“இந்தியக்கலை வரலாறு” ஒரு கலாசாரப் பெட்டகம், கலைகளின் எழுச்சிதனைக் காலத்தோடு தரும் நூல் ஆகும். கலை, கலை சார்ந்த செய்திகள் வரலாற்று மீட்டெடுப்புப் பெட்டகங்களாய் என்றுமே நமக்குக் காட்சியளிக்கின்றன. இந்திய நாட்டின் மொழி, கலைகள், கட்டுமானங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், கோயில்கள், வரலாற்றுச் செப்பேடுகள் குறித்த தொன்மையான சமுதாய மரபினை நமக்குக் காட்டும் காலக் கண்ணாடியே இந்நூல்.

“இந்தியக்கலை வரலாறு” நூலினை ஆக்கி யோர் பேராசிரியர்கள் திரு.சாலமன் பெர்னாட்ஷாவும், திரு.முத்துகுமரன் அவர்களும் ஆவர். சாலமன் அவர்கள் வரலாற்றுத் துறையைச் சார்ந்தவர்; முத்து குமரன் கணிதத் துறையைச் சார்ந்தவர்.

நூல் விவரிக்கும்-நம் முன் விரித்து வைக்கும் செய்திகள்: 6,30,000 கிராமங்கள் உள்ள அகன்ற இந்தியாவில், தில்லி, ஆக்ரா, பதேபூர் சிக்ரி, அஜந்தா, எல்லோரா, நாளந்தா, ஜான்சி, சாஞ்சி, வைசாலி, கஜீரகோ, பூரி, கோனார்க், சித்தன்னவாசல், ஹம்பி, கழுகுமலை, ராமேஸ்வரம், திருமயம், தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் போன்ற இடங்களுக்கு நூல் ஆசிரியர்கள் இருவரும் சுற்றுலா, பேருலா சென்ற தாக்கமே இந்நூல் உருவாக முதற் காரணம் ஆகும்.

சமணர் காலத்திய கல்வெட்டுகளைப் பற்றியும் மதுரைக்கு அருகிலுள்ள ஒந்திமலை, முத்துப்பட்டி, நாகமலை அருகில் உள்ளவை சிதைக்கப்படுவது பற்றியும், நூல் வேதனையுடன் கூறுகிறது. சித்தன்ன வாசலைப் பற்றிச் சிறப்புறக் கூறுகிறது.

1. வேட்டை, வேளாண்மை, வணிகம் 2. நதியோர நாகரிகம், 3. ஆரியரும் மரக்கட்டுமானங்களும்,

4. அசோக மன்னன் காலம், 5. ஸ்தூபிகள், 6. குடை வரை மாண்புகள், 7. கலைகளின் சங்கமம், 8. செங்கல் கட்டுமானம்/வடிவங்கள், 9. தமிழ்நாடு, 10. ஓவியங்கள்/ கலைகள்/சிற்பங்கள்/ஆலயங்கள், 11. வரலாற்றின் தொடர்ச்சி ஆகிய பகுப்புகளில் நூலினைச் சுருக்கமாகக் காண்போம்.

1. வேட்டை:- மிருகங்கள், மனிதர்கள், பறவைகள் அன்றி ஜீவராசிகள் யாவிற்குமே உணவுக்காக வேட்டை அவசியம். கற்கால மனிதன் ஆயுதம் பயன்படுத்தியதிற்கு முன் கல்லைப் பயன்படுத்தி வேட்டை ஆடினான். இந்தியாவில் போபால் நகரின் 100 மைல் சுற்றளவில் காணப்பெறும் குகைச்சுவர் ஓவியங்கள் இதனினை உறுதி செய்கின்றன (பக் 6). இவை, 5500 ஆண்டுகள் முற்பட்டவை ஆகும். வேட்டைக் காட்சிகள் சிவப்பு நிற வண்ணங்களில் தீட்டப்பட்டுள்ளன. இரத்தத்தின் நிறம் சிவப்பு அன்றோ!

பின், பரிணாம வளர்ச்சி காரணமாக வேளாண் சமூகம் தலையெடுக்கிறது. 1970-இல் மெஹ்கார்-பலுசிஸ்தானில் நடந்த ஆராய்ச்சிகள் கி.மு.7000-இல் பார்லி, கோதுமை சாகுபடியைச் சுட்டுகின்றன (பக் .7). கி.மு.3500-இல் சக்கரத்தினைப் பயன்படுத்திப் பானைகள் தயாரிக்கப்பட்டனவாம். வணிகம் மெள்ள மெள்ள வளர ஆரம்பித்தது. சிந்து நதி தீர ஆராய்ச்சி இதனைத் தெளிவுற மெய்ப்பிக்கிறது.

2. ஹரப்பா சிந்து நதி நாகரிகம் மிக உயர்வான கலாசாரத் தொன்மையை நம் முன் காட்சிக்கு வைக்கிறது. 1856-இல் ஆங்கிலேய ரயில் கம்பெனி மூல்தானில் இருந்து லாகூர் ரயில் பாதை போடும் போது கிடைத்த செங்கற்கள் நமக்குச் செப்பிய கதைகள் ஆயிரம் ஆயிரம். 3கல் சுற்றளவில் ஹரப்பா இருந்ததை அலெக்ஸாண்டர் கன்னிங் உறுதி செய்ய 400 மைல் தொலைவில் மொகஞ்சதோரோ ஜான் மார்ஷலால் ஆய்விற்கு உட்பட்டது. கி.மு.2300-1750-இல் ஹரப்பா நாகரிக இருத்தலை இஃது உறுதி செய்தது, ஆயிரம் ஆண்டுகள் நீண்டதாக குஜராத்தில் இருந்து உ.பி. வரை பரவி இருந்தது (பக்.9).

3. ரிக் வேதம் ஆரியர்களின் தனித்த குடியிருப்பு களையும், மரக்கட்டுமானங்களையும் விரிப்பாக விரிக்கிறது. மரச்சட்டங்கள், ஓடுகள் ஆகியவற்றால் ஆன கூரைகளால் ஆரியக்குடில்கள் அழகுற அமைக்கப் பட்டன (பக்.18). கி.மு.6-ஆம் நூற்றாண்டில் 16 பெரிய அரசுகளும், சில குடியரசுகளும் இருந்தன வாம். பேரரசர் பிம்பிசாரர் (மகத மன்னர்) இவர் காலக் கட்டுமான விற்பன்னர் மகா கோவிந்தா ஆவார். (பக்.20)

4. அசோகன் என்றொரு அற்புதம்: மகதத்தின் மவுரியப் பேரரசின் 3-ஆம் பேரரசன் அசோகன். போர் விற்பன்னன். கலிங்கப்போரில் மனத்தெளிவு பெற்றுப் புத்தமதத்தைத் தழுவினான். கி.மு.255இல் புத்தமத அரசு (பக்.22) நிலவியது. இவன் காலத்தில் செம்மையான செய்திகளாய் நூல் கூறுவது, இவனின் அ) பாறைத் தூண்கள்/ஆணைகள் ஆ) ஸ்தூபிகள் இ) சமய சிற்பங்கள் ஈ) அரண்மனைக் கட்டுமானங்கள் உ) குடை வரைக்கோயில்கள்/தங்குமிடங்கள், கிர்னார் சார நாத்-தமக் ஸ்தூபி சில (பக்.24-25) மொத்தத்தில் கல் ஊடகக்காலமெனின் மிகையல்ல. அசோக சின்னம் நம் அரசின் சின்னம் ஆக உள்ளது யாவரும் அறியக் கிடப்பதே. பல மதங்களின் விவாதம் நடந்த காலமே அசோகரின் பெரிய மனதை நாம் அறிய வைக்கிறது.

5. ஸ்தூபிகள் 6. குடவரைக்கோயில்கள் -புத்தகயா விற்கு அண்மையில் ஜைனமத அஜிவகப்பிரிவு குகைக் கோயில்கள் அசோகன்/பேரன் தசரதன் காலத்தவை யாகும் (பக்32). பராபர் மலை அடுத்த ஸோமாஸ்ரிஷி/ சுதாமா கட்டுமானங்கள் வியப்பானவை(பக்-33). பெருங்கற்கள் கொண்டு உருவாக்கப்பட்ட புதை குழி ஈமச் சின்னங்கள், தொடர்ச்சியான ஸ்தூபி கட்டுமானங்கள் பல பார்ஹுத், புத்தகயா, சாஞ்சி நகர்களில் அசோகனின் பெருமையைக் கூறுவன.. சுங்கர், சாதவாகணர் (ஆந்திரா) கட்டுமானங்கள் குறிப்பிடத்தக்கவை. சாதவாகணர் ஆட்சி கி.மு. 200 லிருந்து கி.பி.150 என நம்பப்படுகின்றது. பார்ஹூத் ஸ்தூபி கல்வேலி கொல்கத்தா தேசிய அருங்காட்சி யகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது (பக்.37). இவை சுங்கர் அரச பரம்பரையின் கைவண்ணங்கள் ஆகும்.

குடவரை கோயில்கள் / விஹாரைகள்/ சைத்தி யங்கள் என விளக்கலாம். கோயில்கள் அன்றி பிற விஹாரைகள் என்பன பிக்குகள் உண்டு உறங்க இடங்கள், மேலும் சைத்தியங்கள் என்பன தொழ ஏற்பட்ட இடங்கள். ஹீனயான, மஹாயான குடை வரைக்கட்டுமானங்களின் மேன்மை சிறப்புறக் கூறப்படுகிறது. சமணர்களும் குடைவரைக்கட்டு மானங்களில் சிறந்தே விளங்கினர். ஒரிஸ்ஸா மாநிலத்தில் கட்டக் அருகே கந்தகிரி, உதயகிரி, 35 சமணவிஹாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன வாம். புத்தரின் பல் ஒன்றும் தந்தகிரி என்னும் இடத்தில் வழிபாட்டுக்குப் பதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தந்தகிரி என்னும் ஊர் எவ்விடம் உள்ளது என ஊர்ஜிதம் ஆகவில்லை. உதயகிரி அருகே இருந் திருக்கலாம் என நம்பலாம் என்று ஆசிரியர்கள் கூறிச்செல்கின்றனர்.

பொதுவான கட்டுமானச் சிறப்புகளையும், குடைவரைக்கோயில்கள், விஹாரைகள் ஆகியவற்றைப் பற்றிக் கூறும் ஆசிரியர்கள் பலப்பல இந்திய ஊர் களை விஸ்தாரமாக வருணிக்கின்றனர். கட்டுரைகள் போலன்றி வரலாறு போலவே எழுதப்பட்டுள்ளது, இந்த பிரமாண்டமான நூல். ஆகவே நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது, இந்த வரலாற்றுக் காவியம்.

மில்டனின் கூற்றுப்போல விரிந்து கிடக்கும் கடல் முன், மணல் துகளைக் கையில் எடுத்துப் பார்ப்பது எப்படிச் சிறிய விஷயமோ அது போல் நூலின் கடல் போன்ற தன்மைகளைச் சில வரிகளில் அறிமுகம் ஆக்கிட இயலாது என்ற உண்மை நிலையை நமக்கு உணர்த்துகிறது!

தமிழ்நாட்டின் கோயில்கள், ராமேஸ்வரப் பெருமைகள், ஒரிஸ்ஸாவின் சமணக் குடைவரைகள், அஜந்தா ஓவியங்கள், எல்லோராவின் எழில்கள், சாஞ்சியின் மகாஸ்தூபிகள், ஆந்திராவின் அமராவதி அழகு, நாகார்ஜுன கொண்டாவின் தூண்கள், ஸ்தூபிகள், மாதிரிகள், செங்கற் கட்டுமான சிறப்புகள், என்று வரலாற்று மாட்சிகளை விரிவாக 536 பக்கங் களில் விரித்து வைக்கின்றனர்.

‘இந்தியக்கலை வரலாறு’ நம்மை, முகலாயர் காலத்திற்கும், மவுரியர் காலத்திற்கும், மஹாயான, ஹீனயான வரலாற்றுள்ளும், அசோகனை அறியவும், ராஜஸ்தானைப் புரியவும், குஜராத்தினைத் தெளியவும், ஆந்திராவை அசை போடவும், லோனாவாலா, நாசிக், மும்பாய், மராட்டியத்தினை மனதில் கொள்ளவும், காஞ்சி, நாளந்தா, லிங்கேஸ்வரம், பூரி, பூனா, காசி பற்றி விளக்கமுறவும், ஜலகண்டேஸ்வரின், பெருமை களை அறியவும், ராமேஸ்வரம் உணரவும் செய் வதுடன், செப்புத் திருமேனிகள், ஸ்தூபிகள், சிற்பங்கள், ஓவியங்களைப் பற்றியும் அவற்றின் தொன்மை மூலம் இந்திய வரலாற்று விழுமியங்களை வாசகர்களுக்கு விரித்துரைக்கிறது.

***

இந்தியக் கலை வரலாறு

Dr.M.சாலமன் பெர்னாட்ஷா

P.முத்துக்குமரன்

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.350.00

Pin It