உண்மையில் இந்தப் பேச்சு இப்படித் தான் ஆரம்பித்திருக்க வேண்டும். “ரிடையர்ட் ஆன பிறகு என்ன செய்யப் போறீங்க...?”

“எப்படியோ மாறிப் போனது. எதனா லென்று தெரியவில்லை. பதிலாக வேறொரு பொருத்தமில்லாத அல்லது அசட்டுத் தனமான என்று கூடச் சொல்லலாம். கேள்வியைக் கேட்டு வைத்தாள் சுப்புலெட்சுமி. அது அத்தனை சுவாரஸ்யப்படவில்லை வெங்கட்ரத்னத்துக்கு. ஆனால் அதையே வேறொரு வகையாக, தோசையைத் திருப்பிப் போடுவது போல நினைத்துப் பார்த்துக் கொண் டார்.

பணியிலிருந்து ஓய்வுபெறப்போகும் நாளன்று சார்ந்திருந்த ஊழியர் சங்கத்துக்காரர்கள் தனக்கு என்ன செய்வார்கள் என்பதாக! ஒரு வகை யில் பார்த்தால் இதுவும் அபத்தமான கேள்விதான். இப்படி நினைப்பே தனக்கு வந்திருக்கக் கூடாது தான். என்ன செய்வது? வந்துவிட்டது. வயதாகி விட்டால் கூர்கெட்டுவிடும் என்பார்களே, அப்படி ஆகிவிட்டதோ? ஒன்றுமே செய்யாவிட்டால்தான் என்ன? அது தவறாகிவிடுமா? இப்படி நினைக்க முற்பட்டால் எதையோ எதிர்பார்த்துத்தான் தான் சங்கத்தில் இருந்ததாகவும், பணியாற்றியதாகவும் அல்லவோ ஆகும்? வெட்கமாகத்தான் இருந்தது.

எது உந்துதலாய் இருந்தது இதற்கு? இரண்டு நாளாய் அவர் சம்சாரம் போட்டுப் படுத்தும் பாடுதான் காரணம். தான் எது சார்ந்து எதில் மூழ்கி முக்குளித்து காலம் காலமாய்க் கரைந்து கிடக்கிறோமோ அது தொடர்பான சிந்தனைகள்தானே தனக்கு உதிக்கும்? ஆனாலும் இந்தக் கேள்வியில் ஒரு சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது அவருக்கு.

வெறுமே நினைத்துப் பார்ப்பது ஒரு குற்றமா? கனவிலே காதலிப்பது போல! இப்படி யெல்லாம் கூட நினைப்பது இந்தச் சிந்தனையைக் கொச்சைப்படுத்துவதாகத்தான் அமையும். “எல்லோரும் என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவோ, மாலை போட்டு வரவேற்க வேண்டும் என்பதற்காகவோ நான் சிறைக்கு வரவில்லை... பிறந்த பொன்னாட்டிற்கு ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டிய கடமையைத்தான் நான் செய்தேன்.”

கப்பலோட்டிய தமிழன் படத்தில் வ.உ.சி. சிறையிலிருந்து மீண்டு வெளியே வந்து சொல்லும் காட்சி இது. “நான் வந்திருக்கிறேன் பிள்ளேவாள்.... இந்தத் தமிழ்நாடே வந்திருக்கிறது உங்களை வரவேற்க...” சிவாவும், வஉசியும் அருகருகே சந்தித்து, ஆரத் தழுவிக்கொண்டு கண்ணீர் உகுக்கும் காட்சி இது. கல் நெஞ்சும் கரைந்து போகும்.

திரைப்படங்கள் மனித மேன்மைக்கு, சமுதாய மேன்மைக்குப் பயன்பட்ட காலம் அது. அந்த அளவுக்கெல்லாம் கூட நினைத்துப் பார்ப்பதற்கே இல்லை. என்ன செய்துவிட்டோம் பெரிதாய்?

‘என்ன தோழர் இப்படிச் சொல்லிட்டீங்க..? நீங்களெல்லாம் எங்களுக்கு எவ்வளவு பெரிய வழிகாட்டி? எத்தனை பேரணி? எத்தனை உண்ணாவிரதம்? எத்தனை கேட் மீட்டிங்? எத்தனை ஸ்டிரைக்? கணக்கிலெடுக்க முடியுமா? ஒண்ணு விடாம எங்களை லீட் பண்ணியிருக்கீங்களே? உங்களை வச்சித்தானே நாங்களே இதையிதை இப்படியிப்படி நடத்தணும்னு கத்துக்கிட்டோம்! ஒரு செயற்குழு, ஒரு பொதுக்குழு, மாவட்ட மாநாடு, மாநில மாநாடு, இதையெல்லாம் எப்படித் திருத்தமா, முறையா நடத்தணும்னு தெரிஞ்சிக்கிட்டதே நீங்க கொடுத்த பயிற்சி யிலிருந்துதானே?’

எதிரே நின்று நண்பர்கள் சொல்வது போல் ஒரு பிரமை. இப்படியாக உணரப்படுவதில் ஒரு திருப்தி. மனச் சாந்தி, சாதாரண மனசுக்கு இத மளிப்பதுதானே இவைகள்? அப்படியென்றால் இந்த முன் நடவடிக்கை களிலெல்லாம் தனக்குள்ளே பெருமையும், பெருமிதமும் இருப்பதுபோல்தானே? அதில் தவறில்லைதான். அது ஒரு பெரிய இயக்கத்தின் வழிகாட்டியாக இருந்து நிலை நின்றதற்கான அடையாளம். அதில் பெருமைப்பட்டுப் பெரு மிதம் கொள்வதில் என்ன தவறு?

ஆனால் அதுபற்றித் தான் கர்வம் கொள் ளுதலோ, தற்பெருமை கொள்ளுதலோ, பிறரிட மிருந்து எதிர்பார்த்து நிற்றலோதான் அநாகரிகம். ‘அடேயப்பா, வெறும் நினைப்பிற்கே இத்தனை பரிசீலனையா?’ தனக்குத்தானே சிரித்துக் கொண்டார் வெங்கட்ரத்னம்.

இந்த மாதிரி ஒரு எண்ணம் ஏன் தன் மனதில் தோன்றியது? இதுநாள்வரை இப்படியெல்லாம் நினைத்துப் பார்த்ததில்லையே? ஓய்வுபெறப் போகிறோம் என்கிற பயம் எழுப்பும் கேள்விகளா இவை? ஓய்வுபெறுவது என்பதே பயத்தை உண்டுபண்ணுவதாக ஏன் அமைகிறது? உண்மை யிலேயே பயம்தானா அது? அல்லது வேறு ஏதாகிலுமா? பலருக்கும் பலவாறாக ஏற்படும் ஸ்திரமற்ற தன்மைகள்தான் இப்படி யெல்லாம் யோசிக்க வைக்கிறதோ?

ஓய்வுபெற்றவர்கள் எல்லாம் அடுத்தாற் போல் சாகக் கிடப்பவர்கள் என்பதாக ஒரு உணர்வு சொல்லியும் சொல்லாமலும், எண்ணியும் எண்ணா மலும், பரவிக்கிடக்கிறதே... அது எழுப்பும் சஞ்ஜலமா? அந்த அதிர்வு அலைகளா இவை? என்னவெல்லாம் இந்த மனசு எண்ணிப் பார்க்கிறது?

‘ஏங்க, உங்க ஓய்வும்போது ஆபீஸ்ல உங்க ளுக்கு என்ன செய்வாங்க?’ -இதுதான் சுப்புலெட்சுமி கேட்ட கேள்வி.

இதென்ன புதுக்கவலை? - இவருக்குக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. முன்போ லெல்லாம் பகலில் வெளியே சுற்றவா முடிகிறது? காலை பதினோரு மணிவாக்கில் ஒரு குட்டித் தூக்கம் போட்டால் தேவலாம் என்று வருகிறதே? ஆபீசிலேயே உட்கார்ந்தமேனிக்கே இப்போ தெல்லாம் தூங்குவதைத் தவிர்க்க முடியவில்லை. திறந்த பேனா கை நழுவி விழுந்து உருண்டதை இரண்டு மூன்று முறை சொல்லிவிட்டார்கள்.

‘ரெக்கார்ட் ரூம்ல வேணாப் போயி கொஞ்ச நேரம் படுத்திருந்திட்டு வாங்களேன் சார்...’ தான் பார்க்க அப்படித் தூங்கிய சிலரை இவர் திட்டியிருக்கிறார். இப்போது யாரெல்லாம் மனதுக்குள் திட்டுகிறார்களோ? ஓய்வு என்பது கட்டாயமாக நிகழப்போகிற ஒன்று. அதில் என்ன நடந்தால் என்ன? ஏதாச்சும் செய்தால்தான் ஆச்சா? இவள் ஏன் இந்தக் கேள்வி கேட்கிறாள்?

“என்ன செய்யணும்னு எதிர்பார்க்கிறே?”- மனைவியின் கேள்விக்குப் பதில் கேள்வி போட்டார் இவர்.

“இல்ல, வழக்கமா என்ன செய்வாங்கன்னு கேட்டேன்...”

“எனக்குத் தெரில.... வேணும்னா கேட்டுச் சொல்றேன்...” சொல்லிவிட்டு அவளையே கூர்மையாகப் பார்த்தார்.

“சே......சே........ அதுக்காகவா கேட்டேன்... தெரிஞ்சிருக்குமே...சொல்லுங்களேன்னு கேட்டா... இதப் போய் வாய் விட்டா கேட்பாங்க...?”

“எனக்கு எப்படித் தெரியும்? செய்வாங்கன்னு எதிர்பார்க்கச் சொல்றியா? அது அநாகரிகமில்லே? நினைச்சுப் பார்க்கவே அசிங்கமாயில்லே? இந்தக் கேள்வியே தப்பாக்கும்...”

“ஆம்மா, நீங்க எல்லாத்துக்கும் இப்படித் தான் சொல்வீங்க...”

“ஆமா சுப்பு, வேறென்ன சொல்லச் சொல்றே? நல்லா யோசிச்சுப் பார்த்தேன்னா இது ஒரு ரயில் ஜர்னி மாதிரிதான்.... அந்தந்த ஸ்டேஷன் வந்தவுடனே அவனவன் இறங்கிப் போயிட வேண்டிதான்... இடைப்பட்ட பயணத்துல எல்லா ருமா மனசுல நிக்கிறாங்க. ஒரு சிலர்தானே.... அதுபோல அவனவன் சொந்த விருப்பத்துல எந்தளவுக்குத் தன்னைப் பொது நலன்கள்ல ஈடுபடுத்திட்டிருக்கோம்ங்கிறது அவனவன் சம் பந்தப்பட்ட விஷயம். அவ்வளவுதான்...”

“ஏனிப்படி பிடிப்பில்லாமப் பேசுறீங்க? இத்தனை வருஷம் ஒண்ணோட ஒண்ணாப்பழகின இடமில்லியா?”

“அதனாலதான் சொல்றேன்... முழுசா, சிக்குன்னு பிடிச்சிட்டதனால வர்ற பேச்சு இது. தாமரை இலைத் தண்ணி மாதிரி நம்ம மனசை வச்சிட்டதுனால வந்த பேச்சு. எவனுக்கு முழுசா தன்னை ஈடுபடுத்திக்கத் தெரியுமோ அவனாலதான் எதையும் விட்டு முழுசா விலகவும் முடியும்...”

“நான் எதுவோ கேட்டா நீங்க எதுவோ சொல்றீங்க.... உங்க பேச்செல்லாம் யாருக்குப் புரியுது...”

“அடி இவளே...! உன் விருப்பந்தான் என்னன்னு சொல்லேன். நான் உனக்கு அதைச் செய்திட்டுப் போறேன்.... அவ்வளவுதானே?”

“லூஸ்தனமா இருக்கு நீங்க பேசுறது...”

“இதுவரைக்கும் என் சர்வீஸ்ல நிறையப் பேருக்கு என் பேச்சு அப்டித்தான் இருந்திருக்கு...”

தன் நகைச்சுவையை எண்ணித் தானே சிரித்துக் கொண்டார் வெங்கட் ரத்னம்.

“ஓய்வு பெறும்போது ஒரு பணியாளரைக் கௌரவப்படுத்துற விஷயம்ங்கிறது மரியாதை, அன்பின்பாற்பட்டது. அதுக்கு விலை வைக்க முடியுமா? இதப்போய் ஒரு கேள்வியாக் கேட்கிறியே?”

“கேட்டா என்ன? உங்ககிட்டேதானே கேட் கிறேன்? உங்க ஆபீஸ்ல போயா கத்தினேன். சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்லுங்கன்னா, ரொம்பத்தான் பிகு பண்றீங்களே?”

சுப்புவின்மீது கழிவிரக்கம்தான் பிறந்தது இவருக்கு. பாவம் அவள்! இத்தனை காலம் தன்னோடு ஈடுகொடுத்து வந்திருக்கிறாள். அதுவே பெரிய சாதனைதான். சங்கம், சங்கம் என்று அலைந்த தன்னை சுதந்திரமாய் உலவவிட்டவள்.

“இது தேறாதுன்னு தண்ணி தெளிச்சு விட்டுட்ட நம்மள...” என்று அடிக்கடி இவரே தன்னைக் கேலி செய்து கொள்வார். எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகளில் பயந்து, பயந்து தனியாளாய்க் கிடந்து சமாளித் திருக்கிறாள். அவற்றை நினைவு கூராமல் இருக்க முடியாது.

“எங்கடி உன் புருஷன்...? எங்க மேயப் போயிருக்கான்? நாங்க வர்றது தெரிஞ்சு பின் பக்கமா ஓடிட்டானா? விடமாட்டோம்டி அவன...” -உள்ளே புகுந்து சட்டி பானைகளை யெல்லாம் அடித்து உருட்டி பயப்பிராந்தியை உண்டு பண்ணிய காலகட்டத்தில் கூட தனியே நின்று சமாளித்தவள்தான்.

“தனியா இருக்கிற வீட்டுப் பொம்ளைட்ட வந்து இப்டிப் பேசுறீங்களேய்யா... நீங்களெல்லாம் அக்கா தங்கச்சிக கூடப் பொறந்தவுக தானே? உங்களுக்கெல்லாம் மனச்சாட்சி இருக்கா இல்லையா? உங்களுக்கும் சேர்த்துத்தான போரா டுறாங்க அவுங்க...” - என்று பதில் பேசிய மறு கணம் குண்டாந்தடியால் விளிச்சென அடி வாங்கியவள்.

அந்த இழுப்புக்காயம் இன்னும் அந்தக் காலில். கூடவே நாவினால் சுட்டவடு வேறு. ஆறாத, மறையாத வடுக்கள் அவை. அப்படிப் பட்டவளுக்குத் தன்னைப் பார்த்து இப்படியொரு சாதாரணக் கேள்வியைக் கூடக் கேட்க உரிமையில்லையா என்ன?

ரொம்பவும் பாமரத்தனமான, வெள்ளந்தி யான கேள்விதான். பெரிதுபடுத்த ஒன்றுமில்லை. தன்னோடு முப்பது வருஷத்துக்கு மேலாகக் குப்பை கொட்டியவள். தன் ரத்தத்தோடு ரத்தமாய், நிணத்தோடு நிணமாய்க் கலந்துற்றவள்.

ஆபீசிலேயே கேட்க ஆரம்பித்து விட்டார்கள். என்ன சார், உங்க ஓய்வுச் சாப்பாடு எப்போ? என்று. என்னவோ எப்ப கல்யாணச் சாப்பாடு போடப்போறீங்க? என்பதுபோல. அதிர்ந்து  போனார் இவர். இதென்ன வழக்கம்? என்றுமில்லாத வழக்கம்?

“சாப்பாடா? நீங்கல்ல ஓய்வு பெறுகிற வருக்குப் பார்ட்டி கொடுத்து அனுப்பணும்?” - அசராமல் கேட்டார் இவர்.

“ம்.....ம்....ம்....... அதெல்லாம் அந்தக் காலம்..... நீங்க எங்களுக்கெல்லாம் சாப்பாடு போடணும். அப்பத்தான் நாங்க பதிலுக்குச் செய்வோம் உங்களுக்கு....” இந்தக் கலாச்சாரம் எப்படிப் பரவியது? எங்கேயிருந்து முளைத்தது? ஏன் முளைத்தது? யோசிக்கப் புகுந்தால் நிறைய உள்ளே போக வேண்டும். இன்று காலை சுப்பு கிளப்பிய கேள்வி இவ்வளவு தூரத்திற்குத் தன்னை இழுத்துக் கொண்டு வந்து விட்டதாகத் தோன்றியது.

இருப்பது இன்னும் பத்தே பத்து நாட்கள். அடுத்த மாதம் இதே தேதியில் தான் ஓய்வு பெற்று இருபது தினங்கள் கடந்திருக்கும். நாளும் பொழுதும் யாருக்காகக் காத்திருக்கும்? “ரிடையர்ட் ஆன பிறகு இந்தப் பக்கம் வருவீங்களா சார்?” சிரித்துக் கொண்டே கேட்ட வரைவாளர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து பதிலுக்குப் புன்னகைத்தார் இவர் :

“உங்க கேள்வியிலேயே அந்தச் சந்தேகம் இருக்கு போலத் தெரியுதே?”

“அதுதான் உங்க பதில் சிரிப்பே சொல்லுதே....!” என்றார் அவர்.

“ஏதோ ஒண்ணு ரெண்டு நாள் வந்தா சரின்னு விடுவீங்க... டீ சாப்பிடுங்க சார்னு கூடச் சொல்லுவீங்க...தினசரி வந்து டேராப் போட்டா.... இவன் ஏன் இப்படிக் கழுத்தறுக்கிறான்னு தோணும்? அது தேவையா?”

இதற்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை. மற்ற சிலரும் பேசாமல்தான் இருந்தனர். இந்தக் கூற்றை யாரும் மறுக்கவில்லையே? அது மரியாதை நிமித்தமா? அல்லது நிஜமான ஏற்பா? யதார்த்தம் அதுதானே? எப்படியானால்தான் என்ன? அதுதான் சத்தியமான விஷயம். நம்மை நாமே கௌரவப் படுத்திக்கொள்வதென்றால் ஒதுங்கியிருப்பதுதான் மேல். முடிவு செய்து கொண்டிருந்தார் வெங்கட் ரத்னம்.

உள்ளே எட்டிப்பார்த்தார். சுப்புலெட்சுமி சமையலில் ஈடுபட்டிருந்தாள். இதற்கு ஒரே வழி அதுதான். தன் மனையாளின் வேலையை அவளிட மிருந்து பிடுங்கிக் கொள்வது. அவளுக்கு விடுதலை யளிப்பது. இதுநாள் வரை அவளுக்கு உதவியதே இல்லை. மனசாட்சி இன்றுவரை அறுக்கும் விஷயம் இது.

“எனக்கும் சமைக்கத் தெரியும்ங்கிறது உனக்குத் தெரியுமில்ல...?”

“ ஓ! பேஷா... என்னைவிட நல்லாவே சமைப்பீங்க... நல்லா சாப்பிடவும் செய்வீங்க...”

“இந்தக்குசும்புதானே வேண்டாங்கிறது? அப்போ ஒதுங்கு.... இனிமே சமையல் என்னோட வேலை.....”

சொல்லிவிட்டு அட்வான்ஸாக, அப்போதே போர்ட்ஃபோலியோ மாறிக் கொண்டார். ஒரு நல்ல முடிவு உடனடியாகச் செயல்பாட்டுக்கு வந்ததில் மனதிற்குள் மகிழ்ச்சி வழிந்தது.

இருப்பினும், மீதமுள்ள வாழ்நாளில் பணியாளர் சார்ந்து தான் பணியாற்றிய, வேலை ரீதியான தொழிற்சங்க நடவடிக்கைகளைப் பலருக்கும் உதவியாய் விடாது தொடரவும் வேண்டும் என்று அவரது மனம் அந்த நிமிடத்தில் வெகுவாக அவாவிற்று.

 

Pin It