சென்ற இதழ் சமூக விழிப்புணர்வு இதழில் வெளிவந்த வட்டமிடும் வல்லூறுகள் கட்டுரை படித்தேன். மிகச் சிறப்பாக இருந்தது. ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் பல்வேறு துரோகங்களை அம்பலப்படுத்துவதாக இருந்தது. இலங்கை அரசை பணிய வைப்பதற்காக அந்தந்தப் போராளி அமைப்புகளை பகடைக்காய்களாக பயன்படுத்தி வந்ததிலிருந்து ஆரம்பித்த இந்திய அரசின் துரோகம் இன்று தங்களின் தெற்காசிய ஏகாதிபத்தியத்திற்காக அம் மக்களையே கூண்டோடு அழிப்பதற்காக இலங்கை ராணுவத்துக்கு அனைத்து உதவிகளையும் தற்பொழுது வரை பல்வேறு வகைகளில் தொடர்கிறது. இந்திய அரசு ஆரம்ப காலத்தில் போராளிக் குழுக்களுக்கு ஆயுதம் கொடுத்தபோதும் சரி, அதன்பிறகு தமிழீழ மக்களின் உரிமைகளுக்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுவதிலும் சரி, அங்குள்ள தமிழ் மக்களின் மீது உண்மையான அக்கறையுடன் நடந்து கொண்டதில்லை. தன் சுயநலனுக்காகவே நடந்து கொண்டது.

Pranab Mukarjeeஇந்திரா காந்தி இலங்கை அரசை மட்டம் தட்டவும், வேறொரு வல்லரசு தெற்காசியாவில் காலூன்றுவதை தடுப்பதற்கும் ஏற்ப விடுதலைப்புலிகள் உள்ளிட்ட போராளிக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சியும், நிதி உதவியும் அளித்தார். ராஜீவ் காந்தி தன்னை ராஜதந்திரியாக காட்டிக்கொள்ள இலங்கை அரசுடன் தமிழர் பிரச்சினைக்காக ஒப்பந்தம் செய்து அதை ஏற்குமாறு போராளிக் குழுக்களை நிர்ப்பந்தப்படுத்தினார். இவ்வாறு இந்திய அரசின் நயவஞ்சகத்தினாலும், துரோகத்தினாலும் பல்வேறு காலகட்டங்களைக் கடந்த ஈழப் பிரச்சினை இப்பொழுது வேறொரு பரிணாமத்தை எட்டியுள்ளது. இந்தியத் தொழிலதிபர்களின் வேட்டை நிலமாக இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளை பயன்படுத்துவதற்கு இந்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது. இலங்கை வர்த்தகத்தில் ஆட்டோமொபைல், தொலைத் தொடர்பு, தேயிலை உட்பட பெரும்பாலான தொழில்கள் இந்திய முதலாளிகளின் முற்றுரிமையில் இருக்கிறது என்பது கண்கூடான உண்மை.

இந்திய முதலாளிகள் தமிழரின் தாயகப் பரப்பை முற்றும் முழுவதுமாக சுரண்டுவதற்கும், தங்கள் ஏகபோக நலன்களை விரிவாக்குவதற்கும் பெரும் இடைஞ்சலாக இருப்பது அங்கு போராடிக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மட்டுமே. ஆகவே, (அண்ணணுக்கு பொண்ணு பாத்த மாதிரியும் ஆச்சு, ஆடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு என்னும் பழமொழிக்கேற்ப) புலிகளை பழிவாங்கின மாதிரியும் ஆச்சு, நம் ஆதிக்கத்தை தெற்காசியாவில் நிலைநிறுத்துனது மாதிரியும் ஆச்சு என்று ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிப்பதற்கு திட்டம் தீட்டியுள்ளது இந்திய அரசு. அதற்காக என்ன விலை கொடுக்க வேண்டுமானாலும் தயாராக இருக்கிறது. ஆகவே, அது இலங்கை அரசுக்கு பல்வேறு வகையில், தொழில்நுட்ப, ராணுவ, நிதி உதவியை அளித்து வருகிறது.

பொதுவாக, தேர்தல் களத்தில் எந்த அரசியல் கட்சியும், மக்களின் ஓட்டுகளை வாங்குவதற்காக தங்களின் மக்கள் விரோத செயல்களை சிறிது காலத்திற்கு ஒத்தி வைப்பர். அல்லது முகமூடியிட்டு யாருக்கும் தெரியாதவண்ணம் செய்வர். ஆனால், காங்கிரஸ் கூட்டணி அரசோ, தமிழ் மக்களை மயிருக்கும்கூட மதிக்கவில்லை. துணிச்சலாக ஈழத் தமிழர் விரோதப் போக்கை மேற்கொண்டு அங்கு வாழும் தமிழ் மக்களைக் கொல்லும் சிங்கள அரசுக்கு பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறது. இதற்கு 2 காரணங்கள் இருக்கலாம். ஒன்று தமிழ் மக்களை மடையர்களாக கருதி இருக்கலாம். அல்லது தள்ளாத வயதிலும் தமிழினத் தலைவர் தம்முடன் இருப்பது காரணமாக இருக்கலாம். இல்லையேல் ஆட்சி என்ன ஆட்சி, ஆட்சியே போனாலும் பரவாயில்லை விடுதலைப்புலிகளை பழி வாங்க வேண்டும். அவர்களை தொடர்ந்து ஆதரிக்கும் ஒட்டுமொத்த தமிழர்களையும் அழிக்க வேண்டும் என்ற வன்மம் காரணமாக இருக்கலாம். எது எப்படியோ, கலைஞரால் உச்சிமுகர்ந்து பாராட்டப்படும் சோனியாவின் முகமூடி நாளரு மேனியும், பொழுதொழு வண்ணமுமாக கிழிந்து விட்டது.

ஆனால், ஈழப் பிரச்சினையையட்டி, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அடிக்கும் கூத்துகளைப் பார்த்தால் ராஜபக்ஷே எவ்வளவோ பரவாயில்லை போல் தெரிகிறது. ஈழப் பிரச்சினையில் காங்கிரசின் நிலை மிகவும் தெளிவாக இருக்கிறது. தமிழர்களை பூண்டோடு அழிப்பதற்கு சிங்கள ராணுவத்திற்கு பல்வேறு வகையிலும் உதவி செய்வதே அது. காங்கிரசின் இந்த நிலைபாடு பச்சிளம் குழந்தைகளுக்கும் தெரிகிறது. ஆனால், பதவிக்காக கூட்டணி சேர்ந்துள்ள தமிழினத் தலைவரோ இன்னும் காங்கிரசுக்கு ஒளிவட்டம் கட்டிக் கொண்டிருக்கிறார். அவர் காங்கிரசின் மக்கள் விரோதச் செயல் அம்பலப்பட்ட பின்பும் முட்டுக் கொடுத்து வருகிறார். ‘ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசி’யாக இருக்கிறார். முன்பெல்லாம் பிரதமருக்கு கடிதம், ஜனாதிபதிக்கு கடிதம், சோனியாவுக்கு கடிதம் என்று தினம்தினம் கடிதம் எழுதி மக்களை ஏமாற்றிய கலைஞர், இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்று கருதியோ என்னவோ, இந்திய அரசால் என்ன செய்ய முடியும்? என்றும் ஒரு எல்லைக்குமேல் யாரையும் வற்புறுத்த முடியாது என்றும் முகாரி பாடுகிறார். அதுபோக மீத நேரத்தில் அங்கு பாதிக்கப்படும் தமிழர்களுக்கு சட்டி, பானையை தேர்வு செய்வது போல போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதுபோக மீத நேரத்தில் ஐ.நா.சபை இலங்கை அரசுக்கு போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்ததே தி.மு.க.வின் முயற்சியால்தான் என்று உடன்பிறப்புகளே கூசும் அளவு பொய் பேசுகிறார். கூடியவிரைவில் கலைஞர் கொத்துக் கொத்தாக விழும் தமிழர் பிணங்களை எரிப்பதற்கு சீமண்ணையும், வத்திபெட்டியும் கூட ஸ்பான்சர் செய்யலாம். அதையும் கூட பார்த்துக் கொண்டுதான் இருக்கும் தமிழகம்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் ‘போர் என்றால் குண்டு வீசத்தான் செய்வார்கள். குண்டு வீசினால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்று போர் தருமம் பேசிய புர்ர்ர்ரட்சித்தலைவி, இப்பொழுது தேர்தல் வந்தவுடன் ஈழத்தமிழர் பிணத்தின்மீது நின்று ஓட்டு வேட்டையாடுகிறார். அவரது அருகே கம்யூனிஸ்டுகள் வரதராஜன் உட்பட பலரும் ‘வெட்கத்துடன்’ அமர்ந்துள்ளனர்.

போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று போர் தருமம் பேசிய பொழுது கண்டிக்கத் திராணியில்லாத தலைவர்கள் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கும் பொழுது அ.தி.மு.க தொண்டனை மயிர்க் கூச்செறியும் அளவுக்கு வாழத்திப் பேசுகின்றனர். அருவெறுப்பாக இருக்கின்றது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைவர் இல. கணேசனும் அப்போதைக்கப்போது ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை தடுக்க வேண்டும் என்று ‘சீரியசாக’ அறிக்கை விடுகிறார். ஈழப் பிரச்சினையில் அவர் கட்சியின் கொள்கையோ காங்கிரஸ் கட்சியின் நகலாக இருக்கிறது. அவர் இங்குள்ள மக்களை ஏமாற்ற இப்படி அறிக்கை வேஷம் போடுகிறார்.

நம்ம இரண்டு சீட்டு மார்க்சிஸ்ட்டுகள் இந்த விஷயத்தில் சொல்லொன்னாத் துரோகம் செய்துள்ளனர். சுப்ரமணி என்ற சங்கராச்சாரி கொலைக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டபோது, அவர் மலம் கழிப்பதற்கு வசதியாக கீழே இலையை போலீசார் வைத்து அவரை ராஜமரியாதையுடன் நடத்தியபொழுதும், அவர் போலீஸ் காவலில் சரியாக நடத்தப்படுகிறாரா என்று, ‘இரத்த உறவுடன்’ மனித உரிமை பேசிய யெச்சூரி மார்க்சிஸ்டுகள் இன்று ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்படும்போது யாரையும் புண்படுத்தாத அளவுக்கு எங்கோ ஒற்றை வரித் தீர்மானம் போட்டுக்கண்டித்ததுடன் நழுவிவிட்டனர். ஒருவேளை காஸாவில் நடக்கும் மனித அவலம் பற்றி பொலிட்பீரோவில் தீர்மானம் நிறைவேற்ற பாயிண்டுகள் எடுத்துக் கொண்டிருக்கலாம். அல்லது டாடாவின் ஆபிஸில் தேர்தல் நிதி வாங்க காத்திருக்கலாம். அவர்களை மன்னித்து விடுவோம். ஆனால், மறக்க வேண்டாம்.

Veeramaniஇவர்கள் எல்லாம் வெளிப்படையாக நம்முன் அம்பலப்பட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால், சிலர் கண்ணுக்குத் தெரிவதில்லை. சென்ற இதழில் நண்பர் தீசுமாசு எழுதிய ஒரு கருத்து மிகச்சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். ‘‘நல்ல படைப்பாளி. அவன் அளித்த படைப்புகளால் மட்டுமல்ல, எடுக்க மறுத்த, மறந்த படைப்புகளாலும் தான் அறியப்பட வேண்டும்’’.

4 படம் எடுத்த சினிமாக்காரனுக்கே இந்த கருத்து பொருந்தும்போது சிந்தனையாளர்களுக்கு மிகவும் பொருந்தும். அந்தவகையில் பார்த்தால் மதிப்பிற்குரிய திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன் அவர்கள் இன்றைய ஈழத் தமிழர் பிரச்சினையில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் என்ன கருத்து மனதில் வைத்திருப்பார் என்பது ஊருக்கும், உலகுக்கும் தெரியும். ஆனால், கடந்த ஆறு மாதத்தில் அதனை எங்கு பதிவு செய்திருக்கிறார் என்று தெரியவில்லை.

எத்தனை போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்? எதுவும் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. அவருக்கு தற்போது ‘உற்ற தோழனான’ ஆசிரியர் கி. வீரமணி நடத்திய பெரியார் திடல் கருத்தரங்கில் பேசினார். அங்கு வயதானவர்கள் உட்பட 46 பேர் கலந்து கொண்டனர். அதுபோக தி ஹிந்து பத்திரிகை அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அண்ணா அறிவாலயம் சுற்றி 10, 15 போஸ்டர்கள் ஒட்டியிருந்ததைப் பார்த்தேன். கலைஞர் டி.வி.யில் மட்டும் காலையில் காணமுடிகிறது. மற்றபடி எங்கும் காணமுடியவில்லை. வாழ்க. ஒரு இனம் அழியும்போது அமைதியாக இருப்பது மிகப்பெரிய துரோகம் என்பதை அண்ணன் அறிவார்.

அவரைப் போலவே ஆசிரியர் கி. வீரமணி அவர்களும், வேண்டாம். அவரைப் பற்றி இப்போது பேசவேண்டாம். இப்பொழுது கல்லூரி அட்மிஷன் நேரம். பிசியாக இருப்பார். அதுபோக அறக்கட்டளையின் சென்ற வருட வருமான வரி கணக்கு முடிக்கும் நேரம். தொந்தரவு செய்ய வேண்டாம். விட்டுவிடுவோம்.

இவ்வாறு ஈழப்பிரச்சினை துரோகங்களும், ஓட்டுக்கான வேஷங்களும், பதவிக்காக காட்டிக் கொடுத்தலும், சீட்டுக்காக கழுத்தறுப்புகளும் நடைபெறுகின்றது. எல்லோரும் எதற்கும் தயாராக இருக்கின்றனர். முகமூடிகளை கழட்டிப் பார்க்க கொஞ்சம் பகுத்தறிவு தேவைப்படுகிறது.

இவர்களையெல்லாம் பற்றி எழுதிவிட்டு கடிதத்தை முடிக்கும்பொழுது நமது தங்கபாலுவும் ஆபாத்தாந்தவனாக வந்துவிட்டார். ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை வசூல் செய்து வருகிறார். அவர் பின்னாலும் ஒரு கூட்டம் திரிகிறது.

இன்னும் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்கள் வசூல் செய்யாததும், இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டுமென்று ஒப்புக்கு குரல் கொடுக்காதவர்களும் யாரும் இல்லை. போற போக்கை பார்த்தால் ராஜபக்ஷே கூட இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் என்று அறிக்கை விட்டாலும், உண்ணாவிரதம் இருந்தாலும் அதை நமது தலைவர்கள் வாழ்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Pin It