மதுரை மாநகரம், தமிழகத்தின் “கலாச்சாரத் தலை நகரமாகும்”. உலக நாகரிகம் தொடங்கிய காலந்தொட்டு வளர்ந்த ஏதென்சு, ரோம், காசி, பாடலிபுத்திரம் போன்ற நகரங்களுக்கு இணையான நகர் நம் மதுரை மாநகர். 3000 ஆண்டுக்கால வரலாற்றில் பல நகரங்கள் அழிந்து விட்டாலும் இன்னும் அழியாத்தன்மையுடனும், உயிரோட்டத்துடனும் உள்ள நகரம் இது. எனவேதான் மதுரைக்குக் “கீழ்த்திசை நாடுகளின் ஏதென்சு நகரம்” (Athenes of the East) என்ற பெயர் உண்டு. அதுபோன்று இது “சங்கத்தமிழுக்கும் தலைநகரமாகும்”. மேலும் தமிழக அரசியலின் மையக்களமான இம்மாநகர் ஒரு முக்கிய இந்து சமயத் திருத்தலமாகும். இதற்கு “அமிர்த நகரம்” (Nector city) என்ற பெயரும் உண்டு. “கோட்டைச் சுவர் நகரம்” (Walled City) என்ற பெயரும் உண்டு.

gandhi_474

வைகை நதிக்கரையில் அமைந்துள்ள மதுரை மாநகருக்குப் பல சிறப்புக்கள் உள்ளன. இந்து சமயம் (சைவம், வைணவம், சிறு தெய்வம், கிராம தேவதைகள் உள்ளடக்கியவை) இசுலாம் (உருது, தமிழ் பேசுபவர்கள் மற்றும் காஜிமார் தெரு முஸ்லீம்கள்), கிறித்துவம் (கத்தோலிக்கர்கள், சீர்திருத்த சபையினர், தனித்தியங்கும் சபைகள் உட்பட), சமணம் (வடமொழிகள் பேசுவோர், தமிழ்ச் சமணர்கள்) ஆகிய சமயத்தினர் மற்றும் சில பௌத்தர்களும், ஒரு சில சீக்கியர்களும் சேர்ந்து வாழும் அற்புத வானவில் நகரம் மதுரையாகும். செம்மொழித் தமிழின் தலைநகரம் என்றழைக்கப்பட்டாலும் இந் நகரில் தமிழர்கள், சௌராஷ்டிரர்கள், உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மார்வாரி, குசராத்தி, சிந்தி, கட்ச்சி போன்ற மொழி பேசுவோர்கள் பன்னெடுங் காலமாய் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

காந்தி நினைவு அருங்காட்சியகம்

மதுரை மாநகரின் மையமாக மீனாட்சி சுந்தரேசு வரர் ஆலயம் உள்ளது. அதேபோல் மதுரை வரும் சுற்றுலாப் பயணிகள் வியந்து பார்த்துச் செல்லும் இன்னொரு இடம் ராணி மங்கம்மாள் அரண்மனை (தமுக்கம் அரண்மனை)யில் அமைந்துள்ள காந்தி நினைவு அருங்காட்சியகமாகும். இவ்வருங்காட்சியகம் தென்னிந்தியா முழுமைக்குமான ஒரே அருங்காட்சியக மாகும். இது மதுரையில் அமைவதற்குக் காரணம், காந்தியடிகளின் அரை முழ ஆடை மாற்றம் மதுரையில் நிகழ்ந்ததேயாகும்.

காந்தியடிகளும் மதுரையும்

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றோடும், காந்தியடிகளின் வாழ்க்கையோடும் பிரிக்கமுடியாத தொடர்பினை மதுரை மாநகரம் கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டிலிருந்து 09.01.1915அன்று இந்தியாவில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து கோட்சே யால் சுடப்பட்டு, குருதிசிந்தி இறந்த 30.01.1948 வரை, இந்தியாவின் குறுக்கு, நெடுக்குகளிலெல்லாம் காந்தியடிகள் பலமுறை பயணித்திருக்கின்றார். குஜராத்திற்கும், வங்காளத்திற்கும் கன்னியாகுமரிக்கும் ஏன் காஷ்மீரத்தையும் தாண்டி ஆப்கன் எல்லையிலுள்ள வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திற்கும் பல முறை அவர் பயணித்ததுண்டு. அவ்வகையில் அவர் விரும்பி வந்து தங்கி, வரலாறு படைத்துச் சென்ற நகரங்களுள், மதுரை மிக முக்கியமானதாகும்.

காந்தியடிகளின் ஐந்து வருகைகள்

காந்தியடிகள் தனது வாழ்நாளில் ஐந்து முறை மதுரை நகருக்கு வந்து சென்றுள்ளார். ஏறத்தாழ முப்பது ஆண்டு காலகட்டத்தில் 1919, 1921, 1927, 1934 மற்றும் 1946-ஆம் ஆண்டுகளில் மதுரை மாநகருக்கு வந்து சென்றுள்ளார். ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் புதிய வடிவிலான புத்துணர்வுடன், புதிய சிந்தனைக்குள் அவர் வந்துள்ளார். ஏற்றத்தாழ்வற்ற, எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற்றிருக்கும் “சர்வோதய சமுதாயத்தைப்” (Sarvodaya Social Order) படைக்க விரும்பி, பல சாதனைகள் செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் அவரின் தரிசனத் திற்காக லட்சோப லட்சம் மக்கள் மதுரை மாநகரில் கூடியுள்ளனர். காந்தியடிகளின் நிர்மாணத் திட்டப் பணிகளிலும் மதுரை மாநகர் முன்னணி இடம் பெற்றுள்ளது. 

முதல்வருகை (1919)

தன் 50-ஆம் வயதில்தான் முதன்முறையாக 1919-இல் காந்தியடிகள் மதுரை மாநகருக்கு வந்துள்ளார். மார்ச்சு மாதம் 26, 27, 28 தேதிகளில் மூன்று நாட்கள் வைகை வடகரையில் அமைந்த “ஜார்ஜ் ஜோசப்” அவர்களின் இல்லத்தில் அவர் தங்கினார். (அக்கட்டடம் தற்போது இடிக்கப்பட்டு வேறு வடிவில் உள்ளது). இவ்வருகையின் போது அவர் ‘ரௌலட் அடக்குமுறைச் சட்டத்தினை’ எதிர்த்து மக்களை ஒன்று திரட்டி சத்தியா கிரகங்களை உருவாக்க முனைந்துள்ளார். ஜார்ஜ்ஜோசப் தலைமையில் தியாகி சங்கிலியாபிள்ளை உட்பட 5 பேர் முதன்முறையாக சத்தியாகிரகிகளாக காந்திஜியுடன் இணைந்தனர். இவ்வருகைதான் காந்தியப் பணிகளுக்கு அடித்தளமிட்ட வருகையாகும்.

இரண்டாம் வருகை (1921):

இவ்வருகை வரலாற்றுச் சிறப்புமிக்க வருகை யாகும். உலக வரைபடத்தில் மதுரையை இணைத்த பெருமை இவ்வருகைக்கு உண்டு. 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 21, 22 ஆகிய தினங்களில் மேல மாசி வீதியிலுள்ள “251-ஆம்” எண் ராம்ஜி-கல்யாண்ஜி ஆகியோரின் இல்லத்தில் தங்கியிருந்தார். “ஒத்துழை யாமை இயக்கத்தின்” உச்சமாக, கதர் மற்றும் சுதேசி இயக்கத்தினை வலுப்படுத்திட அந்நியத் துணிகளைத் தூக்கியெறிந்திட அவர் சூறாவளி சுற்றுப் பயணம் செய்தார். “வளந்தேற்ற வறுமை” (Voluntary Poverty யினைக் கடைப்பிடிக்கும் முகத்தான் ஏழைகளோடு தன்னை முழுமையாக ஐக்கியப்படுத்திக்கொண்டு, செப்டம்பர் 22 அன்று மேலமாசி வீதியில் தன் குசராத்தி ஆடைகளைக் களைந்து, அரைமுழ ஆடையினை உடுத்தி வரலாறு படைத்தார். குண்டடிபட்டு இறக்கும் வரை அவர் மேலாடை அணியவேயில்லை. இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொள்ள லண்டன் சென்று, அங்கு ஆறாம் ஜார்ஜ் மன்னரை பக்கிங்ஹாம் அரண் மனையில் சந்தித்த போதும், சர்வாதிகாரி முசோலினியை ரோம் நகர அரண்மனையில் சந்தித்த போதும்கூட இதே அரைமுழ ஆடையுடன் மேலாடையின்றித்தான் சென்றார்.

மூன்றாம் வருகை (1027)

இம்முறை காந்தியடிகள் 1927-இல் செப்டம்பர் 28, 29, 30 ஆகிய நாட்களில் மதுரையில் தங்கியுள்ளார். சுதேசி இயக்கம், அதிதீவிர கதர்த்துணி பிரச்சாரமே அவரின் நோக்கம். இம்முறை அவர் சென்றவிட மெல்லாம் லட்சக்கணக்கான மக்கள் கூடினர். கதர்ப்பணியின் முக்கிய கேந்திரமாக மதுரை நகர் அப்போது விளங்கியது. மதுரை மாவட்ட மக்கள் கதர்ப்பணியில் ஆற்றல் மிக்கவர்கள், சிறந்தவர்கள்” என காந்தியடிகளின் பாராட்டுப்பெற்ற நகரமாக மதுரை விளங்கியது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

நான்காம் வருகை (1934)

gandhi_madhurai_400இது காந்தியடிகளின் சமூகப்புரட்சிக்கு வித்திட்ட வருகையாகும்.

1934-ஆம் ஆண்டு ஜனவரி 25 முதல் 27 வரை மூன்று நாட்கள் திரு.என்.எம்.ஆர்.சுப்பராமன் அவர்களின் இல்லத்தில் தங்கினார். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் அரிஜனங்கள் அனுமதிக்கப்படாததைக் கண்டித்து, மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் நுழை யாமல் திரும்பிச் சென்று “ஆலயப்பிரவேச இயக்கத் தினை” துவக்கினார். மேல்சாதியினரான அ.வைத்திய நாதய்யர், என்.எம்.ஆர்.சுப்பராமன் மற்றும் திரு.கக்கன்ஜி போன்றோர் அதிதீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளையர்களோடு போராடுவதைவிட மேல்சாதி இந்துக்களுடன் ஹரிஜனங்களின் உரிமைகளைப் பேணப் போரிடுவது மிகக்கடினமாக உள்ளது எனக் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

“ஆலயப்பிரவேசப் போராட்டம்” ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று, 1939ஆம் ஆண்டு ஆகஸ்டு 8-ஆம் தேதி ஹரிஜனங்களுக்கு மற்றும் அனைத்துச் சாதியினருக்கும் திறந்துவிடப்பட்டது. இதற்காக அக்கால மாகாண அரசு இராஜாஜி தலை மையில் சட்டமியற்றியது. மதுரை நகரின் சமூக-சமய வரலாற்றில் முதன்முறையாக அனைத்துப் பிரிவினருக்கும் ஆலயம் திறந்துவிடப்பட்ட அற்புதக்காட்சிக்கு வித்திட்டது, காந்தியடிகளின் நான்காவது வருகையாகும்.

ஐந்தாம் வருகை (1946)

இதுவே காந்தியடிகளின் கடைசி வருகையாகும். ஹரிஜனங்களுக்காகத் திறந்துவிடப்பட்ட ஆலயத்திற்குள் சென்று மகிழ்ச்சியுடன் அம்மனை தரிசிப்பதே காந்தியடி களின் பிரதான நோக்கம். ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்குப் பின் கடும் வேலைப் பளுவிற்கிடையே மதுரை மாநகருக்குக் காந்தியடிகள் வந்துள்ளார். பிப்ரவரி 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் சிவகங்கை ராஜா அரண்மனையில் (தற்போது மீனாட்சி அரசினர் கல்லூரியின் வரலாற்றுத்துறை அமைந் துள்ள கட்டடம்). தங்கி பிறவிப்புரட்சியாளர், சமூக நீதிப் போராளி மகிழ்ச்சியுடன் வழிபாடு செய்துள்ளார்.

முடிவுரை

மதுரை மாநகருக்கு சுவாமி விவேகானந்தர், பால கங்காதரதிலகர், ஆறாம் ஜார்ஜ் மன்னர், நேரு, நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் போன்றோர் வந்திருந்து பெருமை சேர்த்தாலும் காந்தியடிகளின் ஒவ்வொரு வருகையும் முத்திரை பதித்துள்ளது. ஏதோ வந்தேன்-போனேன் என்றில்லாமல் மக்களை ஆர்த்தெழச் செய்த வருகைகள் அவை. ரசவாதம் போன்று வன்முறை உணர்வுற்றவர் களைக்கூட ‘அகிம்சை”யை பின்பற்ற வைத்த வருகைகள் அவை. காந்தியடிகளின் மறைவிற்குப் பிறகு அன்னாரின் அஸ்தி காந்தி மியூசிய வளாகத்தில் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளது. காந்தியடிகள் வெறும் சிந்தனையாளர் மட்டுமல்லர், அவர் செயலாற்றலுடன் கூடிய சிந்தனையாளர். அவர் மறைந்தாலும் அவரின் தத்துவங்களை, செயல்பாடுகளைக்கற்றுக் கொள்ள உலக முழுவதிலு மிருந்து நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் நம் நகருக்கு வந்துள்ளனர். அவர்களுள் டாக்டர் மார்ட்டின் லூதர்கிங், அவரின் துணைவியார் திருமதி கொரேட்டா ஸ்காட்கிங், அயர்லாந்து நோபல்பரிசு வீராங்கனை திருமதி மெய்ரெட் மாகுயர் காரிகன், தலாய்லாமா, அன்னை தெரசா இன்னும் பலர்.

Pin It