சுவடிகளைக் கொண்டு ஆராய்ச்சிகள் அரிதாகவே நடைபெற்றுவரும் நிலையிலும் இம்முயற்சி முற்றிலும் மானுடவியல் துறைகளில் முழுமையான தரவுகளாகப் பயன்படுத்தப்படாத சூழலிலும் ‘மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடிமக்கள்’ என்ற தலைப்பில் ஆசிரியர் ம.இராசேந்திரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முயற்சியே நூலாக்கம் பெற்றுள்ளது.               

rajendran 245தென்னிந்திய மொழி மற்றும் வரலாறு குறித்த ஆய்வுகளில் எல்லீஸ், கால்டுவெல் போன்ற குறிப்பிடத் தக்க சிந்தனையாளர்களில் ஒருவர்தான் ஐரோப்பியரான கர்னல் காலின் மெக்கன்சி என்ற ஸ்காட்லாந்து நாட்டவர். இவர் இந்தியாவில் வட இந்திய வரலாறு பெறுகின்ற முக்கியத்துவத்தைப் போன்று தென்னிந்திய வரலாறு கவனம் பெறாத சூழலில் தென்னிந்திய வரலாறு குறித்து பல்வேறு ஆவணங்களைப் பல்வேறு உதவி யாளர்களின் துணைகொண்டு தொகுத்தவர். தமிழகப் பழங்குடி மக்கள் குறித்த இவரது ஆவணத் தொகுப் பானது 1816இல் தொடங்கப்பட்டுள்ளது. இவர் 1783இல் கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு வந்தவர். இவர் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி நடத்திய போர்களில் பங்கு பெற்ற தோடு பல்வேறு பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் முதலில் சென்னை மண்டலத்திற்கும் பின்பு அனைத்து இந்தியாவிற்குமான முதல் தலைமை நில ஆய்வாளராகவும் பதவி உயர்வு பெற்றார். இவர் இத்தகைய பணிகளுக்கிடையேதான் தொல்பொருள் களைச் சேகரிக்கும் பணியை மேற்கொண்டார். இவர் சேகரித்தவற்றுள் கல்லிலும் செம்பிலுமாக இடம் பெற்றுள்ள 3000 சாசனங்களும் 15 மொழிகளைச் சேர்ந்த 1568 சுவடித் தொகுப்புகளும் 8076 கல்வெட்டுகளும் 2630 பாறை ஓவியங்களும் 78 வரைபடங்களும் 6218 நாணயங்களும் 102 படிமங்களும் அடங்கும் என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு தொகுக்கப்பட்ட மெக்கன்சியின் சுவடிகளில் 1534 சுவடிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவடிகளாகும். இவை இலக்கியம், வரலாறு, பண்பாடு, வாழ்க்கைமுறை, சாதியமைப்பு, அரசர்கள், பாளையக் காரர்கள், பழங்குடி மக்கள் பற்றிய செய்திகளை உள்ளடக்கியது. இவற்றுள் தமிழகப் பழங்குடி மக்கள் பற்றிய 16 சுவடிகளை ஆசிரியர் இங்கு ஆய்விற்கு எடுத்துக் கொண்டுள்ளார். இவற்றுள் 11 மூலச் சுவடி களும் 5 படியெடுக்கப்பட்ட சுவடிகளும் அடங்கும். இச்சுவடிகளில் இடம்பெற்ற குறும்பர், வேடர், இருளர், ஏனாதியர், குறவர், வில்லியர், கரையர், பட்டணவர் லம்பாடியர், மலையரசர், குண்ணுவர் போன்ற பழங்குடி மக்கள் குறித்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு இடங்களுக்குச் சென்று கள ஆய்வு மேற் கொண்டு தொகுக்கப்பட்ட விவரங்களே இங்கு நூலாக்கம் பெற்றுள்ளது.

இந்நூல் சுவடிகளில் பழங்குடி மக்கள் குறித்த பதிவுகளைக் கவனத்திற்குட்படுத்தும் முதலாய்வு நூல் என்ற பெருமைக்குரியது. பழங்குடி மக்கள் குறித்து ஆராய்வதற்கான பல்வேறு ஆய்வுக் களத்தைத் தன்னுள் கொண்டுள்ள இந்நூல் தென்னிந்திய வரலாறுகள் குறித்து ஆழ்ந்து அறிவதற்கும் திராவிடர்கள் திராவிட மொழி குறித்த கருத்தாக்கத்தை வரலாற்று ரீதியாக அணுகு வதற்கும் வழிவகை செய்கிறது. மேலும் பன்முகத் தன்மையிலான ஆய்வுகள் மேற்கொள்வதற்கு வித்தாக விளங்கும் இந்நூல் ஆசிரியரின் முதன்மை நோக்கமான பழங்குடி மக்களின் வரலாற்றைச் சுவடிகளின் வாயிலாக எடுத்துரைக்கும் பணியினையும் செவ்வனே நிறைவு செய்துள்ளது.

இங்கு ஆசிரியரால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ள சுவடிகளான குறும்பர் என்னும் இடைச் சாதியர் வரலாறு (டி. 3114), குறும்பர் கைபீது (டி. 2867), பட்டிப்புலக் கிராமக் கைபீது (டி. 2864), சந்நியாசிக் குறும்பர் சரித்திரம் (டி. 2862), குறும்பர் வரலாறு (டி.3035), படுவூர் பாண்டுக்குழி வரலாறு (டி. 2866), கூத்தநாச்சித் தோப்பில் சந்தை கூடிய வரலாறு (டி. 3252), வேடர் சரித்திரம் (டி. 2861), வேடர் ஏனாதி வில்லியர் இருளர் (டி. 3082), வில்லியர் இருளர் மலையரசர் சரித்திரம் (டி. 2865), பன்றிமலை விருபாட்சி குண்ணுவர் வரலாறு (டி. 3174) முதலியவை பழங்குடி மக்களின் வரலாற்றுப் பின்னணி, தொழில், சமூக நிலை, அவர்களின் திருமண முறை, சடங்குகள், வழிபாடுகள், நம்பிக்கைகள், மொழி, அவர்களின் இன்றைய நிலை, வரலாற்றுச் சின்னங்கள் குறித்த செய்திகளை விவரித்துச் செல்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் ஆசிரியரால் களஆய்வு மேற்கொள்ளப் பட்டுத் தொகுப்பட்ட நம்பகத்தன்மை வாய்ந்த தரவுகள் மூலம் இந்நூல் முழுமை பெற்று விளங்குகிறது.

தமிழகத்தில் பழங்குடிகள் என்ற தலைப்பிலான இப்பகுதியானது தமிழகத்தில் வாழும் பழங்குடிகளான அதியன் முதல் ஊராளி வரையிலான 36 பழங்குடி யினரின் பெயர்களைப் பட்டியலிட்டுத் தருவதோடு வரலாற்று ரீதியிலான தென்னிந்தியப் பழங்குடிகள் குறித்தான செய்திகளை அறிமுக அளவில் விவரித்துச் செல்கிறது. இந்தியாவில் வாழும் பழங்குடி மக்களை நிலவியல் எல்லை அடிப்படையில் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதியில் வாழ்பவர்கள், மத்திய இந்திய மலைப்பகுதியில் வாழ்பவர்கள், தென்னிந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழ்பவர்கள் என்று மூன்றாகப் பகுக்கின்றனர். இதில் மிகத் தொன்மை யானவர்கள் தென்னிந்தியப் பிரிவினரே என்றும் தங்களை விட முன்னேறிய கூட்டங்கள் வந்ததும் இவர்கள் ஒதுங்கி மேற்கு மலைப்பகுதியில் தஞ்சம் புகுந்திருக்க வேண்டும் என்றும் ஆசிரியர் பி.எஸ். குஹா குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளார் ஆசிரியர்.

தென்னிந்திய மக்களிலும் பூர்வக்குடிகளாகத் திராவிடர்களை ஏற்றுக்கொள்ளாத கருத்து உள்ளது. இதற்குக் காரணம் ஆரிய திராவிடக் கலப்பு ஏற்பட்ட பிறகே தென்னிந்தியாவின் தெளிவான வரலாறு கிடைக் கிறது. சங்க இலக்கியங்களில் பல்வேறு செய்திகள் இருப்பினும் அவை வரலாறு எழுதுவதற்குப் போது மானதாக இல்லை என்ற W.Crooke போன்ற வரலாற்று அறிஞர்களின் கருத்தினை ஆசிரியர் பதிவு செய் துள்ளதை மேலும் ஆய்வுக்குட்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்தி நிற்கிறது.

இவ்வாறு தமிழ்நாடு நிலவியல் அடிப்படையிலும் சமூக அடிப்படையிலும் ஏற்றத்தாழ்வுடைய நிலையில் உள்ளது என்று கூறும் ஆசிரியர் சமச்சீரற்ற நிலவியலே சமச்சீரற்ற பொருளாதார, அரசியல் நடவடிக்கை களுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது என்று கருதுகிறார். இது குறித்து அறிஞர்கள் கொண்டிருந்த கருத்துக்களை விளக்கியுள்ளதோடு தொடக்கத்தில் திராவிடர்களுக்கும் பழங்குடிகளுக்குமான தொடர்பு என்னவாக இருந்தது என்பதையும், தரவுகளின் அடிப் படையில் சுருக்கமாகவும் செறிவாகவும் கொடுத்துள்ள விதம் சிறந்த ஆய்வு முறையியலுக்குத் தக்கதொரு சான்று.

இந்நூலில் இடம்பெற்ற மெக்கன்சி சுவடிகளுள் பத்துச் சுவடிகள் குறும்பர் பற்றிய செய்திகளைக் கொண்டவை. இவற்றுள் ஏழு சுவடிகள் மூலச்சுவடிகள்; எஞ்சிய மூன்றும் படியெடுக்கப்பட்டவை. இவை குறும்பர் இனப்பழங்குடி குறித்த செய்திகள், குறும்பர் என்னும் இடைச்சாதியார், குறும்பர் கைபீது, பட்டிப்புலக் கிராம கைபீது, குறும்பர் சரித்திரம், குறும்பர் வரலாறு, படுவூர் பாண்டுக்குழி வரலாறு, கூத்த நாச்சித் தோப்பில் சந்தை கூடிய வரலாறு என்ற ஏழு தலைப்பின் கீழ் வெவ்வேறு கோணங்களில் இச் சுவடிகளின் செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. இப் பகுதியில்தான் 1816ஆம் ஆண்டுக்கு முன்னர் குறும்பர்கள் காடுகளிலும் சமவெளிகளிலும் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை மெக்கன்சி உறுதிப்படுத்து கின்றார் என்பதை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளதோடு மூன்று பிரிவுகளாக இதனைப் பகுத்து ஆராய்ந்துள்ளார்.

இதில் சந்நியாசிக் குறும்பர், சஞ்நம் எனும் திருவண்ணாமலையைச் சேர்ந்த சோமாசிப்பாடியில் வாழ்ந்த குறும்பர்களைப் பற்றிய சுவடி முதல் பிரிவாகும்.

இரண்டாவது பிரிவு தொண்டை மண்டலத்தில் புழல், படுவூர், நெடுமரம், அணைக்கட்டு, நெரும்பூர், சாலவன் குப்பம், பட்டிப் புலம் ஆகிய இடங்களில் வாழ்ந்த குறும்பர்களைப் பற்றியது.

மதுரையைச் சேர்ந்த கம்பத்திற்கு அருகே கூத்தநாச்சித் தோப்பில் மோர் விற்ற இடையர் இனப்பெண்ணின் வாழ்க்கையைப் பற்றிய சுவடி மூன்றாவது பிரிவாகும். இப்பகுதியில் குறும்பர்களின் வரலாற்றுப் பின்னணி, சன்னாசிக் குறும்பர்கள் ஆதொண்டை மன்னன் காலத்தில் சமண மதத்தைத் தழுவியதற்கான சான்றுகள், பட்டிப்புல மண்மேட்டுப் பகுதியில் குறும்பர்களுக்கு கோட்டை இருந்ததற்கான விவரம் உள்ளிட்ட பல்வேறு செய்திகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இப்பிரிவில் இடம்பெற்ற கூத்தநாச்சி குறித்த சுவடியில் கூத்தநாச்சியானவள் ஒரு சுவடியில் இடையர் குலத்துப் பெண் என்றும் மற்றொரு இடத்தில் சக்கிலிய இனத்தைச் சார்ந்த பெண் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுவதால் கூத்தநாச்சியின் உண்மையான வரலாற்றினைக் கண்டறிய வேண்டி யுள்ளது. அதோடு அந்த காலகட்டத்தில் பழங்குடி யினருக்கும் விளிம்புநிலை மக்களுக்குமான தொடர்பு என்னவாக இருந்தது என்பதை ஆராய வேண்டியுள்ளதன் அவசியத்தை உணர்த்தி நிற்கிறது இப்பகுதி. மேலும் இப்பழங்குடிகள் பற்றிய செய்திகள் பெருமளவு இந்நூலில் இடம்பெற்றிருப்பதில் இருந்து இம்மக்கள் குறித்து ஆய்வுகள் கணிசமான அளவில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று யூகிக்க இடமளிக்கிறது.

இங்கு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ள பிற பழங்குடி மக்களான வேடர், ஏனாதி, வில்லியர், இருளர், மலையரசர், குண்ணுவர் குறித்த சுவடிச் செய்திகள் குறைந்த அளவே இடம்பெற்றுள்ளன. அவ்விடங்களில் ஆசிரியர் அந்தப் பழங்குடிகள் குறித்து ஆராய்ந்துள்ள பிற ஆசிரியர்களின் தரவுகளைப் பொருந்தும் விதமாகக் கூறிச் செல்வதும் வேறுபட்ட ஆய்வுச் சிந்தனைக்கு வித்திடுவதாக உள்ளது. மற்றொருபுறம் மெக்கன்சி ஆவணங்களை மேற்கொண்டு ஆய்வுக்குட்படுத்துவதன் மூலம் தென்னிந்திய வரலாற்றினை மீட்டெடுப் பதற்கான அவசியத்தை உணர்த்தி நிற்கிறது.

மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள்

ஆசிரியர்: ம.இராசேந்திரன்

வெளியீடு: அடையாளம்

1204-05, இரண்டாம் தளம், கருப்பூர் சாலை,

புத்தாநந்தம் - 621 310

விலை : ` 180/-

Pin It