இந்தியத் துணைக்கண்ட விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர்; தொழிலாளர் இயக்க அரசியலில் இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கியவர். தென்னிந்தியாவில் முதல் பொதுவுடைமைவாதி; பகுத்தறிவுக்கும், பொதுவுடைமைக்கும் பாலமாக வாழ்ந்தவர்; எப்போதும் யாருக்காகவும் சமரசம் செய்து கொள்ளாத கொள்கைக்காரர் - அவரே சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்.

“பெரியார் சிந்தனையாளர்; புரட்சியாளர் அல்ல; புரட்சி என்பது தலைகீழ் மாற்றம்; ஹோசிமின் புரட்சியாளர்; மாவோ புரட்சியாளர்; சிங்காரவேலரும் புரட்சியாளர்; இன்னும் சொல்லப் போனால் இந்தியாவில் சிங்காரவேலரோடு புரட்சி செத்தது” என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறியுள்ளார்.

‘புரட்சி’ என்ற சொல்லே பொருளற்றுப் போய்விட்ட இந்நாளில் அதன் உண்மையான பொருளில் வாழ்ந்து காட்டியவர்; அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் தலைவிரித்தாடிய ஆங்கில ஏகாதி பத்தியத்தை எதிர்த்துக்கொண்டு, 1923-இல் ‘இந்துஸ்தான் லேபர் கிஸ்ஸான்’ என்ற கட்சியைத் தோற்று வித்தவர்; செங்கொடியை ஏற்றி ‘மே’ நாளைக் கொண்டாடிப் புதிய வரலாறு படைத்தவர்.

அவரது கொள்கையாலும், தொண்டுகளாலும் ஈர்க்கப் பெற்றோர் ஏராளம். அவர்களுக்குள் ஒருவரே இந்நூலாசிரியர் புலவர் பா.வீரமணி. இவர் எழுதிய ‘சிங்காரவேலரின் சிந்தனையும் தொண்டும்’ என்ற இந்த நூல் எளிமையும், நேர்மையும், ஓயாத உழைப்பும் கொண்ட மூத்த தோழர்களாகிய என்.சங்கரய்யாவுக்கும், இரா.நல்லகண்ணு-வுக்கும் அன்புக் காணிக்கையாக அளிக்கப்பட்டிருக்கிறது.

“சிங்காரவேலரின் அப்பழுக்கற்ற பொதுத் தொண்டு கம்யூனிச கருத்துகளைப் பரப்புவதில் அவர் கொண்ட ஆழ்ந்த ஈடுபாடு, நாட்டு விடுதலை, பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடையே எடுத்துச் சொல்லுதல், மூடப்பழக்கவழக்கங்களை விட்டு ஒழித்தல், அவர் நடத்திய போராட்டங்கள் இல் வாழ்க்கையில் நேரிட்ட இழப்புகள் ஆகியவற்றைப் புலவர் வீரமணி மிக விரிவாக எடுத்துச் சொல்லி யுள்ளார்....” என்று தோழர் ஆர்.பார்த்தசாரதி தம் பதிப்புரையில் கூறியிருப்பது நூலுக்குச் சரியான அறிமுகமாகும்.

“புரட்சியாளர்கள், சிந்தனைச் சிற்பிகளாக முகிழ்த்து, அரிய சாதனைகளைப் படைத்து, உலக வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்றவர்கள் வெகு சிலரே. தமிழகத்தில் 20 ஆம் நூற்றாண்டில் பெரியார் தொடங்கிய பகுத்தறிவு, சமுதாயப் பணிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து, பின்னர்ப் பெரியாருடன் இணைந்து, மார்க்சிய சிந்தனை களைத் தமிழ் மண்ணில் முதன்முதலில் பகுத்துப் பல சாதனைகளை நிகழ்த்தியவர் சிங்காரவேலர்...” என்று அணிந்துரையில் பேராசிரியரும், மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவருமான மு.நாகநாதன் கூறியிருப்பது நூலின் முக்கியத்துவத்தை மதிப்பிடு கிறது.

சிங்காரவேலரின் 150ஆம் பிறந்த நாள் ஆண்டு 18-2-2009 முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டினை முன்னிட்டே இந்நூல் வெளிவருகிறது என்று கூறும் நூலாசிரியர், பொதுவுடைமை இயக்கத்தின் 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நாகை கே.முருகேசனும், சி.எஸ்.சுப்பிரமணியனும் இணைந்து ‘தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’ என்ற நூலை ஆங்கிலத்தில் 1975ஆம் ஆண்டில் வெளியிட்டனர் என்பதை நன்றியுடன் குறிப்பிடு கிறார். அத்துடன் 1990ஆம் ஆண்டு பேரா.முத்து. குணசேகரனின் ‘சிங்காரவேலரின் வாழ்வும், பணியும்’ என்னும் முனைவர்பட்ட ஆய்வு நூலையும் தவறாமல் குறிப்பிடுகிறார்.

இந்நூலில், ‘சிங்காரவேலரின் பிறப்பும் வரலாறும்’ தொடங்கி, ‘சிங்காரவேலரின் அறிவியல் பரப்புப் பணி’ ஈறாக 14 தலைப்புகளில் அவரது சிந்தனையும், செயலாற்றலும் விளக்கப்படுகிறது.

புத்தமத ஈடுபாடும் வேறுபாடும், சிங்கார வேலர் என்றொரு மானுடர், சிங்காரவேலரின் மாந்தநேயம், சிங்காரவேலரின் ஆன்ம மறுப்புச் சிந்தனை, அத்வைதத்தை மறுத்தார், தொழிற்சங்க இயக்க முன்னோடி, நீல் சிலைப் போராட்டம், சைமன் கமிஷனை எதிர்த்தார், திரு.வி.க. மாறினார், தெ.பொ.மீ. ஆதரித்தார், ஜெமதக்னி சீடரானார், போர் எதிர்ப்புச் சிந்தனை முதலிய தலைப்புகள் மூலம் சிங்காரவேலரின் முழு கனபரிமாணத்தை அறிந்துகொள்ள முடியும்.

சென்னை மயிலாப்பூரில் வெங்கடாசலம் செட்டிக்கும், வள்ளியம்மைக்கும் மூன்றாம் மகனாக 18-2-1860இல் பிறந்துள்ளார். உயர்நிலைக் கல்வியை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை கிறித்தவக் கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியிலும் பயின்றுள்ளார். சென்னைச் சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டம் பெற்றுள்ளார்.

பெருஞ்செல்வரான சிங்காரவேலர் பொது மக்களுக்குப் பயன்படும் வகையில் வழக்கறிஞரானார். விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டு, காந்தியாரின் அறிவிப்புக்கு இணங்க ஒத்துழை யாமையைக் கடைப்பிடிக்க வேண்டியே சென்னைக் கடற்கரையில் தம் வழக்கறிஞர் அங்கியைத் தீயிட்டுக் கொளுத்தினார். அதன் பிறகு அவர் வருவாய்க்காக வழக்காடவில்லை. அநீதிக்கு எதிராகவும், விடுதலைப் போராட்டத்துக்காகவுமே வழக்காடியுள்ளார்.

புத்தமதத்திலுள்ள வர்ண மறுப்பு, சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு, சமத்துவ உணர்வு, மாந்தநேயம் போன்றவை இவரைக் கவர்ந்ததால் புத்தமதத்தில் ஈடுபாடு கொண்டனர். இவரது பரந்த வாசிப்பும், புது நோக்கும், சமத்துவ உணர்வும், இவரைப் புத்த சமயத்தின்பால் ஈடுபாடு கொள்ள வைத்தது.

புத்தமதத்தில் மறுபிறப்பு முக்கியமான சித்தாந்தமாகும். இதனைச் சிங்காரவேலர் ‘ஏற்க முடியாது’ என மறுத்தார். “தீபத்தை ஏற்றுவதற்கு யாரோ ஒருவன் தேவைப்படுகிறான். ஒருவன் செயலின்றித் தீபத்தை ஏற்ற முடியாது. அப்படி யானால் கடவுளையும், ஆன்மாவையும் மறுக்கும் பௌத்தம் மறுபிறவிக்குக் காரணம் யார்? அல்லது எது என்பதைக் கூறவில்லை. எனவே ஒரு தீபத்தைக் கொண்டு மற்றொரு தீபத்தை ஏற்றுவதைப் போன்று ஒரு பிறவி மறுபிறவி எடுக்கிறது என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்?...” என்று கேட்டார்.

தேசிய இயக்கத்தினராலும், பொதுவுடைமை இயக்கத்தினராலும், பகுத்தறிவு இயக்கத்தினராலும் மதிக்கத்தக்க மாமனிதராக விளங்கினார். 1920ஆம் ஆண்டுகளிலேயே பௌத்தம் பற்றியும், டார்வினிசம் பற்றியும், மார்க்சியம் பற்றியும் ஆழமாக எழுதியும், பேசியும் வந்தவர் என ஆசிரியர் குறிப்பிடுவது வியப்பாக இருக்கிறது.

மார்க்சியத் தத்துவத்தை ஏற்றுக் கொண்ட இவர், மக்களுக்கு அவற்றை விளக்கியும், ஏனைய தத்துவங்களை விமர்சித்தும் இறுதிவரை தொண்டு ஆற்றினார். இடைவிடாது படித்து, விவாதங்கள் செய்வதில் விற்பன்னராகவும் விளங்கினார்.

வாழும்போது உடலில் இருக்கும் ஆன்மா, மனிதன் இறக்கும்போது, பிரிந்து வெளியே சென்றுவிடுகிறது என்றும், அப்படி வெளியே சென்ற ஆன்மா, அடுத்தடுத்துப் பிறவி எடுக்கிறது என்றும் சமயவாதிகள் கூறி வருகின்றனர். இந்த ஆன்மாவைச் சீவனென்றும், சித்தென்றும் கூறுவர். இந்தச் சித்து அல்லது சீவன் என்பதைச் சமய வாதிகள் ஒரு தனிப்பொருள் என்றும் கூறுவர். அப்படியொரு தனிப்பொருள் உடலில் இல்லை என்பது சிங்காரவேலரின் முடிவு; அறிவியலாளரின் முடிவும் அதுவேயாகும்.

அத்துவைதம் வேதாந்த மதங்களுள் ஒன்றாகும். பிரம்மன் இரண்டற்ற மூலப்பொருள். பலவாகக் காணப்படும் உலகம் பொய்த் தோற்றம் உடையது. ‘ஜீவன் பிரம்மத்தைவிட வேறன்று’ என்று அத்துவைதம் கூறுகிறது. இதனை இவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

கயிற்றையும், பாம்பையும் பார்த்தவனுக்குத் தான் கயிற்றைப் பார்க்கும்போது பாம்பாகவும், அதே போன்று கிளிஞ்சலையும் வெள்ளியையும் பார்த்தவனுக்குத்தான் கிளிஞ்சலைப் பார்க்கும் போது வெள்ளியாகவும் தோன்றுவது இயல்பு. ஆனால் பிரம்மத்தைக் காணாத ஒருவன் இவ்வுலகை எப்படி பிரம்மமாக உணர முடியும்? சிங்கார வேலரின் இந்தக் கேள்விக்கு விடை என்ன?

இந்தியாவிலேயே 1923 ஆம் ஆண்டே மே நாளை, முதன்முதலாகக் கொண்டாடிய பெருமை இவரையே சேரும். அதே நாளில் அவர் தொழிலாளி - விவசாயி கட்சி (டுயbடிரச யனே மளைளயn யீயசவல டிக ழiனேரளவயn) யையும் தோற்றுவித்துள்ளார். இக்கட்சியின் சார்பாக இரு இடங்களில் மே தினக் கூட்டங்கள் நடந்து உள்ளன.

திரு.வி.க.வும், செல்வபதி செட்டியாரும், இராமாஞ்சுலு நாயுடுவும் இணைந்து 27-4-1919இல் சென்னைத் தொழிலாளர் சங்கத்தினைத் தோற்று வித்தனர். இந்தச் சங்கமே இந்தியாவில் தோன்றிய முதல் தொழிற்சங்கமாகும். இதற்கு சிங்காரவேலர் வழிகாட்டியாக விளங்கினார்.

ஆங்கில ஏகாதிபத்தியத்துக்குத் தூணாக விளங்கிய படைத் தளபதிகளுள் நீல் மிக முக்கிய மானவர். கொடுமைக்காரனான அவன் சிலையை சென்னை மலைச் சாலையில் இருந்து அகற்று வதற்காகப் போராடிய போராட்ட வீரர்களுக்கு இவர் துணையாக இருந்தார். தொடர் போராட்டத் தால் 1937இல் பதவி ஏற்ற இராஜாஜி நீல் சிலையை அகற்ற 13-11-1937 அன்று ஆணையிட்டார்.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொடக்க காலம் முதற்கொண்டே உழைத்து வந்தார். ‘பூரண சுதந்திரம்’ பற்றி இவர் 1922ஆம் ஆண்டிலேயே கயாவில் நடந்த மாநாட்டில் சரியான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன் பிறகு 1928ஆம் ஆண்டில் தான் ‘பூரண சுதந்திரம்’ பற்றிய தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த மாநாட்டில்தான் இந்தியர்கள் இடம் பெற்றில்லாத சைமன் குழுவை எதிர்த்து ஆர்ப் பாட்டம் நடத்த வேண்டுமென்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ‘சைமனே திரும்பிப் போ’ எனக் கருப்புக் கொடிப் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்தபோது, சிங்காரவேலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் வெளியில் இருந்திருந்தால் இந்தப் போராட்டம் இன்னும் தீவிரமடைந்திருக்கும்.

“அவர் வெறும் மேல் மட்டத்தில் மட்டும் நீந்துகிற தலைவர் அல்லர். ஆனால் தீவிர கருத்து உள்ள எல்லோருடனும் தோளோடு தோள் நின்று ஓய்வறியாத ஆற்றலின் உருவமாகத் திகழ்ந்தார். மக்களிடையில் இடையறாது உழைத்தார். கடுமை யாக உழைக்கும் மக்களின் உண்மையான பிரதிநிதி அவர்” என்று நாகை முருகேசனும், சி.எஸ்.சுப்பிர மணியமும் தமது ‘தென்னிந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழறிஞராகவும், சமயப் புலவராகவும் விளங்கிய திரு.வி.க. தொழிற்சங்கத் தலைவராக விளங்கவும், இவரது தொடர்பே பெரிதும் காரணமாகும். சிங்காரவேலரின் சிந்தனை, திரு.வி.க.வின் ஆளுமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ‘திரு.வி.க. மாறினார்’ என்ற தலைப்பில் ஆசிரியர் விரிவாக எழுதியுள்ளார். அண்ணா இவரைச் ‘சிந்தனைச் சிற்பி’ என்று போற்றியதையும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், ‘போர்க்குணம் மிகுந்த செயல் முன்னோடி’ என்று பாராட்டிப் பாடியுள்ளதையும் நினைவுபடுத்தி யுள்ளார்.

திரு.வி.க.வைப் போலவே தமிழறிஞரான தெ.பொ.மீ. அவர்களும் சிங்காரவேலரோடு நட்பு கொண்டிருந்தார். இருவரும் காங்கிரஸ் வேட்பாளராக நின்று வெற்றி பெற்று நகராண்மைக் கழக உறுப்பினர்களாக ‘ரிப்பன் மாளிகை’யில் சந்தித்துக் கொண்டனர்.

ஒருவர் உறுதியான நாத்திகர்; மற்றொருவர் பழுத்த ஆத்திகர். ஆனால் இருவரும் சிறந்த மனித நேயவாதிகள். அடிப்படையில் இருவருக்கும் இந்த ஒற்றுமை இருந்ததால் இருவரும் நட்பை வளர்த்துக் கொண்டு நண்பர்களாக இருந்தனர் என்று ஆசிரியர் குறிப்பிடுவது ஏற்கத்தக்கதாக இருக்கிறது.

26-4-1926 அன்று சிங்காரவேலர் நகராண்மைக் கழகப் பள்ளிகளில் மதங்களைப் பற்றிய பாடல்கள் பாடத் திட்டத்தில் இடம்பெறக் கூடாதென ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். இப்படிப்பட்ட தீர்மானத்தை முதன்முதலில் கொண்டுவந்தவர் சிங்காரவேலரே என்று பெருமைப்படும் ஆசிரியர், இந்தத் தீர்மானத்தை ஆதரித்த தெ.பொ.மீ.யின் பரந்த உள்ளத்தையும் பாராட்டுகிறார்.

சிங்காரவேலருடன் பழகியவர்கள் அவரை மறக்க முடியாதென்றும், அவரை நினைத்தாலே உள்ளத்தில் ஒரு தெம்பு ஏற்பட்டுவிடும் என்பார் தோழர் கே.டி.கே. தங்கமணி என்று கூறும் ஆசிரியர், க.ரா.ஜமதக்னி சிங்காரவேலரின் சீடரானதையும் விவரிக்கிறார்.

சிங்காரவேலர் சிறைப்பட்டிருந்தபோது, உப்புச் சத்தியாகிரகத்தில் இராஜாஜியும், ஜமதக்னியும் கைது செய்யப்பட்டு ஒரே சிறையில் இருந்து உள்ளனர். சிறையில் ஜமதக்னி இராஜாஜியைச் சந்திக்க வரும்போது, “பக்கத்து அறையில் ஒரு கிழவர் உள்ளார். அவரை எக்காரணம் கொண்டும் சந்திக்க வேண்டா, சந்தித்தால் அந்தக் கிழவர் உனக்கு விஷத்தை ஊட்டிவிடுவார்...” என்று எச்சரித்துள்ளார்.

இதையும் மீறி ஜமதக்னி அடுத்த அறையில் இருந்த சிங்காரவேலரைச் சந்தித்துள்ளார். இந்தப் பழக்கமே அவர் மார்க்சியவாதியாக மாறக் காரண மாயிற்று. மார்க்சின் மூலதனத்தையே தமிழில் மொழிபெயர்க்கும் அரிய பணிக்கு அடித்தள மாயிற்று.

“புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட

 போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்”

என்றார் பாரதிதாசன். சிங்காரவேலர் 1926ஆம் ஆண்டிலேயே போர்களைப்பற்றிய பாடங்களைப் பாடத் திட்டத்தில் சேர்க்கக்கூடாதென்று தீர்மானம் கொண்டு வந்தார். அத்துடன் அமைதி கொள்ளாமல் தொடர்ந்து சமாதானத்தைப் பற்றிப் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்தார்.

சிங்காரவேலர் ஓர் அரசியல் சிந்தனையாளர் மட்டுமல்ல, அறிவியல் சிந்தனையாளராகவும் இருந்தார்; அறிவியலைப் பரப்புவதிலும் பெரும் பணியாற்றினார்.

“எந்த ஞானம் எல்லா ஞானத்தைவிடச் சிறந்தது என்ற கேள்விக்கு, விஞ்ஞானம் ஒன்றே என்று மாபெரும் ஞானியாகிய ஹெர்பர்ட் ஸ்பென்சர் தெரிவித்ததை நம் தமிழ் மக்களிடம் அறிமுகம் செய்வதே இந்தப் ‘புதிய உலகம்’ பத்திரிகையின் கோரிக்கையாக வேண்டுமென்று வேண்டுகிறோம்” என்றார் அவர்.

இவ்வாறு அவர் தொடாத துறைகளே இல்லை; சொல்லாத கருத்துகள் இல்லை. இறுதிவரை சிந்தித்துக் கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் 86 ஆண்டுகள் வாழ்ந்த சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் வரலாற்றினை ஒரு நூலுக்குள் அடக்க முடியாதுதான்.

சிங்காரவேலரின் வரலாற்றை அவரது குடும் பத்தைச் சார்ந்தோர் அல்லது அவரது வாரிசாகவே அறிமுகப்படுத்தப்பட்ட தோழர் ப.ஜீவனாந்தம் போன்றோர் எழுதியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று கூறும் ஆசிரியர் தமக்குக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தியிருக்கிறார்.

அரசியல் என்பது இலாபகரமான தொழிலாகி விட்ட இன்றைய நிலையில் இப்படியும் ஒருவர் வாழ்ந்தார் என்பதைப் புதிய தலைமுறை நம்பப் போவதில்லை. இது இளைய தலைமுறை படிக்க வேண்டிய பாடம்; முதிய தலைமுறை போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஆவணம்.

சிங்காரவேலரின் சிந்தனையும், தொண்டும்

பா.வீரமணி

விலை : ரூ.175.00

என்.சி.பி.எச்

Pin It