தமிழில் கிடைக்கப்பெற்ற நூல்களுள் தொல்காப்பியம் தொன்மையானதாகவும் முதன்மையான தாகவும் திகழ்கிறது. கி.மு. 5ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் இந்நூலிற்குப் பிறகு தமிழில் காலந்தோறும் பல்வேறு நிலைகளில் பல இலக்கண நூல்கள் தோன்றியிருப்பினும் இலக்கண, இலக்கிய அடிப்படைகளுக்கும் வளர்ச்சிக்கும் தமிழியல் ஆய்வுகளுக்கும் தொல்காப்பியம் மூல ஆதாரமாகத் திகழ்கிறது. தமிழ் இலக்கண வரலாற்றை நோக்கும் போது தொல்காப்பியத்திற்குப் பின்வந்த அனைத்து நூல்களுமே அவ்வக்கால மொழி மாற்றங்களை உள்ளடக்கி, வழக்கில் இல்லாதவற்றை நீக்கி, சூழல், சமயம் போன்றவற்றைச் சார்ந்து சுருக்கம் என்னும் நிலையில் பல்வேறு இலக்கண நூல்கள் தோற்றம் பெற்றுள்ளன.

தொல்காப்பியத்திற்குப் பின்பு பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றியிருப்பினும் இன்றளவும் கூட சிறப்புத் தமிழ்ப் பாடத்திட்டத்தின் இளங்கலைப் பகுதியில் நன்னூல், தண்டியலங்காரம், யாப்பருங்கலக் காரிகை, அகப்பொருள் விளக்கம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்களும், முதுகலைப் பாடத்திட்டத்தில் தொல்காப்பியமும் கற்பிக்கப் பட்டு வருகின்றன. முதுகலைப் பாடத்திட்டத்தில் தொல்காப்பியம் மட்டுமே முழுமையாக நான்கு பருவங்களுக்கும் கற்பிக்கப்படுகின்றது. இந்த முதன்மை தமிழில் தோன்றியுள்ள இலக்கண நூல்களுள் முக்கியத்துவம் வாய்ந்தவை இவை என்ற உண்மையைப் புலப்படுத்துகின்றது.

தற்கால இலக்கணப் பயிற்சிக்கும் மொழிப் பயன் பாட்டுக்கும் தொல்காப்பியம், நன்னூல் இலக்கணக் கருத்துக்களும் உரையாசிரியர்களின் நூற்பா விளக்கங் களும் போதுமானவையா? சிறப்புத் தமிழ் படிப் பவர்களுக்குக்கூட தமிழில் உள்ள பிற இலக்கண நூல்கள் பற்றியும் இலக்கண வரலாறும், மொழி வரலாறும் கற்பிக்கப்படுவதில்லை! போன்ற குற்றச் சாட்டுகளோடு மரபிலக்கணக் கல்வி தற்கால மொழிப் பயன்பாட்டுக்கும் மொழிப் பயிற்சிக்கும் எவ்வகையில் உதவுகின்றது; பயன்பாட்டுத் தமிழ் இலக்கணம் கற்பிக்காத நிலையில் சிறப்புத் தமிழ் படிக்கும் இளைய சமுதாயம் எத்தகைய பின்னடைவை நோக்கிச் செல்கிறது என்பவற்றை நோக்குவதாக இக் கட்டுரை அமைகிறது.

இதுபோன்ற மரபிலக்கண நூல்களைக் கற்றுக் கொள்வதன் வாயிலாகத் தமிழ்மொழியின் இலக்கண ஆழத்தையும் செய்நேர்த்தியையும் புரிந்துகொள்ள முடியும். இத்தகைய மரபிலக்கணத்தோடு இவை கூறுகின்ற இலக்கணக் கூறுகளில் இவையிவை வழக்கில் தற்காலம் வரையிலும் பின்பற்றப்படுகிறது; இவையெல்லாம் தற்கால வழக்கில் இல்லை என்ற திறனாய்வு அடிப்படையிலான இலக்கணக் கல்வியும் பயன்பாட்டில் உள்ள எடுத்துக்காட்டுகளைக் கொண்டு புணர்ச்சியிலக்கணத்தை விளக்கும் இலக்கணப் பயிற்சியும் உருவாகாமல் போய்விட்டன.

மரபிலக்கணங்களை மட்டும் படித்துவிட்டு வேதாந்தமும் சித்தாந்தமும் பேசுகிற நிலையைக் காணமுடிகிறது. ஆனால் அவற்றோடு தற்காலப் பயன்பாட்டுத் தமிழ் இலக்கணத்தின் பயிற்சியற்றவர் களாக - ஒரு தொடரைக்கூட முழுமையாகத் தவறில்லாமல் எழுதமுடியாத இளைய தலைமுறை யினையே தற்காலத்தில் காணமுடிகிறது.

தொல்காப்பியமும் தற்கால மொழிப் பயன்பாட்டு மாற்றமும்

‘கடிசொல் இல்லை காலத்துப்படினே’ என்று தொல்காப்பியரும் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்று நன்னூலாரும் குறிப்பிட்டுச் சென்றிருக்கின்றனர். பழஞ்சொல் வீழ்ச்சியும் புதுச்சொல் புகுதலும் காலந்தோறும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. தொல்காப்பியர் தனக்கு முன் நிலவிய இலக்கணக் கொள்கைகளை இலக்கணமாக முறைப்பட வகுத்து, காலத்திற்கு ஏற்ப மொழி வளரும் என்ற அறிதிறனையும் உணர்ந்து சில இலக்கண விதிகளையும் புறநடை களையும் வகுத்துள்ளார். இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து தற்கால எழுத்திலக்கணத்திற்குப் பொருந்திப் போகும் இலக்கண விதிகளாகப் பல நூற்பாக்கள் அமைந்துள்ளன. எனினும் சொல் வீழ்ச்சி என்னும் நிலையிலேயே தொல்காப்பிய விதிகள் பல வழக்கொழிந்ததற்குக் காரணமாக அமைகின்றன.

தொல்காப்பிய எழுத்ததிகார 483 நூற்பாக்களைத் தற்காலப் பயன்பாட்டின் அடிப்படையில் வழக்கில் இல்லாதவற்றைப் பகுத்துப்பார்க்கும் விதமாக முழுவதுமாக வழக்கிழந்த நூற்பாக்கள்(57), சொல் வழக்கிழந்ததால் நிலைபெறாத விதிகள்(100), ஒரே செய்யுளுக்குரியவை(17), புறநடை(9) என்னும் தன்மைகளில் பகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பகுக்கப்பட்டதில் 239 நூற்பாக்கள் எவ்வித மாற்றமு மின்றித் தற்காலப் பயன்பாட்டில் வழங்கிவருகின்றன என்பதும் 244 நூற்பாக்கள் மேற்குறித்த வகைகளில் வழக்கொழிந்த நிலையிலும் மாற்றம் பெற்ற நிலை யிலும் வழங்கிவருகின்றன என்பதும் கண்டறியப் பட்டுள்ளன. இவற்றை ஆராய எடுத்துக்கொண்ட சிறு முயற்சியின் விளைவாக இத்தகைய கருத்துகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய பாகுபாட்டைத் தெளிவாக இன்னும் நுணுகி ஆராயவேண்டியுள்ளது.

உறழ்ச்சி விதிகள்

சுவையை உணர்த்தும் புளிப்பெயர் புணர்ச்சியில் மெல்லொற்றினைப் பெற்று முடியும்(246) (புளிஞ் சோறு). அவ்வாறு இல்லாமல் வல்லொற்றினைப் பெற்று முடிதலும் உண்டு (247) (புளிச்சோறு). இந்த உறழ்ச்சி விதியில் வல்லொற்றினைப் பெற்று முடிதலே தற்போது வழக்கில் நிலைபெற்றுவிட்டது. மெல்லொற்றினைப் பெறும் என்ற விதி வழக் கொழிந்துவிட்டது. இவ்வகையில் 70-க்கும் மேற்பட்ட உறழ்ச்சி விதிகள் காணப்படுகின்றன. வன்கனமும் வரும் மென்கனமும் வரும், ஒற்று வரலாம், வராமலும் போகலாம் போன்ற உறழ்ச்சி நிலையில் கூறப்பட்ட எழுத் திலக்கண விதிகளுள் ஒரு சிலவற்றைத் தவிரப் பெரும்பான் மை இன்னும் ஏதா வது ஒன்றாக நிலை பெறாமல் இரண்டு நிலைகளிலும் பயன் படுத்தப்பட்டு வரு கின்றன.

சிறப்புத் தமிழ் படிக்கும் மாணவர்களின் பின்புலம்

மேல்நிலைப் படிப்பில் (10-ஆம் வகுப்பு) அதிக மதிப்பெண் எடுக்காத நிலையில் கணக்கு, அறிவியல், கணினியியல் போன்ற முதல்நிலைப் பிரிவுகளில் இடம் கிடைக்காமல் இரண்டாம்நிலைப் பிரிவுகளில் படித்த மாணவர்கள் உயர்கல்வியில்(+2) அதிக மதிப்பெண் எடுக்காததால் அறிவியல் பாடங்களுக்குத் தகுதி பெறாமல் கலைப் பாடங்களுக்குத் தள்ளப் பட்ட மாணவர்கள். அறிவியலை விடுத்து இத்தகைய கலைப் பாடங்களில் பட்டங்களைப் பெற ஆங்கில வழியில் படிக்கவேண்டும் என்ற நிலையில் தமிழ் வழியிலேயே படித்துக் கல்லூரியில் ஏதாவது ஒரு பட்டம் பெறவேண்டும் என்ற நிலையிலேயே பெரும் பான்மையோர் சிறப்புத் தமிழைப் படிக்க வருகின்றனர்.

கல்வி நிலையில்(அறிவு) - Educationally, சமூக நிலையில் - Socially, பொருளாதார நிலையில் – Economically ஆகிய நிலைகளில் பின்தங்கியவர்களா லேயே இன்றைய நிலையில் சிறப்புத்தமிழ் கற்கப் பட்டு வருகின்றது; கற்பிக்கப்பட்டுவருகிறது. எல்லா நிலையிலும் பின்தங்கியவர்கள் கற்கும் பாடமாகத் தமிழ் மாற்றம்பெற்றுள்ளது.

விரும்பித் தமிழ் படிக்கின்றவர்களின் எண்ணிக்கை ஒன்றிரண்டு விழுக்காடே காணப்படுகின்றது. மற்ற கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்றவற்றைப் படிக்கும் மாணவர் களோடு ஒப்பிடும்போது தமிழ் படிக்கும் மாண வர்கள் எல்லா நிலைகளிலும் தனித்துச் சுட்டிக் காட்டும் அளவுக்குப் பின்தங்கியவர்களாகவும் தொழில்நுட்பத்தோடு இயைந்து வளராதவர்களாகவும் பல்துறைப் பயன்பாட்டு அறிவற்றவர்களாகவும் வேறுபடுத்திப் பார்க்கக்கூடியவர்களாகவும் தென் படுகின்றனர். இதனால் தமிழ் படிப்பவர்கள் என்று கூறினாலே சமூகத்தில் நகைப்புக்குரியவர்களாகவும் தமிழாசிரியர்கள் என்றாலே ஏளனப் பார்வையில் கிண்டல் செய்யப்படுபவர்களாகவும் தம் தாய் மொழியைப்பற்றி மொழியுணர்வோடும் தமிழுணர் வோடும் பேசும் நகைப்புக்குரியவர்களாகவும் வலம் வருகின்றனர்.

மற்ற துறைகளில் படிப்பவர்கள் இள நிலைக்குப் பிறகு முது நிலையில் படிப்பவர் கள் குறைந்து விடு கின்றனர். இளநிலை யில் படித்த பாடத்தை விட்டுத் தொழில் நிலையில் வேறுவேறு பாடங்களைப் படித்து வேலைவாய்ப்பைப் பெற்றுவிடுகின்றனர். ஆனால் தமிழை இள நிலையில் படித்தவர்கள் அடுத்தடுத்து MA, M.phil, Ph.D, PDF போன்றவற்றைப் படித்து அனைவரும் ஆசிரியர் தொழிலையே செய்ய முற்படுவதாலும் பிறதுறை அறி வையும் பட்டங்களையும் பெற நாட்டமில்லாமல் அல்லது நாட்டமிருப்பினும் தயங்குபவர்களாகவும் அல்லது வாய்ப்பு மறுக்கப் படுபவர்களாகவும் வேலை வாய்ப்பற்ற குறுகிய வட்டத்தில் குறுகிய மனப் பான்மையோடு வேலைவாய்ப்பற்ற நிலையில் அவதிப்படுகின்றனர். 

மரபிலக்கணங்களைக் கற்பிக்கும் முறை

சிறப்புத் தமிழ் படிக்கவரும் மாணவர்களுக்கு இலக்கணக் கல்வி என்பது மரபிலக்கணங்களை மனப்பாடம் செய்யும் மனனப் பயிற்சியாகவே அமைந்துள்ளது. தற்கால இலக்கணப் பயிற்சிக்கும் பயன்பாட்டுக்கும் இத்தகைய முறை பெரிதும் பயன்படுவதில்லை.

தொல்காப்பியம், நன்னூல், தண்டியலங்காரம், யாப்பருங்கலக் காரிகை, அகப்பொருள் விளக்கம், புறப்பொருள் வெண்பாமாலை போன்ற மரபிலக்கண நூல்களின் நூற்பா புரியாத நிலையில் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் போன்ற உரை யாசிரியர்களின் உரை விளக்கங்கங்களை மாணவர் களுக்குப் புரியவைக்கும் கல்வியாகவே இத்தகைய இலக்கணக் கல்வி அமைந்துள்ளது. இத்தகைய பணிகளையே பெரும்பாலான தமிழ்ப்பேராசிரி யர்கள் செய்துவருகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட இலக்கணத்தில் உள்ள ஒரு சில நூற்பா தெரிகிறதே தவிர, மொழி வரலாறோ, இலக்கண வரலாறோ, தமிழின் வரலாற்றிலக்கணமோ தெரிவதில்லை. எழுத்திலக்கணத்தையும் சொல்லிலக் கணத்தையும் கூறுகிற நூல்கள் எவையெவை, சொல்லிலக்கணத்தை மட்டும் கூறுகிற இலக்கண நூல்கள் எவை, 20-ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கண நூல்களில் எவ்வகையிலான மாற்றங்கள் நிகழ்ந்தன, தமிழ் இலக்கண மரபு என்பது மூவிலக்கண மாக இருந்து ஐந்திலக்கணமாக மாற்றம் பெற்றது என்பவை தெளிவுபடுத்தப்படுவதில்லை. தொல் காப்பியத்தை நாம் ஏன் படிக்கவேண்டும் என்ற தெளிவான புரிதல் இல்லை. தொல்காப்பியம், அகப்பொருள் விளக்கம், புறப்பொருள் வெண்பா மாலை, யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம் போன்றவற்றைக் கற்று இதன் பின்புலத்தில்தான் சங்க இலக்கியங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்பன போன்ற புரிதல்களைத் தமிழாசிரியர்கள் பெரும்பாலானோர் உணர்த்துவதில்லை.

அடிப்படைத் தமிழ் இலக்கணம்

மரபிலக்கணம் அடிப்படையிலான இலக்கணக் கல்வி வழங்கவேண்டுமே தவிர, மரபிலக்கணம் ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஒவ் வொரு பருவத்திலும் ஒரு இலக்கண நூல் வீதம் படிக்கின்ற கல்வியாக அமையவேண்டியதில்லை.

மரபிலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்ற அடிப்படைத் தமிழ் இலக்கணத்தைக் கற்பிக்க வேண்டும். பாதிக்கும் மேல் தற்கால இலக்கணப் பயன்பாட்டில் இல்லாத மரபிலக்கணங்களை மட்டும் மனப்பாடம் செய்தும் அவற்றைப் புரிந்து கொண்டும் என்ன பயன்? பயன்பாட்டுத் தமிழுக்கு இத்தகைய இலக்கணங்கள் எவ்வகையில் பயன் படுகின்றன; உதவுகின்றன? அடிப்படைத் தமிழ் இலக்கணத்தையோ பயன்பாட்டுத் தமிழ் இலக் கணத்தையோ யார் சொல்லிக்கொடுப்பது? போன்ற கேள்விகள் எழுகின்றன.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் ஒரு நிலை யிலும் பயன்பாட்டுத் தமிழ் இலக்கணம் மற்றொரு நிலையிலும் கட்டாயம் கற்பிக்கப்படவேண்டும். அடிப்படைத் தமிழ் இலக்கணத்தைப் படித்தவர்கள் இன்று பயன்பாட்டு இலக்கணத்தைச் சரிவரப் பயன்படுத்தமுடியாமல் தடுமாறுகின்றனர்.

தற்கால நிலையில் ஒரு தொடரையோ, ஒரு பத்தியையோ எழுத்துப்பிழை, சந்திப்பிழை, இலக்கணப் பிழை (ஒருமை-பன்மை மயக்கம், உயர்திணை-அஃறிணை மயக்கம்) போன்றவை இல்லாமல் சரியாக எழுதக்கூடியவர்களாக, இளம் தலைமுறை யினராக அமைந்த தமிழாசிரியர்களுக்குச் சாத்திய மில்லாமல் போய்விட்டது. 

தமிழ் இலக்கணமும் ஆங்கில வழியிலான இலக்கணக் கல்வியும்

தற்காலத் தமிழ் இலக்கணமும் மொழிப் பயன் பாடும் ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இலக்கணக் கூறுகள் ஒவ்வொன்றையும் ஆங்கில இலக்கணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய இலக்கணமாகவே இன்று மாறிவிட்டன.

இன்று தமிழ்க் கல்வி என்பது சம்பிரதாயக் கல்வியாகவே உள்ளது. மொழியுணர்வும் இல்லை. மொழிப் பற்றும் இல்லை. தமிழ் இன்று ஆட்சி மொழியாகவும் இல்லை, கல்வி மொழியாகவும் இல்லை. ஆங்கில மொழியைத் தமிழ்நாட்டில் பேசுவதற்கான இணைப்பு (conjuction) மொழியாகவே தமிழ் பயன்படுத்தப்படுகிறது.

மொழிக் கல்வியா? இலக்கியக் கல்வியா?

மொழிப் பயிற்சி அளிக்கும் வகையில் பாடத் திட்டங்கள் அமையவில்லை. தமிழ்க் கல்வி என்பது மொழிக் கல்வியாக (Language Education) இல்லாமல் இலக்கியக் கல்வியாகவே (Literature Education) வழங்கப்படுகிறது. கல்வி என்பதும் இன்று ஒரு சடங்காக மாறிப்போய்விட்டது.

தற்கால இலக்கணக் கல்வி என்பது மரபிலக் கணத்தைப் போற்றும் கல்வியாக உள்ளதே தவிர பயன்பாட்டுத் தமிழ் இலக்கணத்தைக் கற்பிக்கும் கல்வியாக இல்லை. பகுதி-1இல் தமிழ் படிக்க வரும் மாணவர்களுக்கு மொழிப் பயிற்சியையும் தவறில்லாமல் தமிழைப் பயன்படுத்தும் மொழிக் கல்வியையும் கொடுக்காமல் இலக்கியக் கல்வியைக் கொடுத்து என்ன பயன்? அவர்களுக்கு ஒருமை, பன்மை வேறு பாடு தெரிவதில்லை; உயர்திணை, அஃறிணை வேறு பாடு தெரிவதில்லை; மொழிப் பயிற்சியே இல்லாதவர் களுக்கு இலக்கியப் பயிற்சி வழங்கி என்ன பயன்?,. இத்தகைய மொழிப் பாடங்கள் அவர்களுக்கு ஒரு சம்பிரதாயக் கல்வியாகவே தென்படுகின்றன.

மேற்குறித்த நிலைகளையும் பயன்பாடுகளையும் கருத்தில்கொண்டு மரபிலக்கணக் கல்வியை இன்றைய பயன்பாட்டின் அடிப்படையில் தேவையானவற்றைத் திறனாய்வு நோக்கிலும் வரலாற்று நோக்கிலும் ஆசிரியர்கள் கற்பிக்கவேண்டும். பள்ளியளவில் மொழிப்பயிற்சியும் கல்லூரி அளவில் இலக்கியப் பயிற்சியும் வழங்கப்படுகின்றன என்ற புரிதல் இருந்தாலும் மொழிப்பயிற்சியே இல்லாத ஒருவனுக்கு இலக்கியக் கல்வி எதற்கு என்ற கேள்வி எழுகிறது. இதுபோன்ற மரபிலக்கணம், பயன்பாட்டு இலக்கணம் ஆகியவை குறித்தான பல கேள்விகளோடு விடை தேடும் தமிழ்ச் சமூகம்.

Pin It