‘அவன் செய்யுறது எல்லாம் நரசப்பன் வேலைதான்’ என எழுபதுகளின் பிற்பகுதியில் மதுரைக்கு அருகிலுள்ள ஊரில் கிராமத்தினர் இருவர் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டவுடன், யார் அந்த நரசப்பன் என யோசித்தேன். அப்புறம் விஷயம் பிடிபட்டது. அவர்கள் நரசப்பன் எனக் குறிப்பிட்டது மதுரை வீரன் திரைப்படத்தில் டி.எஸ். பாலையா நடித்த வில்லன் கேரக்டரான நரசப்பன் என்று. ஒரு திரைப்படத்தில் இடம் பெற்ற பாத்திரத்தின் பெயர் சமகாலத்தில் தொன்ம மாக மாறுகின்றது என்றால், அதற்கு உயிர் தந்த நடிகரின் நடிப்பு முக்கியம் இல்லையா? ஐம்பதுகள் தொடங்கி பாலையா என்ற நடிகரின் திரைப்பட நடிப்பு ஒரு காலகட்டத்தில் தமிழர்களின் வாழ்க் கையில் அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்தி யிருந்தது. ஒப்பீட்டளவில் குள்ளமான தோற்ற முடைய நடிகர் பாலையா தனது உடல் மொழி, குரலின் வழியே, அவர் நடித்த பாத்திரங்களின் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்து இழுத்தார்.

ts balaiyya 260திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த பாலையா 1914 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் நாளில் பிறந்தார். அவருடைய இளமைப் பருவம் பொருளாதாரரீதியில் சிரமமானது. பள்ளிக் கல்வியில் விருப்பமற்ற பாலையா சிறுவனாக இருந்தபோது வீட்டைவிட்டு வெளியேறினார். உணவகத்தில் வேலை செய்த பாலையா, பின்னர் பால மோஹன சங்கீத நாடக சபா என்ற நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிகரானார்.

கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் திரைப் படத்தில் நடிக்க வந்த நடிகர்களில் பலர் நாடகப் பின்புலத்தினர். நாடகமேடை தந்த அனுபவங் களினால் காமிராவின் முன்னால் நடிப்பது பாலை யாவிற்கு எளிதாயிற்று. வில்லன், கதாநாயகன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் என பாலையாவின் முகம் பன்முகத்தன்மை கொண்டது. அத்துடன் அவர் பாடல்கள் பாடுவதிலும் வல்லவர். இத்தகைய ஆளுமையின் தனித்துவம் ஒளியோடு கரைந்து போய் விடாமல், அடுத்த தலைமுறைக்குத் தெரிய வேண்டுமென திருநின்றவூர் சந்தான கிருஷ்ணன் ‘நூற்றாண்டு கண்ட நடிகர் டி.எஸ். பாலையா’ என்ற நூலைத் தந்துள்ளார். அரசியல் சாராத நிலையில், ஒரு காலகட்டத்தில் சாதனை யாளராக விளங்கிய பாலையா பற்றிய நூலானது தகவல்களின் சுரங்கமாக விரிந்துள்ளது.

1936-இல் வெளியான ‘சதி லீலாவதி’ படத்தில் வில்லன் ராமநாதனாக பாலையாவின் திரையுலக நுழைவு தொடங்கியது. அன்றிலிருந்து 1972-இல் இறக்கும்வரை தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த பாலையா தனக்கென தனித்த ரசிகர் கூட்டத்தினை உருவாக்கியிருந்தார். அன்றைய திரைப்படங்களில் கதாநாயகனுக்குச் சமமாக வில்லன் பாத்திரம் உரு வாக்கப்பட்டிருந்தது. சில படங்களில் வில்லனுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். இரு வேறு எதிரெதிர் முனைகளில் நடைபெறும் மோதல்கள் பார்வையாளருக்கு சுவாரசியம் தந்தன. ஹீரோ விற்கு எனத் தனியே ஒளி வட்டம் எதுவும் தராத நிலையில் கதைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. எனவேதான் பாலையாவிற்குத் தனது திறமையை வெளிப்படுத்தும் அருமையான வாய்ப்புகள் கிடைத்தன.

வில்லன் கேரக்டரில் மிடுக்கும் மெல்லிய நகைச்சுவையும் எடுத்தெறிந்து யாரையும் துச்ச மாகப் பார்க்கும் கண்களும் என, பாலையாவின் நடிப்பினை ரசித்தவர்கள்கூட, அவர் மீது வெறுப்பு கொண்டிருந்தனர். கதாநாயகனின் மேன்மையான குணங்களை வெளிப்படுத்த பாலையா போன்ற வில்லன்கள் பெரிதும் பயன்பட்டனர். சில திரைப் படங்களில் கதாநாயகனைவிட வில்லனின் பாத்திரம் வலுவானதாக இருந்தது. இராஜகுமாரி (1947) படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகன், வில்லன் ஆல காலன் வேடத்தில் பாலையா. சுழலும் விழிகளும் நெளியும் உடலும், அடங்கியொடுங்கிப் பேசும் பேச்சும் என பாலையாவின் வில்லத்தனத்தில் பகடியும் பின்னியிருந்தது என சந்தானகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். ஜூபிடர் பிக்ஸர்சின் மோகினி (1948) படத்தில் பாட்டு புத்தகத்தில் கதாநாய கனான எம்.ஜி.ஆரின் பெயருக்கும் மேலே பாலை யாவின் பெயர் காணப்படுவதிலிருந்து அன்றைய காலகட்டத்தில் அவருக்கு இருந்த ஸ்டார் மதிப் பினைப் புரிந்து கொள்ளலாம். அதே படத்தில் பாலையா “உண்மையும் இது இல்லையா ஒருக் காலும் மறுக்காதே” என இனிமையாகப் பாடி யுள்ளார்.

சி.என். அண்ணாதுரையின் வேலைக்காரி கதை திரைப்படமாகியபோது வில்லன் மணியின் பாத்திரத்தில் நடித்த பாலையாவின் புகழ் உச்ச நிலையை அடைந்தது. கவுண்ட் ஆப் மாண்டி கிறிஸ்டோ ஆங்கிலப் படத்தில் வரும் ஆப் மாண்டி கிறிஸ்டோ பாத்திரம் போல தமிழ்ப்படத்திலும் கொண்டு வரவேண்டுமென்ற தனது விருப்பம் வேலைக்காரியின் மூலம் நிறைவேற்றியதாக பாலையா பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். வேதாச்சல முதலியாரைப் பழி வாங்க நினைக்கும் ஆனந்தனின் நண்பன் மணியாக வரும் பாலையாவின் சதித் திட்டங்கள் கொடூரமானவை. திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பெண்கள் “பாவி படுபாவி” என மணியைத் திட்டிக்கொண்டே போனார்கள். வில்லன் என்றால் பாலையா என்பது தமிழகத்தில் வலுவாக நிலை பெற்று விட்டது.

பாலையாவின் நடிப்பில் நகைச்சுவை மிளிர வெளியான தூக்கு தூக்கி (1954) அவரது நடிப்பில் திருப்புமுனை. வட நாட்டு சேட்டு நக்ராமாக வரும் பாலையா தில்லுமுல்லு திருட்டு முழி, புளுகு மூட்டை என சகல சேட்டைகளும் செய்து மக்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தார். “ஹரே சேட் ஜல்ஸா பண்றான். சைத்தான். சைத்தான் குறுக்கே வர்றான்” என்ற பாலையாவின் பேச்சு பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.

பாலையாவின் நகைச்சுவை நடிப்பு காதலிக்க நேரமில்லை (1964) படத்தில் உச்சத்தைத் தொட்டது. சின்னமலை எஸ்டேட் உரிமையாளரான பாலை யாவின் நிலக்கிழாருக்கே உரித்தான திமிரான இயல்பு. பேச்சு இன்றளவும் ரசிக்கக்கூடியதாக உள்ளது. கதைச்சூழலுக்கேற்ப வேறுபட்ட முக பாவங்களுடன் ஏற்றஇறக்கமான குரலில் பாலையா நடிக்கும்போது பார்வையாளர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. குறிப்பாக நாகேஷ் சொல்லும் மர்மக்கதையும் அதைக் கேட்ட பாலையா அடைந்த பயத்தினை வெளிப்படுத்தும் முகபாவமும் இன்றளவும் ரசிக்கலாம்.

‘ஊட்டி வரை உறவு’ திரைப்படத்தில் பயந்த சுபாவமுள்ள பணக்காரர் வேடத்தில் வந்த பாலை யாவின் அஞ்சித் தவிக்கும் நடிப்பு நகைச்சுவை யோடு அற்புதமாக வெளிப்பட்டது. முன்னர் செய்த தவறான செயலை மனைவி, மகனிட மிருந்து மறைப்பதற்காக பாலையா படுகின்ற பாடுகள், படத்தை முழுநீள நகைச்சுவைச் சித்திர மாக்கின.

மதுரை வீரன் படத்தில் நரசப்பன், தில்லானா மோகனாம்பாள் படத்தில் தவில் வித்துவான், திருவிளையாடல் படத்தில் ஹேமநாத பாகவதர், பாமா விஜயம் படத்தில், மூன்று பிள்ளைகளின் அப்பா எனப் பாலையா நடித்த பாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளன.

எந்தவொரு சிறிய பாத்திரமானாலும் அதை மனதில் உள்வாங்கிக்கொண்டு, அந்தப் பாத்திர மாகவே மாறி நடிக்கும் திறன் பாலையாவிற்கு இயல்பிலே இருந்தது. எனவேதான் அவர் நடித்த படங்களில் உடன் யார் நடித்தாலும் தனது நடிப்பின் மூலம் தனது அடையாளத்தைப் பதித்து விடுவார்.

திரைப்படம் தந்த மகத்தான கலைஞரான பாலையா பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்திராத சூழலில், அவரைப் பற்றிய பல்வேறு தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ள சந்தான கிருஷ்ணனின் முயற்சி வரலாற்று ஆவணமாகும்.

நூற்றாண்டு கண்ட டி.எஸ்.பாலையா

ஆசிரியர்: திருநின்றவூர் தி.சந்தானகிருஷ்ணன்

வெளியீடு: நிழல்

31/48, ராணி அண்ணா நகர்,

சென்னை - 600 078

விலை- 150/-

Pin It