கலைஞர் கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த கால கட்டத்தில் 19-1-1999இல் அடுத்த கல்வியாண்டு முதல் (1999-2000) அறிவியல் பாடங்களை தமிழில்தான் கற்பிக்க வேண்டுமென்று அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளும் பெற்றோர்களும் எதிர்த்தனர், வென்றனர். பிறகு கலைஞர் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் தன்னை அதில் இணைத்துக் கொண்டார். இவர் தன் மேல்முறையீட்டில் வைக்கும் கருத்துகளில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஏன் அப்படி அமைந்தது, அதன் காரணம் என்ன என்பதைக் கூறுவதை ஒவ்வொரு தமிழ்க்குடிமகனும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
வ.அய்.சுப்பிரமணியன் யார்?
முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள் அமெரிக்கா இண்டியானா பல்கலையில் முனைவர் பட்டம் பெற்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு முதல் (1981) துணைவேந்தரானார். இத்துடன் ஆந்திராவிலுள்ள குப்பத்தில் திராவிடப் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்த பெருமையும் இவருக்கு உண்டு. இவர் திராவிட மொழியியல் கழகத்தை உருவாக்கியதோடு பன்னாட்டுத் திராவிட மொழியியல் பள்ளியையும்(1977) தொடங்கியவர். இவர் தமிழுக்குச் செய்த சிறந்த பணிக்காக இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் மேலும் ஆறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு முதுமுனைவர் பட்டமளித்துப் பாராட்டியுள்ள உலகத் தமிழனாவார். இவரே மருத்துவமும், பொறியியலும் தமிழில் பயிற்று மொழியாகக் கொண்டுவர தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழி பல பாட நூல்களைக் கொணர காரணகர்த்தாவாக இருந்தவர். இவர் அனைத்துலக திராவிட மொழியியல் பள்ளியில் மதிப்புறு இயங்குநராகப் பணியாற்றியவர். இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு ஏற்பாடு செய்தார். திரு.கே.பி.எஸ் இராசன் என்பவர் இவரது வழக்கறிஞர் ஆவார்.
வ.அய்.சுப்பிரமணியம் வாதம் என்ன?
மேதகு நீதிபதிகள் மோகன் குழு, அமைப்பு என்பது தன்னிச்சையானதும், பகுத்தறிவுக்கு ஒவ்வாததும் ஆகும் என்று 16ஆவது பத்தியில் குறிப்பிட்டுள்ளார்கள். அதற்கான காரணங்கள் இவைதாம்.
சாகும் வரை உண்ணாநோன்பிருந்து அரசையே மிரட்டிய தமிழண்ணல் இக்குழுவில் ஓர் உறுப்பினர். நாகுயிஸ்பந்து என்பவர் ஒரு குழுவில் இடம் பெற்றது குறித்து உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. அக்குழுவினால் அரசுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டியிருந்தது. அவர் பதவி உயர்வு பெற்றால் நாகுயிஸ்பந்து அதன் பயனை அடைபவராக இருப்பார். எனவே அதுகுறித்து உச்சநீதி மன்றம் சொன்னது சரிதான்.
ஆனால், தமிழண்ணலுக்கு இதில் சொந்தப் பயன் ஏதுமில்லை. அக்குழுவில் மேலும் 4 பேர் இருக்கிறார்கள். அவர் ஒருவர் மட்டுமே முடிவெடுப்பவர் இல்லை. அவருடைய சொல்லே இறுதியானதும் ஆகாது. இலக்கிய, இலக்கணத்தில் தேர்ச்சி பெற்ற தமிழறிஞர் அவர். இப்படிப்பட்ட நிலையில், மேதகு நீதிபதிகள் இதற்காக மேற்கண்ட அடைமொழிகளைப் பயன்படுத்தியதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
அடுத்து, நீதிபதி மோகன் அவர்களையே குழுத்தலைவராகப் போட்டது பற்றியது. இதற்கு முன் உயர்நீதிமன்றத்தில் ஒருமுறை தீர்ப்பு வழங்கும்போது அவர் கூறிய கருத்துகள் குறித்துக் கணக்கில் எடுத்துக்கொண்டு இதனையும் மறுத்துள்ளார்கள். நீதிபதிகள், கருத்துக்களைப் போலவே தீர்ப்புகளும் மாறக் கூடியவை. மேலும் நீதிபதி மோகன், தீர்ப்பில் கூறப்பட்டபடி இல்லாமல் மொழியிலும் அதன் வளர்ச்சியிலும் ஈடுபாடு படைத்த வல்லுநர் அவர் என்பதை மனத்திற் கொள்ள வேண்டும்.
வலிமையான பரிந்துரைகளைச் செய்வதற்கு தெலுங்கு, கன்னட, மலையாள அறிஞர்களையும் குழுவில் சேர்த்திருக்கலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர். மொழி அடிப்படையில் மொழிவாரி மாநிலங்கள் பிரித்து அமைக்கப்பட்டபோது, அண்டை மாநிலங்கள் தங்கள் மாநில மொழியினைத் தொடக்கப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் அதிகம் அலட்டிக் கொள்ளாமலேயே பயிற்று மொழிகள் ஆக்கிவிட்டன. தாய்மொழியாம் தமிழைப் பயிற்று மொழியாக்குவதற்கு மொழிச் சிறுபான்மையினரின் கருத்துகளைக் கேட்க வேண்டுமென்பது அவசியமற்றதாகும். நீதிபதிகளால் குறிப்பிடப்பட்ட மொழிச்சிறுபான்மையினரைக் குழுவில் சேர்க்க வேண்டுமென்றால் தெலுங்கு, மலையாள, கன்னடியர்களைவிட அதிகம் பாதுகாப்புத் தேவைப்படுகின்ற 40க்கும் மேற்பட்ட பழங்குடியினரையும் குழுவில் சேர்க்கவேண்டும். உருது பேசும் இசுலாமியரும் குழுவில் இடம்பெறவே முயல்வர். இது எங்கே கொண்டுபோய்விடும்? சட்டத்தின் அடிப்படையில் சண்டை போட்டுக் கொள்ளத்தான் நேரம் சரியாக இருக்கும். இதனால் தேவையற்ற காலதாமதம் ஆவதுடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் குழு தன் பரிந்துரைகளைச் செய்ய முடியாமலும் போய்விடும்.
நீதிபதிகள் கூறும்போது, குழந்தைகளின் உளவியல் அறிந்த மருத்துவர்களும், நரம்பியல் வல்லுநர்களும் குழுவில் சேர்த்துக் கொள்ளப் பட்டிருக்கலாம் என்கின்றனர். பயிற்றுமொழி தொடர்பாக அதிக அளவு ஆராய்ந்து வலிமையான அறிவுடன் திகழ்பவர்கள் மொழியியலாளர்கள்தாம். ஆனால் தீயூழ் காரணமாக (துரதிருஷ்ட வசமாக) தீர்ப்பில் இது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. மேலும் நரம்பியல் வல்லுநர்களுக்கு மொழியின் பலவகையான பயன்பாடு குறித்த நேரடியான அறிவு குறைவாகவே இருக்கும். எனவே மிகக் குறைந்த தொடர்புடைய சிறப்பு மாநில வல்லுநர்களைச் சேர்க்கவும், மிகுந்த அறிவு வல்லமையுள்ள மொழியியலாளர்களை விட்டு விட்டும் மேதகு நீதிபதிகள் கூறிய பரிந்துரைகள் மிகவும் வியப்பை அளிக்கின்றன. மொத்தத்தில் குழு அமைக்கப்பட்டதில் குறை காண்பது எனும் ஒரே நோக்கத்தோடு நீதிபதிகள் இத்தகைய கருத்துக்களைக் கூறியிருப்பதாகவே கொள்ளலாம்.
இது, குழு தன் முடிவுகளை எட்டுவதற்கு எடுத்துக்கொண்ட குறுகிய காலத்தையே குறையாக எடுத்துக்கொண்டு நீதிபதிகள் தங்கள் வினாக்களைத் தொடுத்துள்ளனர். குழு 26 நாள்கள் எடுத்துக்கொண்டது. இப்போது வழக்கிற்கு வந்துள்ள ஆணையைப் பிறப்பிப்பதற்கு அரசு ஐந்து மாத காலம் எடுத்துக் கொண்டுள்ளது. ‘இந்தப்பிரச்சனை மிகவும் சிக்கலானது, என்று குழு கருத்துச் சொல்லியிருந்தாலும், 3 வாரங்கட்குள் தன் பணியை முடித்துள்ளது. இதற்குத் தகுதியான எல்லாச் செய்திகளும் அலசப்பட்டிருக்குமா? என்று நீதிபதி குழு ஐயத்தைக் கிளப்பியுள்ளது.
குழு அறிக்கையைக் கவனமாகப் பரிசீலித்தால் தமிழக மக்களின் எதிர்கால நலன்களை மனத்தில் கொண்டு மிகுந்த கவனத்தோடு அறிக்கையைத் தந்துள்ளமையைக் காணலாம். இந்த அறிக்கையில் கல்வியில் ஆங்கிலத்தின் அவசியம் பயிற்றுமொழிக் கொள்கையின் நலத்தீங்குகளை ஆராய்ந்துள்ளது. தமிழ் பேசும் மக்களின் கீழ்நிலையிலும் மேல்நிலையிலும் தமிழை அறிமுகப்படுத்துவதில் அறிக்கை கவனம் செலுத்தியுள்ளது. அண்டை மாநிலங்களான மேற்கு வங்கம், ஆந்திரம், கர்நாடகம் ஆகியவற்றிலிருந்து தொடர்புடைய அரசாணையைப் பெற்றுக் குழு இணைத்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் மேற்கோள் காட்டிய, பயிற்றுமொழி தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பினையும் காட்டியுள்ளது. பயிற்றுமொழி பற்றிய வினாவினை விரிவாக விவாதிக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய கூட்டத்தினரோடு கலந்து பேசவேண்டும். தொடக்கநிலை மற்றும் உயர்நிலைக்கல்வியில் தமிழைப் பயிற்றுமொழியாக்க வேண்டும் என்பதே அதன் பரிந்துரை. இக்குழு பிற மாநில அறிக்கைகளை, அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடல் குறிப்புகளோடும் சேர்த்து வழங்கியிருக்கிறது. தமிழக அரசுக்கு அதிகச் செலவு வைக்காமல், மிகக் குறைந்த செலவிலேயே மூன்றரை வாரங்களுக்குள் இக்குழு பாராட்டத்தக்க பணியினை நிறைவேற்றியிருக்கிறது. ஆனால் இதனைப் பாராட்டுவதற்குப் பதிலாக உயர்நீதிமன்றம் இதனை ஓர் ‘அவசர அறிக்கை’ என்று வருணித்திருப்பது நமது தீயூழ் ஆகும். (துரதிருஷ்டமாகும்). ஆண்டுக்கணக்காக நீட்டிக்கப்பட்டு அதிக காலம் இயங்குவதாலேயே ஒரு முழுமையான அறிக்கையை அது தந்து விடும் என்று சொல்ல முடியாது.
1967க்கு முன் பல ஆண்டுகள் ஆட்சியிலிருந்த காங்கிரசுக் கட்சியும் சரி, அதன்பின் ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகளும் சரி, தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய திராவிடக் கட்சிகளின் ‘எல்லாத் துறைகளிலும் தமிழின் பயன்பாடு’ என்பது அவற்றின் குறிக்கோள்களில் ஒன்றாகவே இருந்தது. அதாவது ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்பது அவற்றின் கோட்பாடு. வாழ்க்கையின் மேம்பாட்டுக்கும், தமிழ்நாடு அரசிலும், வேறு இடங்களிலும் வேலைவாய்ப்புப் பெறுவதற்கும் ஆங்கிலப் பயிற்றுமொழி ஒன்றே தீர்ப்பு என்பது போலத் தவறான வாக்குறுதிகளை அள்ளி வழங்கியது வரை துறையில்லாமல் ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகள் வளர்ந்து வந்ததையும், கீழ் வகுப்புகளில் கூடத் தமிழின் பயன்பாடு குறைந்து வந்ததையும் எதிர்த்துக் கிளர்ச்சிகள் நடைபெறத் தொடங்கின. எனவே, தொடக்க வகுப்புகளிலும் பிற வகுப்புகளிலும் தமிழின் பயன்பாட்டை உறுதி செய்திடவும், இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணவும் வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமை ஆயிற்று.
தக்க துணை ஆதாரங்களோடு படைக்கப்பட்ட குழுவின் அறிக்கை அவசரத்தில் அமைந்தது என்று வருணிப்பதைவிட ஏற்றுப் பாராட்டியிருக்க வேண்டும்.
1950இல் ஆங்கிலப் பயிற்றுமொழியில் தொடங்கப்பட்ட மெட்ரிகுலேசன் பள்ளிகள் பற்றியே மேதகு நீதிபதிகள் திருப்பித் திருப்பிச் சொல்லியிருக்கிறார்கள். 1957இல் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் மாநில, மத்திய அரசுகளின் நோக்கமே மாநில மொழிகளை வலியுறுத்தி வளர்த்தெடுப்பதுதான். மேதகு நீதிபதிகளால் இந்த அடிப்படை உண்மை எடுத்துக்கொள்ளப்படவே இல்லை. இந்த நாட்டிலும் இங்குள்ள மாநிலங்களிலும் உயர் ஆராய்ச்சி குறித்த வளர்ச்சிக்கு ஆங்கில அறிவும், அனைத்துலக மொழிகளின் அறிவும் தேவைதான். அந்தந்த மாநில மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயில்வது எல்லாக் குடிமக்களுக்கும் உறுதுணையாகவே இருக்கும். வட்டார மொழியைப் பயிற்று மொழியாகக் கொள்வது குறித்து யுனெஸ்கோ தந்துள்ள அறிக்கையினை இங்குப் பார்வைக்கு வைக்கிறோம். தீயூழ் காரணமாக மேதகு நீதிபதிகளால் இவ்வறிக்கை கருதப்படவே இல்லை என்பதுதான் நிலை.
ஆங்கிலப் பயிற்றுமொழியானது தொடக்கத்தில் சில வகுப்பினரை உருவாக்கும். ஆனால் அவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினராகவே இருப்பர். தமிழ்த் தாய்மொழிப் பயிற்றுமொழியோ சிறந்த அறிவாற்றலைப் பெற்று நாகரிகமான வாழ்வினை நடத்திச் செல்வதற்கான முறையில் குடிமக்கள் அனைவரையுமே அந்நியம் செய்துவிடும். அத்தகைய அறிவாற்றலை ஓர் அயல் மொழியைக் காட்டிலும் தாய்மொழி வாயிலாகப் பெறுவதே எளிதாக இருக்கும்.
அரசமைப்புச் சட்டத்தின் 27ஆவது பத்தியில் வழங்கப்பட்ட மொழிச் சிறுபான்மையினருக்கான வகுப்புகளைத் தொடங்குவதில் உள்ள இடர்ப்பாடுகளை நீதிமன்றத் தீர்ப்பு விவாதிக்கிறது. ஒவ்வொரு பள்ளியிலும் 40 பேருக்கு மேல் இருந்தால் தெலுங்கு, கன்னடம், மலையாளம், 40க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களின் மொழி பேசுவோர் விரும்பினால் அவர்கள் பள்ளிகளைத் தொடங்கிக் கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப் பட்டுள்ள நடைமுறைச் சிரமங்களால் தாய்மொழியையோ தமிழையோ பாடமொழியாகக் கொண்டுள்ள பள்ளிகட்கு ஆங்கிலப் பயிற்று மொழி என்பது தீர்வாகாது.
நீதிமன்றத் தீர்ப்பின்படிப் பார்த்தால் மொழிச் சிறுபான்மை மாணவர்களைப் பொறுத்தவரையில், வேலை வாய்ப்புக் கருதி வேறு மாநிலங்கட்குப் போக விரும்புவர்கள், ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளிகளுக்குத்தான் போகவேண்டும். பிற மாநிலங்கட்கு இடம் பெயர்ந்து செல்லும் மாணவர்கள் எத்தனை விழுக்காட்டினர்? என்பது குறித்து நீதிமன்றம் எதுவும் குறிப்பிடவில்லை. இதுகுறித்து ஆழ்ந்து விவாதிக்கப்படவில்லை என்றாலும், தெற்கிலும், வடக்கில் உள்ள பிற மாநிலங்களிலும் உள்ள மொழிச்சிறுபான்மையினரில் 3% மட்டுமே வேலைதேடி வெளிமாநிலங்களுக்குச் செல்பவராவர். மிகப் பெரும் பான்மையினர் தமிழ்நாட்டுக்குள்ளேயே தங்கிவிடுபவர்கள்தான்.
ஒரு நாகரிகமான நல்வாழ்வுக்கு அவர்கள் தங்கள் தாய்மொழி வாயிலாகக் கல்வி கற்க வேண்டாமா? 1991 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பிற மாநிலங்களில் உள்ள மொழிச் சிறுபான்மையினர் பற்றிய புள்ளி விவரங்களைத் தருகிறது. அவை புறக்கணிக்கப்படும் அளவு சிறுபான்மையாகும். எனவே ஒருசிலருக்காகத் தமிழ்ப் பயிற்றுமொழியைப் புறக்கணிப்பது என்பது அறிவார்ந்த முடிவாகாது. பள்ளிகளில் தமிழ் வழியில் பயில்வதால், அறிக்கையில் ஆங்கிலக் கல்வி பற்றிய பரிந்துரை இல்லை என்பதும் தவறானதாகும். உண்மையில் மோகன் குழு, தமிழ்நாட்டில் ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதில் உள்ள தரம் தாழ்ந்த நிலை குறித்து வருந்தியிருக்கிறது. மேலும் பள்ளிகளில் சிறப்பான பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியர்களைப் பணியமர்த்தவும் வலியுறுத்துகிறது.
31ஆவது பத்தியில் ‘தாய்மொழி’ என்றால் என்ன வரையறை? என்பது குறித்தும் தாய்மொழியை அடையாளம் காண்பது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
1953இல் யுனெஸ்கோவால் நடத்தப்பட்ட வல்லுநர்கள் மாநாட்டுக்குப் பிறகு 1957இல் ‘கல்விக்கான பயிற்றுமொழியாக வட்டார மொழி’ என்பதற்கான ஆவணத்தினை யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, வாதிகளுக்கான வழக்கறிஞர்கள் அறிந்திருக்கவில்லை என்பது வருந்தத்தக்கது. ஜோகவா பிஷ்மேமினன் நூலில் இரண்டாம் இதழில் தரப்பட்ட செய்திகள் இங்கு இணைக்கப் பட்டுள்ளன. (ஒட்டுமொத்த மூலத்தின்படி முழுவதும் பின்னர் கிடைக்கப் பெற்றது. மேலே சொன்ன இயல் அதன் உண்மைப்படிதான்). அந்த இதழில் ‘தாய்மொழி’ என்றால் என்ன என்பது குறித்துத் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது.
“ஒரு மனிதன் தன் தொடக்கக் காலத்தில் எந்த மொழியில் பழக்கம் வைத்திருக்கிறானோ, எது சிந்தனைக்கும் அதனை வெளிப்படுத்துவதற்கும் இயற்கையான கருவியாக அமைகின்றதோ அதுதான் அவனது தாய்மொழியாகும்.”
மேதகு நீதிபதிகளால் சொல்லப்பட்டபடி அது தாயார் மொழியோ தந்தையின் மொழியோ அன்று. ஐ.நா. ஆவணங்கள் மேதகு நீதிபதிகளால் மிகுந்த மரியாதையுடன் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அதனால், தீர்ப்பின் இதுபோன்ற பகுதிகள் மீண்டும் விவாதிக்கப்படும் பொழுது, வட்டார தாய்மொழியின் பயன்பாடு குறித்து யுனெஸ்கோ தந்த ஆவணங்களை நான் மேற்கோள் காட்டுவேன். தாய் எந்தமொழி பேசுகிறாரோ அதுதான் குழந்தையின் தாய்மொழி என்ற அடிப்படையிலேயே தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையை அலசியிருக்கிறது என்றே மேதகு நீதிபதிகள் கருதுகின்றனர். ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட அரசு ஆணைகளிலோ அல்லது அட்வகேட் ஜெனரலின் விவாதத்திலோ மேற்கண்ட கருத்து வாக்குமூலம் எங்கும் காணப்படவில்லை.
32ஆவது பத்தியில் முன் மழலையர் வகுப்புகள், அநேக அடுக்குகளைக் கொண்ட பல்லடுக்கு மாளிகைகளில் நடைபெறுவதாகவும், அந்த வகுப்புகளில் மாணவர்களும் ஆசிரியர்களும், ஆங்கிலத்தில்தான் பேசிக் கொள்கின்றனர் என்றும் வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். மேதகு நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த இரண்டு ஏற்புப் பதிவுகளுமே ஒரு மனப்பதிவு அடிப்படையில் அமைந்தவையே தவிர, உண்மையான புள்ளி விவரங்களின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. (அண்மையில் கும்பகோணம் சரசுவதி மழலையர் தொடக்கப்பள்ளியில் நேர்ந்த அவலம் குறித்தும், அந்தப் பள்ளியின் மிக மோசமான நிலை குறித்தும், அது ஒரு பள்ளியே அல்ல, ஒருவரது வீடு என்பது குறித்தும் கவனத்தில் கொள்ளவும்). அவர்கள் கூறும் பள்ளிகள் நகரங்களைச் சார்ந்திருப்பவை. (கும்பகோணம் நகரத்தில் இத்தகைய கோணல் மாணல்கள்). ஆனால் தமிழ்நாட்டில் மிக அதிகமான பள்ளிகள் கிராமப்புறத்தைச் சார்ந்தே அமைந்துள்ளன என்பது முக்கியமான குறிப்பாகும். தாய்மொழிகள் பலவாக இருப்பதாகவும், பல்வேறு மொழிச் சிறுபான்மையினருக்காகப் பல்வேறு பள்ளிகளைத் தொடங்குவதைவிட, ஒப்புக் கொள்ளப்படும் தீர்வு என்பது ஆங்கிலவழிப் பள்ளிதான் எனும் விவாதத்தை மேதகு நீதிபதிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இது, அடிப்படையில் ஒப்புக் கொள்ள முடியாத தீர்வாகும். காரணம், இந்திய மொழிகளின் வாக்கியக் கட்டமைப்புகள், இலக்கணங்கள், ஒலிப்பு முறைகளிலிருந்து ஆங்கிலம் வெகுதூரம் விலகி நிற்கிறது. பள்ளிகளில் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக்குவது, இந்திய மக்கள் தொகையை அயல் மொழிகளுக்கு அடிமைகளாக ஆக்கும் முயற்சியே தவிர வேறில்லை. இதில் மிக முக்கியமான குறிப்பு என்பது, பள்ளிகளில் தாய்மொழியை, குறிப்பாகத் தமிழைச் சிந்திப்பதற்கும், கருத்துப் பரிமாற்றத்துக்கும் வாய்ப்பான கருவியாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் இல்லாமலேயே போய்விடும். இந்தியா அரசியல் விடுதலை பெற்ற பிறகும் ஆங்கிலம் பயிற்றுமொழியாகத் தொடரும் என்றால் மொழியடிமைத்தனம் மட்டும் இங்கு தொடர்ந்து கொண்டேயிருக்கும். மோகன் குழு செய்துள்ள பரிந்துரையின் முக்கிய நோக்கமும், (மற்றும் அரசு ஆணையும்) தமிழர்களின் நல்வாழ்வு கருதியும், தமிழ் வளர்ச்சி கருதியுமே அமைந்துள்ளன.
இந்த முக்கிய நோக்கம் கவனத்திலிருந்து திசைதிருப்பப் பட்டுள்ளது. அரசு பல்வேறு துறையினரின் கருத்துக்களையும் பெற்று, பல்வேறு குழுவினரின் வேண்டுகோள்களையும் பரிசீலனை செய்துதான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் நடைமுறைக் குறைபாடுகள் மட்டுமே பெரிதுபடுத்தப் பட்டிருக்கின்றன.
மோகன் குழுவினால் இணைக்கப்பட்டுள்ள கர்நாடக, ஆந்திர அரசாணைகளும் தமிழக அரசின் ஆணையும், தங்கள் நோக்கத்தை ஒரே மாதிரியாகவே புலப்படுத்தியுள்ளன. அந்த மாநிலங்களில் பெரும்பாலும் சிறுபான்மை மொழியினரிடமிருந்து எந்தப் புகாரும் எழவில்லை.
மேற்கு வங்கத்திலும் இதே நிலைதான். இந்திய அரசுக்குள் அமைந்த பிறமாநில அரசாணைகளையும் கூர்ந்து பார்த்துத்தான் மோகன் குழுவும் தமிழக அரசும் செயற்பட்டுள்ளன.
35ஆவது பிரிவு, தமிழ்ப் பயிற்று மொழியைக் கடைப்பிடித்தால், வேலைவாய்ப்புச் சுருங்கிவிடும் என்பது குறித்துப் பேசுகிறது. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உலக மொழிகளைப் பயிற்று மொழிகளாகக் கொண்ட உருசியாவிலும், சீனாவிலும் ஏன் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கூட வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளது. கல்வியறிவு பெற்ற ஒவ்வொரு மனிதனின் விருப்பமும் ‘வௌ¢ளை சட்டை வேலை’ தான் என்றால், எந்த அரசுக்கும் போதுமான வேலைவாய்ப்பினை உருவாக்குவது இயலாத காரியமே ஆகும். தச்சுவேலை, கொத்தனார் வேலை, வியாபாரம் மற்றும் வேளாண்மைத் துறை, பிற அமைப்புச் சாராத் துறைகளிலும் உலகமெங்கும் ஆள் பற்றாக்குறை உள்ளதாகவே கருதப்படுகிறது. ஆலந்திலோ) நார்வேயிலோ அங்குள்ள பல்கலைக்கழகங்களிலோ அவரவர் தாய்மொழியில் பயிலும் எவரும், வயல் வேலைகளைச் செய்வதிலோ அல்லது கட்டுமானப் பணிகளைச் செய்வதிலோ எவ்விதத் தயக்கமும் காட்டுவதில்லை. அந்த நாடுகளில் கல்வியறிவு மிகுந்தவர்களிடமிருந்து அவர்கள் பார்க்கும் வேலைகளில் உள்ள சிறப்புத் திறமையும், வேலையின் நாகரிகத் தன்மையும் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றன.
மோகன் குழு அறிக்கையை வாசிக்கும் ஒவ்வொருவர்க்கும், அக்குழு, ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகப் படிப்பதைப் பெரிதும் வலியுறுத்தியிருப்பது தெளிவாக விளங்கும். யுனெஸ்கோவின் கருத்துப்படியே தமிழ் அல்லது தாய்மொழி வாயிலாகக் கல்வி பயில்வது மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேதகு நீதிபதிகள் தமிழ்நாட்டில் ஜப்பான், சீனம், உருசியன் மற்றும் ஆங்கில மொழிகளைப் பகுதிநேரமாகச் சொல்லித் தரும் பள்ளிகளைத் திறப்பது குறித்து வலியுறுத்தியிருக்கலாம். ஆங்கில வழியில் படித்த எல்லாரும் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் கூட வேலை வாய்ப்பைப் பெற்றுவிடவில்லை. இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இதுதான் நிலைமை.
இந்தப் பிரிவில் ஆங்கிலப் பயிற்றுமொழி வாயிலாகப் படித்த ஒருவன், தமிழ்வழியில் படித்த மாணவனைவிட எளிதாக ஓர் ஏவலர் (Attender) வேலையைப் பெற்றுவிடுவான் என்று காட்டப்பட்டுள்ளது.
மேதகு நீதிபதிகளால் ஒரு மொழியை ஒரு பாடமாகப் படிப்பதற்கும், அந்த மொழி வாயிலாகப் பிற பாடங்களைப் படிப்பதற்கும் உள்ள வேறுபாடு காட்டப்படவில்லை. மோகன் குழு அறிக்கையில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் படிப்பது குறித்து அழுத்தமாகவே சொல்லப்பட்டுள்ளது. தங்கள் தாய்மொழியைப் புறக்கணித்து, ஒரு பாடத்தை மற்றொரு மொழி வாயிலாகப் படிப்பதில் மாணவர்களிடையே நிச்சயம் ஒரு பின்னடைவு இருக்கும்.
தமிழகத்திற்கு வெளியே வேலை தேடிச் செல்பவர்களின் எண்ணிக்கை 3% அளவுதான் இருக்கும். 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இது ஒரு குத்துமதிப்பான எண்ணிக்கைதான். இக்கணக்கு பிற மாநிலங்களில் பேசப்படும் அவரவர் தாய்மொழி அல்லாத பிறமொழிகள் குறித்தும் விவரங்களைத் தருகிறது. தமிழ் நாட்டின் பல்வேறு கிராமங்களில்தான் மிகப்பெரும்பான்மையான மக்கள் வாழ்கிறார்கள். அவர்களது வாழ்க்கைப் போக்கினைக் கல்வியால் மட்டுமே மேலோங்கச் செய்ய முடியும். தாய்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படும்போது, இக்கல்வி அவர்கட்குக் குறைந்த முயற்சியிலேயே கிடைத்து விடுகிறது. ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு, ஆங்கிலப் பயிற்று மொழிக்குச் சார்பாக, இடம் பெயர்ந்த சிறுபான்மைக் கூறுபாட்டைப் பெரிதும் வலியுறுத்துகிறது.
தென்னகத்தின் நான்கு மாநிலங்களிலும் இந்தோ - ஆரியமொழி எனும் வடமாநில மொழிகளைப் பேசுவோர் எண்ணிக்கை குறித்துக் கணக்கெடுக்கப்பட்டபோது வடபுல மாநிலங்களில் தென்னக மொழியைப் பேசுவோரைவிடப் பலமடங்கு அதிகமாகவே இந்தோ-ஆரிய மொழியைப் பேசுவோரே இருப்பதைக் கண்டறிய முடிந்தது.
தென்மாநிலங்கட்கு இடம்பெயர்ந்து செல்லும் அளவுக்கு வட இந்தியர் பலரும் ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளிகளில் பயின்றதில்லை.
தீர்ப்பில் மேற்கோள் காட்டப்பட்ட ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ எனும் பழமொழி அண்மைக்கால மக்களுக்காகக் கூறப் பட்டதில்லை. நிச்சயமாக, இது ஆங்கிலேயர் காலத்திற்கு முந்தியவர்களுக்காகக் கூறப்பட்டது. செல்வம் சேர்ப்பது என்பது ஆங்கிலமொழி அறிவோ அல்லது வேறு உலக மொழி அறிவோ பெற்றதனால் ஏற்படுவது அன்று. தெற்காசிய நாடுகளில் பரந்து வாழ்ந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் செல்வச் செழிப்பு இதற்குச் சரியான எடுத்துக்காட்டாகும்.
37ஆவது பிரிவு, மொழி பற்றியும், பண்பாடு பற்றியும் குறிப்பிடுகிறது. தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி, பண்பாடு என்பது ஒருவர் தமிழ்வழியாகப் படிப்பதன் மூலம் பெறும் இலக்கிய அறிவிலோ, நடவடிக்கையிலோ, உடையிலோ வெளிப்படுத்தப்படுவது என்று அறிக்கையின் எந்த இடத்திலும் குறிப்பிடப்பட்டதாக நான் கருதவில்லை. அறிக்கையில் உள்ள அந்தப் பகுதியின் உண்மையான மொழிபெயர்ப்பு இதுதான். தமிழ் இலக்கியத்தை ஆழ்ந்து படிப்பதன் வாயிலாக ஒருவர் தமிழ்ப் பண்பாட்டைத் தனக்குள் நிலை நிறுத்திக் கொள்ள முடியும்.
அறிக்கையில் உள்ள பண்பாடு குறித்த கருத்துக்கு எதிராக ஆக்சுபோர்டு, வெப்ஸ்டர்ஸ் அகராதிகளில் கருத்துக்கள் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன.
எந்த ஆவணத்திலும் பண்பாட்டுக்குரிய வரையறையை எளிதாக எடுத்துக் காட்டிவிட முடியாது. நிச்சயமாக, ஆக்சுபோர்டு அல்லது வெப்ஸ்டர்ஸ் பொது அகராதிகள், அனைவரையும் ஒப்புக் கொள்ளும் படியான வரையறைகளை வழங்கிட முடியாது.
மொழி சார்ந்த பண்பாடு குறித்து, கல்வியில் வட்டார மொழியின் பயன்பாடு குறித்த யுனெஸ்கோ வெளியீட்டில் அழுத்தமாகவே சொல்லப்பட்டுள்ளது. 40ஆம் பக்கத்திலிருந்து அதனைக் காட்ட விரும்புகிறேன்.
காரணம், மொழி என்பது பண்பாட்டின் ஒரு கூறுபாடு, மக்களது ஆன்மாவின் வெளிப்பாடு. எனவே, பொது அகராதிகளை மேற்கோள் காட்டி, மோகன் குழுவின் கருத்தினைத் தரக்குறைவாக மதிப்பிடுவது வருந்தத்தக்கது.
மற்றொரு கருத்தும் பார்க்கப்படவேண்டும். ஒருவர் தான் தாய்மொழி வாயிலாகப் பெறும் கல்வியில் அறிவார்ந்த வசதிகள் மிகவும் குறைவு என்று கருதமுடியுமா? அமெரிக்காவின் புதிய மெக்சிகோ பகுதியில் ஸ்பானிஷ் மொழி பேசும் இடம் பெயர்ந்தோரைப் பற்றிய ஆய்வு இங்கு நமக்குப் பொருத்தமாக இருக்கும். ஆங்கிலத்தில் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்ட ஸ்பானிஷ் குழந்தைகளின் I.Q. மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால் ஸ்பானிஷ் மொழியிலும் ஆங்கிலத்திலும் கல்வி பயின்ற குழந்தைகளின் I.Q. அதிகமாகவே இருந்தது.
52ஆவது பிரிவு, பயிற்றுமொழியை மாற்றுவது குறித்து அரசாணைதான் பிறப்பிக்கப்பட்டுள்ளதே தவிர அது சட்டமாக்கப் படவில்லை என்று குறிப்பிடுகின்றது. சட்டமாக்கப் படுவதைப்போல, அரசாணை பிறப்பிப்பதும் சரியான வழிமுறையே ஆகும்.
உயர்நீதிமன்றத்தின் ஒருவர் அடங்கிய பெஞ்சு, இந்த நோக்கத்திற்கு அரசாணையே போதும் என்று ஒப்புக் கொண்டுள்ளது. கர்நாடகத்திலும் ஆந்திராவிலும் இத்தகைய கொள்கை முடிவுகள் அரசாணைகளாலேயே செயற்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஆணைகள் மோகன் குழு அறிக்கையுடன் இணைத்து அளிக்கப்பட்டுள்ளன. சட்டமன்றத்தின் வாயிலாக நிறைவேற்றப்படும் சட்டம் இந்த முடிவினை வலியோடு நிறைவேற்றிட உதவும் என்றாலும், இதில் அதிகப்படியான காலச் சுமைக்கும் ஏற்படும் ஒரு சிலவற்றில் மத்திய அரசின் ஒப்புதலும் தேவைப்படும். அதனால்தான் சட்டமன்றச் சட்டத்தை விட, அரசு ஆணையாகவேயே செயற்படுத்த முனைகின்றது.
56ஆவது பிரிவு அனைத்துலகச் சட்டத்தையும், பயிற்றுமொழி மாற்றத்திற்கு நகராட்சிச் சட்டம் இயற்றப்படவேண்டிய தேவையையும் அலசுகிறது.
ஐநாவின் மனித உரிமைகள் சங்கம் குழந்தைகள் கல்வி கற்பதற்கான உரிமைகளை மட்டுமே எடுத்துச் சொல்கிறது. அதே ஐ.நா. அதனுடைய படைப்புகளில் மற்றோர் சங்கமான யுனெஸ்கோவுக்குக் கல்வியில் பயிற்றுமொழியின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக 1953இல் ஒரு தீர்மானத்தின் வாயிலாக அதிகாரம் அளித்துள்ளது. கல்வித் துறையின் வல்லுநர்களும், மொழியியலாளர் களும், சம்பந்தப்பட்ட பிற துறையினரும், இத்துறையில் பெரிய அளவில் களப்பணி செய்த பலரும் கூடி ஆராய்ந்து அடிப்படைக் கல்வியின் அடித்தளமாகிய 1953, கல்வியின் வட்டார மொழிகளின் பயன்பாடு, எனும் ஓர் ஆவணத்தை உருவாக்கினார். அந்த வரைவில் ஒரேயடியாக ஒரு கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. அது இதுதான். தாய்மொழியில் கல்வியை வழங்கிட எல்லாவகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது மிக முக்கியமானதாகும்.
அந்தத் தெளிவான அறிவிப்போடு யுனெஸ்கோ தாய்மொழி என்பதற்கு அருமையான விளக்கமும் தந்துள்ளது.
அரசியல் சட்டத்தின் 350அ பிரிவு பின்வருமாறு கூறுகிறது.
மொழிச் சிறுபான்மைத் தொகுதியினரைச் சார்ந்த சிறுவர்களுக்குக் கல்வியின் தொடக்க நிலையில் தாய்மொழியில் கற்பிப்பதற்காகப் போதிய நலப்பாடுகளுக்கு வகை செய்வது மாநிலங்களில் உள்ள உள்ளுர் அதிகார அமைப்பு ஒவ்வொன்றின் பெருமுயற்சியாக இருக்க வேண்டும். குடியரசுத் தலைவர், அத்தகைய நலப்பாடுகளை உறுதியாகக் கிடைக்கச் செய்யத் தேவையானவை அல்லது முறையானவை எனத் தாம் கருதும் ஏவுரைகளை மாநிலம் எதற்கும் பிறப்பிக்கலாம்.
75ஆவது பிரிவில், உச்சநீதிமன்றத்திலும் பிற நீதிமன்றங்களின் தீர்ப்புகளிலும் மேதகு நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கல்வி பெறுவதற்கான உரிமை என்பது அடிப்படை உரிமையாக, இது பயிற்றுமொழியைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை உள்ளடக்கியதாகும். இந்த உரிமை தங்கள் குழந்தைகளின் சார்பில் அவர்தம் பெற்றோர்களால் செயற்படுத்தப்படுவதற்கு உரியதாகும்.
குழந்தைகள் மீது பெற்றோர்க்குரிய உரிமை என்பது இயன்றவரை அவர்கள் நல்வாழ்வு பெறுவதற்கான வகையில்தான் அமையும். ஆனால் அவர்களது விலகிச் செல்லும் வளர்ச்சி குறித்தது ஆகாது. தாய்மொழிக்கு மாறாக வேறு மொழியைப் பயிற்று மொழியாகத் தேர்ந்தெடுத்தால், அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் காயங்களால் படிப்பைப் பாதியிலேயே விட்டு விடும் தீங்கு பற்றியும், அயல்மொழி வாயிலாகப் பயில்வதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பியல் முறையிலான விளைவுகள் குறித்தும், யுனெஸ்கோ ஆவணம் விரிவாக விவாதித்துப் பதிவு செய்திருக்கிறது. துரதிருஷ்டமாக வாதிட்ட வழக்கறிஞர்களும் மேதகு நீதிபதிகளும் இந்த ஆவணம் பற்றி அறியாமல் இருக்கிறார்கள். மேலும் வயது வந்தோரில் 35%னர் இந்த நாட்டில் இன்றும் கல்வி அறிவு பெறாதவர்களாகவே இருக்கும் நிலையில் தங்கள் குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் கல்வி மொழி எது என்பது குறித்துக் காரண காரியங்களோடு சிந்தித்துத் தேர்ந்தெடுப் பவர்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
டார்வின் கோட்பாட்டிலிருந்து தீர்ப்பு ஒரு மேற்கோள் காட்டியுள்ளது. ‘மாறுதலுக்கு இடமளிக்கும் நுண்கூறுகள்தாம் காலப்போக்கில் நிலைத்து நிற்கும்‘ என்பது அது. இது கூட ஒரு வகையில் யுனெஸ்கோ வல்லுநர்கள் கண்டுபிடிப்புகளை மேலும் வலுவுள்ளதாக்கிறது. அவர்கள் கண்டுபிடிப்பு இதுதான். தொடக்க நிலை வகுப்புகளில் தாய்மொழிக் கல்வி என்பதும் கூட நுண்கூறுகள் தங்கள் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு மாறுதல்தான்.
77ஆவது பிரிவு ஆங்கிலப் பயிற்றுமொழி குறித்தும், அப்பயிற்று மொழியில் படிப்பதில் சில மாணவர்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள் குறித்தும் பேசுகிறது. ஆனால் தீர்ப்பு வலியுறுத்திப் பேசுவது நகர்ப்புற மாணவர்கள் குறித்து அதிக எண்ணிக்கையில் உள்ள கிராமப்புற மாணவர்களைப் புறக்கணித்தே இத்தீர்ப்பு அமைகின்றது. ‘தினமலரி’ல் வந்துள்ள செய்தியின்படி, நகர்ப்புறத்திலும், கிராமப்புறத்திலும் தாழ்த்தப்பட்ட வகுப்பு, பழங்குடியினர், பிற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் தாம் ஆங்கிலத்தில் பெருமளவு தோல்வியடைந்து தனிப்பயிற்சிக் கல்லூரிகளின் உதவியை நாடுபவர்களாக இருக்கிறார்கள். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலப் பயிற்றுமொழி எதில் போய் முடிகிறது என்றால் பெரும்பாலான முற்பட்ட வகுப்பினரை மேம்பட்ட வகுப்பினராக மாற்றவும், பெரும்பாலும் கிராமப்புறத்தில் வாழ்கின்ற பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அடங்கிய ஓர் ஏழை வகுப்பினரை உருவாக்கவுமே ஆகும். உண்மையில் நகர்ப்புற மாணவர்களை விடக் கிராமப்புற மாணவர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
மொழி வல்லுநர்கட்கு மிகவும் பழக்கமான முக்கியமான கூறுபாடு ஒன்றினை நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. தனிநபர் வருமானத்தில் உயர்ந்துள்ள வளர்ச்சிபெற்ற நாடுகள் எல்லாமே தங்கள் மாநில மொழியைத்தான் பயிற்றுமொழியாகக் கொண்டுள்ளனவே தவிர, எந்த ஒரு அயல்மொழியையும் அல்ல. அமெரிக்கா, சப்பான், சீனா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, (இசுரேல் நாடுகூட ஈப்ரு மொழியில் தான் முழுமையான கல்வியையும் வழங்குகிறது) போன்ற நமக்கு நன்கு அறிமுகமான பெரிய நாடுகள் எல்லாமே தொடக்க வகுப்புகளிலிருந்து பல்கலைக் கழகத்தின் உயர் வகுப்புகள் வரை தங்கள் தேசிய மொழிகளைத் தவிர வேறெந்த மொழிகளையும் பாடமொழியாக வைத்திருக்கவில்லை.
பயிற்றுமொழியாகத் தாய்மொழியாம் தமிழை வலியுறுத்தும் அதே நேரத்தில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலம் பயில்வதை மேலும் வலுப்படுத்தவேண்டும் என்று மோகன் குழு செய்த பரிந்துரை நீதிமன்றத்தால் கருதப்படவே இல்லை என்பதுதான் வருந்தத்தக்க உண்மையாகும்.
தீர்ப்பின் 157ஆம் பக்கத்தில் குறிப்பிட்டபடி, கருநாடக மாநிலத்தின் மொழிக்கொள்கை என்பது ஓர் அரசாணையால் தான் செயற்படுத்தப்பட்டுள்ளதே தவிர, சட்டத்தால் அல்ல.
91ஆவது பிரிவின் கடைசியில் குறிப்பிட்டபடி உச்சநீதிமன்றத்தின் முடிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் ஒரு பள்ளியில் பயிலும் ஒரு மாணவன் வட்டார மொழியை அறிந்திருக்கத் தேவையில்லை என்கிறது.
இது ஒரு தொலைநோக்கோடு கூடிய முடிவாகும், ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் பெஞ்சு, இந்தக் கருத்து பயிற்று மொழியைக் குறித்தல்ல என்று கருதிவிட்டது. ஒரு வட்டார மொழியை ஒரு மாநிலம் மேம்படுத்துவது, அந்த மாநிலத்தின் கடமை என்பதை ஒப்புக் கொண்டபிறகு, அம்மொழி ஒரு பாடமாக மட்டுமே சொல்லித் தரும் பயிற்றுமொழியாகக் கொள்ளப்படவேண்டுமா என்பதை வல்லுநர்கள் தாம் முடிவு செய்யவேண்டும்.
வட்டார மொழியை மேம்படுத்துவது என்பது ஒவ்வொரு மாநிலத்தின் விருப்பார்ந்த கடமையாகும் என்று கூறும் போதே, பள்ளிகளில் கன்னடத்தைப் பயிற்றுமொழியாக வைத்துக் கொள்ளக்கூடாது என்று கர்நாடக மாநிலத்தின் மீது உச்சநீதிமன்றம் எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை.
கல்வி பெறுவதற்கான உரிமை ஒவ்வொருவர்க்கும் அடிப்படை உரிமை என்பதனை மேதகு நீதிபதிகள் பயிற்றுமொழியைத் தேர்ந்தெடுப்பதும் அதில் அடங்கும் என்னும் போக்கில் பொருள் கொண்டுள்ளார்கள். பிற மாநிலங்களில் இதுபற்றிய நீதிமன்றத் தீர்ப்புகள் இருக்கக்கூடும். ஆனால் அந்தத் தீர்ப்புகள் எல்லாம் தாய் மொழியானது ஒவ்வொரு தனிமனிதனின் சிந்தனைக்கும், அதனைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லும் திறமைக்கும் கிடைத்த இயற்கையான சாதனம் என்று யுனெஸ்கோவின் அறிக்கைகள் எவற்றையும் கருதாமல் அளிக்கப்பட்ட தீர்ப்புகளாகும். தன் தாய்மொழி எது? என்று சொல்லும் முழு உரிமை தொடர்புடைய அந்தத் தனிமனிதனுக்கு மட்டுமே உண்டே தவிர, வேறெவர்க்கும் அந்த உரிமை இல்லை. மோகன் குழு அறிக்கை ஆங்கிலத்தை ஒரு பாடமாக வல்லமையோடு சொல்லிக்கொடுக்க வற்புறுத்துகிறது. வட்டார மொழியின் வளர்ச்சி என்பது ஒரு மாநில அரசின் முழுப்பொறுப்பு என்பதால், அனைத்து அறிவுக் கூறுகளையும் விரிவாக எடுத்துச் சொல்லும் வகையில் அம்மொழி பயிற்றுமொழியாக்கப்படாவிட்டால், வட்டார மொழிகள் பெரும் வளர்ச்சியடைய வாய்ப்பே இல்லை. மற்றபடி, அந்த வட்டார மொழிப் புதினங்கள் மற்றும் சிறுகதைகளுக்கு இடந்தரும் மொழியாகத்தான் இருக்கும். அறிவியல் மற்றும் கலை சார்பான கோட்பாடுகளுக்கும், சொல்லாட்சிகளுக்கும் மிகச் சிறிய இடமே கிடைக்கும்.
தமிழ் இலக்கிய மொழியாக நிற்குமே தவிர, வாழ்வியல் மொழியாக ஆகாமல் போய்விடும்.
இந்திய நாட்டின் தந்தை மகாத்மா காந்தி, கவியரசர் தாகூர் ஆகியோரது கருத்துக்கள் அடங்கிய படிகள் இணைக்கப்பட்டுள்ளன. மோகன் குழுவினரால் தாய்மொழியைப் பயிற்றுமொழியாக்கிட வலியுறுத்தப்பட்ட உயரிய குறிக்கோளுக்கு வலுச்சேர்க்கவும், உரிய ஆதாரமாகவும் அவை இங்கு இணைக்கப்பட்டுள்ளன என்று அறிஞர் வ.அய்.சு. அவர்களின் விவாதங்கள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. (தமிழ்க்குடிமகன்.2007:27)
வழக்கு நிறுவையில் உள்ளது
உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் உள்ளது என்பதுதான் இன்றைய நிலை. இதன்பிறகு கலைஞர் ஆட்சிக்கு வந்து முதல்வரான பிறகு தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகள் தமிழில் தொடங்கப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளில் (சென்னை, அரியலூர், பண்ருட்டி, இராமனாதபுரம், திருக்குவளை, திண்டுக்கல், பட்டுக்கோட்டை, நாகர்கோயில், திண்டிவனம், திருச்சி, தூத்துக்குடி) மட்டும் சிவில், மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் தமிழ்வழிப் பொறியியல் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு (2008) அதில் 900 மாணவர்களை அனுமதிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டிலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கல்லூரிகளில் தமிழ் வழி பொறியியல் 2010இல் தொடங்கப்பட்டது. இந்நிலையில் பாடப் புத்தகங்கள் முழுமையாக தயாராகவில்லை. தயாரித்த நூல்களும் கையேடுபோல் இருந்தன.
இப்படியான ஆட்சி மாற்றங்களினால் தமிழ் வளர்ச்சி காலம் காலமாக தொடர் பேரிடிகளை காணவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது, கவலை அளிப்பதாக உள்ளது.
- டாக்டர் சு.நரேந்திரன், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.