சீனு ராமசாமியின் நிலத்தவள் கவிதைத் தொகுப்பை வைத்து...

தமிழ்த் திரை உலகின் முன்னணி இயக்குனர், எழுத்தாளர் மற்றும் கவிஞருமான மூன்று தேசிய விருதுகளைப் பெற்றவர். இவரது “நிலத்தவள்” கவிதைத் தொகுப்பு மண்ணின் மனத்தையும் வாசிப்பாளருக்கு அமைதியான மனநிலையையும் தரும் தன்மைக் கொண்டது.

நிலத்தவள் எனும் கவிதைத் தொகுப்பு எளிய நடையில் வாசகர்கள் எளிதில் அணுகக் கூடிய வார்த்தைகளாக உள்ளன. தொகுப்பில் கையாண்டுள்ள மொழிகள் செந்தமிழில் இல்லாமல் வாசகர்களுக்கு ஏற்ற நடையில் உள்ளது. மனித உணர்வுகளையும், நிலத்தின் மீதான பிணைப்பையும், சமூக நிஜங்களையும் கவித்துவமாக வெளிப்படுத்துகின்றன. சீனு ராமசாமியின் கவிதை வரிகள். சக மனிதர்கள் மீது கொண்ட அன்பைப் புதுப்பிப்பதாக இத்தொகுப்பு அமைந்துள்ளது.

seenu ramasamy nilathavalகவிதைகள் சொற்களை மிகைப்படுத்தி கூறாமல் சுருக்கமாகவும் துல்லியமாகவும் எழுதப்பட்டுள்ளன. ஒரு காட்சியை குறைந்த அளவு சொற்கள் வைத்து மிகுந்த உணர்வை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவர். மரபும் நவீனமும் கலந்த பாணியைக் கையாண்டுள்ளார். வாசகர்களைக் கவரும் உத்தியைத் தன்னகத்தே கொண்ட நவீன எழுத்தாளராகவும் வெளிப்படுகிறார்.

கவிதையின் தன்மை

இவரது கவிதைகள் யாவும் காட்சித் தன்மை கொண்டவையாக உள்ளன. ஒரு சாதாரண செயலையும் கூட காட்சியாக வாசகனின் கண்முன்னே கொண்டு சென்று படமாகப் பிடித்து காட்டுகிறார். சான்றாக,

“நினைவில் நின்று கொண்டே இருக்கிறாள்

தனியாக ஒவ்வொரு நொடியாக

வெகு வருடங்களாக

வாழ்வெல்லாம் ரணமாக

காற்றிலாடும் தீபமாக”

எனும் கவிதை வரிகளைச் சுட்டலாம். மனிதர்களின் உணர்வுகள், அன்றாட நிகழ்வுகள் மற்றும் வாழ்வின் தத்துவங்கள் ஆகியவற்றின் நுட்பத்தினை கவிதையின் தன்மையாகக் கொண்டுள்ளார். சிறுதுளி பெரு வெள்ளம் எனும் பழமொழிக்கேற்ப சிறு சிறு வரிகளில் பெரும் அர்த்தத்தைப் புகுத்தியுள்ளார்.

தலைப்பின் முக்கியத்துவம் (நிலத்தவள்) நிலத்தவள் என்னும் சொல்லுக்கு நிலத்தோடு தொடர்புடையவள் மற்றும் நிலத்தின் மகள் என்றும் பொருள் கொள்ளலாம்.

“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார் பொறுத்தல் தலை”(குறள்- 151)

எனும் வள்ளுவனின் ஒப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டு இருக்கலாம்.

நிலம் எப்படி அனைத்தையும் தாங்கிக் கொண்டு நமக்கான தேவைகளைப் பூர்த்தி செய்கிறதோ அதேபோல் ஒரு பெண்ணானவள் தனக்கான கஷ்டங்கள், இடையூறுகள் ஆகியவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு பொறுமையோடும் படைப்பாற்றலோடும் செயல்படுகிறாள் என்று இத்தொகுப்பில் சித்திரிக்கப்படுகிறாள். உதாரணமாக,

“வாகனத்தின் பின்புறம்

பாதித் தூக்கத்தில்

கூதலுக்கு முக்காடிட்டு

பயிரிட்ட கத்தரிக்காய் மூட்டைகளுடன்

உழவர் சந்தைக்கு வரும்

உள்ளூர் மூர்க்க தேவதைகளை கவனிக்கவே

செம்மண்ணில் வழியெல்லாம்

என் நள்ளிரவில் கண் மலர்கின்றன

விலையில்லா கள்ளிப் பூக்கள்”

கிராமத்தில் சாதாரணமாக வாழும் விவசாயக் குடும்பங்களில் உள்ள பெண்கள் தான் விளைவித்த பொருட்களுக்காகப் படும் பாட்டினை இக்கவிதை விவரிக்கிறது. முதல் மூன்று அடிகளில் ஒரு சாமானிய உழைப்பாளி தான் பயிரிட்ட பொருளுக்காக மேற்கொள்ளும் பயணத்தைப் பற்றியும் வாழ்வாதாரத்தின் போராட்டத்தையும் எடுத்தியம்புகிறது. “மூர்க்க தேவதைகள்” என்று குறிப்பிடப்பட்டிருப்பது கோபமான பெண்களை அல்ல; நிலத்தோடும் வெயிலோடும் போராடும் அவர்களது விடாமுயற்சியையும், ஒப்பற்ற உழைப்பையும் குறிக்கிறது.

கள்ளிப் பூக்கள் எவ்வளவுதான் அழகாகத் தோற்றமளித்தாலும் அதை யாராலும் கவனிக்கப்படுவதில்லை. அதுபோலவே இந்தப் பெண்களின் உழைப்பும், மதிப்பும் சமூகத்தால் பார்க்கப்படுவதில்லை என்பதை உணர்த்துகிறது. அதிகாலையில் சந்தைக்கு விற்பனைக்காகச் செல்லும் பெண்ணை தேவதையாகவும் அவளது இருப்பை ஒரு மலராகவும் கவிஞர் கையாண்டு உள்ளார்.

கவிஞர் தன் கவிதைகள் மூலம் பல்வேறு சமூகம் சார்ந்த கருத்துகளை முன்வைத்து உள்ளார். விளை நிலங்கள் அழிக்கப்படுவதைப் பற்றியும் இயற்கைச் சூழல் சுரண்டப்படுவதைப் பற்றியும் தம் கருத்துகளை எடுத்துரைக்கிறார்.

வெடுக்கென்று பிடுங்கி எறிய

நினைக்காதீர்கள்...

முழுவேரோடு

கவனமாகப் பிடுங்குங்கள்

எனும் வரிகள் பெண்ணின் அடையாளமும் அவளது உணர்வுகளும் எவ்வளவு ஆழமாக இந்தச் சமூகத்தில் வேரூன்றி உள்ளன என்பதை இக்கவிதைகள் விளக்குகின்றன. இத்தொகுப்பில் பெண்கள் சமூகத்தின் மீது கொண்ட சகிப்புத்தன்மை, பெண் விடுதலை, கல்வியின் முக்கியத்துவம், அவள் அடையும் சுயமரியாதை, அதனால் ஏற்படும் சமூக மாற்றம் குறித்தும் அனுபவக் கல்வி குறித்தும் இதில் கூறியுள்ளார். ஆண் பெண் அரசியல் மற்றும் பெண்ணியம் சார்ந்த நவீனப் பார்வைகளும் இடம் பெற்றுள்ளன.

தாக்கம் ஏற்படுத்திய சில கவிதைகள்

“வருடத்திற்கு ஒருமுறை வலம் வரும்

தேரோட்டத் திருவிழா

நினைவற்ற தாய்க்கு

மகன் தொலைந்த மனித காடு”

எனும் கவிதை, ஒரு கொண்டாட்டமான சூழல் எவ்வாறு துயரமாக மாறியது என்பதைக் கூறுகிறது. “மனிதக் காடு என்ற ஒற்றை வார்த்தையில் ஒரு தாயின் தனிமையையும் மீள முடியாத துயரத்தையும் கவிஞர் இதில் வடித்துள்ளார். தேடும் பசி எனும் கவிதையின் மூலம் காட்சிகள் கண்முன்னே புகைப்படங்கள் போல் தோற்றமளிக்கின்றன. வறுமையின் எதார்த்தம், பசியின் தேடல், ஒற்றை நாணயத்தின் மதிப்பு ஆகியவற்றை கண்முன்னே கொண்டு செல்கிறது.

“உச்சிப் பொழுதில் பசித்த நிழல்" எனும் கவிதையில், பசித்த நிழல் எனும் வார்த்தைதான் இந்தக் கவிதையின் ஆன்மா இந்தச் சாதாரண உருவகம் மிகச்சிறந்த இலக்கியப் படைப்பாக உயர்த்துகிறது. உச்சிப் பொழுதில் பசியால் வாடியவனுக்குத் தென்படும் ஒற்றை ரூபாயின் மதிப்பை அழகாகக் கையாண்டுள்ளார் கவிஞர். தனது கவிதைகளைப் வெறும் வார்த்தைகளால் மட்டும் கூறாமல் காட்சியாக வெளிப்படுத்தி உள்ளார். கடினமான மற்றும் இலக்கியச் சொற்கள் ஏதும் இதில் பயன்படுத்தப்படவில்லை. அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டு வாழ்வியல் தத்துவங்கள் பேசப்படுகின்றன. வறுமை, இயலாமை பிரிவு இடைவெளி, சமூகத்தின் மீதான கவலை ஆகியவற்றைத் தனக்கான சொற்கள் மூலம் விளக்குகிறார்.

அரசு பொது மருத்துவமனை எனும் தலைப்பில் கவிஞர் இரவு நேர மருத்துவச் சூழலையும் அங்கு நிலவும் அமைதியைப் பற்றியும், நோயாளிகளின் கவலைகள், நம்பிக்கைகள் மற்றும் அங்கு நிலவும் சூழ்நிலையையும் எடுத்துரைக்கிறார்.

“மரங்களின் இருளில்

ஏழ்மையான நோயாளிகளோடு

தன் குடும்பங்களோடு வசிக்கின்றன பறவைகள்”

எனும் வரிகள் மூலம் விளிம்பு நிலை மக்களின் துயரத்தையும் மருத்துவமனையை வாழ்விடமாகக் கொண்ட சாமானிய மக்களைப் பற்றியும் கூறுகிறார். மேலும் இக்கவிதையின் மூலம் நோயாளி, மக்களின் மன நம்பிக்கைகள், அச்சம் அவர்களுக்கு இடையேயான வழி ஆகியவற்றை விவரிக்கின்றார்.

மக்களின் ஏழ்மை, நோய், தனிமை போன்றவற்றைக் கவிஞர் அணுகும் விதம் வியப்பிற்குரியது இதில் கவிஞர் வாழ்வின் மீதான தீரா காதலையும் மனித நேயத்தையும் மக்களின் நிழலாகவே நின்று ஒலிக்கிறார்.

பெண்களின் உணர்வுகள் குறித்தும் இதில் சில கவிதைகளைக் கையாண்டு உள்ளார்.

“ஆளற்ற வீட்டின்

பெண் தெய்வம் நீ”

இதில் பெண்களின் தியாகத்தை பற்றியும், அவர்கள் சில விஷயங்களைத் தனக்குள்ளேயே புதைத்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். மேலும் பெண்களின் மௌனமான வலியை அவர்களின் மனசாட்சியாக நின்று எடுத்துரைக்கிறார்..

சமூகத்தால் ஒடுக்கப்பட்ட பெண்களைப் பற்றியும் அவர்களின் அமைதியான வழிகளைப் பற்றியும் கூறியுள்ளார். உறவுகளின் நெருக்கத்தை குறித்து

“பிரிந்து போன பின்னும்

தங்கி விடுகிறது

அவர்கள்

பயன்படுத்திய

பொருள்களின் அந்த வாசனை”

மனித உறவுகளுக்குள் இருக்கும் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்துள்ளார். பிரிவு எனும் மாபெரும் வழியை பொருள்களின் மூலம் அதன் உணர்ச்சி வெளிப்பாட்டைக் கூறுகிறார். உறவுகளைக் குறித்தும் அவர்களின் நினைவாக உள்ள அடையாளத்தைக் குறித்தும் அதன் மூலம் அவர்களைத் தேடும் விதத்தைக் குறித்தும் காட்சிப்படத்தைப் போன்று கவிதைகளைப் புகுத்தியுள்ளார். காதல், நட்பு, தாய் தந்தை போன்ற அனைவரின் உணர்வுகளையும் கவிஞர் அழகாக ஒரு மாலையைத் தொடுப்பது போன்று தொடுத்துள்ளார்...

இத்தொகுப்பு ஒரு சாதாரண மனித வாழ்வில் அமைதியாக நுழைந்து மனித மனங்களுக்குள் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது நிதரிசன உண்மை. இத்தொகுப்பில் உள்ள கவிதைகளை வாசிக்கும் பொழுது வாசகர்களுக்கு அமைதியான மனநிலையை அளிப்பார்கள் பாரமாக இருக்கும் மண் மனங்களையும் ஆசுவாசப்படுத்துவாள் - இந்த நிலத்தவள்.

நிலத்தவள் | சீனு ராமாசாமி

விலை: ரூ.150 வெளியீடு: மீ வெளியீடு

- இரா.தனலட்சுமி, உதவிப் பேராசிரியர், தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக்கல்லூரி, சென்னை -72.

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.