படித்துப் பாருங்களேன்... KOJI KAWASHIMA (2000) MISSIONARIES AND A HINDU STATE TRAVANCORE 1858-1936 (திருவிதாங்கூர் இந்து ராஜியமும் மிஷனரிகளும்) OXFORD UNIVERSITY PRESS, NEW DELHI

இந்நூலாசிரியர் ஜப்பானிய நாட்டின் டோக்கியோ நகரிலுள்ள கோகுஷிகான் பல்கலைக்கழகத்தில் அரசியல், விஞ்ஞானம் மற்றும் பொருளியல் துறையில் விரிவுரையாளர்.இந்நூலின் முதல்பதிப்பு 1998-லும் இரண்டாம் பதிப்பு 2000-லும் வெளியாகியுள்ளது.

ஆங்கில ஆட்சிக்குக் கட்டுப்பட்டிருந்த அன்றைய திருவிதாங்கூர் இராச்சியம் இந்நூலின் ஆய்வுக்கள மாகும். திருவிதாங்கூர் மன்னராட்சி, ஆங்கில அரசு நிர்வாகிகள், கிறித்தவமிஷனரிகள் ஆகியோருக்கிடையிலான அரசியல் உறவை இந்நூல் ஆராய்கிறது. திருவிதாங்கூர் அரசை ஓர் இந்து அரசு என வரை யறுத்துவிட்டு, சமய வேறுபாடுகளுக்கிடையில் கல்வி மருத்துவ வளர்ச்சியில் திருவிதாங்கூர் அரசும் மிஷனரிகளும் செயல்பட்டமுறை குறித்தும் திரு விதாங்கூர்ப் பகுதியின் அடித்தளமக்கள் பிரிவினர் மீதான, அரசு மற்றும் மிஷனரிகளின் அணுகுமுறை குறித்தும், இந்நூல் ஆராய்கிறது.

இந்து அரசு

மன்னர்களால் ஆளப்பட்ட திருவிதாங்கூர்ப் பகுதியில் வேணாட்டு மரபு என்ற பெயரிலான ஆட்சி மரபைத் தோற்றுவித்தவர் மார்த்தாண்ட வர்மா (1729-1758). ஆட்சி அதிகாரத்திற்கான போராட்டத்தில் தனக்கு முந்தைய மன்னனின் மகன்களைக் கொலை செய்ததுடன், தனக்கு எதிராகச் செயல்பட்ட 42 பேர்களைத் தூக்கிலிட்டார். அத் துடன் நில்லாது அவர்களின் பரம்பரையே அற்றுப் போக வேண்டி அவர்களது குடும்பப் பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக ஏலமிட்டார். மனுதர்மம் அனுமதிக்காது என்பதால் தனக்கு எதிராகச் செயல்பட்ட பிராமணர்களைக் கொலை செய் யாது, பிராமணசாதிக்குப் புறம்பாக்கி அவர்களது நெற்றியில் நாய்ச் சின்னத்தைப் பொறித்தார்.

மற்றொருபக்கம் சில நிர்வாகச் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. நாடெங்கிலும் நிலங்கள் முறையாக அளக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டன. மிளகு வாணிபம் அரசின் ஏகபோக உரிமையானது.இவையெல்லாவற்றையும்விட 1750ஆம் ஆண்டில் அவர் செய்த ஒரு செயல் திருவிதாங்கூர் வரலாற்றில் மிகமுக்கியமான செயலாக அமைந்தது. அரசர் தன் குடும்பத்தினரும் அமைச்சர் உள்ளிட்ட அரசு அதி காரிகளும் புடைசூழ திருவனந்தபுரத்திலுள்ள பத்மனாபசாமி கோவிலுக்குள் சென்று, தன்னை பத்மனாபசாமியின் அடிமையாக அவர் அறிவித்துக் கொண்டார். அடிமை என்ற பொருளைத் தரும் ‘தாசன்’ என்ற சொல்லை அக்கடவுளின் பெயருடன் இணைத்து, ‘பத்மனாபதாசன்’ என்ற பெயரைத் தம் இயற்பெயருடன் இணைத்துக்கொண்டார். (இவரையடுத்துவந்த ஏழு மன்னர்களும் ‘பத்மனாப தாசன் என்ற பட்டத்தைத் தாங்கியே ஆட்சி புரிந்தனர்.)

பத்மனாப சாமியிடம் நிலமானியம் பெற்ற குடிஆளாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்டார். பத்மனாபசாமியே உண்மையான ஆட்சியதிகாரம் பெற்றவர் என்று வெளிப்படுத்தியதன் வாயிலாக அவரது ஆட்சி தெய்வீகமயமாக்கப்பட்டது.

பத்மனாபசாமியின் தாசன் என்பதை மக்களுக்கு நினைவூட்டிக்கொள்ளும் வகையில் புதிதாகப் பதவி யேற்கும் மன்னர் ‘படியேத்தம்’ என்ற சடங்கு ஒன்றை நிகழ்த்துவார். இச்சடங்கின்படி கோவிலின் முன் புள்ள பீடத்தில் தன் வாளை அவர் வைத்துவிடு வார். கோவிலில் பூசை செய்யும் போத்தி வாளை எடுத்துச் சென்று கருவறைக்குள் இறைவனின் முன் வைத்து பூசை நடத்திவிட்டு அதை எடுத்து வந்து மன்னரிடம் தருவார். இச்சடங்கு மன்னன் என் பவன் தெய்வத்தின் பிரதிநிதி என்பதை மக்களுக்கு நினைவூட்டி வந்தது. திருவிதாங்கூரின் திவானாக இருந்த சர்.சி.பி. ராமசாமிஅய்யர், பத்மனாபசாமியே உண்மையில் ஆட்சி புரிபவர் என்றும், ஆட்சியை நிர்வகிக்கும் வைசிராய்தான் திருவாங்கூர் மன்னர் என்றும் நவீன அரசியல் மொழியில் குறிப்பிட்டார். மன்னரை விமர்சிப்பது ‘சுவாமித்துரோகம்’ என்றானது.

இந்துசமயம் சார்ந்தவர் என்ற முறையில், ‘இரண்யகர்ப்பதானம்’ ‘துலாபுருஷதானம்’ என்ற இருதானங்கள் திருவிதாங்கூர் மன்னர்களால் வழங்கப்பட்டன. இவற்றுள் ‘இரண்யகர்ப்பதானம்’ பின்வருமாறு நிகழும்:

பெரியவடிவிலான தாமரைமலர் ஒன்று தங்கத் தால் செய்யப்படும். இதனுள் பஞ்சகவ்வியம் (பசுவின் பால், தயிர், வெண்ணெய், சிறுநீர், சாணம் ஆகியன வற்றின் கலவை) ஊற்றப்படும். மலர் வடிவிலான இப்பாத்திரத்தில் மன்னர் நுழைவார். அதன் பின் இம்மலர் மூடப்படும். பஞ்ச கவ்வியத்துள் ஐந்து முறை மூழ்கி மன்னர் வெளிவருவார். இதன் பின்னரே அவருக்கு முடி சூட்டப்படும். இதன் பின் தங்கத் தாமரையைத் துண்டு துண்டாக வெட்டியெடுத்து, மன்னரின் அந்தரங்க ஊழியர்களுக்கும், பிராமணர் களுக்கும் கொடையாக வழங்குவர்.

துலாபுருஷதானம் என்பது மன்னரின் எடைக்கு இணையான தங்கத்தை பிராமணர்களுக்குக் கொடை யாக வழங்குவதாகும்.

முறஐப்பம் என்பது அரசின் மற்றொரு முக்கிய சடங்காகும். தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள பத்மனாபசாமி கோவிலில் மன்னராட்சியால் நடத்தப்படும் இச்சடங்கின் நோக்கம், போரின் போது மேற்கொள்ளப்பட்ட செயல்களினால் ஏற் படும் பாவங்களைப்போக்கிக் கொள்வதும், நாடு செழிக்கவேண்டும் என்பதும்தான். இச்சடங்கில் நம்பூதிரிப் பிராமணர்களும் ‘போத்தி’ என்றழைக்கப் படும் பிராமணர்களும் மட்டுமே கலந்துகொள்ள அழைக்கப்படுவர்.

இச்சடங்கின்போது தலைமைப்புரோகிதர் வீற்றிருக்கும் பல்லக்கை, சிறிது தூரம் மன்னர் சுமப்பார். பின் அவரது காலில் விழுந்து வணங்கி அவரைத் தங்க சிம்மாசனத்தில் அமரச் செய்து, அவரது பாதங்களைக் கழுவுவார். இச்சடங்கில் கலந்துகொள்ளும் பிராமணர்களுக்கான தங்குமிடம், உணவு, தட்சிணை ஆகியவற்றுக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். 1875-76இல் 182,009 ரூபாய் இச்சடங்கிற்குச் செலவானது. இது அந்த ஆண்டு கல்விக்காகச் செலவிடப்பட்ட தொகையை விட அதிகமாகும். 1911ஆம் ஆண்டில் ஐந்து லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. இது அரசின் அந்த ஆண்டுச் செலவில் நாலு விழுக்காடாகும். இவை தவிர வருடத்திற்கு இருமுறை நிகழும் ஆராட்டுத் திருவிழாவின் போது கடலில் நீராட, ஊர்வலமாக பத்மனாபசுவாமியின் உலோகப் படிமம் எடுத்துச் செல்லப்படும். இவ்வூர்வலத்தை உருவிய வாளுடன் தலைமையேற்று நடத்திச் செல்பவர் திருவிதாங்கூர் மன்னர்தான். மன்னருடன் அரசு உயர் அதிகாரி களும் செல்வர்.

இவையெல்லாம் திருவிதாங்கூர் மன்னராட்சி யானது ஓர் இந்து ஆட்சியாக விளங்கியதன் அடையாளங்களாகும்.

*

மன்னர் ஆட்சியானது இந்து சமயச் சார்புடை யதாக விளங்கினாலும் இந்து சமயம் சாராத மக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. 1875இல் 20ரூ மக்கள் கிறித்தவர்களாகவும் 6ரூ மக்கள் இஸ்லாமியர்களாகவும் இருந்தனர். மன்னர் ஆட்சி யிடம் மதச்சகிப்புத் தன்மை இருந்ததாக சில மிஷனரி களும், ஆங்கில அதிகாரிகளும் குறிப்பிட்டுள்ளனர். இவ்விரு தரப்பிலும் இக்கருத்தை ஏற்றுக் கொள்ளா தோரும் உண்டு. ஆங்கில ஆட்சி திருவிதாங்கூர் மன்னராட்சிப் பகுதியில் நிலைபெறும் முன்பே, சிரியன் கத்தோலிக்கம் இங்கு நிலைபெற்றிருந்தது.

ஆங்கில ஆட்சி நிலைபெற்ற பின்னர் சீர்திருத்த கிறித்தவத்தின் இரு மிஷன்கள் இங்குப் பரவலாகச் செயல்படலாயின. முதலாவது எல்.எம்.எஸ். என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட லண்டன் மிஷன் சொசைட்டி, இரண்டாவது சி.எம்.எஸ் என்றழைக்கப் பட்ட சர்ச் மிஷன் சொசைட்டி. இவை தவிர, ‘சால்வேஷன் ஆர்மி (இரட்சண்யசேனை) ‘பிரதர் மிஷன்’, லூத்தரன் மிஷன்’ மறைமாவட்டங்கள் (டயோசிஸ்) சிலவற்றை உருவாக்கிச் செயல்பட்டனர்.

இந்த இடத்தில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் கிறித்தவ மிஷனரிகளுக்கும் இடையில் அப்படி யொன்றும் நெருக்கமான உறவு நிலவவில்லை என்பதைக் குறிப்பிட்டாகவேண்டும். சமயங்களுக் கிடையில் நடுநிலையான போக்கையே ஆ.கி.க கடைப்பிடிக்க விரும்பியது. 1813க்கு முன்பு வரை இந்தியாவில் கிறித்தவ மிஷனரிகளின் செயல் பாட்டை அது தடை செய்திருந்தது. என்றாலும் திருவிதாங்கூர்ப் பகுதியில் எல்.எம்.எஸ், சி.எம்.எஸ் ஆகிய மிஷனரிகளுக்குத் தொடக்கநிலையில் ஆங்கில ரெசிடெண்டுகளின் ஆதரவு கிட்டியது. இவ்வகையில் திருவிதாங்கூர் மன்னராட்சியில் முதல் ரெசிடெண் டான கர்னல் மெக்காலேயும், அவரையடுத்துவந்த கர்னல்மன்றோவும் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவ்விருவரது உதவியால் தேவாலயங்கள் கட்ட அனுமதி, கட்டுவதற்கான நிலம், நிதியுதவி ஆகியன எளிதாகக்கிட்டின. சார்லஸ் மிட் என்ற மிஷனரியை நாகர்கோவில் பகுதியில் உரிமையியல் நீதிபதியாக கர்னல் மன்றோ நியமித்தார்.

ஆனால் இவ்விருவருக்குப் பின்னால் வந்த வர்கள் இவர்களைப் போன்று ஆதரவளிக்கவில்லை. கிறித்தவர்களுக்கெதிரான நடவடிக்கைகளைத் திருவாங்கூர் மன்னராட்சி எடுத்தது. 1829இல் வெளி யிடப்பட்ட அரசாணையானது, கிறித்தவர்களாக மதம் மாறியோர், மதம் மாறுவதற்கு முன்னர் தமக்கு மேலேயுள்ள சாதியினரின் நடவடிக்கை களைப் பின்பற்ற உரிமையில்லாத நிலையினையே மதம்மாறிய பின்னரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. அத்துடன், தாம் விரும்பிய வண்ணம் ஆடை அணியும் உரிமையை கிறித்தவர்களுக்கு வழங்கியதைத் திரும்பப் பெற்றது. அரசு அதிகாரி களின் அனுமதியின்றி தேவாலயங்கள் கட்டுவதைத் தடைசெய்தது.

1829, 1858, 1859 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த தோள்சீலைப் போராட்டத்தில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் பணியாற்றிய ஆங்கில அதிகாரி களுக்கும், கிறித்தவ மிஷனரிகளுக்கும் இடையில் நல்ல உறவு நிலவியது.

திருவிதாங்கூர் மன்னராட்சியில் நிலை பெற்றிருந்த வர்ணாசிரமக் கோட்பாடு கிறித்தவ மிஷனரி களையும் பாதிப்புக்குள்ளாக்கியது. சான்றாக 1868 ஆகஸ்ட் 16ஆம்நாள் அன்று பஞ்சலிங்கபுரம் என்ற அக்கிரகாரத்தில் வில்லியம்லீ என்ற எல்.எம்.எஸ் மிஷனரி தாக்கப்பட்ட நிகழ்வைக் குறிப்பிடலாம். அந்த அக்கிரகாரத்தைக் கடந்து செல்ல அவர் முயன்ற போது, வேறு பாதை வழியாகச் செல்லும்படி அங்குக் கூடியிருந்த பிராமணர்கள் கூறினர். அவரும் மறுப் பேதும் கூறாமல் மாற்று வழியில் சென்றார். அவ் வழி மிகவும் கரடுமுரடாக இருந்தமையால், திரும்பி வரும்போது அக்கிரகாரத்தின் வழியாக வந்தார். இதற்காக அவரும் அவரது குதிரைக்காரரும் தாக்கப் பட்டார்கள்.

குற்றவாளிகளுக்கு முப்பது ரூபாய் தண்டம் மட்டுமே விதிக்கப்பட்டது. அக்கிரகாரம் என்பது தனிச் சொத்துரிமையாய் விளங்குவதால் நீதிமன்றத்தால் பொதுவழி என்று தீர்ப்பளிக்கப்படாதவரை, அவ் வழியே கடந்து செல்வோரைத் தடுத்து நிறுத்தும் அதி காரம் பிராமணர்களுக்கு உண்டு என்று திருவிதாங்கூர் அரசு கருதியது.

ஆனால் சென்னை அரசு (சென்னையில் இருந்த ஆங்கிலக் கவர்னரின் கட்டுப்பாட்டிற்குள் திருவிதாங்கூர் மன்னராட்சி இருந்தது) இதை ஏற்றுக்கொள்ள வில்லை. 1869 செப்டம்பரில், ‘கீழ்ச் சாதியினர் மீதான’ தடைகள் குறித்து ஓர் அறிக்கை அனுப்பும் படி ஆங்கில ரெசிடண்டுக்கு கட்டளையிட்டது. அதன்படி அவர் அனுப்பிய அறிக்கையில் பின் வரும் செய்திகள் இடம்பெற்றிருந்தன.

(i)            உயர்சாதியினர் பயன்படுத்தும் பொதுச் சாலை களைப் பயன்படுத்த அனுமதியில்லை.

(ii)           ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் நீதிமன்றங்கள் அரசு அலுவலகங்களுக்குள் நுழையத் தடை யுள்ளது.

(iii)          அரசு பள்ளிகளில் பயில அனுமதியில்லை.

(iv)         அரசு பணிகளில் நியமிக்கப்படுவதில்லை.

இவ்வேறுபாடுகளைப் போக்கும்படி சென்னை யரசு கட்டளையிட்டது. இக்கட்டளை உடனடி யாக நிறைவேற்றப்படவில்லையென்றாலும் படிப் படியாக நிறைவேறத் தொடங்கியது. இந்நூலின் அடிப்படைச் செய்தியாக இம்மாறுதல்கள் இடம் பெற்றுள்ளன.

மிஷனரிகளுக்கும், திருவிதாங்கூர் ஆட்சிக்கும் இடையிலான பின்வரும் மூன்று செய்திகள் இந் நூலின் மையச் செய்தியாகக் கொள்ளலாம்.

1)            மிஷனரிகளும் கல்வியும்

2)            மிஷனரிகளும் மருத்துவமும்

3)            மிஷனரிகளும் ஒடுக்கப்பட்ட சாதியினரும்.

மிஷனரிகளும் கல்வியும்

பிராமணர்கள் கல்விபெற திருவிதாங்கூர் மன்னர்கள் புர வலர்களாய் விளங்கினர். ஆனால் 1830 வரை சாமானியர்களின் கல்வியில் அது அக்கறை காட்ட வில்லை. திண்ணைப் பள்ளிக் கூடங்களில் ஆசான்கள் எனப் படும் கிராமப்புற ஆசிரியர்களிடம் சாமானிய மக்கள் கல்வி பயின் றனர். பண வடிவில் இன்றிப் பொருளாகவே இவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு எழுதவும் படிக்கவுமான அடிப்படைக் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. என் றாலும் பையன்களுடன் ஒப்பிடு கையில் இவர்களின் எண்ணிக்கை குறைவு தான். 1860க்குப் பின் பள்ளிக் கூடங்களை நிறுவும் பணியில் அரசு ஈடுபட்டது. மேற்கத்தியப் பாணி கல்வி வழங்குவதில் அரசை விட மிஷனரிகளே முன்நின்றனர். சான்றாக 1865-66ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் 1067 பேர் பயின்றனர். எல்.எம்.எஸ் நடத்திய பள்ளிகளில் 8081 மாணவர்களும் சி.எம்.எஸ் நடத்திய பள்ளிகளில் 2209 மாணவர்களும் பயின்றனர்.

மிஷனரிகள் நடத்திய பள்ளிகளில் விவிலியமும், கிறித்தவ சமயக் கருத்துக்களும் கற்றுக் கொடுக்கப் பட்டன. உயர் சாதியினர் இதை எதிர்க்கவே 1902-க்குப் பின் அரசு இதைத் தடைசெய்தது.

மிஷனரிகளின் கல்விப் பணிக்கு உதவும் வகையில் பள்ளிகளுக்கு நிதி வழங்கும் செயலை 1868-வாக்கில் அரசு மேற்கொண்டது. இதை மிஷனரிகள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர். 1870-1871ஆம் ஆண்டில் 18 ஆக இருந்த அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை பத்தாண்டுகள் கழித்து 1880-81 ஆம் ஆண்டில் 453 ஆகவும் 20 ஆண்டுகள் கழித்து 1890-91 ஆம் ஆண்டில் 1225 ஆகவும் உயர்ந்தது. மிஷனரி யல்லாதோரும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி களைத் தொடங்கியதாலும் அரசே பள்ளிகளை நடத்தத் தொடங்கியதாலும் கல்வித் துறையில் மிஷனரிகளின் செல்வாக்குக் குறைந்தது.

புலையர்கள், ஈழவர்கள் ஆகிய ஓடுக்கப்பட்ட சாதியினர் சாதி அடிப்படையில் ஒன்றிணைந்து தம் உரிமைகளைப் பெறப் போராடத் தொடங்கினர். நவீன கல்வியைத் தம் சாதியினர் பெறுவதில் இவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். தம் சமூகத்தின் பெண் குழந்தைகள் கல்விபயிலத் தனிப் பள்ளிக்கூடங்கள் நிறுவவும் வற்புறுத்தினர்.

இத்தகைய எழுச்சி ஒடுக்கப்பட்ட மக்களிடம் கல்வியை மையமாகக் கொண்டு உருவான நிலையில், தம் சாதிப் பிள்ளைகள் குறிப்பாகப் பெண்குழந்தைகள், ஒடுக்கப்பட்ட சாதிக் குழந்தைகளுடன் சேர்ந்து கல்வி கற்பதை ஆதிக்கச் சாதியினர் விரும்பவில்லை. இதை எதிர்கொள்ளும் வழிமுறையாக நிதி பெறுவதற் கான விதிமுறைகளைத் தளர்த்தி, கல்விக் கூடங்கள் நடத்த மிஷனரிகளுக்கு அரசு நிதிவழங்கலாயிற்று. இதன் வாயிலாக மேட்டுக்குடியினர் ஒடுக்கப்பட்டோர் என இரு தரப்பையும் அரசு நிறைவுபடுத்தியது.

மருத்துவம்

கிறித்தவ மிஷனரிகளின் அறப்பணிகளில் ஒன்றாக மருத்துவப் பணி அமைந்தது. உயர் சாதி யினரிடம் தொடர்புகொள்ளவும், அவர்களை மதமாற்றம் செய்யவும் மருத்துவப் பணி உதவும் என்று அவர்கள் நம்பினர்.

இந்தியாவின் பிற பகுதிகளைக் காட்டிலும் மருத்துவ உதவியை மக்களுக்கு வழங்குவதில் திரு விதாங்கூர் அரசு அதிக ஆர்வம் காட்டியது. அதன் தொடர்ச்சியை இன்றும் காணலாம். சிசுமரணம் குறைவான மாநிலமாகவும் நீண்ட ஆயுளைக் கொண்டோர் வாழும் மாநிலமாகவும் கேரளம் விளங்குகிறது. 1981இல் இந்தியாவில் ஒரு லட்சம் நோயாளிகளுக்கு 70 மருத்துவமனைப் படுக்கைகள் என்ற நிலையிருக்க கேரளத்தில் 125 படுக்கைகள் என்றிருக்கிறது. இதுபோல் அகில இந்திய அளவில் ஒரு லட்சம் மக்களுக்கு 39 மருத்துவர்கள் ஒரு மருத்துவமனை என்றிருக்க கேரளத்தில் 46 மருத்து வர்கள் 3.5 மருத்துவமனைகள் என்றுள்ளது. 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத் திலும் மருத்துவம் தொடர்பாக கேரள அரசு மேற் கொண்ட செயல்பாடுகளின் விளைவுதான் இது.

1870-1871 தொடங்கி 1930-31 வரையிலான திருவிதாங்கூர் நிர்வாக அறிக்கையின்படி கிறித்தவ மிஷனரிகளின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றோரின் எண்ணிக்கையைவிட அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றோரின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. கல்வித் துறையில் மிஷனரிகளின் செல்வாக்குடன் ஒப்பிடுகையில் மருத்துவத்துறையில் அதன் செல்வாக்கு குறைவு தான். ஆனால் புலையர் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிஷனரிகளின் வாயிலாகவே மருத்துவ உதவி கிட்டியது. அரசு மருத்துவமனைகளில் புலை யர்கள் நடத்தப்பட்ட முறை குறித்து இரட்சண்ய சேனை அதிகாரி ஒருவர் கூறும் செய்தி வருமாறு:

அரசுமருத்துவமனையை நெருங்க அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மருத்துவ மனைக்குச் சற்றுத் தொலைவில் உள்ள மரத் தடியில் அவர்கள் காத்திருக்க வேண்டும். மருத்துவமனையில் நோயாளிகள் அனை வரையும் பார்த்துவிட்டு மருத்துவர் திரும்பும் போது அவர்களின் நோய் குறித்து விசாரிப் பார். பிறகு அவர்களுக்குத் தர வேண்டிய மருந்துகள் குறித்து மருத்தாளுநர்களிடம் வாய்மொழியாக அறிவுறுத்துவார். ஆபத் தான நிலையில் உள்ள நோயாளிகளை, புலையர் வார்டில் அனுமதிப்பார், மருத்துவ மனையில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ள கொட்டகையே புலையர் வார்டாகும்.

இவ்வாறு அரசு மருத்துவமனைகளில் ஒடுக்கப் பட்ட சாதியினர் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டனர்.

இந்த அளவு மோசமாக மிஷனரிகள் நடந்து கொள்ளவில்லையென்றாலும், சாதிய மேலாண் மையை ஓரளவுக்குத் தம் மருத்துவமனைகளில் அனுமதித்தனர். நாகர்கோவிலில் இரட்சண்ய சேனையினர் நடத்திய, காதரின் பூத் மருத்துவ மனையில் 1905 சனவரி முதல் செப்டம்பர் முடிய 3047 புறநோயாளிகள் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 1380 பேர் சாதி இந்துக்கள். இதற்குக் காரணம் இந்துக் களின் சாதியஉணர்வுக்கு மருத்துவமனைநிர்வாகம் மதிப்பளித்தமைதான். தம் சாதியத் தூய்மையைப் பாதுகாக்க விரும்பிய உள்நோயாளிகளுக்குத் தனி வார்டும், சமையலறையும் வழங்கப்பட்டன. வளம் படைத்த ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் இச்சலுகை வழங்கப்பட்டது.

மிஷனரிகள் நடத்திவந்த மருத்துவமனைகளுக்கு மானியம் வழங்கியதுடன், புதிய கட்டடங்கள் கட்ட நிதி உதவியும் அரசு வழங்கியது.

மருத்துவ சேவையை மேற்கொண்ட மிஷனரிகள் அத்துடன் சமயப் பரப்புதலையும் இணைத்துக் கொண்டார்கள்.

இரட்சண்ய சேனையைச் சேர்ந்த ஜான்லேவே என்பவர் 1862இல் எழுதிய அறிக்கையில் இடம் பெற்றுள்ள இது தொடர்பான செய்தி வருமாறு:

நோயாளிகளும் அவர்களது நண்பர்களும் எழுபது அல்லது எண்பது பேருக்குக் குறை யாமல் காலையில் மருத்துவமனை திறக்கும் போது நிகழும் வழிபாட்டில் கலந்துகொள் வார்கள். துண்டுப் பிரசுரங்களும் விவிலி யத்தின் பகுதிகளும் வாசிக்கத் தெரிந்த அனை வருக்கும் வழங்கப்படும். அறையில் காத்திருக்கும் நோயாளிகளுடன் உபதேசியார் தனிப்பட்ட முறையிலான உரையாடலை மேற்கோள்ளு வார்.

1922ஆம் ஆண்டிலும் கூட இப்பழக்கம் தொடர்ந்துள்ள நெய்யூர் மருத்துவமனையின் நுழைவறையில் காலை 8. 30மணிக்கு வழிபாட்டுக் கூட்டம் நிகழும். அதில் நற்செய்தி நூல் வாசித்து விளக்கமளிக்கப்படும். இது தவிர இதில் கலந்து கொள்ள முடியாத உள்நோயாளிகளுக்கென்று வாரம் இருமுறை அவர்கள் தங்கியுள்ள அறைகளி லேயே இதுபோன்ற வழிபாட்டுக் கூட்டம் நிகழும். இது தவிர மருத்துவமனை அனுமதி வழங்கும் எந்த நாளிலும், எந்த நேரத்திலும் மருத்துவமனையின் போதகர் இத்தகைய பணியை மேற்கொள்ளுவார். மருத்துவமனைக்கு வருவோரை காலை ஒன்பது மணிக்கும் பத்து மணிக்கும் இடையில், இரட்சண்ய சேனையைச் சேர்ந்தோர் சந்தித்து ஆன்மிக உதவி வழங்குவர். என்றாலும் இச்செயல்களின் வாயிலாக உயர் சாதியினரை மதமாற்றம் செய்ய முடிந்ததா என்பது அய்யத்துக்குரிய ஒன்றுதான்.

*

திருவிதாங்கூர் மாநிலத்தில் ஒவ்வொரு கிராமத் திலும் ‘வைத்தியன்’ என்ற பெயரில் பாரம்பரிய மருத்துவமுறையைப் பின்பற்றிச் சிகிச்சையளிக்கும் நாட்டு மருத்துவர்கள் இருந்தனர். மருத்துவக் குண முடைய தாவரங்கள் மூலிகைகள் குறித்த அறிவு இவர்களுக்கிருந்தது. இவற்றைச் சேகரித்து இவர் களே மருந்து தயாரித்தனர், நம்பூதிரிபிராமணர்கள், அம்பலவாசிகள், நாயர், ஈழவர் ஆகிய சாதியினர் வைத்தியனாக விளங்கினர். 1918ஆண்டு அரசு பட்டியலின்படி வைத்தியன்களில் 45ரூ நாயர்கள். இவ்வைத்தியர்கள் குறித்தும் அவர்கள் பின்பற்றிய வைத்தியமுறை குறித்தும் அய் ரோப்பிய மிஷனரிகள் எதிர்மறை யான கருத்துக்களே கொண் டிருந்தனர். இவர்களில் பலர் போலிவைத்தியர்கள் என்பதை அரசும் உணர்ந்திருந்தது.

இதனால் அரசால் புறக் கணிக்கப்பட்டவர்களாக ‘வைத்தி யர்கள்’ இருந்தனர். மேற்கத்திய பண்பாடு, குறிப்பாக விஞ்ஞான அறிவு உயர்ந்தது என்ற கருத்து அரசு அதிகாரி களிடமும், இந்தியாவின் படித்த அறிவாளிகளிடமும் இருந்தமையே இதற்குக் காரணம் என்று கே.என். பணிக்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1980இல் தேசியவாதிகள் இந்திய மருத்துவத்தின் உயர்வு குறித்துக் குறிப்பிடத் தொடங்கினர். பாரம் பரிய வைத்திய முறையைப் பேணுவது குறித்த சிந்தனை உருப்பெற்றது.

ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியில் இருந்த மல பார் பகுதியில் கள்ளிக்கோட்டை அருகிலுள்ள கோட்டக்கல் என்ற ஊரில் பாரம்பரிய வைத்தியம் மேற்கொண்டிருந்த பி.எஸ்.வாரியார் 1902இல் ஆரியவைத்திய சமாஜம் ஒன்றைப் பாரம்பரிய வைத்திய முறையைப் புனரமைக்கும் நோக்கில் நிறுவினார்.

ஆயுர்வேத பாடசாலை ஒன்றை 1889 இல் திருவனந்தபுரத்தில் அரசு நிறுவியது. 1917-18இல் ஆயுர்வேதத்துறை ஒன்று அரசால் உருவாக்கப் பட்டது. ஆயுர்வேத பாடசாலைகளை நவீனப் படுத்துவது இத்துறையின் கடமையாய் அமைந்தது. உடற்கூறியல் விரிவுரையாளர் ஒருவரை நியமித்த துடன், தாவரவியல் பூங்கா, ஆயுர்வேத மருத்துவ மனைகள், ஆயுர்வேத மருந்தகம் ஆகியனவற்றையும் நிறுவியது. பாரம்பரிய மருத்துவமுறைக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் அதிகரித்தது.

ஓர் இந்து அரசு என்ற முறையில் பாரம்பரிய மருத்துவ முறையின் மீது அது செலுத்திய ஆதரவு அதன் ஈகைக் குணத்தைக் கிராமப்புற மக்களிடம் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

ஒடுக்கப்பட்ட சாதியினர்

திருவிதாங்கூர் மன்னராட்சிப் பகுதியில் சில சாதியினர் கடுமையான கட்டுப்பாடுகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் ஆளாகியிருந்தனர். அடிமைமுறை, தீண்டாமை, ஊழியம் என்ற பெயரிலான கட்டாய வேலைமுறை, நடமாட்டக்கட்டுப்பாடு. ஆடை அணிகலன் பயன்பாடு தொடர்பான தடைகள் என்பனவற்றிற்கு அவர்கள் ஆளாகியிருந்தனர்.

இச்சாதியினரின் எதிர்ப்பாலும், மிஷனரிகளின் வற்புறுத்தலாலும் 1855இல் அடிமை முறையும் 1860இல் ஊதியமில்லாக் கட்டாய வேலைமுறையும் ஒழிந்தன.

கிறித்தவர்களாக மாறுவதில் இம்மக்கள் முன் நின்றனர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஒடுக்கப்பட்ட சாதியினரின் கிறித்தவ மதமாற்றம் குறித்து அரசு அக்கறை காட்டவில்லை. சுயேச்சை யான குடிமக்களாகவும், பரம்பரைத் தொழில்களைச் செய்ய மறுப்பவர்களாகவும் ஒடுக்கப்பட்ட சாதி யினர் மாறுவதை நிலஉடைமையாளர்கள் விரும்ப வில்லை. கிறித்தவமதமாற்றமானது ஞாயிற்றுக் கிழமையை ஓய்வு நாளாக ஆக்கிக் கொண்டு அன்று வேலை செய்ய மறுப்பது, வேறு வேலை வாய்ப்புகள் மேற்கொண்டு அற்ப ஊதியத்திற்கு வேலை செய்ய மறுப்பது போன்ற ஒழுங்கின்மையை (!) உருவாக்கும் என்றஞ்சினர்.

ஆனால் மதமாற்றமானது உயர்சாதியினருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் இடையிலான சமூக பொருளாதார உறவில் பெரிய அளவிலான மாறுதல் களை ஏற்படுத்தவில்லை. மிஷனரிகளும் இம் மாறுதல்களுக்கான தூண்டுதல்களை மேற்கொள்ள வில்லை. சில நிலஉடைமையாளர்கள் தம் வேளாண் தொழிலாளர்கள் கிறித்தவர்களாக மதம் மாறுவதை வரவேற்றார்கள் என்று அய்ரோப்பிய மிஷனரிகள் சிலர் எழுதியுள்ளனர்.

ஈழவர்கள், புலையர்கள், பறையர்கள் ஆகிய ஒடுக்கப்பட்ட சாதியினர் சாதியடிப்படையில், ஒன்று திரண்டமையும், கல்விபெறும் உரிமையை வற்புறுத்தி நடத்திய போராட்டங்களும், அரசியல் விழிப்புணர்வு பெற்றமையும், ஒடுக்கப்பட்ட சாதி யினரின் முன்னேற்றத்திற்குத் துணைநின்றன.

கிறித்தவத்திற்கு எதிரான மனநிலை கொண்ட அதிகாரிகள், மதம்மாறாத ஒடுக்கப்பட்ட சாதியின் தலைவர்களுடன் நல்ல உறவு வைத்துக்கொண்டு அவர்களது விருப்பங்களை ஓரளவுக்கேனும் நிறை வேறச் செய்தனர். இதன்மூலம் இம்மக்கள் கிறித் தவத்துக்கு மாறுவதைத் தடுக்க முடியும் என்று நம்பினர். ஒடுக்கப்பட்ட சாதிகளின் தலைவர்கள் சிலர் இதைப் புரிந்துகொண்டு, தம் சாதியின் முன் னேற்றத்திற்கு உதவும் வகையில் சில சலுகைகளைப் பெற்றனர்.

ஆனால் உயர் சாதியினரின் கோபத்துக்கு ஆளானால் தம் மதமாற்ற முயற்சிக்கு இடையூறு ஏற்படும் என்றஞ்சியதால், ஓர் எல்லைக்கு மேல் ஒடுக்கப் பட்ட சாதியினருடன் இணக்கமாகப் போகவும் ஆதிக்க சாதியினருடன் முரண்படவும் மிஷனரிகள் விரும்பவில்லை. மதம் மாறிய கிறித்தவர்களிடம் தம் உரிமையைத் திருச்சபைக்குள் நிலைநாட்டும் வகையில் எழுச்சி ஏற்படும் வரை இந்நிலையே நீடித்தது. புலையர்கள், பறையர்கள் கிறித்தவர்களாக மதம் மாறித் தம்முடன் கலந்து வழிபடுவதைப் பிறசாதிக் கிறித்தவர்கள் விரும்பவில்லை. இது தொடர்பான பல நிகழ்வுகளை கிறித்தவ மிஷனரிகள் தம் எழுத்துக்களில் பதிவு செய்துள்ளனர்.

சி.எம்.எஸ் கிறித்தவசபையைவிட எல்.எம்.எஸ் கிறித்தவசபையினர் ஒடுக்கப்பட்ட சாதியினரிடம் இருந்து மதம் மாறிய கிறித்தவர்களிடம் அனுதாப மாயிருந்தனர். சி.எம்.எஸ் சபையில் நிலவிய சாதிய வேறுபாட்டை விரும்பாத ஒடுக்கப்பட்ட சாதிக் கிறித்தவர்கள் ‘இரட்சண்ய சேனை’ என்ற கிறித்தவ சமயப் பிரிவில் சேர்ந்தனர். தம் தோவலயத்திற்குள் பறையர்களும், புலையர்களும் நுழைந்து வழிபடு வதை நாடார் கிறித்தவர்கள் விரும்பவில்லை. ஈழவர் நாடார் சாதிக் கிறித்தவர்கள் பறையர் சமூகக் கிறித்தவர்களை தேவாலயத்தில் அனுமதிக்க மறுத்த தாகவும், தாம் பறையர் சாதிக் கிறித்தவர்களை அனுமதித்தபோது நாடார் சாதிக் கிறித்தவர்கள் தேவாலயத்தில் இருந்து குதித்து வெளியேறியதாகவும் சாமுவேல்பீட்டர் என்ற மிஷனரி 1872ஆம் ஆண்டு எழுதிய அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

*

ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினரிடம் கிறித்தவப் பரவல் நிகழ்வதைத் தடுக்கும் வகையில் திருவிதாங்கூர் அரசு சில வழிமுறைகளை மேற்கொண்டது. கல்வி, நிலம் வழங்கல், கூட்டுறவு இயக்கம் என்பன அவற்றுள் முக்கியமானவை.

இந்து ஆலயங்களில் நிலவும் தீண்டாமையும் மத மாற்றத்திற்கான அடிப்படைக்காரணமாக அமை வதாக உணர்ந்ததால் 12 நவம்பர் 1936 இல் கோவில் நுழைவுச் சட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படி அரசின் பொறுப்பில் இருந்த அனைத்துக் கோவில்களிலும் நுழைந்து வழிபடும் உரிமையை ஒடுக்கப்பட்ட சாதியினர் பெற்றனர்.

திருவிதாங்கூர் கொச்சி ஓர் ஒப்பீடு

திருவிதாங்கூர் மன்னராட்சியில் கல்வி, மருத் துவம், ஆகியனவற்றின் வளர்ச்சி, ஒடுக்கப்பட்ட சாதியின் முன்னேற்றம் என்பன அரசுக்கும் கிறித்தவ மிஷனரிகளுக்கும் இடையிலான போட்டியுணர்வு, மிஷனரிகளுடன் அரசு செய்துகொண்ட சமரசம், ஒடுக்கப்பட்ட சாதியினரிடம் உருவான விழிப்புணர்வும் எழுச்சியும் ஆகியனவற்றால் ஏற்பட்டன.

ஆனால் அதன் அண்டை இராச்சியமான கொச்சியில் இத்தகைய சமூக மாறுதல்கள் திரு விதாங்கூர் மன்னர் ஆட்சிப் பகுதியில் நிகழ்ந்தது போல் விரைவாக நிகழவில்லை என்பது ஆசிரியரின் கருத்தாகும்.

திருவிதாங்கூர்ப் பகுதியைப் போல் மிஷனரி களின் செயல்பாடு இங்கு இல்லாததே இதற்குக் காரணம் என்பது அவரது முடிவாகும். இதைச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.

*

கிறித்தவத்தின் சமூகப் பணியுடன், அதன் நழுவல் போக்கையும் சுட்டிக்காட்ட ஆசிரியர் தவறவில்லை. இந்து அரசான திருவிதாங்கூர் அரசு அவ்வப்போது மேற்கொண்ட சீர்திருத்தங்களின் உள்ளார்ந்த நோக்கங்களையும் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். கிறித்தவத்தின் துணையுடன் சமூக விடுதலை பெற்ற சாதியினரில் ஒரு பிரிவினர், ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவில் இருந்து மதம் மாறிய கிறித்தவர்களைத் தீண்டாமையுணர்வுடன் நடத்தியதையும் வெளிப் படுத்தியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி கிறித்தவம் சாராது நிகழ்ந்தமை குறித்தும் பதிவு செய்துள்ளார். ‘இரட்சண்ய சேனை’ என்ற கிறித்தவ மிஷன் இன்றைய குமரிமாவட்டத்தில் தோன்றி யதன் சமூக வரலாற்றுக் காரணங்களை ஆராய்வது அவசியம் என்ற உணர்வு இந்நூலைப் படித்து முடித்ததும் தோன்றுகிறது. சி.எம்.எஸ் சபையின் மறுபக்கத்தை அறிய இவ் ஆய்வு உதவும்.

Pin It