பிரடெரிக் எங்கெல்சு 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மன் அரசியல் மெய்யியலாளராவார். இவர் கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியதுடன், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மார்க்சுடன் சேர்ந்து எழுதினார்.
எங்கெல்ஸ் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். 20 அகவை வரை வணிகத்தில் ஈடுபட்டார். சிறுவனாக இருக்கும் பொழுதே மதங்களின் மீதும் முதலாளித்துவத்தின் மீதும் வெறுப்பு கொண்டிருந்தார். இக்காலக்கட்டத்தில் பெர்னிலுள்ள மெய்யியல் அறிஞர் ஹேகல் கொள்கையைப் பின்பற்றுபவர்களோடு தொடர்பிலிருந்தார். மான்செஸ்டரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையறையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார்.
ஜெர்மனி செல்லும் வழியில் பாரீசில் கார்ல்மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டார். கார்ல் மார்க்சும் பிரடெரிக் எங்கெல்சும் 10 நாட்கள் தொடர்ந்து பேசிக்கொண்டனர் எனில் அவ்வுரையாடலின் பெரும்பகுதி மனிதகுல விடுதலைக்கான மகத்தான பணி குறித்துதான்.
அன்று துவங்கிய சந்திப்பு இறுதி வரை தொடர்ந்தது.
1849-இல் ஜெர்மனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து கார்ல் மார்க்சுக்கு உதவத் தொடங்கினார். பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுவதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். தமது சொத்தை நான்காகப் பிரித்து ஒரு பங்கை மார்க்சின் குழந்தைகளுக்கு எழுதி வைத்தார் எங்கெல்ஸ். காரல்மார்க்ஸ் நோயுற்றபோதெல்லாம் அவரை அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொள்ளச் செய்து மீள அழைத்து வந்து வீட்டில் விட்டுச்செல்வார்.
மார்க்ஸ் உடல் நலிவுற்றிருந்த சமயத்தில் மார்க்சின் மனைவி ஜென்னி இறந்துவிடுகிறார். ஜென்னியின் சவ அடக்கத்துக்கு காரல் மார்க்ஸ் செல்ல இயலாதநிலையில் எங்கெல்ஸ்தான் ஜென்னியின் சவ அடக்கத்தைச் செய்கிறார். அப்போது மார்க்சின் கடிதத்தை எங்கெல்ஸ் வாசிக்கிறார். இறுதியில் எங்கெல்ஸ் தமது உரையில் "ஜென்னி இறந்ததும் மார்க்சும் இறந்துவிட்டார்" எனக் குறிப்பிடுகிறார்.
1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் மார்க்சை முன்னிலைப்படுத்தினார் எங்கெல்ஸ். மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார்.
முதலாளித்துவமானது, தொழிலாளிகளுக்கு வேலை பாதுகாப்பின்மையை உருவாக்கி உள்ளது. தன் வாழ்க்கை என்னவாகுமோ என்ற பயத்தை உண்டாக்கியுள்ளது என்பதைத் தமது படைப்புகள் மூலம் நிறுவினார் எங்கெல்ஸ்.
"குடும்பம், தனிச்சொத்துஅரசு, ஆகியவற்றின் தோற்றம்"
"வரலாற்றில் முதலாளியமும் மதமும்"
"கம்யூனிசத்தின் கோட்பாடுகள்"
"கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்"
"மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்"
"இயற்கையின் இயக்க இயல்"
"டூரிங்குக்கு மறுப்பு" ஆகியவை எங்கெல்சின் மகத்தான நூல்கள்.
1848ஆம் ஆண்டு காரல் மார்க்சும் பிரடெரிக் எங்கெல்சும் இணைந்து வெளியிட்ட'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' உலகப் புகழ் வாய்ந்தது.
இந்நூல் உலகில் 200 மொழிகளில் வெளியிடப்பட்டன. இந்நூலை அடிப்படையாகக் கொண்டு உலகின் முதல் புரட்சியாக ரஷ்யப்புரட்சி வரலாறு படைத்தது.
எங்கெல்ஸ் மூலமாகவே காரல் மார்க்ஸ் எழுதிய அனைத்து நூல்களும் வெளியிடப்பட்டன. எங்கெல்ஸ் இல்லையேல் மார்க்சின் மகத்தான நூல்கள் வெளி வந்திருக்க வாய்ப்பில்லை. காரல் மார்க்சின் புகழ்பெற்ற 'மூலதனம்' நூலின் முதல் தொகுதி மட்டுமே மார்க்சின் வாழ்நாளில் வெளியிடப்பட்டது. மற்ற மூன்று தொகுதிகளும் மார்க்சின் மறைவிற்குப் பின் எங்கெல்சின் பெரு முயற்சியால் வெளியிடப்பட்டன.
பிரடெரிக் எங்கெல்ஸ் காரல் மார்க்சுக்காகவே வாழ்ந்தார் எனின் மிகையன்று. எனவேதான் மார்க்சின் அஸ்தியைக் கடலில் தூவிவிட்டு மார்க்சின் இறுதி மகள் 'எங்கெல்சும் எனது தந்தைதான்' என்றார்.
காரல் மார்க்சின் தொடர்பு இல்லாமல் போயிருந்தால் எங்கெல்ஸ் தொழிலதிபராகக்கூட மாறியிருக்கலாம். எங்கெல்சுக்கு மதத்தின் மீது நம்பிக்கை இல்லை. அக்காலத்தில் திருச்சபையில் திருமணம் கட்டாயமாகப் பதிவு செய்யப்படவேண்டும். ஆனால் எங்கெல்ஸ் அவ்வாறு செய்யாமல் தான் விரும்பிய மேரியுடன் சேர்ந்து வாழ்ந்தார். "எனக்காக திருமணத்தைப் பதிவு செய்யுங்கள்" என வேண்டினார் மேரி. பதிவு செய்த மறுநாளே மேரி மறைந்தார்.
காரல் மார்க்சின் இறுதி ஊர்வலம் பிரடெரிக் எங்கெல்சுடனான 14 பேருடன் முடிவடைந்தது. இலண்டன் ஹைகேட் சிமெட்ரியில் புதைக்கப்பட்ட போது பிரடெரிக் எங்கெல்ஸ் ஆற்றிய உரை அர்த்த அடர்த்திமிக்கது.
மார்க்ஸ் வரலாறை எங்கெல்ஸ் இல்லாமல் எழுத முடியாது. எங்கெல்ஸ் வரலாறை மார்க்ஸ் இல்லாமல் எழுத முடியாது. அத்தகைய தோழமை வாழ்வை வாழ்ந்தனர் மார்க்ஸ் - எங்கெல்ஸ் இருவரும். மனிதகுல விடுதலைக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட காரல்மார்க்ஸ் பிரடெரிக் எங்கெல்ஸ் இருவருமே என்றென்றும் மனிதகுல வரலாற்றில் நிலைத்திருப்பர்.
இங்கிலாந்து ஏழை பாட்டாளி வர்க்கத்தின் அவலம் பற்றி எங்கெல்ஸ் எழுதிய நூலான’ "இங்கிலாந்து உழைக்கும் வர்க்க மக்களின் நிலைமை" : 19 ம் நூற்றாண்டில், இங்கிலாந்தின் நகரங்களில் இருந்த சேரிகளில் வாழ்ந்த ஏழை மக்களின் அவல வாழ்க்கை பற்றிப் படம் பிடித்துக் காட்டுகிறது. இதை விட சிறப்பாக வேறெந்த நூலிலும் அக்காலத்திய இங்கிலாந்து நாட்டின் தொழிலாளி வர்க்கத்தைப் பற்றிய கருத்துக்கள் இடம் பெறவில்லை.
பிரடெரிக் எங்கெல்ஸ் காரல் மார்க்சுக்காகவே வாழ்ந்து அவரது நூல்களை மனிதகுலத்திற்கு வழங்கி மகத்தான பணியை முடித்து 1895ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் நாள் மறைந்தார்.
(எங்கெல்ஸ் நினைவு நாள் ஆகஸ்ட் 5)