்தை முன்வைக்கிறது. காலனிய ஆதிக்கத்தின் ஒரு பகுதியே காலனிய நவீனத்துவம் என்று கருதும் பணிக்கர், மேற்கத்திய நவீனம், இந்தியாவின் நிலவுடைமை மரபு என்ற இரண்டிற்கும் இடையிலான முரண்பாட்டை வெளிப்படுத்தும் கருவியாகவே காலனிய வரலாற்று வரைவு பயன்பட்டது என்கிறார். வரலாறு குறித்த காலனியவாதிகளின் விளக்கத்தை ஆராய்ந்த பின்னர் மதவாத அடிப்படையிலான வரலாற்று வரைவையும் ஆராய்கிறார்.

காலனியம் சார்ந்த வரலாற்று வரைவையடுத்து உருவான மார்க்சியம் சார்பான வரலாற்று வரைவைக் கூறுகிறார். காலனியத்திலிருந்து விடுபட்ட நாடு குறித்து, தேசிய வரலாற்று வரைவு முன்வைத்தது. மார்க்சிய வரலாற்று வரைவானது விளிம்புநிலை மக்களான குடியானவர்கள், தொழிலாளர்கள் ஆகியோரையும் அவர்களின் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் முன்னிலைப்படுத்தியது. ஆனால் தலித்துகள், ஆதி வாசிகள், பெண்கள் ஆகியோரை கண்டுகொள்ள வில்லை. (பணிக்கரின் இக்கருத்து விவாதத்திற்குரிய ஒன்று) தேசிய, மார்க்சிய வரலாற்று வரைவானது சமயச்சார்பற்ற தன்மை கொண்டதாக விளங்கியது. ஆனால் கடந்த இருபதாண்டு காலமாக, சமய வகுப்புவாதம் இந்திய வரலாற்று வரைவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இப்போக்கானது வரலாறு என்ற அறிவுத்துறையைச் சிதைக்கின்றது.

இவ்வாறு நவீன இந்தியாவின் வரலாற்று வரை வானது, வரலாறு என்ற அறிவுத்துறைக்குள் நிகழும் சித்தாந்த போராட்டத்திற்கான களமாக அமைகின்றது. காலனியம் சார்ந்த வரலாற்று வரைவானது மீண்டும் தலைதூக்குகிறது. கடந்தகாலக் காலனியத்தை நியாயப்படுத்த முயற்சி செய்கிறது. குறிப்பாக புதிய வடிவிலான காலனிய ஊடுருவல் அறிவுநிலையிலும் பண்பாட்டுநிலையிலும் நிகழும் தற்காலச்சூழலில் இது கவனத்திற்குரியது. தேசிய வரலாற்றிற்கு மாற்றாக உலகளாவிய வரலாற்றின் தோற்றமானது உலக மயமாதலின் அதிகாரச் செயல்பாட்டின் அடையாள மாக அமைகின்றது.

***

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை ஞர்கள் சங்கம் புதுச்சேரி, பிரஞ்சு ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து வட்டார வரலாற்றுத் தொடர்பான பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்தியது. அதில் பணிக்கர் ஆற்றிய வழிகாட்டு உரை உலகமயமாதலின் சூழலில் வட்டார வரலாறு எழுதுதல் (Writing Local History in the Times of Globalisation) என்ற தலைப்பில் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.முழுமையான வரலாற்றுக்கு வட்டார வரலாறு துணைபுரிகிறது என்று குறிப்பிடும் பணிக்கர் எந்த ஒரு சமூகமும் வரலாற்று உணர்வின்றி இருக்காது என்றும் எல்லாச் சமூகங்களும் ஒரே சீரான வரலாற்று உணர்வைக் கொண்டிருக்காது என்றும் கூறுகிறார்.

இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு கிடையாது என்று காலனிய அறிவாளிகள் நீண்ட காலமாகக் கூறி வருவதற்கான காரணம் இவ்வேறுபாடினை அறியாதது தான் என்பது அவரது கருத்தாகும். உண்மையில் வரலாற்று உணர்வானது ஏதேனும் ஒரு வடிவில் எல்லாச் சமூகங்களிலும் வெளிப்படும். ஒரு சமூகத்தின் பண்பாட்டுச் சிறப்பியல்புகளுக்கு ஏற்ப சான்றாதாரங் களும் அதன் வீச்சும் வேறுபடும் என்றும் அவர் கருதுகிறார்.

பொதுவாக வரலாற்று அறிவானது சமூகத்தில் பின்வரும் இரண்டு வழிமுறைகளில் வெளிப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். முதலாவதாக, கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி வாயிலாகவும் கற்பித்தல் வாயிலாகவும் இது வெளிப்படும். கல்வி நிறுவனங்களின் வகுப்பறையில் கற்றுக்கொடுக்கப்படும் வரலாறு கல்விப்புல எல்லைக்குள்ளேயே அடங்கியிருக்கும். கல்விப்புலம் சார்ந்த வரலாறானது அரிதாகவே பொது மக்களைச் சென்றடையும். அண்மைக்கால வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் நீண்டகாலம் கழித்தே பாட நூல்களில் இடம்பெறும். இதற்கான காரணங்களுள் ஒன்று பாடத்திட்டங்களை நாம் அடிக்கடி மாற்றிக் கொள்ளாததுதான். புதிய சிந்தனைகளை பாடநூல்களில் இணைத்துக்கொள்வது குறித்தும் பெரிதும் தயக்கம் காட்டுகிறோம்.

இரண்டாவதாக, கல்விப்புல வரலாறுகள் எளிதில் பொதுமக்களைச் சென்றடைவதில்லை. என்ன காரண மாக இருந்தாலும் பொதுமக்களிடம் வரலாற்று உணர்வை உருவாக்குவதில் கல்விப்புல வரலாறு குறைந்த பங்களிப்பையே செய்கிறது. கல்விப்புல வரலாற்றிற்கும் பொதுமக்கள் வரலாற்றிற்குமிடையே பெரியளவிலான இடைவெளியுள்ளது. வரலாற்றுணர்வு ஊட்டுவதில் மக்கள் வரலாற்றிற்குப் பெரிதும் பங்குண்டு. மக்கள் வரலாற்றிற்கானச் சான்றுகள் தனிமனிதர்களுக்கு இடையே வேறுபடும். சமூக அனுபவங்களின் அடிப்படையில் இவ்வேறுபாடு அமையும். அண்டைவீட்டார், குடும்பத்தினர் எனத் தன்னைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து அறிவைப் பெற்றுக்கொள்கிறார்கள். இதன் விளைவாக மக்கள் வரலாறானது தலைமுறை தலைமுறையாக வாய் மொழியாகச் சொல்லப்படுகிறது. எல்லாச் சமூக நிறுவனங்களிலும் பாரம்பரியங்களிலும் அது புதைந்துள்ளது. மக்களின் வரலாறு என்பது அவர்களின் சமூக அனுபவங்களால் உருவாக்கப்படுகிறது.

மக்களின் வரலாற்று உணர்வானது மக்கள் வரலாற்றிலிருந்தே உருப்பெறுகிறது. மக்களின் வரலாற்றிற்கும் கல்விப்புல வரலாற்றிற்கும் இடையே இடைவெளி அடிக்கடிக் காணப்படும். இவ்விடை வெளியை உருவாக்குவதில் சுற்றுலாத்துறை சார்ந்த கற்பனைவாத வரலாறுகளுக்கு முக்கியப்பங்குண்டு. ஒரு குறிப்பிட்ட ஊரின் வரலாற்றைக் கவர்ச்சிகரமான முறையில் மிகைப்படுத்தி, கற்பனைத் தன்மையுடன் இவை பதிவுசெய்யும். சமூக யதார்த்தத்திற்குப் புறம்பான முறையில் வட்டார வீரர்களைக் குறித்த புனைவுகளை இவை தாங்கி நிற்கும்.

மக்களின் வரலாற்று உணர்விற்கான மற்றொரு ஆதாரமாக அமைவது வட்டாரத் தன்மையாக்கப்பட்ட வரலாறாகும். மக்களின் வரலாற்றிற்கும் வட்டாரத் தன்மையாக்கப்பட்ட வரலாற்றிற்கும் இடையிலான வேறுபாடு முக்கியமான ஒன்றாகும். மக்கள் வரலாறு என்பது சமூக நினைவுகளிலிருந்து உருவாகிறது என்றால் வட்டாரத்தன்மையாக்கப்பட்ட வரலாறு என்பது திட்டமிட்டே மக்களின் நினைவில் பதியவைக்கப் படுகிறது. சில குழுவினர் அல்லது இயக்கத்தினரின் அரசியல் அல்லது சமூகநலன்களுக்கேற்ப இது உருவாக்கப்படுகிறது. இப்போக்கிற்குச் சான்றாக அயோத்தியா தொடர்பான நூல்களையும் துண்டு வெளியீடுகளையும் குறிப்பிடலாம். வட்டார வரலாற்றை எழுதும்போது இம்மூன்று போக்குகளையும் இணைத்துப் பார்க்கவேண்டும்.

வட்டார வரலாறு

வட்டார வரலாறு என்பது எதைக் குறிக்கிறது என்பதை வரையறுத்துக்கொள்வது அவசியமானது. ஒரு வட்டாரம் ஒன்றை அளவுகோலாகக் கொள்ளலாமா என்றால், பெரிய வட்டாரம் ஒவ்வொன்றும் பல சிறிய வட்டாரங்களைத் தன்னுள் கொண்டிருக்கும். இதனால் வட்டாரம் என்பதை வரையறுக்க வேண்டும்.

ஒரு சிறிய அலகாக இன்று அமைவது ‘ஊராட்சி’ ஆகும். ஆனால் இதன் எல்லைகள் நிரந்தரமானவை அல்ல. நிர்வாக வசதிக்காக இவற்றின் எல்லைகள் மாற்றியமைக்கப்படும். சான்றாக, காலனிய ஆட்சிக் காலம் தொடங்கி தமிழ்நாட்டின் மாவட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. நிர்வாக வசதிக்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

எனவே நிர்வாகப் பிரிவுகளை, வட்டாரம் ஒன்றிற்கான அளவுகோலாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒரே தரத்துப் பண்பாட்டு நினைவுகளை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றைத் தேட வேண்டும். சமூக மற்றும் சூழலியல் குணாம்சங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒற்றைத் தன்மையற்ற பன்மைத் தன்மையுடைய அம்சங்களைக் கணக்கில் கொள்ளவேண்டும்.

வட்டார வரலாற்று வரைவுக்கு முக்கியமான சான்றாக வாய்மொழி மரபும், வாய்மொழி வரலாறும் அமைகின்றன. எல்லாச் சமூகங்களிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் தலைமுறை தலை முறையாக வாய்மொழியாகப் பரப்பப்படுகின்றன. இப்பரப்பலின்போது அவை மாறுதலுக்கு ஆளாகின்றன. வாய்மொழி மரபானது கடந்தகாலம் குறித்த சிக்கலான ஆவணமாகும் புராணங்கள், பழமரபுக்கதைகள் மற்றும் மக்களின் பிற நினைவு வடிவங்களில் அவை வெளிப் படுகின்றன. அவை கடந்த காலத்தின் குரலாகும். வரலாற்றை மறுகட்டமைப்புச் செய்வதில் இவை மிகவும் பயன்படும். வரலாற்று அறிஞர்கள் இவற்றின் பயன்பாட்டு எல்லை குறித்து விழிப்பாகவே இருப்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் பங்கேற்றவர்களாகவோ பார்வையாளர்களாகவோ இருந்தவர்கள் தம் நினைவில் அவற்றைப் பதிவு செய்து வைத்திருப்பார்கள். இதுவே வாய்மொழி வரலாறாகும். இக்கடந்தகால அனுபவங் களை அல்லது நினைவுகளை மீண்டும் நினைவு படுத்தும்போது குறிப்பிடத்தக்க அளவில் வேறுபாடுகள் உருவாகும். நிகழ்வுகளை மீண்டும் நினைவுகூறும்போது அவை மாறுதல்களுக்காளாவதுடன் மிகைப்படுத்தவும் படும்.

வாய்மொழி மரபு, வரலாறு என்ற இரண்டில் வாய்மொழி மரபானது சமூக நினைவாலும் வாய்மொழி வரலாறானது தனிமனித நிலையிலும் பாதுகாக்கப்படும். நினைவுகளில் புதையுண்டுபோவதால் பெரும்பாலான வட்டார வரலாறானது முழுமையாகப் பதிவுசெய்யப் படாமல் போகின்றது. இந்தியாவில் இச்சான்றுகள் முழுமையாகப் பதிவுசெய்யப்படவில்லை. சமூக மற்றும் தனிமனித நினைவுகளைப் பதிவு செய்யாததுடன் வரலாற்று மீட்டுருவாக்கத்திற்கு அவற்றைப் பொருத்திப் பார்க்கும் முறையையும் வட்டார வரலாற்று ஆசிரியர்கள் உருவாக்கவில்லை.

வட்டார வரலாற்றுடன் மிகவும் நெருக்கமான ஓர் ஆதாரமாக அமைவது பழமரபுக்கதைகள் ஆகும். ஒவ்வொரு வட்டாரமும் தனக்கென சில பழமரபுக் கதைகளைக் கொண்டுள்ளது. பழமரபுக்கதை என்பது வரலாறு அல்ல. ஆனால் அதில் வரலாறு அடங்கி யிருக்கும். வரலாறு தொடர்பான ஏராளமான செய்தி களையும் ஒரு குறிப்பிட்ட காலத்தின் சமூகப்பண்பாட்டு உணர்வுகளையும் அது வெளிப்படுத்தும். ஆனால் இது இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. வரலாற்றிலிருந்து பழமரபுக்கதைகளைப் பிரிப்பது ஒரு வட்டாரத்தின் வரலாற்றுணர்வை அறிய உதவும்.

முழுமையான வரலாறாக வட்டார வரலாறு

வட்டார வரலாறானது தனக்கென ஒரு முறை யியலை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் வரலாற்று முறையியல் பயிற்சி அவசியமாகும். வட்டார வரலாறு எழுதுவோர் வரலாற்றுப் பகுப் பாய்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். வரலாற்று வரைவுக்கு,

(i)            உண்மை

(ii)           சான்று

(iii)          பொதுமைப்படுத்துதல்

என்ற மூன்று தூண்கள் உண்டு. எல்லா உண்மைகளும் வரலாற்று உண்மை அல்ல. வரலாற்றியலாளர்களால் உண்மைகள் தேர்வு செய்யப்படுகின்றன. இவ்வுண்மை களைத்தான் வரலாற்றியலாளர் சான்றாக மாற்றி யமைக்கின்றார்கள்.

வரலாற்றைச் சித்தரிப்பதும் ஆய்வுசெய்தலும் வரலாற்றியலாளர்களால் கட்டமைக்கப்படுகின்றன. எனவே எல்லா வரலாறும் தற்சார்புடையவைதான். மூன்றாவதாக உண்மைகளிலிருந்து பொதுமைப் படுத்துதலுக்கானச் சான்றுகளை வரலாற்றியலாளன் எடுத்துக்கொள்கிறான்.

உண்மைகள் தாமாகப் பேசுமென்று அடிக்கடிக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் வரலாற்றிய லாளனின் பணி சேகரிப்பதுடனும், தொகுப்பதுடனும் முடிவடைந்துவிடுகிறது. ஆனால் மிக அரிதாகவே உண்மைகள் தாமாகவே பேசும். அதை வரலாற்றிய லாளன்தான் பேசவைக்க வேண்டும். இவ்வாறு பேச வைக்கும் வழிமுறைகளில் ஒன்று பொதுமைப்படுத்துதல் ஆகும். ஆனால் வரலாற்று வரைவில் பொதுமைப் படுத்துதல் என்பது கடினமானதாகும். வரலாற்று உண்மைகளையும் சான்றுகளையும் அடிப்படையாகக் கொண்டே பொதுமைப்படுத்துதல் அமைதல் வேண்டும்.

அண்மைக்காலமாக இவ்விதிமுறையானது வகுப்புவாத வரலாற்று ஆசிரியர்களால் மீறப்படுகிறது. வரலாற்று முறையில் தேர்ச்சிப் பெறாத என்.எஸ். இராஜாராம் சான்றுகளைத் தாமே உருவாக்கிக் கொள்கிறார். ஆரியர்கள் இந்தியாவின் பூர்வக்குடிகள் என்பதை நிறுவும்வகையில் சிந்துச்சமவெளி ஆய்வில் குதிரையைச் சான்றாகப் படைத்தார் (சிந்துச்சமவெளி அகழாய்வில் கிடைத்த முத்திரையில் பொறிக்கப்பட்டு இருந்த காளையின் கொம்புகளை, கணினியின் துணையுடன் குதிரையின் காதாக மாற்றியமைத்ததையே பணிக்கர் இங்குக் குறிப்பிடுகிறார்).

எல்லா வரலாறுகளையும் போன்றே வட்டார வரலாறும் பொதுமைப்படுத்துதலுக்குள் வரமுடியா மலேயே போய்விடுகிறது. பெரும்பாலான வட்டார வரலாற்றியலாளர்களின் பொதுவான பலவீனமாக இது அமைகின்றது. இதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் தகவல் களஞ்சியமாக மட்டுமே அவை அமைந்துவிடுகின்றன. வட்டார அளவிலான மிகுதியான சான்றுகளைக் கொண்டிருந்தாலும்கூட அவற்றின் நிலை இவ்வாறுதான் அமைகிறது. ஆகையால் வட்டார வரலாற்று வரைவானது பொதுமைப்படுத்துதலை நோக்கிச் செல்வது அவசியமான ஒன்றாகும்.

வட்டார வரலாற்றை ஏன் எழுதவேண்டும்?

எந்த ஒரு சமூகத்திற்கும் ஒற்றை வரலாறு கிடையாது. ஒரே சீரான வரலாறும் எந்த சமூகத்திற்கும் கிடையாது. பல சமயங்களையும் பன்முகத்தன்மை வாய்ந்த பண்பாடுகளையும் கொண்ட நாடு இந்தியா. எனவே இதன் எல்லாப் பகுதிகளும் ஒரே தன்மையிலான வளர்ச்சியைக் கொண்டவையல்ல. இந்தியாவின் ஒரு பகுதியில் நிகழ்ந்த நிகழ்வுகளை இந்திய உபகண்டம் முழுமைக்கும் பொருத்திப் பார்க்கிறோம். இது இந்திய வரலாற்றைப் பொதுமைப்படுத்தும் போக்காக அமைகிறது. மாணவன் ஒருவன் மௌரியர், முகலாயர் (அ) பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் குறித்துப் பயின்று பட்டம் பெற்றுவிடுகின்றான். ஆனால் தன்னுடைய சொந்தக்கிராமம் குறித்து அவன் எதையும் அறிந்து கொள்வதில்லை. தன் கிராமமும் அதன் சுற்றுப்புறமும் தனக்கென ஒரு வரலாற்றைக் கொண்டிருப்பதை அவன் உணர்வதில்லை. வரலாறு குறித்த அறிவில் இது ஒரு பகுதியாகக் கருதப்படுவதில்லை. வெகுசனத்தன்மை யுடன் கூடிய அரசியல் வரலாறு எளிதில் பரவலாக அறிமுகமாகிறது. வட்டார வரலாறு குறித்த அறிவானது இத்தகையச் சூழலில் அறிவியல் அடிப்படை கொண்ட தாகவும் ஜனநாயகத்தன்மை கொண்டதாகவும் முக்கியப் பங்காற்றமுடியும்.

வகுப்புவாதம் குறித்த நம் கருத்துகள் வட இந்தியாவிலும் மேற்கிந்தியாவிலும் உள்ள நிகழ்வுகளை மையமாகக்கொண்டு உருவாகின்றன. சிவாஜியையும் ஒளரங்கசீப்பையும் எடுத்துக்காட்டுகளாகக் காட்டு கிறோம். சூரத் அல்லது ஒளரங்காபாத்தில் நிகழ்ந்த கலவரங்களைச் சான்றுகளாகக் காட்டுகிறோம். வகுப்புக் கலவரங்கள் எதுவும் நடந்திடாத நாம் வாழும் பகுதியைக் கண்டுகொள்வதில்லை. வட்டார வரலாறு குறித்த உணர்வு இருக்கும்போதுதான் இதை அறியமுடியும். வகுப்புவாதத்திற்கு எதிரானக் கருத்துப் பரப்பலில் வட்டார வரலாற்று அறிவு துணைநிற்கும்.

ஒருவேளை ஒருவரது கிராமத்தில் வகுப்புக் கலவரம் நடைபெற்றால் அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளமுடியும். ஆகையால் வட்டார வரலாற்றைப் புரிந்துகொள்ளும்போது அது வகுப்புவாத உணர்வை எதிர்க்கத் துணை நிற்கும்.

உலகமயமாக்கலில் வட்டார வரலாறு

ஒரு வட்டாரத்தின் மீதான உலகமயமாக்கம் வலுவானதாகும். உலகமயமாக்கலினால் ஒவ்வொரு வட்டாரமும் மாறுதலுக்காளாகிறது. வட்டாரப் பண்பாடுகளை அது புதைவடிவம் (Fossil) ஆக்குகிறது. இப்போக்கிலிருந்து ஒரு வட்டாரத்தின் பண்பாட்டு வடிவங்களையும் செயல்பாடுகளையும் எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம் என்பது நம்முன் உள்ள கேள்வியாகும். இதை எதிர்த்துச் செயல்படுவது என்பதே இவற்றைப் பாதுகாப்பதற்கான வழிமுறையாகும். ஆனால் இவ்வெதிர்ப்பு உணர்வானது, ஆளும் வர்க்கத் தினரிடத்தில் இருந்து வெளிப்படாது. ஏனெனில் பன்னாட்டு மூலதனத்தின் கூட்டாளிகளாக அவர்கள் உள்ளனர். மக்கள் பண்பாட்டின் வாயிலாகவே இப்போக்கை எதிர்க்க முடியும். வட்டார வரலாறானது மக்கள் பண்பாட்டை உள்ளடக்கியதாகும்.

வட்டார வரலாற்றின் தேவை

வட்டார வரலாற்று வரைவானது ஜனநாயகத் தன்மை கொண்டது. ஒரு சமூகத்தை ஜனநாயகப் படுத்துதலின் ஒரு பகுதியாகும். ஏனெனில் அது மக்களின் பண்பாட்டை அனுமதிக்கிறது. ஆனால் இத்தகைய ஜனநாயகத்தன்மை கொண்ட வரலாற்று வரைவானது, கடந்த சில ஆண்டுகளாக வரலாறு என்ற அறிவுத்துறை எதிர்கொண்டுவரும் வரலாற்றைப் புராணமாக்கும் ஆபத்தானப் போக்கிற்கு எதிராகும்.

***

‘வரலாற்றியலாளராக இ.எம்.எஸ்’ ((E.M.S. as Historian ) என்ற தலைப்பிலான கட்டுரை, வரலாறு என்ற அறிவுத்துறைக்கு இ.எம்.எஸ்.சின் பங்களிப்பை ஆராய்கிறது. கற்றறியும் ஆர்வமும் கற்றதை உள்வாங்கிக் கொள்ளும் இயல்பும் கொண்ட இ.எம்.எஸ் கோட் பாட்டாளராகவும் அதனை நடைமுறைப்படுத்தும் ஆற்றலும் கொண்டவராக விளங்கிய மார்க்சியவாதி.

மலபார் மாப்பிளா கலகத்தில் இடம்பெற்றிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலவுடைமை எதிர்ப்பு என்ற இரு கூறுகளையும் முதலில் வெளிப்படுத்தியவர் அவர் தாம். அதேநேரத்தில் அது உள்வாங்கியிருந்த மத வுணர்வையும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வகையில் இக்கலகமானது செயற்பாட்டிற்கான அறைகூவலாகவும் எச்சரிக்கையாகவும் விளங்கியது என்று கூறியுள்ளார்.

‘மகாத்மாவும் அவரது இஸமும்’, ‘இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு’ என்ற இரு நூல்களும் அவர் எழுதிய குறிப்பிடத்தக்க நூல்களாகும். காந்திய இயக்கத்தின் முரண்பாடுகளையும் சிக்கல்களையும் உணர்ந்திருந்த அவர் அவற்றை எந்திரகதியில் அணுகக் கூடாது என்பதிலும் விழிப்பாக இருந்தார். காந்தியத் திற்கும் மார்க்சியத்திற்கும் இடையிலான பொது அடை யாளங்களைக் கண்டறிதல் குறித்து அவர் குறிப்பிட்டு உள்ளார்.

புதிய சிந்தனைப்போக்குகள் குறித்து அவர் திறந்த மனதுடன் இருந்தார். தம் வாழ்வின் இறுதிக் காலத்தில் இத்தாலிய மார்க்சியவாதியான அந்தோனி கிராம்ஸ்கியின் ‘சிறைக்குறிப்புகள்’ (Prison Note Books) என்ற நூலைக் கற்றறிந்தார். கிராம்ஸ்கியின் சிந்தனைகள் அவரை ஈர்த்தன. பரந்தளவில் பரப்புவதற்கும் விவாதிப்பதற்கும் அவை தகுதியானவை என்று கருதினார். இதன் விளைவாக பி.கோவிந்தப்பிள்ளையுடன் இணைந்து கிராம்ஸ்கி குறித்த நூலொன்றை எழுதினார்.

***

பி.ஜே.பி.யின் அரசியல் குறித்து ‘‘Meaning of BJP Politics’’ என்ற தலைப்பில் 1998இல் பணிக்கர் எழுதிய கட்டுரை, இன்றைய அரசியல் சூழலில் பொருள்மிக்க ஒன்றாக விளங்குகின்றது. இக்கட்டுரையில் ஜனநாயகம், மதச்சார்பின்மை என்ற இரண்டிற்கும் எதிராக அணி திரட்டும் தன்மையில் பி.ஜே.பி.யின் அரசியல் உள்ளது என்று குறிப்பிடுகிறார். இத்தகைய மனப்போக்கானது அது ஆட்சிக்கு வந்தால் மேலும் வலுவடையும். பி.ஜே.பி.யானது இன்று பாசிஸ்ட் அமைப்பல்ல. பாசிஸப் போக்குகளைக் கொண்ட அமைப்பாகும். ஜனநாயக அமைப்பையும் அதன் நிறுவனங்களையும் தனக்குச் சாதகமாக அது பயன்படுத்துகிறது. இது ஜெர்மனியில் ஹிட்லர் மேற்கொண்ட தந்திரங்களை நினைவூட்டுகிறது.

கடந்த பத்தாண்டுகளாக பி.ஜே.பி. நடத்திவரும் அரசியலானது, அதன் பாசிஸப் போக்குகளுக்குச் சான்றாக அமைகின்றது. பகுத்தறிவிற்குப் புறம்பான அரசியலும் வன்முறையைப் பயன்படுத்தலும் அதன் நடைமுறைகளுக்கு முக்கியமானவை. அது வன்முறை களைப் பயன்படுத்துவதற்குச் சான்று, பாபர் மசூதி இடிப்புடன் முடிந்துவிடவில்லை. சங்பரிவாரத்திற்கு எதிரானவர்களைத் தாக்குவதும் வசைமாரி பொழிவதும் அதன் வன்முறைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும்.

நாஜிகளின் இன அரசியல் பி.ஜே.பி.யின் சமய அரசியலில் மறுவடிவம் எடுத்துள்ளது. மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளையும் பகுத்தறிவிற்குப் புறம்பான சிந்தனைகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ள பி.ஜே.பி.யின் அரசியல் மக்களின் வாழ்வைச் சிதைக்கின்றது.

பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் இப்பாசிஸப் போக்குகளுக்கு என்ன நேரும்? இக்கேள்வியானது அக்கட்சியின் சமூக அடித்தளத்துடன் இணைந்தது. இந்திய மக்கள் தொகையில் 82 விழுக்காடுள்ள இந்துக்களின் பெயரால் அதிகாரத்தைத் தேடுகிறது. இந்துக்கள் அனைவரும் ஒத்த தன்மைகொண்ட ஒரு சமூகம் என்ற அடிப்படையில் இத்தேடுதல் நிகழ்கிறது. இந்துக்களுக்கு இடையேயுள்ள சாதி, வர்க்க வேறு பாடுகளை அது கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. எனவே அது அதிகாரத்திற்கு வந்தாலும் அதன் சமய அரசியலால் சமூகத்தளத்தில் உள்ள முரண்பாடுகளைத் தீர்க்க இயலாது. இதிலிருந்து தப்பிக்கும் வழிமுறையாக ஜெர்மனியில் நடந்ததுபோல் பாசிஸ முறைகளிலே அது தஞ்சமடைய வேண்டும். வேறுவகையில் சொன்னால் மத்தியில் ஆட்சிக்கு வந்தபின்னால் முழு அளவில் பாசிஸத்திற்கு வாய்ப்புண்டு. இதை உணரத் தவறு பவர்கள் மட்டுமே அதிகாரத்தினை நாடும் கட்சிகளில் ஒன்றாக பி.ஜே.பி.யைப் பார்ப்பார்கள்.

***

அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரானப் போராட்டம் குறித்த நேர்காணல் ஒன்று ‘ஊழலும் மத்தியதர வர்க்கமும்’ (Corruption and the middle class) என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது. அன்னா ஹசாரே குறித்து ஊடகங்கள் உருவாக்கிய மாயத்தோற்றத்தைப் பணிக்கர் அம்பலப்படுத்தியுள்ளார். நேர்காணலின் இறுதியில் ஒரு வரலாற்று ஆய்வாளன் என்ற முறையில் அவர் முன்வைக்கும் கருத்துகள் வருமாறு: இந்தியச் சமூகத்தில் விளிம்பு நிலையினராக வாழும் தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோரின் அடிப் படைப் பிரச்சனைகள் எவற்றையும் அவர் முன்வைக்க வில்லை. வறுமை குறித்தும், வெகு சிலரிடம் செல்வம் குவிவது குறித்தும் அவர் எதுவும் பேசவில்லை. சமூகத்தின் ஒரு பிரிவினரிடமிருந்தே அதிகார வர்க்கம் தேர்வு செய்யப்படுவது குறித்தும் வினா எதுவும் எழுப்ப வில்லை. இப்பிரச்சனைகளையெல்லாம் லோக்பால் சட்டம் தீர்த்துவிடாது. வழக்கம்போல் சமூக மற்றும் அரசியல் அதிகாரம் மேல்சாதியினரிடமும் மேல்நிலை வர்க்கத்தினரிடமும் தொடரும். சமூக அமைதியைப் பராமரிக்க முதலாளித்துவ அமைப்பு மேற்கொண்ட மற்றொரு முயற்சியாகவே வரலாறு இதை மதிப்பிடும்.

***

வரலாற்றை எவ்வாறு எழுதவேண்டும்; எவ்வாறு கற்பிக்க வேண்டும்; எவ்வாறு கற்க வேண்டும் என்பன தொடர்பான ஓர் ஆழமான நூலாக இந்நூல் அமைந் துள்ளது. வரலாற்றுக் கல்வியின் அரசியல் குறித்த உண்மைகளை நாம் உணர்ந்துகொள்ளும்படி இந்நூல் தூண்டுகிறது. 652 பக்கங்களைக்கொண்ட இந்நூலில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட மிகமிகச் சிறுபகுதியே இக்கட்டுரையில் அறிமுகமாகியுள்ளது.

பணிக்கரின் சிந்தனைகளை உள்வாங்கினால் வரலாறு தொடர்பாக நம் பொதுப்புத்தியில் படிந்துள்ள தவறான கருத்துகள் நம்மைவிட்டு நீங்கும். அத்துடன் வரலாறு என்ற அறிவுத்துறை குறித்த ஆழமான புரிதல் நம்மிடம் உருவாகும்.

***

(இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்).

Pin It