‘இனவியல்: ஆரியர்-திராவிடர்--தமிழர்' கட்டுரைக்கு எதிர்வினையாக ‘புராணங்கள் வரலாறாகுமா?’ என்ற கேள்வியை புலவர் க.முருகேசன் எழுப்பியிருந்தார் (தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம், மே1--15,2011). புரா ணங்கள் உறுதியாக வரலாறில்லை.ஆனால் புராணங்களின் அடிப்படையில் தவறான கோட்பாடுகள் இதற்கு முன்னரே கட்ட பட்டிருந்தால், அப்புராணங்களை குறுக்கு வெட்டு நெடுக்கு வெட்டு செய்து, அக்கு அக்காகப் பிரித்து ஆய்வு செய்ய வேண்டியது ஒரு வரலாற்றாளனின் கடமை.

பல்லவர் வரலாற்றை பாகவத புராணத்திலிருந்து தொடங்குவதாகவும், மனுவை முன்னிறுத்துவதாகவும் கடிதத்தில் புலவர் க.முருகேசன் குறைபட்டிருக்கிறார். இனவியல் கட்டுரை மனுதர்ம நூலையும் பாகவத புராணத்தையும் தோண்டித் துருவி பார்ப் பதற்கு என்ன காரணம்? தென்னிந்திய மக்களைக் குறிக்க 'திராவிடர்' என்ற சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தியவர் இராபர்ட் கால்டுவெல்(1856). கால்டுவெல் அந்த சொல்லை முறையாகப் புரிந்து கொள்ளவில்லை. குறைப் புரிதலின் காரணமாக தவறான பொருளில் பயன்படுத்தி விட்டார். அதை இனவியல் கட்டுரைத் தொடர் விளக்கி யிருக்கிறது.

’திராவிடர்’ என்ற சொல்லைக் கால்டுவெல் எங்கிருந்து பெற்றார்? அந்த சொல் கால்டு வெல்லின் கண்டுபிடிப்பா? 'திராவிடர்' என்ற சொல்லை அவருக்கு வழங்கிய அந்த மூல ஆவணம் எது?

’திராவிட' என்ற சொல் ‘தமிழ’ என்ற சொல்லிலிருந்துதான் வந்திருக்க முடியும் என்பதையும், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் கூட ‘திரமிள’ என்ற சொல் தமிழகத்தை சுட்டப் பயன்பட்டிருப்பதையும் இனவியல் கட்டுரை (இயல்06) சுட்டிக் காட்டியிருக்கிறது.

ஆனால் இதே சொல், பின்னர், சேர,சோழ, பாண்டியர் அல்லாத ஒரு அரசக்குடியினரைக் குறிக்கும் சொல்லாக சமஸ்கிருத இலக்கியங் களில் வருகிறது. இச்சொல் ஓர் அரசக்குடியி னரை அல்லது ஒரு கூட்டத்தாரைக் குறிக்கும் சொல்லாக கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் மாறிப்போனது. இக்கூட்டத்தாரைக் குறித்து வந்த ‘திராவிடர்’ என்ற சொல்லைத் தான் எடுத்துக் கொண்டு அதை தென்னிந்திய மக்களைக் குறிக்கும் இனப்பெயராகக் கால்டு வேல் பயன்படுத்தியிருக்கிறார்.

மனுஸ்மிருதியிலும், பாகவதப் புராணத் திலும், ‘’திராவிடர்’ என்ற சொல்வருகிறது என்று கூறி புராணத்தைச் சான்றாக ஏற்றவர் கால்டுவெல். ‘’உயர் நிலையிலிருந்து வீழ்ந்து பட்ட சத்திரியர்களை மனுஸ்மிருதி குறிப் பிடுகிறது; அதில் திராவிடர் என்போர் மட்டுமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள், "திராவிடர்" என்ற சொல் தென்னிந்தியக் குடிகள் அனைவரையும் குறிப்பிடும் சொல்லாகவே தோன்றுகிறது’ என்றும் இதே பொருளில் பாகவத புரணத்திலும் சத்ய விரதன் என்பவன் திராவிட தேசத்து அரசன் என்று குறிப்பிட பட்டிருக்கிறது’ என்றும் இராபர்ட் கால்டு வெல் கூறுகிறார் கால்டுவெல்லே கூறுகிறபடி “திராவிடர்” என்ற சொல்லை வழங்கிய மூல ஆவணம் மனுஸ்மிருதியும், பாகவத புராண மும்தான்.

மனுஸ்மிருதியும், பாகவதபுராணமும், வழங்கிய சொல்லை எடுத்துக் கொண்டு அதை ஒட்டு மொத்தத் தென்னிந்திய மக்களுக்கும் இனப் பெயராகச் சூட்டிய கால்டுவெல் குற்றவாளி இல்லை; அச்சொல்லை அப்படியே எவ்வித ஆய்வும் இன்றி ஏற்றுக் கொண்டு கட்சிகள் கட்டிய அரசியல்காரர்கள் குற்றவாளி இல்லை; இந்த அபத்தத்தைச் சுட்டிக்காட்டி, மனுஸ்மிருதியையும், பாகவதபுராணத்தையும் தோண்டித் துருவி ‘திராவிடம்’ என்ற சொல் உண்மையில் எவரைக் குறித்தது என்பதை அம்பலத்துக்குக் கொண்டு வரும் இனவியல் கட்டுரையாளர் தான் குற்றவாளியா?

‘திராவிடர்’ என்ற சொல்லை ஏற்குமுன், மனுவையும் பாகவத புராணத்தையும் எவரும் கேள்விக் குள்ளாக்கவில்லை. இனவியல் கட்டுரை இப்போது கேள்வி எழுப்புகிறது; ஆய்வுக்கு உட்படுத்துகிறது. இது தவறாகுமா? ‘இனவியல்’ கட்டுரைத் தொடர் மனுஸ்மிருதி யையும், பாவகத புராணத்தையும் ‘திராவிடர்’ பற்றிய ஆய்வில் பயன்படுத்தியுள்ளதாகக் குறைபடும் ஆர்வலர்கள், முன் உள்ள கேள்வி இதுதான்: 'உங்களுக்கு திராவிடர் என்ற சொல்லை வழங்கிய மூல ஆவணம் எது?’ (கால்டுவெல் கடன் பெற்றவர்).

மகாபாரதம் போன்ற சமஸ்கிருத இலக்கியங்கள், தென்னிந்தியப் பகுதியில் ‘சேரர், சோழர், பாண்டியர் இவர்களோடு நான்காவ தாக ‘திராவிடர்’ என்ற அரசக்குடியினரையும் குறிப்பிடுகின்றன. சேர, சோழ, பாண்டியர் அல்லாத அந்த அரசக்குடியினர் ‘பல்லவர்கள்’ என்று சான்றுகளின் அடிப்படையிலேயே இனவியல் கட்டுரைத் தொடர் அடையாளம் கண்டது. மற்றபடி, புராண இதிகாசங்கள் பேசும் யுகங்கள், கல்பங்கள், பல கோடி ஆண்டுக் கணக்குகள் இவையெல்லாம் குப்பை என்பது அனைவருக்கும் தெரியும்.

எதிர்வினையாக வெளியிடப்பட்டிருக்கும் கடிதம் பல்லவர்களைத் தமிழர்கள் என்று காட்டுவதில் ஆர்வம் காட்டுகிறது. வரலாற்ற றிஞர் இராசமாணிக்கனார் “மகேந்திர வர்மன், இரண்டாம் நந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன், அபராஜித வர்மன், இவர்களே தமிழ் அறிவு பெற்றிருந்தனர்” என்பது கல்வெட்டுகளிலிருந்து தெரிவதாகக் கூறுகிறார் என்று இனவியல் கட்டுரை எடுத்துக் காட்டியிருந்தது. கட் டுரைக்கு எதிர்வினையாற்றிய புலவர் க.முரு கேசன் “பல்லவர்களின் மொழி தமிழல்ல, அவர்கள் பிறமொழியாளர்கள் என்று தன் வாதத்துக்கு வலுச் சேர்க்க முயல்கிறார் செயராமன்” என்றும், இதன் பொருள் “தமிழ்ப் புலமை பெற்றிருந்தனர் என்பதாகும்” என்றும் குறிப்பிட்டிருந்தார். உண்மையில், பல்லவர்கள் தமிழர்கள் அல்லர் என்ற வாதத்தை வலுவாக வைத்தவர் இராசமாணிக்கனார். அவர் இவ்வாறு பதிவு செய்கிறார்.

“பல்லவர் வடவர் ஆதலின் அவர் பட்டயங்கள் எல்லாம் வடமொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. ”(பல்லவர் வரலாறு(2000), பக். 306).

“சங்க காலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்ட இளங்கிள்ளி, இளந்திரையன் என்பார்க் கும், சிவஸ்கந்த வர்மன், புத்த வர்மன், வீரகூர்ச்ச வர்மன் என்பார்க்கும் தொடர்பு ஏதும் இருந்திருத்தல் இயலாது என்பதைச் சிறிதளவு அறிவுடையாரும் தெளிவுறத் தெறிதல் கூடும் அன்றோ? மேலும் பல்லவர் பட்டயங்கள் அனைத்தும் பிராக்ருத மொழியிலும் பெரும் பாலானவை வடமொழியிலும் இருக்கின்றன. பல்லவர் சோழர் மரபினர் ஆயின், இளந்தி ரையன் வழி வந்தவர் ஆயின் தமிழில் எழுதாது, தமிழ் மக்கட்கே புரியாத வடநாட்டு மொழிகளில் எழுதத் துணிந்திருப்பரோ?” (மேலது, பக். 28)

பல்லவர்கள் தங்கள் பட்டயங்களில் தாங்கள் பரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று பதிவு செய்துள்ளனர். சில பட்டயங்களில் “பிரம்ம-சத்திரியர்கள்” என்று விவரித்துள்ளனர். இது அவர்களுடைய வாக்குமூலம். பல்லவர்கள் தமிழர்கள் என்று நிறுவ எவர் விரும்பினாலும், அவர்கள் ‘பரத்வாஜ கோத்திரத்தார் அல்லர்’ என்று முதலில் நிறுவியாக வேண்டும்; அது ஒரு காலத்திலும் நடவாது.

பல்லவர் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்கள் பலரை  புலவர் க.முருகேசன் பட்டியலிட்டு, இவ்வாறு குறிப்பிடு கிறார். “இவர்களில் யாரும் பல்லவர்கள் பார்ப் பனர்கள் என்றோ அவர்கள் ஆண்டநாடு திராவிடதேசம் என்றோ குறிப்பிடவில்லை”.

பல்லவர் வரலாற்றை ஆய்வு செய்த பட்டியலில் கண்ட அனைவரும் சிறந்த வரலாற்றறிஞர்கள் தாம். ஆனால், ஆய்வு மேற்கொண்ட பகுதிகளில் அவர்கள் காணத் தவறியவை உண்டு. இதுவரைக் காணத் தவறிய ஒன்றை அடுத்து வரும் ஆய்வாளர்கள் காணக் கூடாது என்பது இல்லை. இதுவரை பயன்படுத்தப்பட்ட ஆவணங்களையும், தரவு களையும் மறு ஆய்வுக்கு உட்படுத்துவதும், இதுவரைக் காணத் தவறியவற்றை வெளிச் சத்துக்குக் கொண்டு வருவதும், ஆய்வில் அக்கறை காட்டும் ஒருவரின் தலையான பணி அல்லவா?
Pin It