சுதேசி இயக்கத்தின் சூறாவளி நாட்களுக்குப் பின்னர் உறங்கிப் போன தேசிய இயக்கத்திற்கு முதல் உலகப்போர் புதுவாழ்வு தந்தது. பிரிட்டனின் இக்கட்டு இந்தியாவின் “வாய்ப்பாக” மாறியது. வட இந்தியாவில் தளம் கொண்ட கதார் புரட்சியாளர்களும், லோக்மான்ய திலகரும், அன்னிபெசண்டும், அவர்களுடைய சுயாட்சி இயக்கமும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பல்வேறு வகைகளில் வெற்றி பெற்றனர். வன்முறையைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் ஆட்சியை வெளியேற்ற கதார் இயக்கத்தினர் முயற்சி செய்தனர். சுயாட்சி அல்லது சுயராஜ்யம் பெறுவதற்கு நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தினர் அன்னி பெசண்ட்டின் சுயாட்சி இயக்கத்தினர்.

முதல் உலகப்போரை பிரிட்டனுக்கு ஏற்பட்ட நெருக்கடியாகப் பயன்படுத்திக்கொண்டு இந்தியா விடுதலை பெற்றுவிட வேண்டுமென்று பல இயக்கங்கள் எண்ணின. குறைந்தபட்சம் சுயாட்சியாவது பெற வேண்டுமென்று அன்னிபெசண்டின் ஹோம் ரூல் லீக் வாதிட்டது. அன்னிபெசண்ட் ஆரம்பித்த தியாசபிகல் சொசைட்டியில் அவருடன் ஜார்ஜ் அருண்டேல், சி.பி. ராமசாமி அய்யர் மற்றும் பி.பி. வாடியா ஆகியோர் பணியாற்றினர். பிரிட்டனின் கீழ் சுயாட்சி என்று ஹோம் ரூல் கோரியதைக்கூட காலனி அரசால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது. அன்னிபெசண்ட்டை உடனடியாக அவருடைய சொந்த நாட்டிற்கு (அயர்லாந்து) திரும்ப அனுப்ப வேண்டுமென்று அன்றைய சென்னை ஆளுநர் பெண்ட்லாண்ட் வைஸ்ராயை வற்புறுத்தினார். ஆனால் நாடு கடத்துவது சிக்கல்களை உருவாக்கு மென்று எண்ணிய அரசு, அன்னிபெசண்ட்டை கோயம்புத்தூரில் வீட்டுக்காவலில் வைத்தது. அவர் நடத்திய ‘நியூ இந்தியா’, ‘காமன்வீல்’ ஆகிய பத்திரி கைகள் தடைசெய்யப்பட்டன. அதேபோல் போரைக் காரணம் காட்டி பத்திரிகைச் சுதந்திரம் நசுக்கப் பட்டது. தரை வழியாகவும், கடல் வழியாகவும் இந்தியாவுக்குள் வந்த பல புத்தகங்களும், சிறு பிரசுரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை கதார் இயக்கத்தினரின் பிரசுரங்கள்.

கடல் சுங்க சட்டம் 1878 - 1914 திருத்தம் (Sea Custom Act 1878 - Amended 1914) மூலம் கீழ்க்கண்ட புத்தகங்களும், பிரசுரங்களும் தடைசெய்யப்பட்டன: “பிரிட்டனுக்கு எதிராக இந்தியா” (India Against Britain), “ரஷ்யப் புரட்சியின் கதைகள்” (ரூஷி பாகியோன் கி கஹானியா), “லட்சுமிபாய் : 1857 கிளர்ச்சியின் தலைவர்” (Lakshmi Bhai : The Leader of the Mutiny of 1857), “இருபதாம் நூற்றாண்டில் இந்தியக் காவல் துறையின் முறைகள்” (The Methods of the Indian Police in the 20th Century), “தேச பக்தியின் பாடல்” (தேசபக்தி கீத்), “புரட்சியின் எதிரொலி : எண் 2” (கதார் கீ குர்ஜ் : 2), “பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்தியா ஏன் கிளர்ச்சி செய்கிறது” (Why India is in Revolt Against British Rule). இவற்றில் பெரும் பாலானவை சான் ஃபிரான்சிஸ்கோவில் செயல் பட்ட யுகாந்தார் ஆசிரமத்தால் வெளியிடப்பட்டன. இவற்றின் பின்புலமாகச் செயல்பட்டது கதார் இயக்கம். ‘கதார்’ என்றால் புரட்சி என்று பொருள்.

*

1904 முதல் வட அமெரிக்காவில் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் ஏராளமான இந்தியர் குடியேறத் தொடங்கினர். இவர்களில் பெரும்பாலோர் பஞ்சாபி மக்கள். நெருக்கம் நிறைந்த பகுதிகளிலிருந்து - முக்கிய மாக ஜலந்தர், ஹோசியார்பூர் மாவட்டங்களில் இருந்து பிழைப்பதற்காக இடம் தேடி வந்த விவசாயிகள். இவர்களில் சிலர் நேரடியாக அமெரிக்கா வந்த வர்கள்; மற்றவர்கள் மலாய் நாடுகள், பிஜி போன்ற பல தூரக் கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிச் சென்று, பின்னர் அங்கிருந்து அமெரிக்காவில் குடியேறிய வர்கள் பலர் பிரிட்டிஷ்-இந்தியன் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். இவர்கள் உலகின் பல இடங் களுக்குச் சென்றிருந்ததால் அங்குள்ள வாய்ப்புகளை அறிந்திருந்தனர். பொருளாதார நெருக்கடியால் சொந்த மண்ணை விட்டு வெளியேற்றப்பட்டு, தங்களுக்கும், தங்களுடைய உறவுகளுக்கும் புதிய வளமான வாழ்க்கை ஏற்படுத்தித்தர வாய்ப்புகள் உண்டு என்ற நம்பிக்கையால் உந்தப்பட்டு, உடைமை களை அடகு வைத்து, நிலங்களை விற்று, அமெரிக் காவுக்கு வந்தவர்கள்.

ஆனால் பயணச் சோர்வுடன் வந்திறங்கிய இவர்களுக்கு கனடாவிலும், அமெரிக்காவிலும் கிடைத்த வரவேற்பு ஏமாற்றம் தந்தது. பலருக்கு, முக்கியமாக கிராமங்களிலிருந்து நேராக வந்தவர் களுக்கு, நுழைவு மறுக்கப்பட்டது. நுழைய அனு மதிக்கப்பட்டவர் நிறவெறி அவமானங்களையும், புதியவர்களின் வரவால் ஏற்பட்ட போட்டியை விரும்பாத வெள்ளை இனத்தவரும், அவர்களுடைய தொழிற்சங்கங்களும் உருவாக்கிய எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியிருந்தது. அமெரிக்க நாட்டுத் தொழிலாளர்களும், வெகுமக்களின் வாக்குகளைக் குறிவைத்த அரசியல்வாதிகளும் இந்தியர்களின் நுழைவுக்கெதிராகப் போராட்டங்கள் நடத்தினர்.

*

இதனிடையே குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவின் உள்துறைச் செயலாளருக்கு வேறு காரணங்கள் இருந்தன. முதலில் அமெரிக்காவில் இந்தியர்களுக்கும், வெள்ளையருக்கும் இடையே ஏற்படும் நெருக்கம் ஆங்கிலேயரின் மாண்பிற்கு நல்ல தல்ல என்று கருதினார். ‘மாண்பில் உயர்ந்தவர்கள்’ என்று கூறித்தான் ஆங்கிலேயர் இந்தியர்களை ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள். மேலும், சோசலிசக் கருத்துக்களால் தாக்கப்பட்டு இந்தியர்கள் கெட்டுப் போனவர்கள் என்றும், அவர்கள் அங்கே எதிர் கொள்ளும் பாகுபாடு இந்தியாவில் தேசிய விடுதலைப் போராட்டத்திற்குத் தூண்டுதலாகி விடும் என்றும் நம்பினார். இதுபோன்ற நெருக்கடியால் கனடாவில் இந்தியர் குடியேறுவது 1908-இல் வெகுவாகக் குறைந்தது. வட அமெரிக்காவில் இருந்த இந்தியர் களில் முதல் தலைவர்களிலொருவர் தாரக்நாத் தாஸ் என்ற மாணவர். ஃப்ரீ ஹிந்துஸ்தான்’ (சுதந்திர ஹிந்துஸ்தான்) என்ற பத்திரிகையை ஆரம்பித்தவர் தாஸ். இந்தியர்கள் வடஅமெரிக்காவில் குடியேறினால் விடுதலை குறித்த சிந்தனைகளால் தாக்கப்படுவார்கள் என்பதால் வட அமெரிக்காவில் இந்தியர்கள் குடி யேறுவதை பிரிட்டிஷார் விரும்பவில்லையென் பதையும், மாற்றாக, பிஜிக்கு பிரிட்டிஷ் தோட்ட உரிமையாளர்களுக்கு வேலையாட்களாகச் செல் வதை விரும்பினார்கள் என்பதையும் தாஸ் உணர்ந்தார்.

*

குடியேறிய நாடுகளில் இருந்த பாகுபாட்டுக் கொள்கைகள் விரைவில் இந்திய தேசியவாதிகள் மத்தியில் பல அரசியல் செயல்பாடுகளைத் தூண்டின. 1907-இல் மேற்குக் கடற்கரைப் பகுதியில் நாடு கடத்தப் பட்ட ராமநாத் பூரி என்பவர் ‘சர்க்குலர்-இ-ஆசாதி’ (விடுதலைச் சுற்றறிக்கை) என்ற சுற்றறிக்கையை வெளியிட்டார். இதில் சுதேசி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தார். வான்கூவரில் ஃப்ரீ ஹிந்துஸ்தான்’ பத்திரிகையைத் தொடங்கிய தாரக்நாத் தாஸ், தீவிர தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். லண்டனிலிருந்த ‘இந்தியன் ஹவுஸ்’ அமைப்பைப் பின்பற்றி வான்கூவரில் ‘சுதேசி ஹவுஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கிய ஜி.டி. குமார், ‘சுவதேசி சேவக்’ என்ற குர்முகி பத்திரிகையையும் வெளி யிட்டார். சீர்திருத்தங்களை ஆதரித்தும், பிரிட்டி ஷாருக்கு எதிராக இந்தியப் படைகள் கிளர்ச்சி செய்ய வேண்டுமென்றும் எழுதினார். இதன் பின்னர் வான்கூவரிலிருந்து வெளியேற்றப்பட்ட தாரக்நாத்தும் ஜி.டி.குமாரும், 1910-இல் அமெரிக் காவின் சியாட்டல் நகரில் ‘யுனைடெட் இந்தியன் ஹவுஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கி இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கிட்டத்தட்ட இருபத்தைந்து இந்தியத் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

தீவிர தேசியவாத மாணவர்கள் அதிகமிருந்த யுனைடெட் இந்தியன் ஹவுஸ்க்கும், கால்சா திவான் சொசைட்டிக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டன. லண்டனில் இருந்த குடியேற்றச் செயலாளரையும், இந்தியாவில் வைஸ்ராயையும், பிற அதிகாரிகளையும் சந்திப் பதற்குக் குழுவொன்றை அனுப்ப 1913-இல் இவர்கள் முடிவு செய்தனர். குழு லண்டனில் ஒரு மாத காலம் காத்திருந்தபோதும் குடியேற்றச் செயலாளருக்கு இவர்களைச் சந்திக்க நேரமில்லாமல் போனது. ஆனால் இந்தியாவில் வைஸ்ராயையும், பஞ்சாபின் லெப்டினண்ட் கவர்னரையும் சந்திப்பதில் வெற்றி பெற்றனர். இதைவிட முக்கியமாக, இவர்களுடைய வருகையையொட்டி, லாகூர், லூதியானா, அம்பாலா, பிரோஸ்பூர், ஜலந்தர், அமிர்தசரஸ், லயால்பூர், குஸ்ரன்வாலா, சியால்கோட், சிம்லா போன்ற ஊர்களில் பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப் பட்டன. இவற்றின் மூலம் பத்திரிகை மற்றும் பொது மக்களின் ஆதரவையும் பெற்றனர்.

*

கனடாவிலும், அமெரிக்காவிலும் இதுபோன்று நடத்தப்பட்ட தொடர் போராட்டங்களின் பலனாக தேசிய உணர்வு தோன்றியது; குடியேறிய இந்தியர் மத்தியில் ஒற்றுமையுணர்வு ஏற்பட்டது. ஆனால் அமெரிக்காவில் இந்தியர்கள் சொந்தமாக நிலம் வாங்குவதற்குத் தடையாக இருந்த ‘ஏலியன் லாண்ட் ஆக்ட்’ (அந்நியர் நிலச் சட்டம்) போன்ற தடைகளாலும், குடியேற்றக் கட்டுப்பாடுகளாலும் ஏற்பட்ட இடையூறுகளில் தலையிட இந்திய அரசையோ, பிரிட்டிஷ் அரசையோ நிர்ப்பந்திக்க இவர்களால் முடியவில்லை. இதனால் ஏற்பட்ட கோபமும், அதிருப்தியும் புரட்சி இயக்கமாக உருவெடுத்தன.

ஹாங்காங்கிலும், மலாய் நாடுகளிலும் பணி யாற்றிய பகவான்சிங் என்ற சீக்கிய குரு 1913இன் தொடக்கத்தில் வான்கூவருக்கு வந்த நிகழ்வு புரட்சி இயக்கத்திற்கு முதல் உந்துதலைத் தந்தது. வன் முறையைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டுமென்ற கருத்தை வெளிப் படையாக பகவான்சிங் அறிவுறுத்தினார். ‘வந்தே மாதரம்’ புரட்சி வணக்கமாக ஏற்றுக்கொள்ளப் பட வேண்டுமென்றும் கூறினார். மூன்று மாத காலத்திற்குப் பின் கனடாவிலிருந்து பகவான்சிங் வெளியேற்றப்பட்டார்.

ஓரளவு சுதந்திரமான அரசியல் சூழல் நிலவிய அமெரிக்கா இப்போது புரட்சியின் மையமாயிற்று. இந்தியாவிலிருந்து அரசியல் காரணங்களுக்காக நாடு கடத்தப்பட்ட லாலா ஹர் தயாள் இந்தச் சூழலில் பங்காற்றினார். 1911இல் கலிபோர்னியா வந்து ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் ஆசிரியராக இருந்த ஹர் தயாள் விரை விலேயே அரசியல் செயல்பாடுகளில் முழுமை யாக இறங்கினார்.

1912 இன் கோடைப்பருவத்தில் அமெரிக்காவின் அறிவு ஜீவிகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் அனார்கிசம், சிண்டிகலிசம் போன்ற தத்துவங் களைப் பற்றிக் கருத்துரைகள் வழங்கிக்கொண் டிருந்த ஹர்தயாள், அமெரிக்காவில் இந்தியர்களைப் பாதித்த குடியேற்றப் பிரச்சினைகளைப் பற்றி அதிகம் அக்கறை காட்டவில்லை. ஆனால் 23 டிசம்பர் 1912 அன்று டில்லியில் வைஸ்ராய் லார்ட் ஹார்டிங் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல், ஹர் தயாளின் சிந்தனையைத் தூண்டியது; அவருக்குள் தூங்கிக் கொண்டிருந்த இந்தியப் புரட்சியாளரை எழுப்பி விட்டது. இந்தியாவில் இருக்கும் பிரிட்டிஷ் ஆட்சியை, புரட்சி மூலம் விரட்டிவிட முடியுமென்ற அவருடைய நம்பிக்கை புத்துயிர் பெற்றது. இதனை யடுத்து, வைஸ்ராய் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலைப் புகழ்ந்து ‘யுகான்தர் சுற்றறிக்கை’ வெளியிட்டார்.

இதற்கிடையே அமெரிக்காவின் மேற்குக் கரையில் குடியிருந்த இந்தியர்கள் தங்களுக்கொரு தலைவரைத் தேடிக் கொண்டிருந்தனர். 1907இல் பஞ்சாப் போராட்டத்தில் பிரபலமாகிய அஜீத்சிங்கை அழைத்துவரக்கூட எண்ணினர். ஆனால் ஹர்தயாள் ஏற்கெனவே அங்கு வந்துவிட்டார்; 1912க்குப் பின்னர் தீவிர அரசியலில் பங்கெடுக்கத் தயாரென்பதையும் காட்டினார். இதனையடுத்து, மே 1913இல், போர்ட் லாண்டில் ‘ஹிந்த் அசோசியேஷன்’ தொடங்கப் பட்டது.

கன்சிராம் என்பவர் வீட்டில் கூடிய முதல் கூட்டத்தில் பாய் பரமானந்த், சோகன்சிங், பாக்னா, ஹர்நாம் சிங் ‘துண்டிலத்’, ஹர்தயாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஹர்தயாள் தன்னுடைய செயல்திட்டத்தை முன்வைத்தார். “அமெரிக்கரை எதிர்க்காதீர். இங்கே கிடைக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி பிரிட்டிஷை எதிர்ப் போம்; உங்களுடைய நாட்டில் நீங்கள் சுதந்திரமாக இல்லாதவரை, அமெரிக்கர் உங்களைச் சமமாக மதிக்கப் போவதில்லை; இந்தியாவின் வறுமைக்கும், இழிநிலைக்கும் மூல காரணம் பிரிட்டிஷ் ஆட்சி; மனுக்களைக் கொண்டல்ல, ஆயுதப்புரட்சியின் மூலமாகவே அது தூக்கியெறியப்பட வேண்டும். இந்தச் செய்தியை இந்திய மக்களுக்கும், இந்திய ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்கும் கொண்டு செல்லுங்கள்; அவர்களுடைய ஆதரவைத் திரட்டுங்கள்” என்று பேசினார். ஹர்தயாளின் கருத்து உடனடி யாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டது; ‘த கதார்’ என்ற இலவச வாரப் பத்திரிகை ஆரம்பிப்பதென்றும் முடிவானது; ‘யுகான்தர் ஆஸ்ரம்’ என்ற பெயரில் சான்ஃபிரான்சிஸ் கோவில் தலைமைச் செயலகம் ஏற்படுத்துவதென்றும் தீர்மானித்தார். அடுத்தடுத்து பல இடங்களிலும், மையங்களிலும் நடந்த கூட்டங்களிலும், இறுதி யாக அஸ்டோரியாவில் கூடிய பிரதிநிதிகளின் கூட்டத்திலும் போர்ட்லாண்டில் நடந்த முதல் கூட்டத்தின் முடிவை உறுதி செய்தனர். ‘கதார்’ இயக்கம் ஆரம்பமாயிற்று.

கதார் தீவிரவாதிகள் உடனடியாகத் தீவிரப் பிரசாரத்தை ஆரம்பித்தனர்; பரவலாகச் சுற்றுப் பயணம் செய்தனர்; குடியேற்ற பஞ்சாபிகள் பெரும் பாலும் வேலை செய்த ஆலைகளுக்கும், பண்ணை களுக்கும் சென்று அவர்களைச் சந்தித்தனர். இந்த அரசியல் பணியாளர்களுக்கு யுகான்தர் ஆசிரமம் தலைமையிடமாகவும், வீடாகவும், புகலிடமாகவும் ஆயிற்று.

‘கதார்’ பத்திரிகையின் முதல் வெளியீடு 1 நவம்பர் 1913இல் உருது மொழியில் வெளியானது; அதே ஆண்டு 9 டிசம்பரில் குர்முகி பதிப்பு வெளி வந்தது. பத்திரிகையின் பெயர் அதன் குறிக்கோளைச் சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாக்கியது: ‘கதார்’ என்றால் ‘புரட்சி’ என்று பொருள். அதன் பின்னரும் சந்தேகங்கள் வந்தால் அவற்றைப் பத்திரிகையின் முன்பக்கத் தலைப்புகள் தெளிவாக்கின: ‘பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரி’ போன்ற தலைப்புகள் வழக்கமாகத் தோன்றின. ஒவ்வொரு பதிப்பின் முதல் பக்கத்திலும் ‘பிரிட்டிஷ் ஆட்சியின் அவலம் அம்பலம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது. இந்த ‘அம்பலம்’ பிரிட்டிஷ் ஆட்சியின் பாதகமான பதினான்கு அம்சங்களை விளக்கியது. இந்தியாவின் செல்வம் கொள்ளையிடப்படுவது, இந்தியர்களின் குறைந்த தனிநபர் வருமானம், அதிகரிக்கும் நிலவரி, சுகா தாரத்திற்குக் குறைவாகவும், ராணுவத்திற்கு அதிக மாகவும் செலவு, இந்தியக் கலைகள், தொழில் களின் அழிவு, லட்சக்கணக்கில் இந்தியர்களைக் கொல்லும் ஓயாத கொள்ளை நோய், பஞ்சம், ஆப்கானிஸ்தான், பர்மா, எகிப்து, பாரசீகம், சீனா ஆகிய நாடுகளில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை விரி வாக்க இந்தியர்களிடையே பிரிட்டிஷ் அரசு உரு வாக்கும் மோதல்கள், இந்தியர்களைக் கொலை செய்த, இந்தியப் பெண்களை இழிவுபடுத்திய ஆங்கிலேயர் பாரபட்சமாக, கடுமையின்றி நடத்தப் படும் முறை, இந்துக்கள், இஸ்லாமியரிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை ஆங்கிலேயக் கிறித்தவ சமயப் பணியாளருக்குக் கொடுப்பது போன்ற விஷயங்கள் இவற்றில் அடங்கும்.

மொத்தத்தில், பிரிட்டிஷ் ஆட்சியைப் பற்றி இந்திய தேசிய இயக்கம் முன்வைத்த விமர்சனத்தைச் சுருக்கி, அதன் சாரத்தை வாசகர்களுக்கு ஒவ்வொரு வாரமும் கதார் தந்தது. ‘அம்பலம்’ கட்டுரை இறுதியாக இரண்டு தீர்வு களைக் கூறியது: (i) இந்திய மாகாணங்களில் 7 கோடி இந்தியரும், பிரிட்டிஷ் இந்தியாவில் 24 கோடி இந்தியரும் இருந்தனர்; மாறாக, 79,614 அதிகாரிகளும், ராணுவ வீரர்களும், 38,948 தன்னார்வத் தொண்டர்களும் மட்டுமே ஆங்கிலேயர் (ii) 1857 புரட்சி நடந்து ஐம்பத்தியாறு ஆண்டுகளாகி விட்டன; இரண்டாவது புரட்சிக்கு அவசரத் தேவை ஏற் பட்டுள்ளது.

‘அம்பலம்’ கட்டுரைகளின் நடை மிகவும் எளிமையாக இருந்ததால் செய்தி எளிதில் சென்றடைந்தது. இவற்றுடன், வி.டி.சாவர்க்கர் எழுதிய ‘இந்திய விடுதலைப்போர்: 1957’ தொடராக வெளியிடப்பட்டது. திலகர், அரவிந்தர், வி.டி.சாவர்க்கர், மேடம் காமா, ஷியாமாஜி கிருஷ்ணா வர்மா, அஜித்சிங், சுவ்வி அம்பா பிரசாத் ஆகியோரின் பங்களிப்பைப் பற்றிய குறிப்புகளும் இருந்தன. இவற்றுடன், ‘அனுசீலன் சமிதி’ ‘யுகான்தர்’ குழு, ரஷ்ய ரகசிய சமூகங்கள் ஆகியவற்றின் வீரச்செயல் களைப் பற்றியும் எழுதப்பட்டது.

இவற்றையெல்லாம் விட அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியவை இப்பத்திரிகையில் வெளிவந்த கவிதைகள்; பின்னர் இவை ‘கதார் தி கூன்ஜ்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு, இலவசமாக விநி யோகிக்கப்பட்டன. இவற்றின் சமய சார்பற்ற தொனியும், புரட்சிகர சிந்தனையும் கீழ்க்கண்ட கவிதையில் தெரிகின்றன:

“இந்துக்களே, சீக்கியரே, பத்தன்களே, இஸ்லாமியரே,

ராணுவத்தில் உள்ள அனைத்து மக்களே, கவனமாகக் கேளுங்கள்.

பிரிட்டிஷாரால் நம் நாடு கொள்ளையடிக்கப்படுகிறது,

அவர்களுக்கெதிராக நாம் போர் நடத்த வேண்டும்.

பண்டிதரும், காஜிமாரும் நமக்குத் தேவையில்லை,

நம் கப்பல் மூழ்கிவிடக்கூடாது

கும்பிடும் காலம் முடிந்து விட்டது.

வாள் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது."

‘த கதார்’ வடஅமெரிக்காவில் இருந்த இந்தியர் மத்தியில் பரவலாக வலம் வந்தது; அடுத்த சில மாதங்களில் பிலிப்பைன்ஸ், ஹாங்காங், சீனா, மலாய் நாடுகள், சிங்கப்பூர், டிரினிடாட், ஹாண்டூராஸ் ஆகிய நாடுகளைச் சென்று சேர்ந்தது; இந்தியா விற்கும் வந்தது; மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது; கலந்தாய்வுகளின், விவாதங்களின் மையப்பொரு ளானது. குடியேறிய பஞ்சாபியர் கூடிய இடங் களில் ‘கதார்’ பாடல்கள் பாடப்பட்டன; அடுத்து, அனைத்து இடங்களிலும் பிரபலமாயின.

குடியேறிய பஞ்சாபிகளைப் பற்றிய சுய கருத் தாக்கத்தை ‘த கதார்’ சீக்கிரம் உடைத்தெறிந்ததில் ஆச்சரியமில்லை: பிரிட்டிஷ் அரசின் விசுவாசமான படைவீரர் என்ற உருவம் போய், தன் தாய்நாட்டின் மீது பிரிட்டன் கொண்டிருந்த பிடியை உடைத் தெறியக் கிளம்பிய புரட்சியாளர் என்ற வடிவம் வந்தது. பஞ்சாபியரின் கடந்த கால பிரிட்டிஷ் விசு வாசத்தைச் சுட்டிக்காட்டியது. அதற்காக அவர் களை வெட்கப்பட வைத்தது; முன்பொரு காலத்தில் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்ததை நினைவூட்டி, இப்போதைய செயலுக்குப் பிராயசித்தம் தேடச் சொன்னது:

“சீக்கியரின் பெயரை ஏன் கேவலப்படுத்துகிறாய்?

‘சிங்கங்களின்’ கம்பீரத்தை எப்படி மறந்தாய்?

தீப்சிங் போன்றோர் இன்று இருந்தால்,

சீக்கியரை எப்படி கேலி செய்திருப்பர்!

சீக்கியர் உதவாக்கரை என்று கூறுகின்றனர்.

டில்லி புரட்சியின் போக்கை ஏன் மாற்றினாய்?

‘வெள்ளையரைக் கொல்வோம்’ என்று கூக்குரலிடு

வெட்கமின்றி ஏன் அமைதியாக இருக்கிறாய்?

பூமி பிளந்து நம்மை விழுங்கட்டும்.

இந்த முப்பது கோடி பிறந்து என்ன பயன்?

செய்தியும், கருத்தும் இலக்கை அடைந்தன; வேகம் கொண்ட இளம் தீவிரவாதிகள் ‘செயலில்’ இறங்கத் துடித்தனர். எழுச்சியைக் கண்டு ஹர்தயாளே வியந்து போனார். இந்தியாவில் புரட்சியை ஏற் படுத்த எவ்வளவு காலம் ஆகுமென்று ஒருமுறை அவரைக் கேட்ட போது, “பத்து ஆண்டுகள்” அல்லது “சில ஆண்டுகள்” என்று பதில் கூறியிருந்தார். ஆனால் ‘த கதார்’ பத்திரிகையின் அழைப்பைப் படித்தவர் களுக்குப் பொறுமை இல்லை; பத்தாண்டுகள் அதிக காலம் என்று கருதினர்.

இறுதியாக, 1914 இல் நடந்த மூன்று நிகழ்வுகள் கதார் இயக்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின. ஹர்தயாளின் கைதும், தப்பித்தலும், ‘கோமாகட்டா மாரூ’ நிகழ்வு; முதல் உலகப் போரின் ஆரம்பம்.

*

சட்டத்தின் ஆட்சியை மறுப்பதாகக் குற்றஞ் சாட்டப்பட்டு 1914 இல் ஹர்தயாள் கைது செய்யப் பட்டார். ஆனால் பிரிட்டிஷ் அரசின் நிர்ப்பந்தத்தால் தான் அவர் கைது செய்யப்பட்டதாக அனைவரும் சந்தேகப்பட்டனர். பிணையில் விடுவிக்கப்பட்ட தயாள் நாட்டை விட்டுத் தப்பினார். அத்துடன் கதார் இயக்கத்துடன் அவருக்கு இருந்த தீவிரத் தொடர்பு திடீரென முறிந்து போனது.

*

இதற்கிடையே ‘கோமாகட்டா மாரூ’ என்ற கப்பல் கனடா நோக்கித் தன்னுடைய பயணத்தைத் தொடங்கியது. இந்தியாவில் இருந்து கனடாவில் குடியேற விரும்புவோர் மீது கடுமையான கட்டுப் பாடுகளைச் சில ஆண்டுகளாக கனடா விதித்து வந்தது. இந்தியாவில் இருந்து நேரடியாக கனடா வந்தவரை மட்டுமே அனுமதித்தது; இடையே வேறு நாடுகளில் இருந்து வந்த இந்தியருக்கு நுழைவு மறுக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து கனடாவிற்கு நேரடிக் கப்பல் சேவை இல்லாததால் இந்தியரின் குடியேற்றத்தை இந்தச் சட்டம் தடுத்து விட்டது. ஆனால் நவம்பர் 1913இல் இந்தியாவில் இருந்து கனடாவிற்கு நேராக வராத முப்பத்தி மூன்று இந்தியரைக் கனடாவிற்குள் நுழைய கனடா உச்சநீதிமன்றம் அனுமதித்தது. இந்தத் தீர்ப்பால் தைரியம் கொண்ட குர்தத்சிங் என்ற சிங்கப்பூரில் வாழ்ந்த இந்தியர் கனடாவிற்கு இந்தியரை அனுப்ப முடிவு செய்தார். இதற்காகக் கப்பல் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, அதில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்ந்துகொண்டிருந்த இந்தியரை வான்கூவர் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கினார். ‘கோமகட்டா மாரூ’ 376 இந்தியப் பயணிகளை ஏற்றிக்கொண்டு வான்கூவர் கிளம்பியது. வழியில் ஜப்பானின் யோக்கோஹோமா என்ற ஊரில் கதார் செயல்வீரர்கள் பயணிகளைச் சந்தித்தனர்; அவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தி, கதார் பிரசுரங் களை விநியோகித்தனர். கனடாவிற்குள் இந்தியப் பயணிகளுக்கு நுழைவு மறுக்கப்பட்டால் கடும் விளைவுகள் ஏற்படுமென்று பஞ்சாபில் பத்திரிகைகள் எச்சரித்தன. ஆனால் கனடா பத்திரிகைகளிடம் வேறு கண்ணோட்டம் இருந்தது. ‘அதிகரித்து வரும் கிழக்குப் படையெடுப்பு’ என்று சில பத்திரி கைகள் மக்களை எச்சரித்தன. இதற்கிடையே உச்சநீதிமன்றத்தின் நவம்பர் மாதத் தீர்ப்புக்குக் காரணமான சட்ட ஓட்டைகளை அரசு அடைத்தது. மோதலுக்கான சூழல் தெளிவாகி விட்டது.

கப்பல் வான்கூவரை அடைந்த பின் துறை முகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை; கப்பலைச் சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பயணி களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்காக உசேன் ரஹிம், சோகன்லால் பதக், பல்வந்த் சிங் ஆகியோர் தலைமையில் ‘கரைக்குழு’ அமைக்கப்பட்டது; நிதி திரட்டப்பட்டது; கண்டனக் கூட்டங்கள் நடத்தப் பட்டன. இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகப் புரட்சி வெடிக்குமென்று எச்சரிக்கை விடப்பட்டது. அமெரிக்காவில் பகவான்சிங், பரக்கத்துல்லா, ராம் சந்தரா, சோகன் சிங் பக்கானா ஆகியோர் தலை மையில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது; புரட்சிக்குத் தயாராகும்படி மக்கள் அறிவுறுத்தப் பட்டனர்.

விரைவில் கனடாவில் இருந்து ‘கோமா கட்டா மாரூ’ வெளியேற்றப்பட்டது. மீண்டும் யோக்கோஹோமா அடையும்முன் முதல் உலகப் போர் ஆரம்பமாகி விட்டது. வழியில் எங்கும் பயணிகளை இறங்க அனுமதிக்கக் கூடாது என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது; இடையில் கப்பல் ஏறிய பயணிகள், அவர்கள் ஏறிய இடங்களில் கூட இறங்க அனுமதிக்கப்படவில்லை. கல்கத்தாவுக்கு வர கப்பலுக்கு உத்தரவிடப்பட்டது. திரும்பும் வழியில் கப்பல் நின்ற இடங்கள் அனைத்திலும் இந்திய மக்களின் கோபமும், ஆத்திரமும் அதிகரித்தன; பிரிட்டிஷ் எதிர்ப்பு திரளும் மையப்புள்ளியாக ‘கோமாட்டா மாரூ’ மாறியது. கல்கத்தா அருகே பட்ஜ் பட்ஜ் என்ற இடத்தில் இறங்கிய பயணிகள் கோபத்திலும், எரிச்சலிலும் இருந்தனர். அங்கிருந்த அதிகாரிகளின் எரிச்சலூட்டும் செயல்களால் ஆத்திர மடைந்து காவல்துறையினரை எதிர்த்தனர். இதனால் மோதல் ஏற்பட்டு பதினெட்டு பயணிகள் கொல்லப் பட்டனர்; 202 பேர் கைது செய்யப்பட்டனர். சிலர் தப்பி ஓடிவிட்டனர்.

*

கதார் புரட்சி ஏற்படுவதற்கு மூன்றாவது காரணம் முதல் உலகப்போர். கதார் கிளம்புவதற்கான முக்கிய காரணமும் இதுவே. இந்த வாய்ப்பிற்காகத்தான் இயக்கத்தினர் காத்துக்கொண்டிருந்தனர்; வாய்ப்பை விடக்கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டனர். தயா ராக இல்லை என்பது உண்மை; ஆனால் வாய்ப்பை எப்படி விட முடியும்? கதார் இயக்கத்தின் முன்னணி செயல்வீரர் கூடினர்; ஒன்றும் செய்யாமல் இருப் பதை விட சாவது மேல் என்றும், வாய்ப்பை விடக் கூடாதென்றும் முடிவு செய்யப்பட்டது; ஆயுதம் இல்லையென்ற குறையைச் சரிசெய்ய இந்தியாவிற்குச் சென்று இந்திய ராணுவ வீரர்களின் உதவியை நாடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. கதார் இயக்கத்தின் அய்லாம்-இ-ஜங் (போர் அறிவிப்பு) வெளியிடப்பட்டுப் பரவலாக வினியோகிக்கப் பட்டது. முகம்மது பரக்கத்துல்லா, ராம் சந்தரா, பகவான் சிங் ஆகியோர் கூட்டங்களைக் கூட்டி மக்களைச் சந்தித்தனர்; இந்தியாவிற்குத் திரும்பிச் சென்று ஆயுதப் புரட்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு இந்தியரைக் கேட்டனர். ஜப்பான், பிலிப்பைன்ஸ், சீனா, ஹாங்காங், மலாய் நாடுகள், சிங்கப்பூர், பர்மா ஆகிய நாடுகளுக்குக் கதார் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் சென்றனர்; அங்கிருந்த இந்தியரை இந்தியா திரும்பி புரட்சிக்கு உதவி செய்ய வலியுறுத்தினர். பின்னர், சதி வழக்கில் தூக்கிலிடப்பட்ட கர்த்தார்சிங் சாராபா மற்றும் ரகுபர் தயாள் குப்தா போன்ற தீவிர கதார் செயல் வீரர்கள் உடனடியாக இந்தியா திரும்பினர்.

*

இதற்கிடையே கதார் இயக்கத்தின் திட்டம் அரசுக்குத் தெரியவந்தது. (கதார் திட்டம் ரகசிய மாக வைக்கப்படவில்லை.) ‘இந்தியா நுழைவுச் சட்டம்’ (இன்ங்கிரஸ் இன்ட்டு இந்தியா ஆர்டினன்ஸ்) இயற்றிவருவோருக்காகக் காத்திருந்தது. இந்தியா வந்த அனைவரையும் கூர்மையாகப் பரிசீலித்தது: ‘பாதகமில்லாதவர்’ ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப் பட்டனர்; ‘அதிக ஆபத்தில்லாதவர்’ தங்கள் ஊர் களைவிட்டு வெளியே செல்லக்கூடாதென்று உத்தர விடப்பட்டனர்; ‘ஆபத்தானவர்’ கைது செய்யப் பட்டனர். இருந்தாலும், ‘ஆபத்தானவர்’ சிலர் சிக்காமல் பஞ்சாப் அடைந்து புரட்சிக்கு ஏற்பாடு செய்தனர். இந்தியாவிற்குத் திரும்பிய ஏறத்தாழ 8000 பேரில், 5000 பேர் தடையின்றித் தங்கள் சொந்த ஊர் சென்றனர்; ஏறத்தாழ 1500 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1915 பிப்ரவரி வரை 189 பேர் கைது செய்யப் பட்டனர்; 704 பேரின் நடமாட்டம் கட்டுப்படுத்தப் பட்டது. கொழும்பு, தென்னிந்தியா வழியாக வந்த பலர் அரசிடம் சிக்கிக் கொள்ளாமல் பஞ்சாப் சேர்ந்தனர்.

ஆனால், கதார் இயக்கத்தினர் எதிர்பார்த்தது போல் 1914இல் பஞ்சாப் இல்லை. கதார் இயக்கத்தின் சாகசப் புரட்சியில் கலந்து கொள்ளும் மனநிலையில் பஞ்சாபியர் இல்லை. புரட்சியாளர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் முயன்றனர்: கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்தனர்; திருவிழாக்களில் கூடிய மக்களிடையே உரையாற்றினர். ஆனால் அகாலி கால்சா திவானின் தலைமை பிரிட்டிஷ் அரசுக்குத் தன்னுடைய விசுவாசத்தை அறிவித்தது; கதார் இயக்கத்தினரை ‘வழி தவறிய குற்றவாளிகள்’ என்றது; அவர்களைப் பிடிக்க அரசுக்கு உதவி செய்தது.

மக்களின் மனநிலையில் விரக்தியும், ஏமாற்றமும் அடைந்த கதார் இயக்கத்தினர், ராணுவத்தின் மீது கவனத்தைத் திருப்பினர்; ராணுவத்தில் கிளர்ச்சியைத் தூண்ட 1914 பிப்ரவரி மாதம் பல அப்பாவித் தனமான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் நெறிப்படுத்தும் தலைமையும், மையக்கட்டுப்பாடும் இல்லாததால் எல்லா முயற்சிகளும் தோற்றுப்போயின.

பதற்றத்தில் இருந்த கதார் இயக்கத்தினர் தலைவர் ஒருவரைத் தேடினர்; வங்காளப் புரட்சி யாளர்களைத் தொடர்பு கொண்டனர். சச்சிதர நாத் சன்யால், விஷ்ணு கணேஷ் பிங்லே ஆகியோர் முயற்சியால் ராஷ் பிகாரி கோஷ் கதாரின் தலைமை யேற்க வங்காளம் வந்தார். வைஸ்ராய் ஹார்டிங்கை 1015 ஜனவரி மாதம் தாக்கிய நிகழ்வால் கோஷ் ஏற்கெனவே புகழ் பெற்றிருந்தார்.

அமைப்பு போன்ற ஏதோ ஒன்றை கோஷ் நிறுவினார். வடமேற்கில் பானு தொடங்கி, உத்தர பிரதேசத்தில் பைசாபாத், லக்னோ வரை பல்வேறு தளங்களில் இருந்த ராணுவ மையங்களைத் தொடர்பு கொள்ள ஆட்களை அனுப்பினார். 11 பிப்ரவரி 1911க்குள் பதில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டார். தூதுவர்கள் நம்பிக்கை தரும் தகவல்களைக் கொண்டு வந்ததால் புரட்சிக்கான நாள் குறிக்கப் பட்டது; முதலில் பிப்ரவரி 21 என்றும், பின்னர் பிப்ரவரி 19 என்றும் முடிவானது. ஆனால் அரசின் புலன் ஆய்வுத்துறை இயக்கத்திற்குள் வெற்றிகரமாக நுழைந்துவிட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டன. கோஷ் தப்பி விட்டாலும் பெரும்பாலான தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இயக்கத்தின் செயல்பாடு முழு வதும் நசுக்கப்பட்டது. ஆனால் அரசு இத்துடன் நிற்கவில்லை. தேசிய இயக்கத்தின் மீது இதுவரை இல்லாத அளவு ஒடுக்குமுறை கையாளப்பட்டது. பஞ்சாபிலும், மாண்டேலேயிலும் சதிவழக்குகள் நடத்தப்பட்டன; நாற்பத்தைந்து பேருக்கு மரண தண்டனை தீர்ப்பிடப்பட்டது. 200 பேருக்கு நீண்ட காலச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. பஞ்சாப் தேசிய இயக்கத்தின் ஒரு தலைமுறை அரசியல் தலைமை வெட்டப்பட்டது.

பெர்லினில் இருந்து செயல்பட்டுக் கொண் டிருந்த சில இந்தியப் புரட்சியாளர்கள் அமெரிக் காவில் இருந்த கதார் தலைவர் ராம் சந்தராவுடன் தொடர்பில் இருந்தனர். பெர்லின் தொடர்பு மூலம் வெளிநாடுகளில் இருந்த இந்தியப் படைகளில் கிளர்ச்சியொன்றைத் தொடங்க ராம் சந்தரா முயன்றார். ஆப்கானிஸ்தான் அமீரின் உதவியைப் பெற்று, காபூலில் இடைக்கால அரசு ஒன்றை அமைக்க ராஜா மகேந்தரபிரதாப்பும், பரக்கத்துல்லாவும் முயன்றனர். ஆனால் இவை குறிப்பிடத்தக்க வெற்றி பெறவில்லை. வன்முறையால் பிரிட்டிஷ் ஆட்சியை விரட்ட எடுக்கப்படும் முயற்சிகள் எல்லாம் தோற்றுப் போகும் என்ற உணர்வு ஏற்படலாயிற்று.

*

எனவே கதாரிகள் வீணாகப் போராடினர் என்று முடிவுரை எழுதலாமா? அவர்களால் பிரிட்டிஷ் ஆட்சியை விரட்ட முடியவில்லை என்பதால் கதார் இயக்கம் தோற்றுப் போனதா? இத்தகைய முடிவுகள் முற்றிலும் சரியல்ல. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதை அளவுகோலாக வைத்து ஒரு அரசியல் இயக்கத்தின் வெற்றி, தோல்வியை எப்பொழுதும் முடிவு செய்ய முடியாது; கூடாது. இந்த அளவுகோலைக் கொண்டு பார்த்தால் அனைத்துப் பெரிய தேசியப் போராட்டங்களும், 1920-1922, 1930-1934, 1942 போராட்டங்களும் - தோல்விதான்; அவை இந்திய விடுதலையில் முடிய வில்லை. ஆனால் தேசிய உணர்வு ஆழப்படுதல், போராட்ட யுக்திகளையும் முறைகளையும் வடி வமைப்பது, அவற்றைக் களத்தில் பரிசோதிப்பது, எதிர்ப்பை வளர்ப்பது, சமயச்சார்பின்மை, மக்களாட்சிக் கோட்பாடு, சமத்துவம் ஆகிய வற்றுக்குப் பாரம்பரியத்தை உருவாக்குவது ஆகிய வற்றில் தங்களுடைய பங்களிப்பை கதார் இயக்கத் தினர் தந்தனர்.

எதிர்மறையாகத் தோன்றினாலும், கருத்தியல் தளத்தில்தான் கதார் இயக்கம் பெரிய வெற்றி கண்டது. காலனித்துவம் குறித்த விமர்சனம்தான் தேசிய இயக்கத்திற்கு மிதவாதிகள் தந்த நிலைத்த, பெரிய பங்களிப்பு. சிக்கலான இந்த விமர்சனத்தை மிக எளிய, ஆனால் வலுவான நடையில், பெரும் பாலும் படிப்பறிவு இல்லாத ஏழைக் குடியேற்றத் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் கொண்டு சென்றது ‘த கதார்’ பத்திரிகை. ஒரு முழு தலை முறைக்கு அரசியல் அறிவையும், அரசியல் உணர் வையும் தந்தது ‘த கதார்’. கதார் இயக்கத்தின் பெரும்பான்மையான தலைவர்களும், பங்கேற் பாளரும் சீக்கியர்கள். இருந்தாலும் ‘த கதார்’, ‘கதார் தி கூன்ஜ்’ ஆகிய வெளியீடுகள் மூலம் உரு வாக்கப்பட்டு, பரவலாக்கப்பட்ட கருத்தியலில் சமயச் சார்பின்மை இருந்தது. ‘சமய உணர்வு வலு வான புரட்சியாளரின் தகுதிக்கு ஏற்புடையது அல்ல; சிறுமையானது; குறுகியது’ என்று கருதப்பட்டது.

 கதாரின் பரந்த மனப்பான்மை வெற்றுப் பேச்சல்ல என்பதைப் பல்வேறு சமயங்கள், பகுதிகள் இயக்கத் திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டது நிரூபித்தது. லாலா ஹர்தயாளும், ராம் சந்தராவும் இந்துக்கள்; பரக்கத்துல்லா இஸ்லாமியர்; ராஷ் பிகாரி கோஷ் வங்காள இந்து பஞ்சாபியர் மத்தியில் சமயச் சார்பற்ற உணர்வை ஏற்படுத்த கதார் இயக்கத்தினர் முயன்றது இவற்றையெல்லாம்விட வியப்பரிய சாதனை. எடுத்துக்காட்டாக, ‘துர்க்கா ஷாகி’ என்ற சொற் றொடர் பொருள் கொள்ளப்பட்ட விதம். ‘துர்க்கா ஷாகி’ என்றால் ‘துருக்கிய ஆட்சி’ என்று பொருள். ஆனால் பஞ்சாபி மொழியில் ‘அடக்குமுறை’ ‘சர் வாதிகாரப் போக்கு’ என்று பொருள் கொள்ளப் பட்டது. இதை மாற்றி, ‘துருக்கி’ என்றால் ‘இஸ்லாமியர்’, நாட்டின் விடுதலைக்காகக் கடுமை யாகப் போராடிய நம் சகோதரர் என்று விளக்கப் பட்டது. மேலும், சீக்கியரின் சமய வணக்கம் ‘சத் சிரி அகால்’ தவிர்க்கப்பட்டது. கதார் இயக்கத்தின் முழக்கமாக ‘வந்தே மாதரம்’ வலியுறுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. கதாரிகள் சமயத்திற்கும் புதிய பொருள் விளக்கம் தந்தனர்: “நீண்ட முடி, கிர்பான் (வாள்) ஆகிய வெளிப்புற அடையாளங் களைக் கடைப்பிடிப்பது மட்டுமே சமயம் அல்ல; அனைத்துச் சமயங்களும் வலியுறுத்தும் நல்ல நடத்தைக்கு உண்மையாக இருப்பதே சமயம்”.

கதார் இயக்கத்தின் சொல்லாடல்களில் தெளி வின்மைகளும் இருந்தன. கிலாபத்தை ‘இஸ்லாமி யரின் சமய இயக்கம்’ என்று ஹர் தயாள் வர்ணித்தார்; சீக்கியர் ஆயுதம் வைத்துக்கொள்ளக் கூடாதென்ற ஆங்கிலேயரின் கொள்கை விமர்சிக்கப்பட்டது. ஆனால் இவையெல்லாம் கதார் இயக்கமும், அதன் தலைவர்களும் கொண்ட சமயச் சார்பற்ற தேசிய வாதத்தின் ஆரம்பக் கட்டங்கள். மேலும் சமய நலனை கதார் இயக்கத்தினர் கையில் எடுத்ததைப் பண்பாட்டுப் போராகத்தான் பார்க்க வேண்டும்; இது காலனியத்திற்கு எதிரான பண்பாட்டுப் போர்; வகுப்புவாதம் அல்ல; வகுப்புவாதக் கருத் தியலின் தாக்கமும் அல்ல.

குறுகிய, பிராந்திய உணர்வுகளும் கதாரி களிடம் இல்லை. லோக்மான்ய திலகர், அரவிந்த் கோஷ், குதி ராம் போஸ், கன்யாலால் தத் ஆகிய அனைவரும் கதாரின் நாயகராகக் கருதப்பட்டனர். நிறைவடையாத கதார் புரட்சியின் தலைவராக ராஷ் பிகாரி கோஷ் வேண்டி அழைக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டார். சீக்கியர், பஞ்சாபி யரின் பெருமையை மட்டுமே வலியுறுத்தாமல், 1857இல் பஞ்சாபியர் ஆங்கிலேயர் ஆட்சிக்கு ஆதரவாக இருந்தும் கடுமையாக விமர்சிக்கப் பட்டது. அதே போல் ராணுவத்தில் ஏராளமான சீக்கியர்கள் இருந்தது அவர்களுடைய ‘போர்’ பாரம்பரியமாகப் போற்றப்படவில்லை; மாறாக, அவமானமாகக் கருதப்பட்டது; சீக்கியப் படை வீரர்கள் கிளர்ச்சி செய்யவேண்டுமென்று வலி யுறுத்தப்பட்டது. அன்னியருக்கு ஆதரவாக 1857 இல் செயல்பட்டதால் தாய்நாட்டிற்குப் பஞ்சாப் சீக்கியர் துரோகம் செய்து விட்டனர் என்ற கருத்தை கதார் இயக்கத்தினர் ஏற்படுத்தினர். இதற்குப் பிராய சித்தம் செய்வதற்காக, ‘பாரத மாதா’ மானம் காக்கப் போரிட வேண்டும் என்று அறிவுறுத்தினர். பின்னர் பெரும் விவசாயத் தலைவரும், மற்றும் கம்யூனிஸ்ட் தலைவருமாக மாறிய சோகன்சிங் பாக்னா இந்தச் சமயம் கடந்த பார்வையைச் சுட்டிக்காட்டினார்; ‘நாம் சீக்கியர் அல்லர், பஞ்சாபியர் அல்லர். நாட்டுப் பற்றுதான் நம் சமயம்”.

கதார் கருத்தியலில் இருந்த மற்றொரு குறிப் பிடத்தக்க அம்சம் மக்களாட்சி மற்றும் சமத்துவ உள்ளடக்கம். சுதந்திர இந்தியக் குடியரசை நிறுவுவது தான் குறிக்கோள் என்பதை கதார் இயக்கத்தினர் தெளிவாக அறிவித்தனர். மேலும் அனார்கிச, சிண்டிகலிச இயக்கங்களின் தாக்கமும், சோசலிசக் கோட்பாடுகளின் பாதிப்பும் இருந்ததால், இயக்கத் திற்கு சமத்துவக் கண்ணோட்டத்தை ஹர்தயாள் தந்தார். ஒருவேளை இவற்றால்தான் பல கதார் இயக்கத்தினர் 1920, 1930 களில் விவசாயத் தலைவர் களாகவும், கம்யூனிஸ்டுகளாகவும் மாறி இருக்க வேண்டும்.

கதார் புரட்சியாளருக்கு சர்வதேசக் கண் ணோட்டத்தைக் கொடுத்தது ஹர்தயாளின் மற் றொரு முக்கிய பங்களிப்பு. அவருடைய உரைகள், கட்டுரைகள் முழுவதிலும் அயர்லாந்து, மெக்சி கோ மற்றும் ரஷ்ய புரட்சியாளர்களைப் பற்றிய குறிப்புகள் இருந்தன. எடுத்துக்காட்டாக, மெக்சி கோ புரட்சியாளரை ‘மெக்சிகோ கதார் இயக்கத் தினர்’ என்று குறிப்பிட்டார். இவ்வாறு சமயச்சார் பின்மை, சமத்துவம், மக்களாட்சிக் கோட்பாடுகள், சர்வாதிகாரமற்ற சர்வதேசப் பார்வை ஆகியவை கதாரிகளை அடையாளப்படுத்தின.

ஆனால் கதார் இயக்கத்தில் குறைபாடுகளும் இருந்தன. இயக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவையான தயாரிப்பின் அளவையும், முறையையும் சரியாகக் கணிக்கவில்லை. ஆயுதப்புரட்சியை முயற்சி செய்யும் முன்னர் தேவையான அமைப்பு, கருத்தியல், முறை, யுக்தி மற்றும் நிதி சார்ந்த திட்டமிடுதலில் பல குறைகள் இருந்தன. உலகப்போர் திடீரெனத் தொடங்கியதாலும், ‘கோமாகட்டா மாரூ’ நிகழ்வால் ஏற்பட்ட பதற்றத்தாலும் தூண்டப்பட்ட கதார் இயக்கத்தினர், தங்களுடைய படையின் நிலையை உணராமலேயே புரட்சியை ஆரம்பித்து விட்டனர். இன ரீதியாக நடத்தப்பட்டதால் இன உணர்வு கிளர்ந்தது; ஆங்கிலேயருக்கு எதிராக எழுந்த சில ஆயிரம் மக்களைத் திரட்டினர். ஆனால் இதற்கும், பல லட்ச விவசாயிகளையும், படைவீரர்களையும் ஒன்றுதிரட்டும் பெரும் பணிக்கும் பல வேறுபாடுகள் உண்டு என்பதைக் கதார் இயக்கத்தினர் உணரத் தவறிவிட்டனர். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் அடித்தளமாக இருந்த அவர்களுடைய ராணுவ பலத்தையும், கட்டமைப்பின் வலுவையும், கருத்தியல் தாக்கத்தையும் குறைத்து மதிப்பிட்டு விட்டனர்; ஆட்டம் கண்டுவிட்ட அன்னிய ஆட்சியை வீழ்த்து வதற்குத் தேவை புரட்சிக்கான அழைப்பு மட்டும் தான் என்று கற்பனை செய்துவிட்டனர்.

இயக்கத்தின் பல்வேறு அம்சங்களையும் ஒன்றாகச் சேர்க்கும் வலுவான, நிரந்தர தலைமையை உரு வாக்க இயக்கம் தவறிவிட்டது. ஹர்தயாள் பிர சாரம் செய்பவர்; கருத்தியல் ரீதியில் செயல்படுபவர்; மேலும் முக்கியமான காலகட்டத்தில் அமெரிக் காவில் இருந்து வெளியேறியதால் அவருடைய தோழர்கள் நிலைகுலைந்து விட்டனர்.

கதார் இயக்கத்திற்கு அமைப்பு இல்லாமல் போனது அதன் மற்றொரு முக்கிய குறைபாடு. ஆர்வமான கிளர்ச்சியாளர்களால் இயக்கம் நடத்தப் பட்டது; ஆனால் வலுவான அமைப்பு இல்லை.

ஒரு இயக்கத்திற்குத் தேவையான புரிதல், தலைமை, அமைப்பு ஆகியவை இல்லாமற் போன தால் விலைமதிப்பற்ற பெரும் மனித வளம் வீணாகி விட்டது. நாற்பது கதாரிகளுக்குத் தூக்குத் தண்டனை தீர்ப்பிடப்பட்டது; இருநூறுக்கு மேற்பட்டோருக்கு நீண்ட காலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது; சமயச் சார்பற்ற தேசியவாதத்தின் ஒரு தலைமுறைக் கான தலைமை அழிந்துபோனது. இவர்களெல்லாம் அரசியல் துடிப்புடன் தொடர்ந்து இருந்திருந்தால், அடுத்து வந்த ஆண்டுகளில் பஞ்சாபின் நிலை வேறு மாதிரி அமைந்திருக்கும். பின்வந்த ஆண்டுகளில் தலை தூக்கிய வகுப்புவாத வளர்ச்சிக்கு எதிரான பெரும் விசையாக கதார் இயக்கத்தினரின் சமயச்சார்பின்மை இருந்திருக்கும். இது வெறும் உணர்ச்சி, கற்பனை அல்ல: 1920, 1930களின் பிற்பகுதியில் பஞ்சாபின் சமயச்சார்பற்ற, தேசிய விவசாய இயக்கங்கள் எழும்புவதற்கு எஞ்சியிருந்த கதாரிகள்தான் அடித்தளம் அமைத்தனர்.

துணை நின்ற நூல்கள்

*             A.C. Bose Indian Revolutionaries Abroad: 1905 - 1922. Patna: Bharathi Bhavan, 1971.

*             Bipan Chandra. India’s Struggle for Independence : 1857 - 1947. New Delhi: Penguin Books, 1989.

*             Harish K. Puri. The Ghadar Party: A Study in Militant Nationalism. Amritsar: Guru Nanak Dev University, 1975.

*             Khushwant Singh and Satindra Singh. Ghadar - 1915: India’s first Armed Revolution, New Delhi: R& K Publishing House, 1966.

*             Sohan Singh Joshi. Baba Sohan Singh Bhakna: Life of the Founder of the Ghadar Party. New Delhi: People’s Publishing House, 1970.