மொரீசியஸ் தமிழர் வரலாற்றில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தில் உயிர் நீத்த அஞ்சலை என்ற பெண்ணை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நாடக நூல் ஒன்றினை அண்மையில் படித்தேன்.  இந்நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.  இதனை எழுதிய ஆசிரியர் பயனிசாமி படையாச்சி (பழனிச்சாமி படையாச்சி) என்பவர்.  படையாச்சி அவர்களை நான் 2009 சூலைத் திங்கள் மூன்றாம் நாள் அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறேன்.  அரசுச் செயலராகப் பணியாற்றிச் சர்க்கரைத் தொழிற்சாலைத் தொழிலாளர் நல நிதியத்தின் தலைவராக நீண்ட காலம் (1985-1996) பணியாற்றியிருக்கிறார்.  ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமூகப் பண்பாட்டு இயக்கங்களில் தீவிர பங்கெடுத்துக் கொண்டவர்.  80 வயதான அப் பெரியவரின் அன்பும், சுறுசுறுப்பும் உபசரிப்பும் இன்று நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது.  இனி, நாடகத்தின் வரலாற்றுப் பின்னணியைக் காண்போம்.

நாடகத்தின் வரலாற்றுப் பின்னணி

அஞ்சலை என்ற பெண்மணி மொரீசியஸ் தீவில் பெல் வீ ஹரல் என்ற ஊரில் கரும்பு (சர்க்கரை) எஸ்டேடில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறாள்.  தொழிலாளர்களின் மோசமான வாழ்க்கைச் சூழலுக்கெதிராகவும், குறைவான கூலிக்கெதிராகவும் போராடுகிறாள்.  இரண்டாம் உலகப் போரின் நெருக்கடி தொழிலாளர் வாழ்க் கையில் துயரங்களைத் தோற்றுவிக்கின்றது.  1943-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிர் துறக்கிறாள்.  அவளோடு முனிய சாமி, முனியன், பொன்னப்பன் ஆகிய மூவரும் உயிர் துறக்கின்றனர்.  அஞ்சலையின் நினைவாகத் தொடர்ந்து தலைவர் ராம் நாராயன் என்பவர் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.  டாக்டர் பிசுந்தயாள் என்ற கவிஞர் புகழ்பெற்ற இரங்கற்பா பாடுகிறார்.  மக்கள் வெகுண்டெழுந்த நிலையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படுகின்றது.  இக்கமிஷன் தொழிலாளர்களின் கூலி உயர்வு, சுகாதாரம், மருத்துவநலம், வீட்டு வசதிகள், குடிநீர் விநியோகம் குறித்த பல்வேறு பரிந்துரைகளை அரசுக்குச் சிபாரிசு செய்தது.  அஞ்சலையின் தியாகம் தொழிலாளர் சங்கங்கள் தோன்றக் காரணமாக அமைந்தது.  தொழிலாளர் வாழ்க்கையில் ஓரளவு வசதிகள் மேம்பட்டன.  இந்த வரலாற்றை அடிப் படையாக வைத்து அஞ்சலை நாடகம் எழுதப் பட்டுள்ளது.

களம் - 1, காட்சி - 1

முதல் காட்சியில் லகான், லாலோ ஆகிய இரு பாத்திரங்கள் தொடக்கத்தில் உரையாடிக் கொள் கின்றனர்.  லாலோ ஒரு கூலித் தொழிலாளி. அவன் லஞ்சமாகப் பணம் பெற்றுக் கொண்டு கூலி உயர்வுக்காகப் போராடும் இரகசியங்களையும் செய்திகளையும் லகானிடம் சொல்கிறான்.  லகான் சர்க்கரை ஆலையினுடைய உதவி மேலாண்மை அதிகாரி.  அஞ்சலையைக் குறித்தும் லாலோ கோள் சொல்லுகிறான்.  காட்சியின் கடைசியில் அஞ்சலை வருகிறாள்.  தொழிலாளர்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து ஈன வாழ்க்கை வாழ வேண்டாம் என்று லாவோவை எச்சரிக்கின்றாள்.  தான்

போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனவும், ‘கோழைகள் படுக்கையின்கீழ்ப் பதுங்கிக் கொள்க.  உயிருக்குத் துணிந்தவர்கள் என்னோடு போராட வாருங்கள்’ என்றும் அறைகூவல் விடுக்கிறாள்.

களம் - 1, காட்சி - 2

இரண்டாவது காட்சியில் அஞ்சலையும் அவள் தன் கணவர் தம்பியும் வருகின்றனர்.  குடும்பத்தின் வறுமைநிலை அவர்களின் உரையாடல்கள்வழி புலப்படுத்தப்படுகின்றது.  இதற்கிடையில் கர்ப்ப மாக இருக்கும் அஞ்சலை தனக்குப் பிறக்கப் போவது ஆண்குழந்தைதான் என்றும், கணவன் பெண் குழந்தை தான் என்றும் இருவரும் தங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகின்றனர்.  குழந்தைக்கு வள்ளி என்ற பெயரை வைக்கப் போவதாகத் தம்பியும், வேலன் என்ற பெயரைச் சூட்டப் போவதாக அஞ்சலையும் கூறுகின்றனர்.  தம்பி அஞ்சலையின் மீதுள்ள ஆழ்ந்த காதலை வெளிப்படுத்துகிறான்.  போராட்டத்தில் எச்சரிக்கையோடு ஈடுபட வேண்டும் என்று அஞ்சலைக்கு அறிவுரை கூறுகிறான்.

களம் - 2, காட்சி - 1

அஞ்சலையும் சாமி என்ற பெயர் கொண்ட ஆலைத் தொழிலாளியும் உரையாடுகின்றனர்.  கூலி உயர்வு தராமல் தொழிலாளிகளை முதலாளிகள் எவ்வாறு வஞ்சிக்கிறார்கள் என்பது குறித்து இருவரும் விவாதிக்கின்றனர்.  முழு பலத்தோடு போராட வேண்டும் என்றும், இறுதி வரை போராட வேண்டும் என்றும் அஞ்சலை உறுதியாகக் கூறுகிறாள்.  அந்த நேரத்தில் லகான் அங்கு வருகிறான்.  அஞ்சலை மீது சதி செய்வதாகக் குற்றம் சுமத்துகிறான்.  அஞ்சலை அதனை மறுக்கிறாள்.  உரிமைக்காகத் தான் போராடுவதாகக் கூறுகிறாள்.  இருவருக் கிடையே வாக்குவாதம் முற்றுகிறது.  தொழி லாளருக்கான ஆய்வாளரும் அங்கே வந்து சேரு கிறார்.  தொழிலாளர்களுக்கிடையே ஒப்பந்தம் ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது என்றும், இதற்குப் பிறகான போராட்டம் சட்டவிரோதமானது என்றும் ஆய்வாளர் (Labour Ispector) கூறுகிறார்.  இதற்கிடையே கோபம் கொண்ட லகான் தொழிற்சாலை மூடப் படுவதாகவும், தொழிற்சாலைக் குடியிருப்பை விட்டு கூலித் தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிடுகிறான்.  நீங்கள் எல்லோரும் பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டீர்கள் எனவும் தெரிவிக்கிறான்.

களம் - 2, காட்சி - 2

அஞ்சலையும் அவள்தன் பாட்டியும் இக் காட்சியில் உரையாடுகின்றனர்.  போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று பாட்டி அஞ்சலைக்கு அறிவுரை கூறுகிறாள்.  அஞ்சலை ஏழைத் தொழி லாளிகளுக்காக யார் உதவ முன்வருவார்கள் என்று பாட்டியிடம் கேட்கிறாள்.  பாட்டி பழைய நினைவு களை (குடிபெயர்ந்து வந்து அனுபவித்த இன்னல்கள்) நினைவு கூர்கிறாள்.  தனது தலையில் பல்லி விழுந்து விட்டதைக் கூறி ஏதேனும் தீங்குவரக் கூடுமோ என்று பாட்டி அச்சப்படுகிறாள்.

களம் - 3, காட்சி - 1

அஞ்சலை, சுபாஷ், அப்துல், சாமி ஆகியோர் இக்காட்சியில் இடம்பெறுகின்றனர்.  குடியிருக்கும் வீடுகளை விட்டு வெளியேறச் சொல்லித் தொழிலாளி களுக்கு ஆணை பிறப்பிக்கப்படுகிறது.  தலைவிரி கோலமாய், மார்பிலடித்துக் கொண்டு போவ தெங்கேயென்று தெரியாமல் பெண்கள் அரற்று கின்றனர்.  இந்நிலையை அப்துல் என்கிறவன் அஞ்சலையிடம் தெரிவிக்கிறான்.  லத்தி, கேடயம், துப்பாக்கிகளுடன் காவலர்கள் அங்கு வருகின்றனர்.  அஞ்சலை அனைவரையும் அமைதிப்படுத்துகிறாள்.  லாலோ என்ற தொழிலாளியை யாரோ அடித்து விட்டனர் என்ற வதந்தி பரவுகின்றது.  அடித்தவர் களைப் போலீசார் தேடுகின்றனர் என்ற வதந்தியும் பரவுகிறது.  தொழிலாளர்களை ஒன்று திரட்டி அஞ்சலை உரையாற்றுகிறாள்.  ‘போராட்டம் தொடரும்’ என்று சபதம் செய்கிறாள்.

களம் - 3, காட்சி - 2

பொன்னா, சாமி, முனி ஆகிய தொழிலாளிகள் அஞ்சலையின் பெருமைகளைப் பேசிக் கொள் கின்றனர். அஞ்சலையோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கின்றனர்.  16 வயது நிரம்பிய முனியை வீட்டுக்குச் செல்லுமாறு சாமி அறிவுறுத்துகிறான்.

களம் - 3, காட்சி - 3

பால் (Ball) என்கிற உதவி போலீஸ் ஆணை யரும் லகான் ஆகிய இருவரும் சந்தித்துக் கொள் கின்றனர்.  லகான் போராட்டக்காரர்களைக் குறித்தும், குறிப்பாக அஞ்சலை பற்றியும் போலீஸ் சட்டவிரோதமானதென்றும், கரும்புத் தோட்டங் களுக்குத் தொழிலாளர்கள் தீவைத்துவிட்டனர் என்றும் கூறுகின்றான்.  போலீஸ் ஆணையர் தக்க பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கிறான்.

களம் - 3, காட்சி - 4

அஞ்சலையின் தனிமொழியில் காட்சி தொடங்குகிறது.  தொழிலாளர்களின் அவலநிலையை நினைத்துப் புலம்புகிறாள்.  முதலாளிகளின் கல் நெஞ்சை இரத்தம் சிந்தித்தான் கரைக்க வேண்டுமென்றால் அதற்கும் தயார்.  தொழிலாளர்கள் விடுதலை பெற, அவர்களின் துயர் துடைக்க என் இரத்தம் பயன்படட்டும் என்று தனிமொழி பேசுகிறாள்.  உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளாக அவை வெளிவருகின்றன.  அஞ்சலை தொழிற்சாலையை நோக்கிச் செல்கிறாள்.  சாமியும், பொன்னனும் உடன் செல்கின்றனர்.  அவளுக்குப் பயமில்லை; மனதில் சிந்தனை திடமாகவும் தீர்க்கமாகவும் இருக்கின்றது.  போலீசார் அஞ்சலையைத் தடுக்கின்றனர்.  அவள் முன்னேறுகிறாள்.  போலீசார் அஞ்சலையைச் சுடுகின்றனர்.  அவள் தன் இன்னுயிரைத் தொழிலாளர்களுக்காக விடுகின்றாள்.  நாடகம் முடிகிறது.  நிறைவாக, புத்தேளிர் உலகில் அனைவரும் அஞ்சலையை வரவேற்கின்றனர்.  வாழ்கவே அஞ்சலை வாழ்கவே! என்று வாழ்த்திப் பூமாரி பொழிகின்றனர்.

முடிவுரை

மொரீசியஸ் தமிழர் வரலாற்றில் அஞ்சலை அழியாப் புகழ் எய்திவிட்டாள்.  நாடகம் சிறிதாக விருப்பினும் மனதில் உணர்ச்சி அலைகளைப் பெரிதாக எழுப்பி விடுகின்றது.  நாடகத்தில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலும் தமிழ்ப் பெயர்களே.  அத்தை, கஞ்சி, பால்குடம், காப்பு, பத்லி, வேலன் ஆகிய தமிழ்ச் சொற்கள் மொரீசியஸ் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களாகத் திகழ்கின்றன.  நாடகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் பெத்தித், கிராண்(ட்), மதாம், முசே போன்ற பிரெஞ்சு மொழிச் சொற்களும் கலந்துள்ளன.  இவை பிரிட்டிஷ்காரர்களுக்கு முன்பு மொரீசியஸ் தீவைப் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி புரிந்தனர் என்பதைக் காட்டுகின்றன.

 பாட்டி என்கிற கதாபாத்திரத்தின் வாயிலாகத் தமிழர் குடியேற்றகால இன்னல்களை ஆசிரியர் விவரிக்கிறார்.  இந்தியாவி லிருந்து பன்றிப் படகுகளில் பயணித்த கொடூர அனுபவம், கூலிகள் கிடங்குகளில் அடைக்கப்பட்டு அனுபவித்த கொடுமைகள், சர்க்கரை ஆலைகளுக்கு நடந்தே அழைத்துச் சென்றமை, அடிமைகளாக அங்கே நடத்தப்பட்ட விதம், காய்ச்சல் இருந்தாலும் விடுமுறை கிடைக்காமை, ஒருநாள் விடுமுறை எடுத்தால் இருநாள் சம்பளம் குறைப்பு, வேலையை விட்டு நின்றால் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவது - இப்படி பல இன்னல்களைத் தமிழர்கள் அனு பவித்தனர் என்று பாட்டியின் வாயிலாக அறிந்து கொள்கிறோம்.

அஞ்சலையின் பாத்திரப் படைப்பு அதியற் புதமாக விளங்குகிறது.  தொழிலாளர்களைக் காட்டிக் கொடுக்கும் லாலோவை ‘உனக்கு வெட்சுமில்லையா’ என்று கடிந்துரைக்கிறாள்.  நீயும் ஒரு தொழிலாளி தானே! நீயே உன் குடும்பத்துக்கு உலைவைக் கிறாயே’ என்கிறாள்.  கணவனோடு உரையாடும் போது அன்பு மனையாளாகப் படைக்கப்பட்டிருக்கிறாள்.  ஆலை முதலாளிகளுக்கு சிம்ம சொப்பன மாக விளங்குகிறாள்.  தொழிலாளர்களுக்கு உற்ற துணையாக விளங்குகிறாள்.  அவர்கள் மீது பரிவும், பாசமும் அவளுக்குக் குறையவில்லை.  தொழிலாளர் களை நல்வழிப்படுத்திப் போராட்டத்தில் ஈடுபடச் செய்கிறாள்.

நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு மாலை வேளையில் அமைதியாக வீட்டு வேலைகளில் ஈடு படவே விரும்புகிறேன்.  இனிய இசையில் நெஞ்சைப் பறிகொடுத்து ஓய்வெடுக்கவே விழைகின்றேன்.  ஆனால் முடிகிறதா? விதியின் விளையாட்டு வேறு விதமாக இருக்கிறது.  கூலிப் பற்றாக்குறையிலும், உணவுப் பற்றாக்குறையிலும், விலைவாசிகள் விண்ணைத்தொடும் நிலையிலும் இவற்றைக் களைய என்ன செய்ய வேண்டும்? வாழ்க்கைத் தேவைகள் கிடைக்காத போதும், நோய்க் கிடந்தரும் சுகாதார மற்ற வீட்டு வசதிகள், பால் கிடைக்காத தாயின் மார்பகங்களில் வாய்வைத்து மடியும் குழந்தை களைக் காணும்போது என்ன செய்வது?

இத்தகைய நரகத்தை நீக்குவது எப்படி? ஒரு பக்கம் ஏழ்மையில் உழலும் ஏழைகள், மறுபக்கம் முதலாளிகள், பங்காளிகளின் ஆடம்பரத்தில் காரில் பவனிவரும் காட்சிகள், இவ்வுலகில் நீதியில்லையா? நியாயம் தான் செத்துவிட்டதா? சொற்கள் பயனில்லாத போது தீவிர நடவடிக்கைதான் ஒரே வழி! பாறைகள் கண்ணீரில் கரைவதில்லை.  கடப்பாரைகளாலே அசைக்கப்படுகின்றன.  தலைவர்கள் தியாகம் செய்யா விட்டால் ஈரமற்ற அதிகாரிகளைத் திருத்தமுடியுமா? எனவே எதிர்கால சந்ததியினர்க்காக நம் உயிரைத் தியாகம் செய்தே தீர வேண்டும்.  நம்மையும் நம் குழந்தைகளையும் சுடுவதின் மூலமாக அத்தீயவர் களின் பெயரும் வரலாற்றில் இடம்பெறட்டும்.  உள் செங்குருதிதான் அவர்களின் இதயத்தைத் தூண்டுமென்றால், சமூகத்தின் தீய வழக்கங்களைக் களையுமென்றால், நான் இரத்தம் சிந்தத் தயாராக விருக்கிறேன் என்று தனிமொழி பேசுகிறாள்.

நாடகத்தின் தொடக்கம் சேக்ஸ்பியர் மாக்பெத் நாடகத்தின் தொடக்கம் போல் அமைந்துள்ளது.  தொடக்கத்தில் லகான், ‘வானம் இடித்துக் கொட்டு கிறது விரைந்து வா!’ என்று கூறுகிறான்.  களம் - 1, காட்சி - 2இன் தொடக்கத்திலும் ‘கருமேகங்கள் நம் தலைக்கு மேலே வட்டமடிக்கின்றன’ என்று அஞ்சலி கூறுகிறாள்.  இவை யாவும் துன்பம் சூழ்ந்த இந்தியத் தொழிலாளர்களின் வாழ்க்கைக் குறியீடுகளாகக் காட்டுகின்றன.  மொத்தத்தில் நாடகம் விறுவிறுப்பாக உள்ளது.  மொரீசியஸ் மனித உரிமைக் கழகத்தின் வாயிலில் அஞ்சலையின் உருவச்சிலை வைக்கப் பட்டிருக்கிறது.  இது ஒரு தமிழனுக்குக் கிடைத்த பெருமை அன்றோ!

பார்வை நூல்

Anjalay A Play in Three Acts, Pyneesamy Padayachi, Cathay Printing Ltd., Mauritius, 2003

Pin It