‘உடன்கட்டை (ஒரு வரலாற்றுப் பார்வை)’ என்ற ஜெயவீரதேவன் நூலில் ஆறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. உடன்கட்டை என்ற கொடிய நிகழ்வு குறித்தான காரணங்களையும் வரலாற்றையும் ஆராய்கின்றது இந்நூல்.

உடன்கட்டை ஏறும் வழக்கம் பண்பாடு சார்ந்ததாகச் சொல்லப்பட்டு வலியுறுத்தப்பட்டது. எனவே தான் சிறந்த பண்பாட்டின் இருப்பிடம் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இவ் வழக்கம் மிகுதியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்து உள்ளது. ‘இந்தியாவில் உடன்கட்டை’ என்ற முதல் கட்டுரையானது உடன்கட்டை ஏறும் வழக்கத்தை வலியுறுத்த முனைந்த புராண, இலக்கிய, வரலாற்றுக் கற்பிதங்களை விவரிக்கின்றது. இந்நிகழ்வுகளில் நடைபெற்ற சடங்குமுறைகள் பற்றியும் பேசுகின்றது. “சங்ககாலத்தில் கணவன் இறந்த செய்தி கேட்டதும் உடனே மரணமடையும் பெண்ணைத் தலைக் கற்பு உடையவளென்றும், கணவனுடன் சிதையில் விழுந்து உடன்கட்டையேறும் பெண்ணை இடைக்கற்பு உடையவளென்றும், விதவைத் தன்மையை ஏற்றுக் கொண்டு கைம்மை நோன்பு இருப்போர் கடைக் கற்பு உடையவர்களென்றும் பெண்களைத் தரப்படுத்தியிருந்தனர்” பெண்களுக்கான கற்பு நிலையை வரிசைப்படுத்தியுள்ளனர் என்று சான்று காட்டப்பட்டுள்ளது.

jayaveeradevan_400கி.மு.316ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் கேயிட்டஸ் என்ற மன்னனின் இறப்பினால் அவனது மனைவி உடன்கட்டை ஏறிய நிகழ்வே முதல் பதிவாக அமைந்துள்ளது என்று இந்தியாவில் உடன்கட்டை குறித்தான சான்றுகள் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் கல்வெட்டு, இலக்கிய மற்றும் வரலாற்றுச் சான்றுகளில் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் பகுதிகளை வரையறுத்து இவ்வழக்கம் குறித்த வரலாற்றை விளக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உடன்கட்டை குறித்தான சான்றுகள் சோழர் காலத்தில் மிகுதியாகக் கிடைக்கப் பெற்று உள்ளது. எனவே அக்காலத்தில் இவ்வழக்கம் தீவிரமாகப் பின்பற்றியிருக்கலாம் என்பதனை அறிய முடிகின்றது. அரசர்களின் இறப்பு, போர் வீரர்களின் இறப்பு அதனால் அவர்களது மனைவியர் உடன்கட்டை ஏறிய நிகழ்வுகளே பெரும்பாலும் வரலாற்றில் ஏதாவதொரு வகையில் இடம்பெற்று உள்ளது. சாதாரண மக்கள் பற்றியான பதிவு ஒன்றிரண்டே காணப்படுகின்றது. எனவே அக்கால கட்டத்தில் சதியானது உயர்குடி மக்களால் மட்டுமே தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வந்தனவா என்ற கேள்வி எழுகின்றது.

அரசர்கள் போரினாலோ முதுமையாலோ இறக்கும் சூழ்நிலையில் அவர்களது பட்டத்தரசிகளாக விளங்கிய மனைவியர்கள் மட்டுமின்றி அந்தப்புரப் பெண்கள் பணிப்பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் உடன்கட்டை ஏறியதாகவும், ஏற்றப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார் நூலாசிரியர். 17, 18ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவிலும், தமிழகத்திலும் சதி தீவிரமாகப் பின்பற்றப்பட்டுள்ளது என்பதனைச் சான்றுகள் மூலம் அறிய முடிகின்றது.

மேலை நாடுகளில் உடன்கட்டை ஏறும் சில நிகழ்வு நடைபெற்றுள்ள வரலாற்றுச் சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. “பண்டைய காலத்தில் கிரேஸ்டன் நகரில் சில குழுக்களிடையே கணவனது மரணத்துக்குப் பிறகு அவனுக்கு மிகவும் விருப்பமான பெண்களைத் தேர்ந்தெடுத்து சில சடங்குகள் செய்து பின்பு உறவினர்களால் உடலைத் துண்டித்து, மரணமடைந்தவனின் கல்லறையின் அருகே புதைப்பர். அவனுக்கு விருப்பமற்ற மனைவியர் வெட்டப்பட்டு வெளியே தூக்கியெறியப்படுவர்” என்றும் மேலும் இதுபோன்று சில நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டுகின்றார் ஜெயவீரதேவன்.

தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள உடன்கட்டை ஏறிய நிகழ்வு குறித்தான சான்றுகளைத் தமிழ்நாட்டில் உடன்கட்டையேறும் வழக்கம் என்ற மூன்றாவது கட்டுரை அமைகின்றது.

தமிழகத்தின் தென்பகுதியில் குறிப்பாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் உடன்கட்டை ஏறும் நிகழ்வானது மிகுதியாகக் காணப்பட்டுள்ளது. நான்காவது கட்டுரை அப்பகுதியில் நிகழ்ந்த சதி கொடுமைகளைக் களஆய்வின் மூலம் திரட்டப்பட்ட தகவல்களைக்கொண்டு விவரித்துள்ளார். இக்கட்டுரை மிக நீண்டதாகப் பல்வேறுவிதமான தகவல்களைக்கொண்டு அமைகின்றது. திருமணம் ஆகாமல் அதற்காக நிச்சயமாக்கப்பட்ட நிலையில் மாப்பிள்ளை இறந்தால் மணப்பெண் உடன்கட்டை ஏறித் தெய்வமானதாகப் பல நிகழ்வுகளை இக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடன்கட்டை ஏறும் நிகழ்வானது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டாலும் பழங்குடி சமூகத்தில் இவ்வழக்கம் இருந்திருக்கவில்லை. தாய்வழிச் சமூக மரபானது மறைந்து தந்தை வழிச் சமூகமானது நிலைத்து வேரூன்றி மனைவி கணவனின் சொத்தாக மாறினர். இந்தச் சமூக மரபு மாற்றமானது உடன்கட்டை, பண்பாட்டு வழக்கமாகக் கொள்ளப்பட்டதற்கு மிக முக்கியமான ஒரு காரணமாகும் என்கிற கருத்தை நிறுவுகின்றார் நூலாசிரியர்.

அகமணமுறையில் இருந்து விலகிவிடாமல் வருண சமூக, பொருளாதார நிலையைக் கட்டிக் காக்கவும் சதியானது வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இருந்து விலகிய அரசிக்கு ஏற்பட்ட கொடூரத்தை விளக்க ஒரு சான்று கூறப்பட்டுள்ளது. “காஷ்மீரில் மன்னன் இறந்தவுடன் அவனது மனைவி உடன்கட்டையேற விரும்பாமல் தாழ்ந்த சாதி இளைஞன் ஒருவனைத் திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து ஆட்சி செய்ய விரும்பிய நிலையில் மன்னனின் உறவினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் அவளைக் கட்டாயமாக உடன்கட்டையேற்றிக் கொலை செய்ததை நாம் அறியமுடிகிறது” என்று வரலாற்று நிகழ்வைப் பதிவு செய்கிறது. இக் கட்டுரையில் கைம்மைக் கொடுமை குழந்தை மணம், பலதார மணமும் முதலியன பற்றி விளக்க மாக விவரித்துள்ளார்.

தீப்பாய்ந்து உயிர்விட எண்ணிய பெண்கள் அக்கால அரசர்களிடம் அல்லது அப்பகுதி குறுநில மன்னர்களிடம் அனுமதி பெற்றுதான் உடன்கட்டை ஏறியுள்ளனர். இந்நிகழ்விற்கான சடங்குகளுக்குத் தேவைப்படும் பொருட்கள் வாங்குவதற்குப் பண உதவியும் செய்துள்ளனர். உடன்கட்டை ஏறுவதற்கு எல்லா மன்னர்களும் அனுமதி அளிக்கவில்லை என்பதனை இக்கட்டுரைகளில் உள்ள பதிவுகளால் அறிந்துகொள்ள முடிகின்றது. தீப்பாய எத்தனிக்கும் பெண்களுக்கு அறிவுரை கூறி அவர்கள் நல்வாழ்வு பெற உதவிகள் செய்ததாகவும் செய்ய விழைந்ததாகவும் சில பதிவுகள் கூறுகின்றன. ஆனால் சதியை மக்கள் பண்பாட்டிலிருந்து முழுமையாக விளக்க எத்தகைய நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால் ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு வந்து கொள்ளைகளிலும் சுரண்டல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டாலும் சில நன்மைகளைச் செய்தனர். பண்பாட்டு வழக்க ரீதியான சில நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் கொண்டு வந்தனர். அவ்வகையில் மிக முக்கியமான நடவடிக்கையாகச் சாதி ஒழிப்பைக் கூறலாம். ‘சதி ஒழிப்பு’ச் சட்டம் கொண்டுவர ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட முயற்சிகளை ஆறாவது கட்டுரை விவரிக்கின்றது.

சொத்துரிமையும் கைம்மைக் கொடுமையும் சாதிய வரன்முறைகளும் உடன்கட்டை வழக்கத்திற்கு மிக முக்கியமான காரணமாக முடிவுரையில் கூறுகின்றார். தற்காலத்திலும் இந்நிகழ்வுகள் இந்தியாவின் வடபகுதிகளில் நடந்துள்ளது என்று சில சான்றுகளைக் காட்டியுள்ளார். “மக்களின் மனங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் வராதவரை இப்பழக்கம் எங்கோ ஒரு மூலையில் ஏதாவது ஒரு காரணத்தின் அடிப்படையில் தொடர்ந்து கொண்டிருக்கும்” என்பது ஜெயவீரதேவனின் உடன்கட்டை குறித்தான ஆய்வு முடிவாக அமைந்துள்ளது.

உடன்கட்டை ஏறும் வழக்கம் குறித்துத் தமிழில் இதுவரை விரிவான ஆய்வு ஏதுமில்லாமல் இருந்தது. இவ்வழக்கம் பற்றிய இந்நூலை முன்னோடியாகக் கூறலாம்.

உடன்கட்டை (ஒரு வரலாற்றுப் பார்வை)

ஆசிரியர் : செ.ஜெயவீரதேவன்

வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ்

விலை : ரூ.50.00

Pin It