இந்தியச் சமூகத்தில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவும், அதைத் தக்கவைக்கவும் மதம் பயன் படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் மதம் இந்த அம்சத்தில்தான் ஒரு முக்கியமான சக்தி யாக வேரூன்றி நிற்கிறது. அடித்தட்டு மக்களிடையே மதத்தை விடவும் சாதியின் தாக்கம் கூடுதலாக இருப்பதால், இந்துமதம் எனச்சொல்லப்படுகிற பலவித கருத்துக்களின் கூட்டுத்தொகுப்பானது தன்னைச் சிதையவிடாமல் காத்துக் கொள்வதற்கு சாதிகளையே நம்பி இருக்கிறது. இதுதவிர, பல்வேறு காரணங்களால் பிற மதங்களின் மீதான வன்மங் களை- தன்னைச் சார்ந்துள்ளவர்களிடம் தூண்டு கிறது. சமணர்களைக் கழுவிலேற்றுவதற்கும் முன்பாகவே இது துவங்குகிறது.

mubarak_ali_450சர்வதேச அளவில் அமெரிக்கா தனது ஏகபோக ஆதிக்கத்தை ஏற்காத இஸ்லாமிய நாடுகளைப் பணிய வைப்பதற்காக இஸ்லாம் மதத்தையும் இஸ்லாமிய மக்களையும் வாழ்வியல் நெருக்கடிக்குள் ஆளாக்கி யிருப்பதையும், அதன் தொடர்ச்சியாக, ஏற்கெனவே இந்தியாவில் இந்துத்துவவாதிகள் என நாகரிக மாகவும் தவறாகவும் அழைக்கப்படுகிற இந்துத் தீவிரவாதிகள் தங்களது ஆட்டத்தை எவ்வளவு கொடூரமாக நடத்தினார்கள் என்பதையும் நாம் அறிவோம். மதம் எப்போதும் ஆளும் வர்க்கத் தினரின் கைப்பாவையாகவே இருந்து வந்திருக்கிறது. நாட்டினுடைய உண்மையான நிலவரங்களை மக்களிடமிருந்து மறைக்கவே அது பயன்படுத்தப் பட்டு வந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சாகவே இருந்தாலும் மதத்தை அபின் என்றுதான் பேராசான் கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

ஆனால், ஒரு நாட்டை மதக்கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டியமைக்கவோ, சிறந்த நாடாக நிர்வகிக்கவோ முடியாது. இதை ஆதாரங்களோடு விளக்குகிறது முனைவர் முபாரக் அலி எழுதியுள்ள ‘Pakistan In Search of Identity’ என்னும் ஆங்கிலநூல்.

இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டதால், சர்வ தேச அரங்கில் ‘இந்தியாவிலிருந்து ஒடிக்கப்பட்ட ஒருதுண்டு’ என பாகிஸ்தானிற்கு வழங்கப்பட்டு வருகின்ற அடையாளத்தை மறக்கவும் மறைக்கவும் பாகிஸ்தானிய ஆட்சியாளர்களும் அரசியல்வாதி களும் மதத்தலைவர்களும் பல்வேறு கடுமையான முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். ஒரு தனித் தேசமாக, சுயமான பாரம்பரியமிக்க, வரலாறு கொண்ட நாடு என்னும் அடையாளத்தைப் பாகிஸ் தான் பெறவேண்டும் என்பதற்காகப் பல முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அம்முயற்சிகளெல்லாம் தோல்வியையே அடைந்திருக்கின்றன. இதன் விளைவு களாகக் குழப்பம், அதிகாரவெறி, ஆதிக்கம், இவை பாகிஸ்தானிற்குள் குதியாட்டம் போட்டுக்கொண் டிருக்கின்றன. இவற்றுக்குப் பக்கபலமாக இருந்த இஸ்லாமிய மதவாதிகளால் இந்தப் பிரச்சினை களைத் தீர்க்கமுடியவில்லை. ஜனநாயக சக்திகள் தோற்கடிக்கப்பட்டன. ஒரே மதமாக இருந்த போதிலும் இந்தக் கலவரங்களிலும் கலகங்களிலும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தவர்கள், அடித்தட்டு முஸ்லிம்கள் தானே தவிர, மேட்டுக்குடி முஸ்லிம் களல்லர் என்பதையும் மிக விரிவாகவும் விளக்க மாகவும் முபாரக் அலி எடுத்துரைக்கிறார்.

கராச்சி நகரம் பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒரு ஏக்கப்பெருமூச்சு. முபாரக் அலியின் எழுத்து நடையும் அதை இயல்பாக தமிழாக்கியிருக்கும் பேராசிரியர் நா. தர்மராஜனின் மொழிபெயர்ப்பும் நூலின் சிறப்புகள்.

இஸ்லாமியர்கள்மீதான வெறுப்பை இஸ்லாமி யரல்லாதவர்களிடம் எப்படி உருவாக்குவது என் பதைத் திட்டமிட்டுக் கொடுத்த பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தின் கைக்கூலிகளாக விளங்கிய ஒரு கும்பலின் சூழ்ச்சிக்குப் பலியாகி, இந்து-முஸ்லிம் கலவரங்கள் 1940 களில் நடைபெற்றதை நாம் அறிவோம். 

அதேபோல இப்போது இந்துத் தீவிரவாதிகளின் இந்துமதம் என்கிற கடுங்கோட்பாட்டைக் கொண்டு உருவாக்கத் துடிக்கும் அகண்டபாரதம் என்கிற அபாயமான போக்கும், அதற்கு மக்கள் பலியாகக் கூடிய வாய்ப்புகளும் இருப்பதையும் நாம் அறிவோம்.

மதம், அரசியல் இரண்டிற்குமான உறவுகள் எப்படியிருக்கவேண்டும்? பாகிஸ்தானிலும் சரி, இந்தியாவிலும் சரி, இதற்குத் தவறான முடிவை வைத்திருப்பவர்களின் கையில்தான் ஆட்சியதிகாரம் இருக்கிறது. இவர்கள் மதத்தையும் அரசியலையும் இணைக்கிறார்கள். எல்லாவிதக் கொடூரமான துயரங்களையும் மக்கள் அனுபவிப்பதற்கு இந்தத் தவறான முடிவே காரணம். பாகிஸ்தானில் இது நடந்துகொண்டிருக்கிறது.

இந்நூல், பாகிஸ்தானியர்களுக்கு மட்டுமல்ல, அதைவிடக்கூடுதலாக இந்தியாவில் வசிப்பவர் களுக்கு அவசியமானது. ஏனெனில், பாகிஸ்தானுக்கு இது நிகழ்காலத்திலும் தொடர்ந்துகொண்டிருக்கிற பழைய பிரச்சினைதான். ஆனால் இது இந்தியாவின் எதிர்காலப் பிரச்சினைகளில் ஒன்று.

பாகிஸ்தான் : அடையாளம் தேடும் நாடு

ஆசிரியர் : முனைவர் முபாரக் அலி

தமிழில் : நா.தர்மராஜன்

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.75.00

Pin It