கல்லும் கரடுமாக விறுவோடி, புழுதி தூர்ந்து கிடந்த செம்மண் பாதையில் பாதங்களை அழுந்தப் புதைத்தபடி நடந்து கொண்டிருந்தான் இஞ்சி. குதிகால் மிதியதிர்வில் புளுதி கிளம்பி கால்களில் நரைத்துக் கிடந்த ரோமங்களில் படந்து அடங்கியது. முன்னும் பின்னும் நோட்டம் விட்டபடியே நெடுங்கிடையாய் நீண்டு கிடந்த விருதம்பட்டி வண்டிப் பாதையை வெறித்தபடி வேகங்கொடுத்து நடந்து கொண்டிருந்தான் இஞ்சி. பதற்றத்தில் அதிர்ந்து கொண்டிருந்த உடம்பை தணிக்க முடியவில்லை. யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது என்று எண்ணிக் கொண்டான். விருதம்பட்டியிலிருந்து பொன்னூருக்குக் கடைச்சரக்கு ஏற்றிவரும் தேங்காய் மண்டைச் செட்டியார் கண்ணில் பட்டுவிட்டால், ஊருக்கே தெரிந்துவிடும். விருதம்பட்டி வண்டிப் பாதையில், தினமும் இரவில் பத்திருபது சரக்கு வண்டிகள் போய் வந்தபடி இருக்கும். அதில் எந்த வண்டியில் தேங்காய் மண்டை வருவானோ என்ற கலக்கம் தான் இஞ்சிக்கு பீதியூட்டிக்கொண்டிருந்தது.

Dalitதாயில்பட்டிக் கிழவி மட்டும் சொல்லாமலிருந்தால், இஞ்சி இந்நேரத்திற்குப் பிடிபட்டிருப்பான். பொன்னூர் ஓடைப்பட்டி கள்ளுக் கடையில் காவற்கள்ளு குடித்துவிட்டு கடையடியில் துண்டை விரித்துப் படுத்துறங்கிக் கொண்டிருந்த இஞ்சியை எழுப்பி, விஷயத்தைச் சொன்னவள் தாயில்பட்டிக் கிழவிதான்.

பொழுது விழுந்த நேரமிருக்கும், “ஏ... இஞ்சி... ஏலே.... ஒன்னைத் தேடி, கச்சேரிக்காரனுக தெருவுக்குள்ள திரியிரானுகடா.

ஏலே... ஏ இஞ்சி... எந்திரிடா.''

திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான் இஞ்சி.

“மோளையனை இன்னக்கி காலம்பறவே புடிச்சிட்டானுகளாம். அவன் நெருஞ்சி மகன் பொம்மியையும், வெள்ளாத்தா புருசனையும் புடிச்சி, இழுத்துட்டுப் போறானுகடா. எந்திருச்சு எங்கேயாவது ஓடி தப்பிச்சுக்கடா..''

இஞ்சிக்கு விஷயம் புரிபட்டது. திடுமென மலைபோல் எழுந்து நின்று வேட்டியை உதறிக் கட்டினான். தலைமாட்டில் வைத்திருந்த காவற்கம்லி பையும், சுருக்குப் பையையும் எடுத்துக் கொண்டு, விரித்துப்படுத்த துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டான்.

“ஏக்கா... நான் விடியங்குள்யியும் மூத்த மக வீட்டுக்குப் போயிடுவேன். அனந்தம்மாகிட்டச் சொல்லிரு. என்னைப் பார்த்ததா வேறு யாருகிட்டேயும் நீ சொல்லிக்கிற வேணாம்.''

“சரி சாமி... நீ சீக்கிரம் போ''

இடைவாரில் தொங்கிய வங்கியைத் தடவிப் பார்த்துக்கொண்டே, பெருமூச்சு விட்டபடி இரண்டடி எடுத்து வைத்த இஞ்சியிடம், “என்ன இஞ்சி... கிளம்பிட்டியா. இன்னும் ஒரு செம்பு பாக்கி இருக்கே'' என்றாள் கள்ளுக்கடை பெருமா.

பதிலுக்குத் திரும்பிக்கூட பார்க்காமல் கள்ளுக்கடையிருந்த ஊரணிக் கரையில் இறங்கி, நாலாபுறமும் சூழ்ந்து மறிப்பது போல் நின்ற பனைகளைக் கடந்து நடக்கத் தொடங்கினான் இஞ்சி.

பனங்காட்டுக்கு அப்பாலுள்ள மீனாட்சிபுரம் செல்லும் வண்டிப் பாதையில் விறுவிறுவென நடந்து, மீனாட்சிபுரம் மிளகுச் செட்டியார் கடையில் காலணாவிற்கு வெற்றிலை, பாக்கு, புகையிலை வாங்கிவிட்டு, மறக்காமல் சுண்ணாம்பை எடுத்து வெற்றிலையில் சுருட்டி மடியில் கட்டிக்கொண்டு நடந்தான்.

“என்ன... இஞ்சி.. பொழுது கருக்க இந்தப்பக்கம்...'' திடுக்கிடச் செய்த அந்தக் கேள்வியைக் கேட்ட வாச நாய்க்கருக்கு, “ரெண்டு கெடேறி புடிக்கலாமுனு வந்தேன். ஒன்னும் சிக்கல.'' என்று முகங்கொடுக்காமல் பதில் சொல்லிவிட்டு நடந்தான். கொல்லை மந்தை தாண்டி சில்லோடைக்குள் இறங்கிக் கரையேறி, விருதம்பட்டி வண்டிச்சாலையில் மிதித்து, வேகங்கொடுத்து நடந்தான். முகம் மறைக்கும் அளவிற்கு இருட்டி விட்டிருந்தது. இனி பயமில்லை. பளப்பளவென விடியுமுன் மகள் வீட்டிற்கு போய்விடலாமென்று எண்ணி நிதானமானான்.

ஆனாலும், இன்னும் பத்துக்கல் தொலைவு நடக்க வேண்டும். இடையில் கிளியம்பட்டியிலும், நத்தனூரிலும் தெரிந்த ஆட்களின் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்றுதான் கவலைப்பட்டான் இஞ்சி. நத்தனூர் தாண்டிவிட்டால் பிறகு கவலை இல்லை. நத்தனூர் பெரியோடை இறங்கி நடந்தால் ஒரு நாளிகைக்குள் விருதம்பட்டி பூச்சேரிக்குள் போய்விட முடியும். அங்கேதான் இஞ்சியின் மூத்த மகள் சென்னம்மா வாழ்க்கைப்பட்டு போயிருந்தாள்.

உடல் பெருத்த காலத்திலிருந்தே பொன்னூர்க் கண்மாய்களின் விளைச்சல் மொத்தத்திற்கும் காவல் காத்துப் பழகியவன் இஞ்சி. பொன்னூரிலும் சுற்றுப்பட்ட கிராமங்களிலும் வாசல் வரைக்கால் வைத்துப் பிழைக்கும் எல்லோருக்கும் இஞ்சியை தெரியும், ஆள் வாட்டசாட்டமான உடம்புக்காரன், திமுதிமுவென வளர்ந்திருந்தான், பொன்னூர் சேரியில், இஞ்சி அளவிற்கு வளர்ந்து நின்றவன் யாருமில்லை. வேண்டுமானால், தோதுக்குச் செல்லையனைச் சொல்லலாம். அவன்கூட, ஆள் சில்லாளியாக இருப்பான். இஞ்சி அளவிற்கு ஈடுதாடியாக இல்லை. பத்து மரக்கால் விதைப்பாட்டிற்கு பத்துப்படி நெல் வருடக் கூலியும், வேண்டும் என்கிற அளவிற்கு பண்ணைக் கள்ளும் தான் இஞ்சிக்கு கிடைக்கும். மூன்று போகமும் விளைந்து, களம் சேரும் வரை இஞ்சிதான் காவல்.

போதர் குளம் முதல் சீவனேரி வரை கண்மாய்க் காடு கரைகளிலும், வாய்க்கால் வரப்புகளிலும் இஞ்சியின் கால்படாத இடம் ஏது. அம்மாவாசை இருட்டென்றால் காவற்கம்பு துணையோடு இரவெல்லாம் காடுகரைகளிலேயே இஞ்சி சுற்றிக் கொண்டிருப்பான். இரவு மேய்ச்சலுக்கு ஒண்டிக் கொம்பு மாடுகளுடன் திரியும் மேய்ச்சல்காரப் பயல்கள், இஞ்சி காவலுக்கிருக்கும் வெள்ளாமை பக்கம் வருவதே இல்லை. கிடைகளில் ஆடுகள் திருடு போகாமலிருக்க காவல் காக்கும் கீதாரிகள் கூட, இஞ்சியின் நடமாட்டம் இருக்கிறது என்று தெரிந்தால், சற்று கண்ணயர்ந்து கொள்வார்கள். இடைவாரில் தொங்கும் சூரிக் கத்தியுடன், வெற்றிலையை மென்றபடி சாமத்திலும் ஏமத்திலும் மினுங்கும் கண்களுடன் இஞ்சி சுற்றிக் கொண்டிருப்பான் என்று ஊருக்குள் பேச்சிருந்தது.

இஞ்சி, காவலுக்கிருக்கும் வெள்ளாமைகளில் கை வைப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை உண்டு. எப்படியும் இஞ்சியின் கண்களில் பட்டேயாக வேண்டும். தப்பித் தவறி இஞ்சிக்குத் தெரியாமல் வெள்ளாமை அழியுமானால், ஒருமுறை இரண்டு முறைதான். மூன்றாவது தடவை கண்ணி வைத்துப் பிடிப்பான் இஞ்சி.

அப்படித்தான், மேற்கே சீவனோடைப் பாய்ச்சலில் கொண்டணீ காட்டில் ஆள் உயரத்திற்கு வளர்ந்து நின்ற மொச்சையில் பளிஞ்சி மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த முனுசாமிக் கோணாரையும், மேய்ந்த மாடுகளையும் இரவோடிரவாக இழுத்துக்கொண்டுவந்து கொண்டிக் காவலில் அடைத்தான் இஞ்சி. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பெருமாபாறை ஊரணிக்கரை ஓடையில் கூடிய பஞ்சாயத்தில், முனுசாமிக் கோணாரின் மூன்று கெயிடறிகளை அபராதமாக எடுத்துக்கொண்டு ஆளை விடுவித்தார்கள். மாடு, மனிதர்கள் என்றில்லை. வெள்ளாமையை அழிக்கும் முள்ளம் பன்றிகள், வெறிநாய்கள், வெறுகுகள் என எதைக் கண்டாலும் விரட்டி கொல்லாமல் விட்டதில்லை.

மார்கழியில், இரண்டு நாளுக்கொருமுறை முள்ளம் பன்றிகளுடன்தான் இஞ்சி வீடு திரும்புவான். வெறுகு, இஞ்சிக்குப் பிடித்தமான உணவு. எப்போதாகிலும் முயல்கள் கண்ணில் சிக்கும். பாசனம் செழித்திருக்கும் காலங்களில், வீட்டில் தினமும் நண்டுக் குழம்புதான். விரிந்து, சரிந்த வயல்களின் வரப்புமேடுகளில் வளையமைத்து நெல் சேமிக்கும் பெருச்சாளிகள், இஞ்சியின் மதிய நேர கள்ளுக்குத் தோதான கறியாக மாறும். பெருச்சாளிகள் கண்ணில் பட்டால் வெறுகுபோல் பாய்ந்தோடுவான் இஞ்சி. அடித்துக் கொல்ல காவற்கம்பை அவன் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. காலால் மிதித்தே கொல்வான். உரமேறித் திரண்டு பருத்த அவனது கால் மிதியில், உருண்டு திரண்ட பெருச்சாளிகள் நசுக்கிச் சாகும். சுண்டெலிகளைத் இஞ்சி தொடுவதில்லை.

பொழுது விடிந்து வெயிலேறி சனமெல்லாம் காடு கரைகளுக்குச் சென்ற பின் ஊரே வெறிச்சோடிக் கிடக்கும். மல்லி, சீரகம், பூண்டு, மிளகாய் சேர்த்து அம்மியில் அரைத்த மசாலுடன், திணையிடிக்கும் உரலில் இஞ்சிக்காகக் காத்துக் கொண்டிருப்பாள் அனந்தம்மாள். முந்தின இரவு காய்ச்சி வைத்த கம்மங் கஞ்சி கட்டி சேர்ந்து தவனுபோல் இருக்கும். இஞ்சி வருவது, தொலைவிலேயே தெரியும். தலைச்சுமட்டிலோ, தோளிலோ துண்டசில் மூடப்பட்ட சுமை இருக்கும். தோளில் தொங்கிக் கொண்டிருந்தால் அது பெருச்சாளி, அல்லது முயல்குட்டி. தலைச் சுமை, என்றால் அது முள்ளம் பன்றிதான் என்று கணக்கிட்டுக் கொள்வாள் அனந்தம்மா.

இஞ்சிக்கு வாழ்க்கைப்பட்டு பொன்னூருக்கு வந்த நாளிலிருந்து அனந்தம்மாவுக்கு உலகமே இஞ்சிதான் என்று ஆகிவிட்டது. ‘காவற்காரன் பொண்டாட்டி' என்ற தோரனையும் சேர்ந்து கொண்டதால், பொன்னூர் சேரியில் மதிப்பாகத்தான் இருந்து வந்தாள். இரவெல்லாம் காடுகரைகளில் திரிந்துவிட்டு, விடிந்ததும் வீட்டுக்கு வரும் இஞ்சியை, மனம் நோகாமல் கவனிக்க வேண்டும் என்பதே அவளது வாழ்க்கையென்றாகிவிட்டது. இஞ்சிக்கு கோபம் வரும்படி பேசுவதோ, நடந்து கொள்வதோ நினைத்துப் பார்க்கக்கூட முடியாததாக இருந்தது.

இஞ்சி வீடு வந்து சேர்ந்ததும் கொண்டுவரும் சுமையை இறக்கி, முடிச்சை அவிழ்த்துப் பார்த்து என்ன இருக்கிறதோ அதை நாக்கு ருசி பார்த்து மசால் சேர்த்து, அவித்துக் கொடுத்தால் கம்மங்கஞ்சியையும் ‘கடிச்சிக்கிற'தையும் வைத்து ஒரு பிடி பிடித்துவிட்டு கள்ளுக்கடைக்கு போகிறவன், இருட்டவும் காட்டிற்கு காவலுக்குக் கிளம்பும்போது வீடு வந்தாலும் வருவான், நேரமானால் அப்படியே கள்ளுக்கடையிலிருந்தே காவலுக்குப் போய்விடுவான். இரவெல்லாம் காடுகரைகளிலும், பகலெல்லாம் கள்ளுக்கடையிலும் என்று இஞ்சியின் காலம் கழிந்து கொண்டிருந்தது.

இஞ்சி பிறந்தது, வளர்ந்தது எல்லாம் நத்தனூருக்கு கிழக்கே சல்லிபட்டியில்தான். சுற்றுப்பட்டி தொட்டிகளுக்கெல்லாம் சல்லிபட்டி பெயர்போனதாக இருந்தது. சல்லிபட்டிச் செஞ்சோளம் அவ்வளவு சுவையாக இருக்கும் என்று பெரியாள் பெருந்தலைகள் முதல் விண்டு விடுக்குகள் வரை பேச்சில் பெருமை பொங்கும். இஞ்சியின் தாய் பரிபூரணத்திற்கு சல்லிபட்டியில் ஐந்து குறுக்கம் இருந்தது. செங்குளத்துத் தண்ணீரைப் பாய்ச்சியாவது ஒரு போகத்திற்கு அய்ம்பதறுபது கோட்டம் அறுத்து விடுவாள் பரிபூரணம். ஆறடி உயரமிருப்பாள். இரண்டு காதுகளிலும் பாம்படம் ஊஞ்சலாடியபடி பரிபூரணத்தின் பகட்டைச் சொல்லும். கல்லுப்பட்டிச் சுங்கடியைக் கட்டிக்கொண்டு, கையில் பண்ணையரிவாளும் மண்வெட்டியுமாய் செஞ்சோளக் காட்டு வரப்புகளில் அமர்ந்தபடி நோட்டம் விடுவாள். கதிர்களை அறுத்துக் கொண்டோடி வளைகளில் சேமிக்கும் காட்டெலிகள் பரிபூரணத்தைப் பார்த்து ஓடிப் பதுங்கும். எந்தச் துரத்தில் எந்த வரப்பில் எத்தனை வளை இருக்கும், எவ்வளவு சோளம் வரும், எத்தனை எலிகள் குடியிருக்கும் என்ற கணக்குகள் எல்லாம் பரிபூரணத்திற்கு அத்துப்படி.

கதிர்கள் பருத்துத் தொங்கும் காலங்களிலிருந்தே கதிர்களின் எண்ணிக்கையை எண்ணத் தொடங்கிவிடுவாள். எலிகளால் பாதி அறுபட்டு பயிர்களிலேயே தொங்கும் கதிர்களின் எண்ணிக்கைகூட பரிபூரணத்திற்குத் தெரிந்திருந்தது. பொழுது சாய, செங்குளத்தில் உடம்பலச வரும் குஞ்சுக் குமரிகள் கதிர்களைக் கசக்கித் தின்றுவிடாதபடி இருட்டுமட்டும் காவலுக்கிருந்துவிட்டுத்தான் வீடு திரும்புவாள்.

பத்திருபது சோடிகளுக்கும் மேல் வெள்ளாடுகள், நாலைந்து எருமைகள், கொஞ்சம் நாட்டுக்கோழிகள், சேவல்கள் என குட்டிப் பண்ணையே வைத்திருந்தாள் பரிபூரணம். ஒரு சோடி இறவை மாடுகளும் இருந்தன. எருமைகள் இரண்டு வேளைக்கு இரண்டு படி பால் கொடுத்துக் கொண்டிருந்தது. கட்டுத்தரையைச் சுத்தம் கெய்வது, ஆடு மாடு கோழிக்குத் தீவணமிட்டு தண்ணீர் காட்டுவது, சோளக்காட்டில் காவலுக்கிருக்கும் பரிபூரணத்திற்கு கஞ்சி கொண்டு போவது, வரப்பு வாய்க்கால்களில் எருமைகளையும் வெள்ளாடுகளையும் மேய்த்து பட்டியிலடைப்பது என வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் மாடன்தான் கவனித்துக்கொண்டான். தெற்கே வீர சோழபுரத்திற்கு பக்கம் ஊத்தூர்தான் மாடனுக்குச் சொந்த ஊர். நாடேகாடேவென அலைந்து காலம்போன கடைசியில், சல்லிபட்டி வந்து பெண் பார்த்து பரிபூரணத்தைக் கல்யாணம் செய்து கொண்டான் மாடன். ஊத்தூருக்கு வந்து குடும்பம் நடத்துவாள் என்ற மாடனின் எண்ணத்தில் கல்யாணமான அன்று இரவு, புதுப்பெண்ணாய் மாட்டு வண்டியில் சீதனத்துடன் பயணம் செய்த போதே மண்ணள்ளிப் போட்டாள் பரிபூரணம். ஒரு வாரத்திற்குமேல் ஊத்தூரில் இருக்கவில்லை அவள். சீதனமாய்க் கொண்டுபோனதைத் தலைச் சுமையாய் சுமந்து கொண்டு மாடனையும் கையில் பிடித்தபடி சல்லிபட்டிக்குத் திரும்பினாள். அன்றிலிருந்து வாய் பேச்சறியாத பிள்ளைப் பூச்சியாய் பரிபூரணத்தின் எடுபிடியாய் ஏவல் வேலை செய்து காலம் தள்ளினான் மாடன்.

கோயில் குளம் என்று பரிபூரணம் அலையாமலேயே கல்யாணமான மறு வருடமே இஞ்சி பிறந்தான். தாய்மாமனைக் கொள்ளை கொண்டு போக, கொடி சுற்றிப் பிறந்த இஞ்சியைத் தூக்கிக் கொண்டு ஊத்தூருக்குப் போய், சுடலைமாடனுக்கு முடியெடுத்துக் காதுகுத்தி, கிடாவெட்டிப் பொங்கல் வைத்து, கருமம் கழித்தாள் பரிபூரணம். தலைப்பிள்ளையாய் பிறந்த இஞ்சி பரிபூரணத்தின் மடியையும் மனதையும் பொங்க வைத்தாகி. செஞ்சோளம் இரண்டு போகம் விளைந்தது. கட்டுத்தறியிலிருந்த எருமைகளில் இரண்டும் பொட்டைகள ஈண்டு பால் கொழித்தது. சல்லிபட்டியிலிருந்து கிளியனூருக்குப் போகும் வண்டிப்பாதை மேலே வாணம் பார்த்த பூமி இரண்டு குறுக்கும் வாங்கினாள். காதுக்கு கம்மல்கள் வாங்கி மாட்டிக் கொண்டாள். குடிசையின் பழைய இத்துப்போன கூரையைப் பிரித்து மேய்ந்து, சுவற்றுக்கு செம்மண் பூசி சுத்தம் பார்த்தாள். இறவை மாடுகளுக்கு வெங்கல மணி வாங்கி பூட்டிப் பூரித்தாள். செழிப்பெல்லாம் இஞ்சி கொண்டுவந்து சேர்த்த பேறு எனப் பெருமிதம் கொண்டாள்.

இஞ்சிக்கு பத்து வயது நடக்கும் போது, பரிபூரணத்தின் காலம் அழியத் தொடங்கியிருந்தது. சோளத்திற்கு நீர் இறைக்கப் போன மாடன், இறவை மாடுகளுடன் நீர்த் தவலை இழுத்துத்தள்ள, கிணற்றுக்குள் விழுந்து, மாடுகளோடு இறந்து கிடந்தான். மாடன் இறைத்து சோளத்திற்குப் பாய்ந்து கொண்டிருந்த தண்ணீர் வரத்து நின்று போனதைக் கண்டு, ஆத்திரத்தோடு இறவைக் கிணற்றுக்கு வந்த பரிபூரணம் அதிர்ந்தாள். மாடுகளும் மாடனும் செத்து மிதந்ததைப் பார்த்து அலறினாள். தூக்க ஆளில்லாமல், சேரிக்கு ஓடி நாலைந்து ஆண்களைக் கூட்டி வந்து பிணத்தைத் தூக்கிப் புதைத்தாள். செழிப்பைப் பெருக்கிய இறவை மாடுகளும், மாடனும் இறவைக் கிணற்றுக்குள் விழுந்ததை காலம் கொண்டுவந்த அழிவென எண்ணினாள் பரிபூரணம். வெள்ளாமையின் மீது கவனம் குறையத் தொடங்கியது. பரிபூரணத்திற்கு. இஞ்சியை கண்விலகாமல் கவனித்து வந்தவளுக்கு, காடுகரைகளில் சேரிப் பிள்ளைகளுடன் இஞ்சி சுற்றித் திரிவதை கண்டிக்க மனம் எழவில்லை. அந்தி நேரங்களில் இறவைக் கிணற்றின் கைப்பிடிச் சுவரில் அமர்ந்து ஒப்பாரி வைத்தாள். மண்புழுபோல வாய்பேசாத மாடனையும், சளைக்காமல் நீர் இறைத்த மாடுகளையும் அவளால் மறக்க முடியவில்லை. இறவை மாடுகளின் வெங்கல மணிமியாலிகள் பரிபூரணத்தின் நினைவை உலுக்கத் தொடங்கின.

பார்க்க ஆளின்றி சோளப்பயிர்கள் வதங்கி வாடத் தொடங்கின. கதிர் பூத்த பயிர்கள் நீரின்றி வதங்கி மடிந்தன. இறவைக் கிணற்றில் தூர்மேவியது. சோளப் பயிர்கள் வதங்கிச் சாவதைக் கண்டு பரிபூரணம் நினைவு பேதலித்தாள். ஆடு மாடுகளை வந்த விலைக்கு விற்றாள். வீட்டையும், இறவைக் கிணற்றோடு சோளக் காட்டையும் சேர்த்து விற்று, எடுத்துக் கொண்டு, சல்லிபட்டிச் சேரியிலிருந்து வெளியேறினாள். மறக்காமல் மாடன் சமாதிக்குப் போய் பிடி மண்ணெடுத்து முந்தானையில் முடிந்து கொண்டாள்.

சொந்த சாதி சனம் இருக்கும் பூமிக்குப் போய் காலம் கழிப்பதென பரிபூரணத்திற்குப்பட்டது. இஞ்சியை கூட்டிக்கொண்டு, பொன்னூர் சேரிக்கு வந்து சேர்ந்தாள். ஒன்றுவிட்ட சின்னாத்தாள் சடைச்சிக்கு பொன்னூர்தான். பரிபூரணத்தின் சின்னத் தாத்தாவும் பொன்னூரில் இருந்ததால் பொன்னூருக்கு வந்து குடியேறினாள். இஞ்சிக்கு பதினேழு வயது நடக்கும்போது, கொண்டனூம்பட்டி தவசிக்கிழவன் பேத்தியை பேசி முடித்தாள். ஊர்காலன் கோயிலிலல் தாலிகட்டி, குடி வைத்தாள்.

கல்யாணம் முடித்து வைத்தும், இஞ்சி காடு கரைகளில் சுற்றுவதை நிறுத்தவில்லை. மற்ற ஆட்களைப் போல் வேலைக்குப் போய் குடும்பம் நடத்த இஞ்சிக்கு மனம் ஒவ்வவில்லை. சிறு வயதிலிருந்தே வேலைக்குப் போய் கூலி வாங்கும் பழக்கம் அவனுக்கு இல்லாமலிருந்தது. எல்லாவற்றையும் பரிபூரணம் கவனித்துக் கொண்டாள். கல்யாணமானபின்னும் அதே கதைதான். பொன்னூர் காடு கரைகள் எல்லாம் அவனுக்கு அத்துப்படியாகிப் போனது. சீவனேரி, போதர்குளம், வத்ராங்குளம் கண்மாய்ப் பாசணக் காடுகளுக்கு இரவுக் காவல் காக்கும் பொறுப்பை, பொன்னூர் கீதாரி முத்துச்சாமி வாங்கிக் கொடுத்தார். வருடக் கூலி பேசிவிட்டது கூட முத்துச்சாமிதான். கண்ணுங் கருத்துமாய் காவல் காத்ததினால், இஞ்சி காவலுக்குப் பேர் போனான்.

தவசிக் கிழவன் பேத்தியாள் அனந்தம்மாளுக்கும், பரிபூரணத்திற்கும் ஒத்துப் போகவில்லை. இஞ்சி இல்லாதபோது, வாய்த் தூக்கலாகப் பேசி, பரிபூரணத்தை விரட்டினாள் அனந்தம்மாள். மகனிடம்ஒன்றுக்கு இரண்டு முறை சொல்லியும், இஞ்சி தட்டிக் கொடுக்கவில்லை. அதற்குமேல் பரிபூரணம் எதையும் பேசுவதில்லை. இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றபோதும், வாய் வைத்தியம் பார்த்துக் கொடுத்தாள் பரிபூரணம், மிச்சமிருக்கும் காலத்தை மகன் நிழலில் வாழ்ந்து கழிக்க எண்ணியவளாய், வாய் வம்பு செய்யாமல் காலம் தள்ளினாள்.

இஞ்சியின் தாட்டிக்கமான பேச்சும், குற்றம்குறை செய்யாத குணமும் அவனை பொன்னூர் சேரியின் நாட்டாமையாக்கியது. பொன்னூர் சேரியில் அறுபது எழுபது தலைக்கட்டுகள். சீவனேரிக் கண்மாயின் தலைக் கண்ணாறு பாயும் காடுகரைகளில் கழனி வேலைசெய்து பிழைத்து வந்தது சேரிக் குடும்பங்கள். காடுகரைகள் வைத்து வெள்ளாமை செய்து, ஆதிக்கம் செலுத்திய தெலுங்கு நாயக்கர்களுடன், பொன்னூர் சேரி இளவட்டப் பயல்கள் அடிக்கடி மோதிக்கொள்வதுண்டு. அப்போதெல்லாம், இஞ்சிதான் சமாதானம் செய்ய வேண்டும். நாயக்கர் தெரு நாட்டாமையைப் பார்த்துப் பேசிச் சரிக்கட்டவேண்டும். பேச்சு மடியவில்லையென்றால் அஞ்சோ பத்தோ அபராதம் கட்டச் சொல்லி சரி செய்து விடுவான். ஆனாலும் சண்டை சச்சரவு இருந்துகொண்டேயிருந்தது. இப்படியே காலம் கழிந்துவிட்டது. இரண்டு மகள்களையும் நல்ல சம்பந்தம் பார்த்து முடித்து வைத்தான். மூத்தவளை விருதம்பட்டியிலும், இளையவளை உள்பரிலும் கட்டி வைத்தான். இருபது இருபத்தைந்து வருடத்தில், இஞ்சியின் பெயர் சுற்றுப்பட்டிகளுக்கெல்லாம் தெரிந்தது.

போன வாரம், இஞ்சியின் காலத்தில் நடக்காத கொடுமை ஒன்று பொன்னூரில் நடந்தது. அதுதான் இப்போது இஞ்சியை விரட்டிக் கொண்டிருக்கிறது. போன வாரம், சீவனோடை ஊரணிக் கரையில், துணிமணிகளோடு கைக்கடிகாரத்தையும் கழற்றி வைத்துவிட்டு, ஊரணியில் குளித்துக்கொண்டிருந்த தசரத நாயுடு, குளித்து முடித்து கரைக்கு வந்து பார்த்தபோது, அவனது கடிகாரத்தைக் காணவில்லை. பொன்னூர்ச் சேரி மூடையன் கரையோரமாக நடந்து போனதைக் குளித்துக் கொண்டே பார்த்தது சதசரதனுக்கு நினைவுக்கு வந்தது. சடையனைத் தேடிகாடு கரைகளில் அலைந்தான் தசரதன். ஆள் சிக்கவில்லை. எப்படியும் பொழுது கருக்கவும் வீட்டுக்கு வர வேண்டும்தானே என்று எண்ணிய தசரதன் ஊரணிக் கரையிலேயே காத்திருந்தான். இருட்டும் மட்டும் சடையன் அந்தப் பக்கம் வரவேயில்லை.

மறுநாள், சடையனைத் தேடி, தசரதன் பொன்னூர் சேரிக்கரை வழியே நடந்து, வத்ராங்குளத்தில், கல்வெட்டாங் குழியில் சுண்ணாம்புக்கல் வெட்டியெடுத்துக் கொண்டிருந்த சடையனை பார்த்துவிட்டான். கடிகாரத்தை எடுக்கவில்லையென்று அழுது கெஞ்சினான் சடையன். ஆனாலும், தசரதன் விடவில்லை. சடையனின் புறங்கையைக் கட்டி அடித்து இழுத்துக் கொண்டே வந்தான். கல்வெட்டாங்குழியில் கால் தடுக்கி விழுந்த வண்ணம் அழுது கொண்டே வந்தான் சடையன். கடிகாரத்தை களவாடவில்லை என்று அழுது கெஞ்சுவதைத் தவிர சடையனுக்கு வழியில்லை. பொழுது உச்சிக்குப் போய்விட்டிருந்தது. வேலி முள் மரத்தில் சடையனைக் கட்டி வைத்து விசாரித்துக் கொண்டிருந்தான் தசரதன்.

போதர் குளத்தில் பருத்திமாறு பிடுங்கப் போய்விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த பொன்னூர் சேரி மாடத்தி, கல்வெட்டாங்குழியயில் அழுகைச் சத்தமும் அதட்டலும் கேட்டு வத்ராங்குளத்திற்குள் இறங்கித் தேடினாள். மலை மலையாய் சுண்ணாம்பு கல் குவிக்கப்பட்டுக் கிடந்தது. கருப்பண்ண சாமி கோயிலுக்குப் பின்புறத்திலிருந்து சத்தம் வருவதைக் கேட்ட மாடத்தி, வேகமாக நடந்து வேலிமுள் மரத் தோப்புப் பக்கம் போனாள். வேலிமுள் மரத்தில் புறங்கையோடு கட்டப்பட்டிருந்த சடையனை, உச்சி மயிரைப் பிடித்து உலுக்கிக் கொண்டே விசாரித்துக் கொண்டிருந்தான் தசரதன். சடையனை அடையாளம் கண்டதும், கொதித்துப் போனாள் மாடத்தி.

“அய்யா.. என்னத்துக்கு எங்க சின்னயனை கட்டி வச்சு அடிச்சிட்டிருக்கீங்க?''

“ஏய்...! போடி பொட்டக் கழுதை. உனக்கெல்லாம் வெளக்கனுமோ! களவானி நாயி, கடிகாரத்த களவாண்டு வித்துத் தின்னுட்டான். கேட்டா, நான் எடுக்கலையின்னு நடிக்கிறான்...''

“அதுக்கு இப்படிப் போட்டு அநாதைய அடிக்கிறாப்புல அடிச்சு சாகடிக்கப் போறீகளா? அவன்தான் எடுக்கலன்னு சொல்றானே!''

“ஏய்! போடிங்கிறேன்...''

தசரதன் வெறி பிடித்தவன் போல் கத்திக் கொண்டே, சுண்ணாம்பு கற்களை எடுத்து எறிந்து, மாடத்தியை விரட்டினான்.

“அட அநியாயமே! இப்படியா ஒரு மனுசனை அடிச்சுக் கொல்லுவ. எங்களுக்குன்னு சாதி சனம் யாரும் கெடையாதா! நாட்டாமைக்காரன் இருக்கான். அவன்கிட்ட சொன்னா வெசாரிச்சுக் குடுக்கப் போறான்.''

மாடத்தி கத்திக்கொண்டே சேரியை நோக்கி நடந்தாள். தசரதன் அவளை விரட்ட ஆரம்பித்தான். கத்திக் கொண்டே ஓடிய மாடத்தியின் குரல் மறையுமட்டும் அவளை விரட்டி விட்டு மறுபடியும் சடையனிடம் வந்தான் தசரதன்.

தசரதனை கிழி கிழியென்று கிழித்துக்கொண்டே, சேரிக்கு வந்து சேர்ந்தாள் மாடத்தி. கத்திக்கொண்டே வந்த மாடத்தியிடம் என்ன ஏது என்று சேரிக்குள்ளிருந்த நான்கைந்து ஆண்கள் விசாரித்தார்கள்.

“வர, வர வடுகப் பயக அட்டூழியம் தாங்க முடியல. ஏப்ப சாப்பையா எவனாவது சிக்குனா, கட்டிவச்சு அடிப்பானா அந்த வடுகத் தாயோழி. வாங்கடா நாட்டாமக்காரன் என்ன சொல்லுரான்னு பாப்போம்.'' என்று வன்மம் பேசினான் மோளப்பன்.

மோளையனோடு சேர்ந்து இரண்டு மூன்று பேர், இஞ்சியின் வீட்டுக்கு நடந்தார்கள். வழியில் மஞ்சனத்தி இலை பிடிங்கிக்கொண்டிருந்த அனந்தம்மாளைப் பார்த்ததும், இஞ்சி எங்கே என்று கேட்க, கள்ளுக்கடைக்குப் போய் பார்க்கச் சொன்னாள் அனந்தம்மாள். கூட வந்தவர்களை, கல்வெட்டாங்குழிக்கு போகச் சொல்லிவிட்டு, கள்ளுக்கடைக்கு நடந்தான் மோளையன்.

கள்ளுக்கடை பெருமாவோடு வாயளந்தபடி கள்ளைக் குடித்துக் கொண்டிருந்த இஞ்சி, மோளையனைப் பார்த்ததும், “என்னடா, மோளையா! வேல வெட்டிக்குப் போகலயா'' என்றான்.

“அட நீ வேற நாட்டாமை, கல்வெட்டாங்குழியில, தசரத நாய்க்கன் சடையனக் கட்டி வச்சு அடிச்சுக்கிட்டிருக்கானாம். நீ இங்கு குடிச்சிட்டு கும்மாளம் போட்டுக்கிட்டிருக்கே!'' மோளையன் பதற்றமாக பேசினான்.

“கட்டி வச்சு அடிக்கிறானா?'' இஞ்சிக்கு போதையிலும் உடல் அதிர்ந்து குலுங்கியது.

பத்து நாளைக்கு முன்னாடிதான் மாந்தோப்பில் உதிர்ந்து கிடந்த காய்ந்த குச்சிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த செந்தூரானை மட்டக் கம்பை கொண்டு அடித்து மண்டைய உடைத்து விட்டிருந்தான் இந்த தசரதன். மேற்கே பாதரங்குளம் தோப்பில் தசரதனைப் பார்த்துப் பேசிய போது, "அதுக்கு என்னடா பண்ணப் போற,' பெரிய சண்டியராக்கும் நீ! மயிரப்புடுங்கி வெசாரிக்க வந்துட்டான்' என்று மரியாதைக்குறைவாகப் பேசிய தசரதனை இஞ்சி கடுமையாக கெடு வைத்தான்.

“அய்யா! நான் இந்த மே குலம் கீழ் குலம் அப்பிடீனெல்லாம் பாக்க மாட்டேன்! தப்பு செஞ்சா யாரா இருந்தாலும் தண்டனதான். சேரிக் குடும்பத்தான் எவன் என்ன தப்பு செஞ்சாலும், நாட்டாமைக்காரன் நான் இருக்கேன்! எங்கிட்டச் சொல்லுங்க கேட்டுக் குடுக்கிறேன். என்ன அபராதமோ விசாரிச்சு வாங்கிக்கிங்க! கண்ட எடத்துலேயும் கை வக்கிறதை கடைசியா வச்சுக்குங்க! இனிமே சேரி ஆம்பள பொம்பள யாருமேலயாவது கை வச்சீங்கன்னா, நான் பேசமாட்டேன்.. என் கம்புதான் பேசும்..''

அனல் தெறிக்க இஞ்சி பேசுவதைக் கேட்ட தசரதன் பதற்றமடைந்தான். “அதுக்கு முன்னாடி... உன் நெஞ்சை என் துப்பாக்கி தொளச்சிறும்லே...'' தசரதன் வஞ்சகமாய் பேசினான்.

“பாத்துக்கலாம்...'' இஞ்சி உடல் விம்ம கத்திவிட்டு நடந்தான்.

பத்துநாள் கூட ஆகவில்லை. அதற்குள் மறுபடியும் ஒருவன் மேல் கைவைத்து விட்டானா என்று கொதித்தான் இஞ்சி. “வந்தட்டிப் பயலுக்கு இவ்வளவு திமிரா'' உடல் அதிர கத்திக் கொண்டு எழுந்தான்.

மோளையனைப் பார்த்துக் கொண்டே, கள் குடித்த ஈயச் செம்பை தரையில் ஓங்கி எறிந்தான். காவற் கம்பை வலது கையில் பிடித்துக்கொண்டே நேஞ்சியைக் கட்டினான்.

“எங்க வச்சுடா அடிக்கிறான்! காட்டுறா எடத்தை!'' கள்ளுக்கடையே நடுங்கும்படி கத்திக் கொண்டு வெளியேறினான்.

வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. வத்ராங்குளத்து கரையில் காவற்கம்பை குத்தியபடி தரை நடுங்க நடந்து கொண்டிருந்தான் இஞ்சி. மோளையனும் இன்னும் இரண்டு மூன்று பேரும் இஞ்சியின் வேகமான நடைக்கு ஈடு கொடுத்து நடந்து கொண்டிருந்தார்கள்.

வத்ராங் குளத்துக் கண்மாயின் மூலக்கரைவழியே இறங்கி கல்வெட்டாங் குழிக்கு வந்தார்கள். திட்டுத் திட்டுக்களாய் குவிந்து கிடந்த சுண்ணாம்புக் கல் குவியலின் மீது ஏறி பார்த்தார்கள். வேலிமுள் மரத் தோப்பிற்குப் போய் தேடிப் பார்த்தான் மோளையன். யாரையும் காணோம். இஞ்சிக்கு ஆத்திரம் தலைக்கேறிக் கொண்டிருந்தது. அதற்குள் சேரி ஆண்கள் பத்துக்கும் மேலே திரண்டு விட்டார்கள். சுற்றித் தேடிப் பார்த்தார்கள். ஆள் அரவமே இல்லை. வேலி முள் தோப்பின் பின்புறத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கீதாரி மகனிடம் விசாரித்தார்கள். பலன் இல்லை. மந்தை மேட்டுக்கு இழுத்துக்கொண்டு போயிருப்பானோ என்று எண்ணிய இஞ்சி, எல்லோரையும் திரும்ப வரச் சொன்னான். சத்தம் கொடுத்துவிட்டுத் திரும்பியபோது சுண்ணாம்புக் கல் வழுக்கிச் சறுக்கினான். காவற் கம்பை கல் திரட்டில் குத்தி உடம்பை நிறுத்தினான். முடியவில்லை. சறுக்கிய இஞ்சியை இழுத்துக் கொண்டுவந்து கீழே தள்ளியது சுண்ôம்புக்கல். எழுந்து, நிமிர்ந்து கல் திரட்டைப் பார்த்தான். பாதி மூடிய கால் வெளியே தெரிந்தது. சடையன்தான் என்று எண்ணிக் கொண்ட இஞ்சி, “எல்லாம் இங்க வாங்கடா...'' திகிலோடு கத்தினான்.

கற்களைச் சரித்து, உடம்பை நீக்கி, புரட்டி எடுத்துப் பார்த்தார்கள். நெற்றி நசுங்கியபடி வெறித்த கண்களுடன் இறந்து கிடந்தான் சடையன். ஈர இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. இரத்தம் பட்டு சுண்ணாம்புக் கற்கள் சிவப்பாகி கலக்கத்தை கூட்டிக் கொண்டிருந்தன. தூக்கிக் கொண்டு சேரிக்கு வந்தார்கள். சேரியே அழுது புரண்டது. மறுநாள் தூக்கிக் கொண்டுபோய் ரெட்டையோடை கல்லறைக் காட்டில் புதைத்துவிட்டுத் திரும்பினார்கள். களவானிப் பயலுக்கு இது தேவைதான் என்றும், அதுக்காக அடிச்சுக் கொல்லுவானா அந்த வடுகப்பய என்றும் சேரிக்குள் பேச்சிருந்தது. மூன்றாவது நான்காவது நாளுக்கெல்லாம் சடையனை சேரி மறந்துவிட்டு காடு கரைகளில் வேலை கவனத்தில் அமிழ்ந்தது.

இஞ்சி மட்டும் கருவிக் கொண்டிருந்தான், தசரதன் புழங்கும் காடுகளில் தேடினான், பிள்ளையார் நத்தத்திற்கு ஓடிப்போயிருப்பானோ அங்குதானே வடுக நாயுடுக்கள் தாட்டிக்கமாக இருக்கிறார்கள் என்றும் யோசித்துக் கொண்டான். விசாரித்தும் பார்த்தான். சடையன் செத்து ஒரு வாரம் ஆகியும் தசரதன் எங்கிருக்கிறான் என்றுகூட இஞ்சியால் கண்டறிய முடியவில்லை. ஒருவேளை பாதரங்குளம் தென்னந் தோப்பிற்குப் போயிருப்பானோ. இஞ்சிக்குப் பொறி தட்டியது.

பொழுதிருக்கவே கிளம்பினார்கள். இஞ்சி தன்னோடு மோளையனையும் பொம்மியையும் வெள்ளாத்தா புருஷனையும் சேர்த்துக் கொண்டான். துப்பாக்கியால் நெஞ்சைத் துளைப்பேன் என்று தசரதன் கெக்கலிட்டது, இஞ்சிக்கு நினைவில் வந்து, வந்து போனது. இஞ்சி வேறு எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. காவற்கம்பையும் இடைவாரில் வங்கியும் இருந்தால் இஞ்சிக்குப் போதும். மோளையன் கோடாரியையும், அரிவாளையம் துணியில் சுற்றி தலை சுமையாக்கிக் கொண்டு நடந்தான். பொம்மி இரவு வெளிச்சத்திற்கு சைக்கிள் டயர்களை சுமந்து வந்தான். கூப்பு மரம் வெட்டப்போவதாக சேரிக்குள் சொல்லிக் கொண்டார்கள்.

இருட்டுப் பாதையடி பார்த்து நடந்தார்கள். பாதரங்குளம் போய்ச் சேரவே சாமம் ஆகிவிட்டிருந்தது. தசரதன் தென்னந்தோப்பிற்கு வெளியே நின்று பார்த்தார்கள். ஆள் நடமாட்டம் எதுவுமில்லை. இருட்டு கண்ணை மூடியது, துப்பாக்கியில்லாமல் தசரதன் தோப்பிற்கு வரமாட்டான் என்று ஊருக்கே தெரியும். ஆனால், தோப்பிற்குள் தசரதன் இருக்கிறானா இல்லையா என்பதுதான் பிடிபடாத கேள்வியாக இருந்தது. இஞ்சிக்கு ஒரு யோசனை வந்தது. தோப்பிற்குள் இறங்கி, ஆள் ஓடும் சத்தம் கேட்கும்படி மோளையனை ஓடச் சொன்னான் இஞ்சி. இன்னொருவனை வேறு திசையில் ஓடச் சொன்னான். துப்பாக்கிச் சத்தம் கேட்டால் தசரதன் இங்கேதான் இருக்கிறான். இல்லையென்றால், ஆள் இங்கு இல்லை என தீர்மானமாகச் சொன்னான் துப்பாக்கி சத்தம் வரும்வரை நேர இடைவெளிவிட்டு ஓடும்படி யோசனை சொன்னான்.

மோளையன் ஒரு திசையிலும், பொம்மி வேறு திசையிலும் ஓடினார்கள். காய்ந்து விழுந்து கிடந்த தென்னஞ் சருகுகளில் மிதித்துக்கொண்டே திட்டுத்திட்டென ஓடினார்கள். கொஞ்ச நேரத்தில் ஆள் ஓடும் சத்தம் நின்றது. இஞ்சி தோப்புக்குள் நோட்டம் விட்டான். இருட்டில் எதுவும் நிதானம் ஆகவில்லை. மறுபடியும் ஆட்கள் ஓடும் சத்தம் கேட்டது. அடுத்த நொடியில் துப்பாக்கிச் சத்தம். இரண்டு முறை கேட்டது. இஞ்சிக்கு உடல் இறுகத் தொடங்கியது. வேட்டியை தார்ப்பாய்ச்சல் கட்டிக்கொண்டான். துண்டை இடுப்பில் இறுகக் கட்டிக் கொண்டு காவற்கம்பை இறுகப் பிடித்து உயர்த்தினான்.

மூன்றாவது ஆள் ஒருவன் தோப்புக்குள் ஓடும் சத்தம் கேட்டது. தடுக்கி விழுந்து எழுந்து ஓடுவதும் இஞ்சிக்குப் புரிந்தது. இஞ்சி தோப்பிற்குள் இறங்கினான். இஞ்சியின் கண்கள் மினுங்கத் தொடங்கின. கையில் நீளமான கட்டை போல ஒன்றைத் தூக்கிக் கொண்டு ஓடிய அந்த உருவத்தை துல்லியமாகப் பார்த்தான் இஞ்சி.

தோப்பிற்குள்ளிருந்த காவற்குடிசையை நோக்கி ஓடியது அந்த உருவம். இரவுச் சிறுத்தைபோல் பதுங்கி பதுங்கி, பம்மி பம்மி குடிசையை நெருங்கினான் இஞ்சி. பத்தடி தொலைவிருக்கும். குடிசையிலிருந்து அரிவாளுடன் வெளியே வந்த அந்த உருவம் தசரதன் தான் என்று புரிந்தது இஞ்சிக்கு. இஞ்சி காவற்கம்பை சுழற்றினான். இருளைக் கிழித்துக்கொண்டு சுழன்றது கம்பு. இடதும் வலதுமாய் சுழற்றி மட்டம் பிடித்தான். வீச்சரிவாளை வீசியபடி முன்னும் பின்னுமாக முன்னே வந்தான் தசரதன். இஞ்சி கம்பை இன்னும் வேகமாகச் சுழற்றி தசரதன் நெற்றிக்கும் காலுக்கும் அடி கொடுத்தான். துள்ளித் துள்ளி தப்பித்து முன்னே வந்த தசரதன் இஞ்சியின் கழுத்துக்கு வீசினான் அரிவாளை.

சுழன்று திரும்பிய இஞ்சியின் இடது கை, இருட்டில் சுழன்று இடுப்பிலிருந்த வங்கியை உருவி, தசரதனின் வயிற்றில் இறக்கியது. குத்துப்பட்டு விழுந்த தசரதன், அரிவாளை இன்னும் வேகமாக வீசினான். இளைத்து நின்றான். மூச்சு வாங்கியது. உருப்படி இனிமேல் தப்பாது என்று உறுதி செய்து கொண்டான் இஞ்சி. வங்கியை இடைவாரில் சொருகிவிட்டு, சிலம்பம் பிடித்தான் இஞ்சி. கருவக்காட்டு கருப்பண்ண சாமியின் வேகம் கம்பு வீச்சிலிருந்தது. இரண்டு சுற்றுச் சுற்றி, மூன்றாவது சுற்றை தசரதனுக்குக் கொடுத்தான் இஞ்சி. வீச்சரிவாள் கம்பு வீச்சை தடுக்குமா? மணிக்கட்டில் இறங்கியது கம்பு. அலறிக்கொண்டு எழுந்தான் தசரதன். இஞ்சியின் அடுத்த சுற்று, தசரதனின் நடு நெற்றில் இறங்க, பெரும் குரலெடுத்து அலறிக் கொண்டு சரிந்தான் தசரதன். கொஞ்ச நேரத்தில் அடங்கினான்.

அலறல் சத்தம் கேட்டு காவற் குடிசைக்கு ஓடிவந்தான் மோளையன். குப்புறக் கிடந்த உருவத்தின் தலையைத் திருப்பி முகம் பார்த்தான்.

“செத்துத் தொலைடா தாயோழி''

தலையை தரையில் அடித்து கோபம் தணித்தான். தசரதனை அப்படியே போட்டுவிட்டு, தோப்பிலிருந்து வெளியேறினார்கள். ஒரு நாளிகை கூட ஆகியிருக்காது, இருளில் கரைந்து மறைந்தார்கள்.

நத்தனூர் தாண்டி இரவு வண்டிகளுக்குப் பதுங்கி முகம் மறைத்து பூச்சேரிக்குள் நுழைந்தான் இஞ்சி. பொழுது புலர்ந்திருந்தது. மகள் வீட்டை நோக்கி ஆவலாக நடந்தான். உடல் களைத்திருந்தது. வீட்டிற்கு முன்னால் வந்து நின்ற இஞ்சியின் உடம்பு நடுங்கியது. காவற்கம்பை, கை நழுவியது! மெல்ல வியர்த்து, நனைந்தது உடம்பு!

இஞ்சி மகள் சென்னம்மாவின் வீட்டிற்குள்ளிருந்து இரண்டு போலீஸ்காரர்கள் துப்பாக்கியுடன் வெளியே வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் புறங்கை கட்டப்பட்ட மோளையன் கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தான்.

Pin It