கவிஞர், தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களைப் பற்றியொரு காவியம் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டார். எழுத்துலகில் குறிப்பாகத் திரையுலகில் கலைஞர் அவர்களை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமை கவிஞர் அவர்களையே சாரும். இருவரும் இருவேறு இயக்கங்களின் தளபதிகளாய் இருந்தனர். காலம் கலைஞருக்குக் கைகொடுத்தது. கவிஞருக்குக் காலம் மட்டுமல்ல உடனிருந்த தமிழரசுக் கழகத் தலைவர் சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானமே கைகொடுக்ககவில்லை. கலைஞரும் கவி கா.மு.ஷெரீபும் இருவேறு இயக்கங்களில் இருந்தாலும் உள்ளத்தால் ஒன்றுபட்டவர்களாகத்தான் இருந்திருக்கின்றனர். கலைஞரின் வளர்ச்சியைக் கவிஞர் எட்டியிருந்து பார்த்து நாளும் நாளும் மகிழ்ந்திருக்கிறார் என்பதற்கு அவருடைய வாழ்க்கை நெடுகிலும் பல சான்றுகள் இருக்கின்றன. அந்த மகிழ்வின் விளைவாகத் தான் கவிஞர் ‘கலைஞர் காவியம்' எழுத ஆசைப்பட்டார். ஆனால் அது ‘கலைஞர் 63' என்ற சிறுநூலாக 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்துள்ளது.

karunanidhi with ka mu sheriffஇந்த நூல் பற்றி ஓவியப் பாவலர் மு. வலவன் தம் ‘நெஞ்சத் திரையில் நினைவுக் கோடுகள்’ எனும் நூலில், “செரீப் ஐயா அவர்கள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினைக் காப்பியமாக எழுத முனைந்து ஏறத்தாழ ஆறு விருத்தங்கள் அப்பொழுது எழுதி வைத்திருந்தார்கள். அவர்கள் கண் அறுவைச் சிகிச்சையின் பொருட்டு மயிலாப்பூர் குளம் எதிரில் அப்பொழுது அமைந்திருந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் தஞ்சம் புகுந்த பொழுது கலைஞருக்குத் தகவல் தெரிவிக்க விழைந்தார்கள். நான் அதனைப் படி எடுத்துக் கொண்டு நண்பர் நாகநாதன் மூலம் கலைஞர் அவர்களைச் சந்தித்து அதனைக் காண்பித்து விட்டு வந்தேன். இவ்வாறு செரீப் ஐயா அவர்களுக்குச் சேதுவுக்கு அணைகட்ட முனைந்த இராமனுக்குச் சிறுஅணில் உதவியது போல நான் உதவி செய்ததில் பெருமகிழ்ச்சி பெற்றேன்” என்று குறிப்பிடுவதுடன், “அப்பொழுது நான் நடத்தி வந்த ‘வண்ணச்சிறகு’ இலக்கியத் திங்களேட்டில் (தி.பி. 2009 கும்பம், மீனம் ஏப்பிரல் 19) அப்பாடல்களை வெளியிட்டு மகிழும் பேறு பெற்றேன். ஐயா அவர்களின் அறுவைப் பண்டுவம் நிகழ்வதற்குமுன் தொழுகை நடத்திய காட்சியும், அண்ணியார் கண்ணீர் விட்டு அழுத பொழுது அவர்களைக் ‘கவிஞர் வானம்பாடி’ தேற்றிய காட்சியும் நெஞ்சத் திரையில் நிழலாடுகின்றன. இச்சூழலால் “கலைஞர் காவியத்தை ‘வண்ணச் சிறகில் தொடர்ந்து வெளியிட முடியவில்லை. அதைப் போலவே அவர்கள் எழுதித் தருவதாக வாக்களித்திருந்த ‘வன்னியத் தேவன்’ எனும் வரலாற்றுத் தொடர் புதினமும் வண்ணச்சிறகில் வெளியிட இயலாமற் போயிற்று. அதுபற்றி வெளியிட்ட விளம்பரம் மட்டும் நினைவுச் சின்னமாய்க் காட்சி அளிக்கிறது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

‘கலைஞர் 63’ எனும் நூலில் அறுசீர் தொடங்கிப் பதினாறு சீர் விருத்தங்கள் வரை மொத்தம் 63 பாக்கள் உள்ளன. கலைஞரின் 62 ஆவது ஆண்டு வாழ்வைப் போற்றும் வகையிலும் 63 ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்துரைக்கும் வகையிலும் இந்நூல் கவிஞரால் படைத்து வெளியிடப்பட்டுள்ளது.

               “அறிவின் குன்றே! அன்புருவே!

                              அழியாத் தமிழின் தலைமகனே!

               நிறைந்த மனத்தோய்! நெடிபுகழோய்!

                              நிலைத்த தமிழர் தனித்தலைவா!

               முறையாய் ஆட்சி நடத்துவதில்!

                              முன்னோர் வழியில் துலங்கியவா!

               செறிவார் கருணா நிதிப்பெயரோய்!

                              தேயம் உய்ய வாழியநீ!”                  (1)

என அறுசீர் ஆசிரிய விருத்தத்தில் வாழ்த்துரைத்துக் கவிஞரின் ‘கலைஞர் 63’ எனும் இந்நூல் தொடங்குகிறது. நூல் நெடுகிலும் கலைஞரின் வாழ்வியல் வரலாறுகளும் கலைஞரின் குறிப்பிடத்தக்க தகுதிகளும் மாண்புகளும் எடுத்துரைக்கப்பட்டு வாழ்த்தப்படுகின்றன. ஆனால் “மலரும் நினைவுகள்” போல இலக்கியச் சுவைஞர்களாகிய உங்களுக்குக் “கலைஞர் காவியத்திலிருந்து” இப்பாடல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்” எனக் கூறி ‘நெஞ்சத்திரையில் நினைவுக்கோடுகள்’ எனும் நூலில் ஓவியப் பாவலர் மு. வலவன், குறிப்பிடும்,

               “ஆலயத்தில் தமிழ் முழங்கும்

                              அதுவே முழங்கும் வீதியெலாம்

               கோலக் கலைகள் முழக்கமிடும்

                              கூத்தும் பாட்டும் உண்டென்றும்

               சேலை நிகர்த்த விழிப்பெண்கள்

                              சீர்த்திப் பாட்டில் பயிர் வளரும்

               சாலச் சிறந்த சிற்றூராம்

                              தமிழர் உவக்கும் திருக்குவளை”

               “இந்த ஊரில் நடுத்தரத்தார்

                              இல்லம் ஒன்றின் நற்றலைவர்

               அந்தம் நிறைந்த ஐயாதுரை

                              அவர்நல் மகவாய் வந்துதித்தார்

               இந்து நானும் வதனமுள

                              எழிலார் முத்து வேலரென்பார்

               நந்தம் முத்து வேலர்பெற்ற

                              நல்லார் கருணாநிதிக் கலைஞர்”

எனும் பாடல்கள் இந்நூலில் இடம் பெறவில்லை. கவிஞர் கலைஞரைப் பற்றித் தனியொரு பெருங்காவியம் பாடியிருந்தால் கலைஞரின் கவினார்ந்த வாழ்க்கை, கவிஞரின் கைவண்ணத்தில் ‘காவிய மாளிகையாய்’ அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

               கலைஞர் காவியம் பாட விழைந்த கவிஞரைப் பற்றியும் கலைஞரைப் பற்றியும் கூறும் மு. வலவன், “இவ்வாறு ‘கலைஞர் காவியம்’ பாடிய பாவிசைக்கோவுக்குக் ‘கவிதைச் செல்வம்’ என்ற விருதினை வழங்கிச் சிறப்பித்தார் கலைஞர் அவர்கள். அப்பொழுது அவர்கள் ஆற்றிய உரையை வண்ணச் சிறகு (பிப்ரவரி 79) ஏட்டில் வெளியிட்டிருந்தேன்” எனப் பதிவு செய்கிறார்.

முரசொலியில் 2.1.1979 அன்று வெளிவந்த, “நான் அண்ணன் என்று அழைத்துப் பழக்கப்பட்ட கவிஞர் கா.மு. செரீப் அவர்கள் ‘கவிதைச் செல்வம்’ என்ற விருதினைப் பெற்றிருக்கின்றார்கள். தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் ‘வேலுக்குடி’ என்ற ஊரிலே பிறந்து (கவிஞர் அபிவிருத்தீஸ்வரத்தில் பிறந்தார்; அருகிலுள்ள வேலுக்குடியில் இளமைக்காலத்தில் வாழ்ந்தார்) தமிழ்க்குடி வேல்பிடித்த குடி என்பதை உலகிற்கு அறிவிக்கின்ற வகையில் அவர்கள் தமிழ் வாழ - தமிழர்களின் நலன் காக்கப் பாட்டெழுதினார்; பணியாற்றினார்; தொடர்ந்து பணியாற்றிக் கொண்டு வருகிறார்” என்று கலைஞர் அவர்கள் கவிஞருக்கு விருது வழங்கிப் பாராட்டிப் பேசியுள்ளார்.

தமிழையும் தமிழ் நாட்டையும் கலைஞரையும் கவிஞருக்குத் தனித்தனியே பிரித்துப் பார்க்க மனம் வரவில்லை. அதனால் தான் ‘கலைஞர் 63’ இல் கலைஞரை வாழ்த்திப் பாடுகின்றபோது,

தமிழைச் சூழ்ந்த கேடகலத் தமிழர் வாழ்வில் நலம் துலங்க

தமிழ்நாட் டரசு செம்மையுற தன்னிக ரில்லா ஆட்சிவர

கமழ்தேன் கலந்த சொல்லாலே கனிவார் கருத்துத் தருகின்ற

அமிழ்தாம் கருணா நிதிப்பெயரோய் அருந்தமிழ் வாழ வாழிய நீ!

என்று கவிஞர் வாழ்த்திப் பாடுகின்றார்.

‘அண்ணா போற்றும் கருணாநிதி எண்ணம்தனிலே தமிழினத்தை எண்ணி நாளும் உழைப்பவர்’ எனக் குறிப்பிடும் கவிஞர், கலைஞரின் இயல்பை,

“யாரோ உழைத்த உழைப்பாலே ஏற்றம் காண்போன் நீயல்ல! போராட்டங்கள் நடக்கையிலே போயெங்கோ நீ ஒளியவில்லை! சீரார் கழகம் தனை வளர்க்கச் சிறையில் பலநாள் தவமிருந்த பேரார் கருணா நிதிச் செல்வ, பிணி மூப்பின்றி வாழிய நீ! இந்திப் போரில் சிறை புகுந்தாய்! எழுந்த கல்லக் குடிப்போரில் வெந்த மனத்தார் சிறைப்பிடித்தார்! வெகுண்டெழுந்த மும்முனைப்போர் தந்ததுனக்குச் சிறைவாசம்! சகித்தே அண்ணன் வழி நடந்த எந்தம் கருணா நிதிச் செல்வ, இருந்தமிழ் வாழ வாழிய நீ! டில்லி அஞ்ச ஆண்டவன் நீ! நின்தமிழ் சிறக்க ஆண்டவன் நீ! நல்ல இளைஞர் தமைப்படையாய்; நாளும் கொண்டு வாழ்பவன் நீ! இல்லை இன்றிங்கு உனைநிகர்த்தார் ஏற்றம் மிகுந்த ஆட்சிதர வல்ல கருணா நிதிப்பெயரோய், வாய்மை சிறக்க வாழிய நீ! பெரியார் பள்ளி மாணவனே! பேணி அண்ணா வழிநடப்போய்! வறியோர் வாழத் திட்டம் பல வகுத்தே ஆட்சி நடத்தியவா! வருமா இந்தி மொழிப்பேயை வாராதோட்ட வல்லவனே! திருவார் கருணா நிதிச் செல்வ தேசம் வாழ வாழிய நீ! பிள்ளைப் பருவம் முதலாகப் பேச்சுக் கலையில் வல்லவனே! தெள்ளத் தெளியக் குறட்பாவைத் தேயத் தோருக் குரைப்பவனே! எள்ளலின்றிக் கலையுலகில் இன்றும் என்றும் நிற்கின்ற உள்ளம் உயர்ந்த கருணாநிதி உயர்மா மணியே வாழிய நீ! உழைப்பால் உயர்ந்த உத்தமனே! ஓயா துழைக்கும் மாமணியே பிழைப்பில் லாத வேளையிலே பிழைக்க எண்ணி அரசியலில் நுழைந்தே தேசம் தனைக்கெடுக்கும் நொய்யல் புத்தியில் லாதவனே! அழியாத் தமிழ்த்தாய் நன்மகனே அணிசேர் கலைஞ, வாழிய நீ! எனப் பலவாறு கவிஞர் கலைஞரை வாழ்த்தி மகிழ்கிறார்.

அந்த வாழ்த்துதலுக்குள்ளும் பல்வேறு உண்மை வரலாற்றுத் தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. அதனால் இந்நூல் எண்ணுந்தொறும் எண்ணுந்தொறும் எடுத்துப் பயிலும் ஏற்றமிகு நூலகத் திகழ்கிறது. 62 விருத்தப்பாக்களின் நிறைவாக 63 ஆவதாக,

               அகிலம் அறிந்த அண்ணலே வாழி!

               ஆன்ற குணத்துச் சான்றோய் வாழி!

               இல்லார்க் கிரங்கும் நல்லவா வாழி!

               ஈடிலா உழைப்பின் ஏந்தலே வாழி!

               உலகிடைத் தமிழை உயர்த்தியோய் வாழி!

               ஊக்கமாய்த் தீமையை எதிர்ப்பவா வாழி!

               எழிலார் தமிழினக் காவலா வாழி!

               ஏலார் துயர்துடைத் திடுபவா வாழி!

               ஐயமில் நல்லர(சு) அமைப்பவா வாழி!

               ஒன்றே தமிழினம் என்பவா வாழி!

               ஓவாக் கீர்த்திக் குரியநற் கலைஞ,

               ஔவிய மறநூ றாண்டுநீ வாழ்கவே!

எனும் உயிர் வருக்க அகவலோடு கவிஞர் நூலை நிறைவு செய்கிறார். இருந்தபோதும் நூலில் கவிஞர் நெஞ்சம் நிறைவடையவில்லை. ஆகவே அதன் பின்னும் கவிஞர் கலைஞரை, ‘வாழ்க கலைஞர்!’, வாழ்க தமிழினம்! வாழ்க தமிழ்!, வாழ்க தமிழ்நாடு!, வாழ்க பாரதம்!, வாழிய உலகெலாம்! என வாழ்த்தி நிறைவு செய்கிறார். கலைஞர் வாழ்ந்தால் தமிழினம் வாழும், தமிழினம் வாழ்ந்தால் தமிழ் வாழும், தமிழினமும் தமிழும் வாழ்ந்தால் தமிழ்நாடு வாழும், தமிழ்நாடு வாழ்ந்தால் பாரதம் வாழும்; இவை அனைத்தும் வாழ்ந்தால் உலகிற்கே வழி காட்டும் தமிழ் மூலம் உலகம் வாழும் எனும் கருத்துடையவர் கவிஞர் போலும்.

- பேராசிரியர் உ. அலிபாவா, தமிழியல் துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி

Pin It