கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்று ஆதி மகள் அவ்வை என்ன அர்த்தத்தில் என்ன சொல்லிச் சென்றாரோ தெரியவில்லை. இன்றைய சூழலில் கல்விக் கூடங்களில் குழந்தைகளைச் சேர்ப்பவர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். நாடு விடுதலை பெற்றபோது இரண்டே இரண்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான் இருந்தன. ஆனால் இன்றைக்கு ஆற்று மணலைக்கூட எண்ணி விடலாம் எத்தனை நர்சரி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இருக்கின்றன என்பதை மட்டும் எண்ணவே முடியாது.

திராவிட இயக்கங்கள் திட்டமிட்டு ஆங்கில மோகத்தை வளர்த்ததாலும், கல்வித்துறையை தனியார் துறைக்கு திறந்துவிட்டதாலும் மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடங்கள் வகைதொகையின்றி பெருத்துள்ளன. திமுக அரசு மிகவும் காலதாமதமாக ஒரு குழு அமைத்து இந்த பள்ளிக் கூடங்களுக்கான கல்விக் கட்டணத்தை தீர்மானித்து அறிவித்துள்ளது. ஆனால் கல்வி முதலாளிகள் இந்தக் கட்டணம் கட்டுபடியாகாது என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பள்ளிக்கூடத்தை திறக்கவே மாட்டோம் என்றார்கள். இப்போது சற்று இறங்கி வந்து அரசிடம் முறையீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். முதல்வரும் முறையீடுகள் கவனிக்கப்படும் என்று கருணை பார்வை வீசியுள்ளார். ஆனால் கட்டணம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பல பள்ளிகளில் வசூல் வேட்டை முடிந்துவிட்டது. வேறு சில பள்ளிகள் மளிகை கடை சிட்டை போல ஏதாவது ஒரு பெயரில் வசூலித்துவிடும் திட்டத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

துவக்க கல்வி துவங்கி உயர் கல்வி வரை கந்து வட்டிக்காரர்கள் போல கறாரான வசூலில் ஈடுபட்டுள்ளனர் கல்வித்  தந்தையர்கள்.  பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகள் மட்டுமே படிப்பு என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதால் தனியார் சுயநிதி கல்லூரிகளில் பண மழை பொழிகிறது.

ஒரு காலத்தில் சாதியின் பெயரால் கல்வி மறுக்கப் பட்டது. இன்றைக்கு எளிய மக்களுக்கு காசின் பெயரால் கல்வி மறுக்கப்படும் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. உள்ளுர் கொள்ளையர்கள் போதாதென்று அந்நிய பல்கலைக்கழகங்களுக்கும் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு விடுத்திருக்கிறது மத்திய அரசு. கல்விச் சந்தையில் நடக்கும் களேபரத்தில் காலில் போட்டு மிதிக்கப்படுகிறது எதிர்காலத் தலைமுறையின் வாழ்க்கை.

ஆலை வாசலில் மட்டுமின்றி கல்விச் சாலை வாசல் களிலும் போராட்டக்கொடி உயர்ந்து பறக்க வேண்டிய நேரமிது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர் சங்கங்கள், தொழிற் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துப்பகுதி உழைப்பாளி மக்களும் உயர்த்தி பிடிக்க வேண்டிய கொடி இது.

 

Pin It