மனித இனம் தம் உரிமைச் சாசனத்தை எங்கோ தொலைத்துவிட்டு தேடவும் தெரியாமல் அவதிப் பட்டது. அடிமைத்தளையில் சிக்கிச் சீரழிந்து கொண் டிருந்தது. 18-ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் தேசத்தில் பிறந்த இருவர் அந்த உரிமைப் பட்டயத்தைத் தேடிக் கொடுத்தனர். அவர்களை வால்டேர், ரூசோ என்று வரலாறு குறிப்பிடுகிறது.

voltaire and rousseau18-ஆம் நூற்றாண்டை பழமைக்கும், புதுமைக்கும் பிறந்த ‘புரட்சி நூற்றாண்டு’ என்று கூறுவர். பழமையை அழிக்கப்பிறந்தான் வால்டேர் என்றும், புதுமையைப் படைக்கப் பிறந்தான் ரூசோ என்றும் சொல்வார்கள். தேவையற்றவற்றை அழிப்பதும், தேவையானவற்றை ஆக்குவதும் புரட்சியாளன் கடமை. அதை அவர்கள் சிந்தித்துச் செயல்படுத்தினர்.

அவர்களின் மன அரங்கில் இரண்டு விளக்குகள் எப்போதும் எரிந்து கொண்டிருந்தன. அவையே சுதந்திரம், சமத்துவம் என்னும் சுடர்கள். மனிதராகப் பிறந்த எல்லோரும் சுதந்திரத்துடனும், சமத்துவத் துடனும் வாழ வேண்டும். அப்படிப்பட்ட மனித சமுதாயத்தை உருவாக்க சகோதரத்துவம் வேண்டும்.

அவர்களின் வாழ்வும், சித்தனையும் இரண்டு புரட்சிகளுக்கு வித்திட்டன. ஒன்று அமெரிக்கப் புரட்சி, மற்றொன்று உலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த பிரெஞ்சுப் புரட்சி. அவர்கள் இருவர் மீதும் கடுமையான அடக்குமுறைகள் ஏவப்பட்டன. பலமுறை நாடு கடத்தப்பட்டனர்.

வால்டேர் பிறந்த காலத்தில் பிரெஞ்சு தேசம் ஆதிக்கபுரியின் அடக்குமுறைக் கோட்டையாக இருந்தது. மன்னனும், மதகுருவும் இணைந்து கொடுங் கோல் ஆட்சி நடத்தினர். அவற்றை எதிர்த்திட நீதியின் தூதுவர்களாக வடிவெடுத்தனர்.

கரை தெரியாமல் தத்தளித்த மக்களுக்குக் கலங்கரை விளக்கமாகவும், அறியாமை என்னும் மூட இருளை ஓட்டும் ஒளிவிளக்காகவும் விளங்கினர். சீரழிந்த சமுதாயத்தைச் செப்பனிடும் பணியைச் சிறப்பாகச் செய்தனர். அஞ்சாமையின் அடையாளச் சின்னங்களாகத் திகழ்ந்தனர்.

“மனிதன் சுதந்திரமாகப் படைக்கப்பட்டவன் என்பதால் அவன் தன்னைத் தானே ஆளவேண்டும். மனிதனுக்கு மேலே கொடுங்கோலர்கள் இருந்தால் அவர்களை அவர்களுடைய ஆட்சிப் பீடத்திலிருந்து தூக்கி எறியவேண்டும்” என்றான் வால்டேர்.

வால்டேரின் சுதந்திர முழக்கம் பிரெஞ்சு மக்களைத் தட்டி எழுப்பியது. கொடுங்கோலர்களை எதிர்த்துப் போராடும் நெஞ்சுரத்தைப் பெற்றுத் தந்தது. மன்னர் ஆட்சியை வீழ்த்தி மக்களாட்சியை நிலைநாட்டும் மாபெரும் பிரெஞ்சுப் புரட்சியாகப் பிற்காலத்தில் உருவெடுத்தது.

ஆதிக்க அடிமைகள் அவனைக் கண்டு அஞ்சினர்; அவனை நாத்திகன் என்று பழி தூற்றினர். நாட்டுப் பற்று இல்லாதவன், நாடோடி என்று ஏசினர். அவற்றைப் பற்றி அவன் கவலைப்படவில்லை.

‘தேசபக்தி என்பது மற்றொரு தேசத்தை வெறுக்கும் குறுகிய மனப்பான்மை அல்ல’ என்பது அவனது எண்ணம். “நான் முதலில் மனிதன், உலகத்தின் குடிமகன்; அதன் பிறகே பிரெஞ்சுக்காரன்” என்று முழங்கினான்.

“என்னுடைய தொழில் நான் சிந்திப்பதை சொல்வதுதான்” என்றான் வால்டேர். அவன் சிந்தித்தவை நாடகங்களாகவும், நவீனங்களாகவும், கவிதை களாகவும், கட்டுரைகளாகவும், அறிக்கைகளாகவும், கடிதங்களாகவும் 99 நூல்களில் விரிந்து கிடக்கின்றன.

“சுதந்திரம் என்பது என்ன? நீ எண்ணிய படியெல்லாம் செய்வதற்கு இருக்கும் உரிமையல்ல, எண்ணியதைச் சொல்வதற்கு அடையும் உரிமையே சுதந்திரம்” என்று சுதந்திரத்துக்க எல்லை வகுத்தான் வால்டேர்.

“சமத்துவம் என்பது என்ன? சட்டங்களை உடைத்தெறிவது சமத்துவம் ஆகாது. சட்டங்களைத் தவிர வேறு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதே சமத்துவம்” என்று சமத்துவத்துக்கு வரையறை செய்தான் வால்டேர்.

1789ஆம் ஆண்டு என்பது பிரெஞ்சுப் புரட்சி வெடித்த நாள். ரூசோ இறந்து 11 ஆண்டுகள் கழித்து தான் இந்தப் புரட்சி வந்தது. என்றாலும் அதற்கு மூலகாரணமான இத்தனை விதைகளைத் தூவிச் சென்ற பெருமை வால்டேர், ரூசோ ஆகிய இருவருக்குமே சேரும்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் இந்த வார்த்தைகளே பிரெஞ்சுப் புரட்சியின் எழுச்சி முழக்கங்களாக இருந்தன. பிரெஞ்சுப் புரட்சியின் வெற்றிப் படையலான சுதந்திரப் பிரகடனத்திலும், அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனத்திலும் ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’ என்னும் நூலில் உள்ள வாசகங்களே காணப்படுகின்றன.

அரசியல், ஆன்மிகம், கல்வி, பண்பாடு, பொருளாதாரம், இலக்கியம் என்னும் இத்துறைகளில் இன்று உலாவும் மறுமலர்ச்சிகளுக்கெல்லாம் அடித்தளம் அமைத்தவன் ரூசோ. ஆனால் அவன் தான் வாழ்ந்த காலமெல்லாம் விலங்குகளைப்போல வேட்டையாடப்பட்டான்.

“உழைப்பின் பயனாக வாழ்ந்துவரும் பாட்டாளி வர்க்கத்திற்கு நாட்டின் நிர்வாகத்திலே பங்குண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் குடியுரிமையும், சுதந்திரமும் உண்டு. அவை மனித சமுதாயம் அனைத்துக்கும் பொதுவான அடிப்படை உரிமைகள்” என்று கூறி உழைப்பாளர்கள் உரிமைக்குரல் எழுப்ப உதவினான்.

உலகம் ஒழுங்காக வாழவேண்டும் என்று உழைத்த, மாமனிதர்களில் ரூசோவும் ஒருவன். ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் அவனை அமைதியாக வாழ அனுமதிக்கவில்லை. ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளானான். அவனது அரிய உழைப்பால் மலர்ந்த நூல்கள் தலைநகர் பாரிஸ் நீதிமன்றத்தின் முன் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

ரூசோ பாரிஸ் நகரை விட்டு வெளியேறி தாம் பிறந்த மண்ணில் அடைக்கலம் தேடிப்போனான். அங்கும் அவன் நூல்கள் கொளுத்தப்பட்டன. அவன் நுழையக் கூடாது என்று பல அரசுகள் தடையுத்தரவு பிறப்பித்தன. ‘மதவிரோதி’ என்று பழி தூற்றப்பட்டு விரட்டியடிக்கப்பட்டான்.

சிந்தனையாளன் ரூசோ இறந்த பிறகுதான் அவனுடைய மதிப்பையும், தேவையையும் உலகம் அறிந்து கொண்டது. மக்கள் கூட்டம் திரண்டு வந்து அவனது உடலை வணங்கிச் சென்றது. அவனது சிந்தனைகளை ஏற்று பிரெஞ்சுப் புரட்சியின் வடிவமாக மாற்றிக் காட்டியது.

ரூசோவின் உடல் அவன் விரும்பியவாறே ஏர்மெனான் வில்லா தோட்டத்தில் புதைக்கப் பட்டிருந்தது என்றாலும் 11 ஆண்டுகள் கழித்து பிரெஞ்சுப் புரட்சி வெடித்துக் கிளம்பியபோது, அவனுடைய உடல் அந்த குக்கிராம புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு அனைத்து ஆடம்பர மரியாதையுடன் பாரிஸ் நகரம் நோக்கி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

அவனுடைய எந்த நூலை இழிவாகக் கருதி தீயிட்டுக் கொளுத்தியதோ, அதே பாரிஸ் மாநகரம் அந்த நூலை மரியாதையுடன் அஞ்சலி செலுத்தியது. சிந்தனையாளர்கள் எல்லோரும் வாழ்ந்த காலத்தில் மறுக்கப்பட்டாலும், அவர்களின் கருத்துக்களையும் எழுத்துக்களையும் காலம்தான் தீர்மானம் செய்கிறது. இதற்கு இவர்கள் வாழ்க்கையும் எடுத்துக்காட்டாகும்.

வால்டேரும், ரூசோவும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்ததால் கருத்துவேறுபாடுகள் இருந்தன. அதுவே அறிவுக்கும், உணர்வுக்குமான போராட்டம். “சொற்களாலும்,” பேனாவினாலும் மக்களைச் சீர்திருத்தி விடலாம்” என்றான் வால்டேர். ரூசோவோ ‘செயல்’ ஒன்றையே நம்பினான்.

பகுத்தறிவைப் பரப்புவதோடு வால்டேர் விட்டு விட்ட பணியை ரூசோ தொடர்ந்து செய்தான். அதைத் தான் வரலாற்றாசிரியர்கள், ‘வால்டேர் விட்ட இடத்திலிருந்து ரூசோ தொடங்கினான்’ என்று கூறியுள்ளனர்.

சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் விடுதலை மட்டுமல்ல, மனித குலத்தின் விடுதலை. அதற்கு அளிக்கப்பட்டுள்ள விலையும் அதிகம். உடல், பொருள், உயிர்களை அர்ப்பணித்தவர்களின் உயில் அது. அது வெட்ட வெட்ட வளரும்; குட்டக்குட்ட நிமிரும். அதன் வரலாறு நெடியது. எழுத்துக்களால் வடிக்க முடியாதது.