கால்டுவெல் ஒப்பிலக்கணத்தின் இரண்டாம் பதிப்பை அதன் மூல வடிவில் புத்தாக்கம் செய்து அச்சுக்குக் கொடுத்ததும் ‘அப்பாடா’வென்றிருந்தது. இது ஒன்றும் அலுப்பை உதிர்க்கும் சொல் இல்லை. மாறாக. காற்றைக் கட்டிக்கொண்டு ‘வெளி’யில் பறக்கும் பெருமிதத்தின் ஒலித்திரட்சி. அசந்தால் மிரட்டிப்பார்க்கும் அச்சத்தின் கனப்பு அதில் ஒளிந்திருந்தாலும் அதையும் மீறிய பெருமித உணர்வு. உண்மையில் எங்களை நாங்களே பெருமிதப்படுத்திக்கொள்ளும் ஓர் அரிய முயற்சியாகவே இந்த வெளியீட்டுப் பணியை இனங்காண வேண்டும்.

''பெரிய வேலை. ஆனாலும் நீங்களே முடித்துவிட்ட பிறகு எங்களுக்கெல்லாம் நன்றி சொல்லியிருக்கவே தேவையில்லை.” என்றார் சுகி வெங்கடேசன். நூலுக்கான எனது அறிமுக உரையில் நண்பர்களுக்குச் சொல்லியிருக்கும் நன்றியைக் குறிப்பிட்டே அப்படிச் சொன்னார். மேலைநாட்டு அச்சு வேலைகளைச் செப்பம் செய்தனுப்பும் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர் அவர். எங்கள் உழைப்புக்கு அவர் தரும் மதிப்பீடு அது.

‘இந்தப் பதிப்புக்கு நான் செலுத்திய நெஞ்சார்ந்த கரிசனமும் உழைப்பும் கொஞ்ச நஞ்சமல்ல’ என்று கால்டுவெல் தன் இரண்டாம் பதிப்புக்குச் சொல்லிக்கொண்டதையே நாங்களும் சொல்லிக் கொள்ளலாம் என்னும் அளவுக்கு எங்கள் மறுவெளியீட்டு முயற்சியும் தீவிரத்தன்மை கொண்டதாகவே இருந்தது. இந்தப் பணியில். என் கை முறிவுக்கு இருமுறை அறுவை செய்துகொள்ள நேர்ந்த அலைக்கழிப்பு மிக்க குறுக்கீட்டிலிருந்து தப்பித்தெழும் பொருட்டு. பிறர் உதவிக்காக அதிகம் காத்திருக்க நேர்ந்து. அது ஒன்றும் சரிப்பட்டு வராதபோது. எனது துணைவியாரும் நானுமே எங்கள் தோதுக்கேற்றபடி பணிகளை ஓர் எல்லைக்குட்படுத்தி நிறைவு செய்துகொள்ளும்படியாயிற்று.

இதன் காரணமாக. நூலுக்குள்ளேயே அடிக்குறிப்புகளாக மேலும் சிலவற்றை அடைவு செய்திருக்கலாமே என்பது போன்ற வாசக எதிர்பார்ப்பில் போதாமைகள் உணரப்படுமானால் அதற்கு நாங்களே பொறுப்பு. ஆனால் அது ஒரு குறையாகக் கருதப்படுவதைவிட மிகையாகக் கருதப்பட்டு நூலின் ஓர்மையை உறுத்திவிடக் கூடாது என்பதில் நாங்கள் கவனம் காத்தோம். அதைவிடவும் நூலைக் கொணர்ந்த எங்கள் நோக்கத்தில் குறை காண்பவர்கள் இருந்தே தீர்வார்கள் என்பதுதான் எங்கள் உழைப்புக்குக் கிடைக்கும் அதிகப்படியான சிறப்பு. பொதுக் குற்றங்களைப் பண்பாட்டு நியாயங்களாகப் பார்க்கும் ஒரு சமூகத்தில். வல்லடியாகப் புணரும் கணவனின் மேல் கற்பழிப்பு வழக்குத் தொடரும் பத்தினிப் பெண்ணைக் குற்றவாளியாகப் பார்க்கிறவர்களுக்கும் எங்கள்மேல் குறை காண்பவர்களுக்கும் பெய வேறுபாடு ஒன்றும் இருந்துவிடப் போவதில்லை.

நான் அவருக்கு மறுமொழியாக. ''அப்படியில்லை. வெங்கடேசு. நீங்கள் யாவரும் ஒரு கொள்கலத்தின் அடித்தகடு போன்றவர்கள். அடியில்லாத பாத்திரத்தால் எதனை அளக்க முடியும்? தேடியும் கிடைத்தற்கரிய நூலைக் கொடுத்துதவிய நா. ப. இராமசாமி அவர்கள். இதனை ஒளிப்படி எடுத்து அனுப்பியுதவிய பொ. வேல்சாமி, பெருமாள் முருகன், தேவைப்பட்ட குறியீட்டு எழுத்துருக்களை வடிவமைத்துக் கொடுத்து சொல்லடைவு செய்து தந்த நீங்கள். திருத்தப்பட்ட பகுதிகளைத் தொகுத்துப் புத்தகமாகச் செய்ய உதவிய சக்கரவர்த்தி போன்றோர் இல்லாமல் இந்தப் பணி நிறைவு பெற்றிருக்க முடியாது. பிழை திருத்தமும், அச்சுக்குறியீடுகளைச் சரிபார்த்தலும் மேற்பார்வை செய்தலுமே எல்லாமாகிவிடும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஒவ்வொருவரும் எங்கள் தேவைக்கேற்ப உறுதுணையாகவும் உந்துதலாகவும் இருந்தார்கள் என்பதே உண்மை என்றேன்.

செய்யும் பணியைச் சொல்லில் பகிர்ந்து கொள்ளக்கூட எங்களுக்குத் துணை வேண்டியிருந்தது. அவ்வகையில் பேராசியர் வீ.அரசு அவர்கள் எனக்கும் என் இயங்கு வெளிக்கும் அனுசரனையுள்ள உற்ற சாட்சியாய் இருந்து உளம் பகிர்கிறவர். கால்டுவெல் பற்றி ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய நூலையும் சில கட்டுரைகளையும் எனக்குத் தேடித் தந்தவர். கணினி ஒளிப்படிகளை எடுத்துக் கொடுப்பதில் பிரகாஷ் பெரிதும் உதவியாயிருந்தார். இந்நூலின் நகலச்சுப்படிகள் கைக்குக் கிடைத்தபோது அதன் தொடக்கப் பக்கங்கள் பல காணாமல் போயிருந்தன.

அந்நிலையில் கால்டுவெல் பதிப்பின் முகப்புத்தாளை ஒளிப்படி எடுத்து அனுப்பி உதவியவர் புதுச்சேரி பிரெஞ்சு மையத்தின் கண்ணன் அவர்கள். வின்சென்ட் குமாரதாஸ் எழுதிய கால்டுவெல் பற்றிய ஆய்வு நூலை உடனடித் தகவலாக எனக்கு வழங்கியவரும் அவரே. நூலுக்கு நான் எழுதிய அறிமுக உரையை மங்கையிடம்தான் திருத்தத்துக்கும் ஆலோசனைக்குமாகப் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது. இவ்வாறு எல்லாரின் பங்களிப்போடுமே இது நிறைவேறியிருக்கிறது. இந்தச் செயற்பாட்டில் இன்னும் நிறைய பேருக்கு நான் நன்றி சொல்லியிருக்க வேண்டும். ஒரு முரண்பொருளாகத் தமிழ்ச் சமூகமே அந்த வாய்ப்பை முரட்டுத்தனமாகப் பறித்துக்கொள்கிறது.

இவர்களோடு கூடவே. முன் வெளியீட்டுத் திட்டத்தில் பங்கு பற்றி, எங்கள் பணியைத் தவிர்க்க முடியாததாக மாற்றி முன்கை கொடுத்தவர்களுக்குத்தான் எங்கள் முதல் நன்றி உரித்தாக வேண்டும். அவர்கள் செலுத்திய தொகைகள் நாங்கள் எடுத்துக்கொண்ட கால அவகாசத்தால் வங்கிக் கணக்கில் அறுநூறு ரூபாய்க்குமேல் வட்டி ஈட்டித் தந்தது என்பதையும் இங்குச் சொல்லியாக வேண்டும்.

இப்போதெல்லாம் தமிழ்ப் பதிப்புலகமானது கடல் முழுதும் வலை விரித்து.. மீன்களைக் குஞ்சுகளோடும் முட்டைகளோடும் கிளிஞ்சல்களையும் சேர்த்துக் கொள்ளையடிப்பதைப் போன்றதொரு பெருங்குழுமத் திரள்வணிகமாகப் பாத்துப் பரந்துள்ளது. அவ்வகை வணிகர்களுக்கு இந்தச் சிறுசிறு வித்தாரங்கள் வெறும் சொற்சேதங்களாயிருக்கும். ஆனால் நமக்கு அப்படியல்ல. மனிதராய்த் திரண்ட காலத்திலிருந்து மனிதராய் இருக்கப் பழகும் அனாதிகால முயற்சியை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியவில்லை. ஆகவே, நமக்கிது இலக்கியமாகிவிடுகிறது.

நாம் செய்வது தூண்டில் போட்டு மீன் பிடிக்கிறவனின் வேலை. ஒவ்வொரு பானையாக வனைந்து. சுட்டெடுத்து. சுநாதம் வருகிறதா எனத் தட்டிப்பார்த்துத் தன் சோற்றுக் கவலையை அந்த நேரத்துக்கேனும் தூங்கப்பண்ணுகிறவனின் வேலை. வேலையே பிழைப்பாகிப் போனாலும் தன் செய்திறனில் மனந்தோய்ந்து. பசி மறந்து தொழிற்படுகிற கோவணாண்டிகள் இருக்கவே செய்கிறார்கள்.

இந்த நூலை 14.4.2007 லேயே வெளியிடுவதாக அறிவிப்புச் செய்திருந்தோம். எட்டுமாதத் தாமதத்திற்குப் பின்பே ஈடேறியுள்ளது. இடைப்பட்ட காலத்தில் அவரவர்க்கும் சம்சமயங்கள் தோன்றியிருப்பினும் 'இன்னுமா தாமதம்? வருமா? வராதா?’ என்று ஒருவர்கூட கேள்வி எழுப்பவில்லை. இரண்டே இரண்டு பேர் ‘காத்திருக்கிறோம்’ என்று சொல்லிக் கொண்டதோடு சரி. என் கை முறிவைப் பலரும் அறிந்திருப்பார்கள் எனினும் எனக்கு அது வியப்பாகத்தான் உள்ளது. கை முறிவு ஒரு பக்கம் இருக்கட்டும். உண்மையில் இந்நூல் செப்பத்துக்கு இவ்வளவு காலம் தேவைப்படும் என்பதைப் பணியைத் தொடங்கிய பின்னரே தெரிந்து கொண்டோம். ஆதலால் தாமதத்திற்காக நாங்கள் ஒன்றும் வருத்தம் கொள்ளவில்லை.

நாங்கள் குறிப்பிட்ட வெளியீட்டு நாள் பற்றி மேலும் ஒரு முக்கிய தகவல் பரிமாறிக்கொள்ள வேண்டும். அந்த நாளை எல்லாரும் தமிழ்ப் புத்தாண்டு நாள் என்றே வெகு அனிச்சையாக எடுத்துக்கொண்டு விட்டனர். அப்படியே கேட்கவும் செய்தனர். ஒருவர்கூட நாங்கள் வேறு எதனை அர்த்தப்படுத்தியிருப்போம். அல்லது இந்த நாள் வேறு எதன் சரியான சுட்டுப் பொருளாக இருக்கக்கூடும் என்று அனுமானிக்கவே இல்லை. இது எங்களுக்கிழைத்த அவமரியாதை என்பதைவிடத் தமிழர்கள் தங்களுக்கிழைத்துக்கொண்ட சிறுமை என்பதே சரி.

சர்வஜித் என்பவன் திருமாலுக்கும் நாரதனுக்கும் பிறந்த பிள்ளையாம். அவன் பெயரில் தமிழுக்கு ஆண்டு! இவ்வாறு பொறுக்கித்தனமாகப் புனையப்பட்ட எல்லாக் கேவலங்களும் புனிதங்களாகவும். மேன்மையான மதாச்சாரக் கூறுகளாகவும். தமிழன் என்று சொல்லிக் கொள்கிற ஒவ்வொருவனிலும் ஊறிக்கிடக்கின்றன. எளிய தமிழ்ச் சமூகத்துக்கு நாகரிகச் செழுமையூட்டக் கிடைத்த பார்ப்பனக் கூறுகள் இவை. கால்டுவெல், தனக்குக் கிடைத்த ஆகப் பூஞ்சையான தரவுகளின் அடிப்படையில் ''நாககக் கூறுகளுடனான எளிய திராவிடர்கள், அவர்களால் மரியாதைக்குரிய ஆசான்களாகவும். பணிவு காட்டுவதற்குரிய பார்ப்பார்களாகவும் (மேற்பார்வை செய்கிறவர்கள்) ஏற்றுக்கொள்ளப்பட்ட பிராமணர்களைவிட பல நூற்றாண்டுகள் பின் தங்கியிருந்தார்கள்.

அவர்கள் வருகைக்குப் பின் அவர்களிடமிருந்து விரிந்த மனத் தயாரிப்புகளையும் உயர்ந்த நாகரிகத்தையும் உள்வாங்கிக் கொண்டபோதே, அவர்கள் திணித்த வெற்றுப் புதை படிவங்களாகிப்போன சாதி ஆச்சாரங்களாலும். நடைமுறைக்கொவ்வாத இறை கோட்பாட்டாலும். சாரமற்று உளுத்துப்போன சடங்குகளின் வில்லங்கமான செக்கு மாட்டுத்தனத்தாலும் திராவிடர்களின் சமூக வாழ்வு பெருஞ்சுமையாய்க் கனத்துவிட்டது.” என்று நடைமுறை வீழ்ச்சியைச் சரியாகவே படம் பிடித்துக் காட்டுகிறார். ‘தமிழ் வருஷப்பிறப்பு’ என்பது அந்த வீழ்ச்சியின் ஒரு கீற்றுதான். திருவள்ளுவர் பெயரால் ஒரு கால நெடுங்கணக்கை அரும்பாடுபட்டுத் தேர்ந்து கொண்ட தமிழக அரசு அதற்கான தமிழ்ப் புத்தாண்டு நாளையும் உடன் நிகழ்வாக அறுதியிட்டு நடைமுறைப்படுத்தியிருக்கவேண்டும். தமிழ் சார்ந்த இவ்விதமான அரச நறுவிசுகளில் தமிழ்நாட்டு அரசு ஒருபோதும் முறையறிந்து செயல்படவில்லை என்பதுதான் தமிழர்கள் எதிர்கொள்ளும் அதிர்ச்சி மிக்க அறைகூவல்.

சர்வஜித் ஆண்டுப் பிறப்பைக் கொண்டாடுவதற்கென்று இந்தச் சமூகம் சபிக்கப்பட்டிருந்தாலும். அழிவேலைகளோடு கை கோர்த்து வரும் ‘பார்ப்பன மேன்மையை’ ஆழமாகவும் அறிவுபூர்வமாகவும் தோலுத்துக் காட்டிடும் கால்டுவெல் நூலை அந்த நாளில் வெளியிட்டு அவமதிக்க விரும்பவில்லை. மேலும் தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14 ல்தான் வரும் என்பதில்லை. அது ஏப்ரல் 15 லும் வரும். 13 லும் வரும். மாறாக. ஏப்ரல் 14இல் மட்டுமே வரும் ஒரு நாள் உண்டெனில். அது. தன் முற்றறிவின் மூலம் தன்னை நிகரற்றவராக நிறுவிக்கொண்ட மாபெரும் கல்விமானும் புரட்சியாளருமாகிய அம்பேத்கர் பிறந்த நாளைத்தான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் எந்த ஒரு மாமனிதரை நினைத்தால் பூப்பும் கண்ணீரும் என்னில் ஒரு சேர முகம் காட்டும் எனில் அது அம்பேத்கரை நினைத்துத்தான். கற்பிதமாகவேனும் நீங்கள் ஒரு சாதி கடந்த மனிதராக உணரும் பட்சத்தில் இது உங்களுக்கும் கைகூடும். அவருக்கிணையாகக் கற்றவரும் அறிவின் விளிம்பைத் தொட்டுத் தளும்பியவரும் இனி பிறந்தால்தான் உண்டு என்பது பூரிப்புக்குரிய விஷயம். அந்தக் கனவானின் உருவப்படம் இந்தியா முழுவதும் குடிசைகள், குப்பங்கள், நடைபாதைகள், தெருவோரங்கள், பொதுப் பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்ட நலிந்த குடியிருப்புகள் என முற்றும் புறக்கணிக்கப்பட்டோர் நடுவில் மட்டுமே கம்பீரமாகத் தொங்கிகொண்டிருப்பதைக் காண்பது கண்ணீருக்குரிய அவலம்.

ஆனால் இன்னொரு கோணத்தில் பார்த்தால் அவருக்கும் சமூகத்துக்குமான நம்பகத்தன்மையின் சின்னமும் அதுவே. (அண்மைக் காலமாக சாதியை மறைத்து வாழும் நெருக்கடியிலிருந்து தங்களைத் தன்மானத்தோடு விடுவித்துக்கொண்ட படித்த தலித்துகளும் தங்கள் வீடுகளை அவரது படத்தால் அலங்கரிக்கிறார்கள். அலங்கக்கிறார்கள் எனச் சொல்லக் காரணம், அவர்கள் இன்னும் தம் உடன்பிறப்புகளைக் கை தூக்கிவிடும் கடமையைத் தொய்வில்லாமல் தொடர வேண்டிய பணியை விடுதலை எழுச்சியாகத் திட்டமிட்டுச் செய்யவில்லை என்பதற்காக.)

ஒரு தலித்தாகப் பிறந்துவிட்டார் என்பதற்காகவே, அறிவில் அவர் கால் தூசுக்குப் பொறாத சாதிப் பெருநோயாளிகள் அவரைப் புறக்கணித்துவிடக் கூடும் எனில், இந்தியாவில் 75 சதவீத மக்களை வெறும் சாதிச் சாக்கடையில் புரளும் பன்றிக் கூட்டமாக அடையாளப்படுத்திவிட்டாரே அவர் என்று தலித் மக்கள் தங்கள் சாதிப் பிணக்குகளைத் தள்ளிவைத்துவிட்டு அந்த மாபெரும் தலைவரை மதிப்பிடத் தெரிந்தவர்களாய்க் கொண்டாடி மகிழலாம்தான். ஒரு பெருஞ்சாதிக்காரனைவிட ஒரு தலித்தானவன் அகத்தூய்மையிலும் புறத்தூய்மையிலும் நூறு மடங்கு மேம்பட்டிருந்தாலும் அவன் தீண்டாதவனாகத்தான் கருதப்படுவான் எனில் மலப்புழுவுக்குப் பஞ்சாமிர்தமா உணவாயிருக்க முடியும்?

இந்தியா முழுதும் தங்களுக்குள் சாதி வேற்றுமைகளைப் பாராட்டிக்கொண்டே சிதறிக் கிடக்கும் தலித் மக்களுக்கு

அம்பேத்கர்தான் ஒற்றுமையின் அடையாளமாய் இருக்கிறார். எழுச்சியின் உந்து விசையாகத் திகழ்கிறார். போராட்டத்தின் கூராயுதமாக வெளிப்படுகிறார். எப்போதும் போலவே தலித்துகள் தொடர்ந்து சீரழிக்கப்படுகிறார்கள். பல கொடுமைகள் வெளிச்சத்துக்கு வராமலே புதைக்கப்படுகின்றன. தலித் மக்களும் தனியாள்களாய்த் தங்கள் கோபங்களை அச்சத்தில் புதைத்துக்கொள்கிறார்கள். தலித்துகள் தனிப்பட்ட முறையில் இன்னமும் பூஜ்ஜியங்களாகவே கருதப்படுகிறார்கள்; அல்லது உணர்த்தப்படுகிறார்கள். ஆனால் இந்தியாவின் எந்த மூலையிலேனும் அம்பேத்கர் சிலைக்கு எவனாவது அவமதிப்பு செய்துவிட்டால். அத்தனை பூஜ்ஜியங்களும் அம்பேத்கர் என்னும் 1ஐ முதலிடத்தில் வைத்து மாபெரும் சக்தியாக அர்த்தம் பெற்று வெடித்துக் கிளம்புகின்றன.

மண்ணைக் கொட்டியோ,நீரைப் பீய்ச்சியோ அணைத்துவிட முடியாத தீப்பிழம்பாகப் பீறிட்டுக் கிளம்புகின்றன. தலித்துகளின் புதையுண்ட கோபங்களையும் தனிமனித இயலாமைகளையும் திரட்டி. எதிர்த்துப் பீறிடும் சமூகக் கோபங்களாய் அர்த்தப்படுத்தும் மீட்பராக அம்பேத்கரே எழுந்து வருகிறார். தலித்துகளின் இருப்பும் எழுச்சியும் இன்று அம்பேத்கரின் அடையாளத்தால் மட்டுமே ஆயுதங்களாய் வடிவெடுக்கின்றன. இவ்வாறான எழுச்சியை வெறும் தற்செயல் நிகழ்வுகளாகச் சிதறிப் போகாமல் ஒரு குவியத்தில் பொருத்தி வளர்த்தெடுக்கும் பொறுப்பு தலித்துகளுக்கு உண்டு.

இப்படிப்பட்டதொரு காலகட்டத்தில் நாங்கள் அந்தப் பெருமகனாரின் பிறந்தநாளில்தான் நூலை வெளியிட உத்தேசித்திருந்தோம் என்பதைப் பளிச்சென நினைவு கூர ஒரு நாதியும் இல்லை என்பதைக் காணும்போது. அந்த நாளில். கால்டுவெல்லின் நூலை அவரது தலித் கரிசனத்தைப் பொருட்படுத்திக் கொண்டாடும் முகமாக வெளியிடத் துணிந்தது முற்றும் சரி என்றே படுகிறது.

கடந்த 15. 16 ஆண்டுகளாக,அதாவது அம்பேத்கர் நூற்றாண்டு முதற்கொண்டே தமிழ் நாட்டில் தலித்தியமானது புதிய வெளிச்சங்களோடு பேசப்பட்டாலும் அது இன்னும் பேச்சை மீறிய சுடுதழல் சுரணையாக ஆழப்படவில்லை. அல்லது தலித்திய விதைகள் முளைத்த மண் இன்னும் கெட்டிப்படாததோடு முளைகளும் எளிதாய்ப் பிடுங்கி எறிந்துவிட முடியாதபடி அடி மண்ணை நோக்கி ஆணி வேர் பாய்ச்சவில்லை என்றே படுகிறது. இதற்கு நூறு வகை புறக்காரணங்கள் இருப்பினும் அகக் காரணமாக. 'விடுதலையைத் தவிர வேறெதனாலும் அமைதியடையாத ஊழிஅழலாகத் திமிறியெழல்’ என்பது ஆதிநாள் முதலே தலித்துகளிடம் தொழிற்படவில்லை என்றே சொல்லலாம். அந்தத் ‘திமிறியெழல்’ நாடார்களிடம் இருந்தது, வன்னியர்களிடம் இருந்தது. சாதியடுக்கின் புதைமணலிலிருந்து மேலேறி வந்துவிட்டார்கள்.

தலித்துகளிடமும் அப்படியொரு மேலேற்றம் நிகழுமெனில் முதலில் அது பள்ளர்களிடம் நிகழும்; அடுத்து சக்கிலியர்களிடமும் நிகழ்ந்துவிடும். ஆனால் குடிப்பெருமை போலொரு அறிவார்வம் நிலவும் பறையர்களிடம் அது நிகழாமல் இருக்கும் பொருட்டுத்தான் அடிநாள் தொட்டே அவர்கள் வலங்கையர்களாகப் பேணப்படுகிறார்கள். பறையர்களும் அதற்குத்தக தங்கள் புத்தி சாதுர்யத்தை ஈடாக வைத்து உடன்பட்டுப் போகிறார்கள்.

ஒரு நெருக்கடியான சூழலில் அம்பேத்கருக்கு எதிராக எம்.சி.ராஜா சாய்ந்ததும். அயோத்திதாசர் அருந்ததியர்களை இழித்துச் சொன்னதும். இன்றைய சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமானர் அருந்ததியருக்கெதிரான கண்ணோட்டமும் பார்ப்பன மேடையில் நிகழ்த்திய பெரியாருக்கெதிரான தம்பட்டமும் வலங்கை மனோபாவத்தின் வெளிப்பாடாகத்தான் கணிக்கப்படும். இது ஒரு படிமுடிச்சு. படிமுடிச்சுகள் அவிழ்க்கப்படுவதற்கல்ல. வெட்டியெறியப் படுவதற்கே. வெட்டி எறிவதை விரைவு படுத்தாவிடில், நீண்ட நெடுங்காலமாகக் குறுக்கீடுகளற்றுத் தொடரும் தங்கள் ‘தாழ்வற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்ட’ வாழ்வியலுக்காக மட்டுமே அவர்கள் பெருமிதம் கொள்ள நேரும். அது பெருமிதம்தான் என்று வியாக்கியானம் செய்கிற நரேந்திரமோடிகள் வாழும் தேசத்தில் எந்தக் கீழ்மையும் பொறுத்துக்கொள்ளக் கூடியதாகவே உருவேற்றப்படும்.


கேரளப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசியர் கி.நாச்சிமுத்து அவர்கள் கால்டுவெல் பற்றிப் பலடமிருந்தும் கட்டுரைகள் பெற்றுத் தொகுத்து வெளியிடும் யோசனையைத் தெவித்திருந்தார். கட்டுரை கோர சிலரது முகவரிகளையும் கொடுத்துதவினார். நாங்களும் அதனைச் சாத்தியப்படுத்த நினைத்தோம். அவர் கொடுத்த இரண்டொரு முகவரிகளைத் தொடர்பு கொண்டோம். ஒருவரும் பதில் எழுதவில்லை. திரும்பத் திரும்ப நச்சரித்தால் ஒருவேளை அவர்கள் மனமிரங்கி எங்கள் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்திருக்கலாம். நாங்கள் அதைச் செய்யவில்லை. ஏனெனில். எங்கள் முதன்மைப் பணி அதுவல்ல.

கால்டுவெல் பற்றிய மரபியல் புலமையாளர்களின் இதிகாசப் பிரவசனங்களை மேலதிகக் கொண்டாட்டமாக யார் வேண்டுமானாலும் நிகழ்த்தலாம்; தொகுக்கலாம். நாங்களும் சுவைக்கலாம். என்றாலும் அந்தக் கொண்டாட்டத்தைத் தொடர்வதற்காக இந்த நூல் வெளியிடப்படவில்லை. மாறாக, யாராலும் பேசப்படாமல் இருட்டிப்புச் செய்யப்பட்ட, யாருக்கும் பொருட்படுத்தத் தோன்றாமல் புறக்கணிக்கப்பட்ட, அதன் இருப்பையே இல்லாமலாக்கிவிடத் திட்டமிட்டு மௌனப்படுத்தப்பட்ட ஒரு கட்டுரையை - தலித்துகள் பற்றிய ஒரு பேசு பொருளை - வெளிச்சத்துக்குக் கொண்டு வரவும், அதன் பின்னணியில் கால்டுவெல் நூலும் தமிழ்ச் சமூகத்தில் அதற்கான எதிர்வினையும் பற்றித் துண்டிக்கப்பட்ட கண்ணியைப் புதிய உரையாடலில் பொருத்துவதற்குமாகவே இந்த வெளியீட்டு முயற்சியை வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கிறோம்.

எங்களிடம் பொருள் இருக்கவில்லை. இதை வெளியிடுவதற்கு. ஆனால் வீடு இருந்தது அதன் மேல் கடன் வாங்கிக் கொள்வதற்கு. (வாழத் தொடங்கிய நாளிலிருந்தே நாங்கள் கடன் சொல்லிப் பழகவில்லை. ஆனால் கடன் வைக்கிறவர்களுக்குத்தான் வணிக வட்டத்தில் அதிக மதிப்பு கொடுக்கிறார்கள்; பணிவு காட்டுகிறார்கள். வணிக நெளிவு சுளிவு என்பது கரவு மிகுந்த மதிப்பீடுகளின் புழங்கு வெளிபோலும்.) எங்கள் வெளியீட்டு முயற்சியில் அதைத் தொடங்குவதற்குமுன் பொருளுதவிக்குச் சொல்லி வைத்தோம். அதற்கு முறையான பதிலும் கேட்கப்பட்டவனின் தொடர்பும் அற்றுப்போன ஒரு கசந்த அனுபவத்திற்குப் பிறகு, வேறு எவடமும் இதுபற்றிப் பேச்சு வைத்துக் கொள்ளவோ, பிறரது இலவச அறிவுரைகளுக்குச் செவி சாய்த்து மன உளைச்சல் படவோ கூடாது என்பதில் கடைசி வரை தெளிவாக இருந்தோம்.

அவ்வகை முயற்சிகள் ஒருபோதும் எங்களை உற்சாகப்படுத்தாது. முன்செல்ல விடாது என்பதைப் புந்துகொள்வதில் வருத்த உணர்வை விடத் தப்பித்தல் உணர்வே மேலோங்கியது. ஆனால் இந்த ஞானம் ஒன்றும் சும்மா கிடைத்து விடவில்லை. ஒரு பதினைந்தாண்டுக் காலம் தலித்தியம் பேசி, தலித்தியர்களாக வாழ்ந்து பெற்ற பட்டறிவைத் திரட்டி, கெட்டித்துக் கொண்டதால் வந்த ஞானம்.

தங்களுக்கு மானமும் அறிவும் இருப்பதாக நம்புகிறவர்கள் மறவாமல் செய்ய வேண்டிய முதல் பணி, உலகின் அத்தனை ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிராகத் தங்கள் எண்ணத்தைக் கூர்மைப்படுத்துவதுதான். தன்மானத்தோடு கூடிய, சமமதிப்பும் சமநீதியும் கேட்டு முன்னெடுக்கும் எல்லா விடுதலை முயற்சிகளுக்கும் முன்கை கொடுப்பதுதான். அந்த வகையில் எங்கள் அடையாளமாகவும் பேசு பொருளாகவும் தலித்தியம் மேலெழுந்ததோடு, அதன் உச்ச முதிர்வாக. எங்களுக்குத் தமிழைப் பற்றிப் பேசுவதென்பது தலித்தைப் பற்றிப் பேசுவதுதான் என்பது சூத்திரமாகியது.

உலகத்தில் எல்லா வல்லடிச் சிக்கல்களுக்கும் ஏதோ ஒரு நாளில் ஏதோ ஒரு வகையில் தீர்வு எட்டப்படலாம். ஆனால் உலகளவில் பெண்ணுரிமைச் சிக்கலுக்கும் இந்திய அளவிலான தலித் விடுதலைக்கும் அதிதீவிரச் சமநிலைப் புரிதலும். சட்டங்களைச் சர்வாதிகாரத்தனமாக நடைமுறைப்படுத்தும் அதனிலும் தீவிரமான மனித முகமும் தேவைப்படுகின்றன.

உலகின் அடிப்படை வாழ்வியல் தத்துவம், பிறரை அடிமைப்படுத்துவதையும் தானே அடிமைப்படுவதையும் உள்ளுணர்வாய்ப் பெற்றிருப்பதுதான்போலும். யாரெல்லாம் உயிரச்சத்திற்கு ஆட்பட்டவர்களாய்த் தங்களை எளியவர்களாகவும் பிறர் தயவைக் கோருபவர்களாகவும் தகவமைத்துக் கொள்கிறார்களோ. அவர்கள் பிறர்க்கு அடிமைப்பட்டிருப்பதைத் தங்கள் இருப்பாகவே பாவித்துக்கொள்கிறார்கள்.

இந்தத் தேற்றத்திற்கு உலகளாவிய சான்றாகத் திகழ்பவர்கள் பெண்கள். பெண்கள் நினைத்தால் தங்கள் உரிமைகளை எளிதாக வென்றெடுக்கலாம். ஏனெனில் அவர்கள் மானுடத்தில் சரிபாதியாக இருக்கிறார்கள். இதில் உள்ள கொடுமை என்னவெனில் மறுபாதிக்கு அவர்கள் தாயாக (தங்கை-தமக்கையாக. தாரமாக...) இருப்பதை எதார்த்தமற்ற விதமாய்ப் புனிதப்படுத்தித் தங்களைப் பலியிட்டுக் கொள்வதுதான்.

பல குட்டிகளை ஈனும் நாய், பூனை போன்றவை தாங்கள் போடும் முதல் குட்டியைப் பேறுகால மருந்தாக உட்கொண்டே, பிற குட்டிகளைத் மூர்க்கமாகப் பாதுகாக்கின்றன. குட்டிகள் தாங்களாகவே இரை தேடிக்கொள்ளும்வரைதான் அந்தப் பராமரிப்பு. அதன் பின்னர் தாயும் குட்டியும் வாயும் வயிறுகளுமாகவே வேறுபடுகின்றன. நாளையைப் பற்றிய கனவும் நேற்றையைப் பற்றிய நினைவும் இல்லாத அறிவற்ற உயிர்களைக் கொன்று புசிப்பது தப்பில்லை என்றுதான் மனிதர்கள் புலால் புசிக்கிறார்கள். ஒற்றைக் குட்டியை ஈனும் மனுஷி அந்த விலங்குகளைப் போல நடந்துகொள்ள முடியாதுதான். ஆனால் தான் ஈன்ற குழவிக்கு ஒரு சுயம் இருக்கிறது. வளர்ந்த பின் அது தன்னிலிருந்து துண்டித்துக்கொண்டு இயங்குகிறது என்பதைப் புரிந்துகொண்டு. அதற்காகத் தனது சுயத்தைப் பலியிடுவதும் அடையாளமற்றுத் தேய்வதும் புனிதமல்ல. அசல் அறிவீனம் என்னும் தெளிவு பிறந்தால். பெண் அந்தக் கணமே தன் உரிமைகளை வென்றெடுத்துக் கொள்வாள்.

தலித்துகள் நிலை அப்படிப்பட்டதல்ல. அவர்கள் எப்போதும் அடங்கியவர்களாகவே. அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியச் சமூகம் அவர்களைச் சிறுபான்மையாகவே தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. தீண்டிக்கொள்ளும் சமூகங்கள் ஒரு பொதுப் புள்ளியில் - குறிப்பாகத் தலித்துகளை அழுத்தி வைப்பதில் ஒற்றைக் குரலில் கைகோர்த்துக் கொள்கிறது. தலித்துகளுக்கெதிரான பெரும்பான்மையின் வல்லாண்மை மிக்க அரண் இதுதான். ஆளும் வர்க்கம் அதன் அதிகாரக் கூராயுதங்களால் கட்டுறுதி செய்யப்படுவதால் சிறுபான்மையாகவே பலகாலம் நிலைத்திருக்க முடியும். கடும் நெருக்கடிகளையும்கூட சில காலம் தாக்குப்பிடிக்க முடியும்.

பார்ப்பனியம் அந்த வகையில் தன் புனைவுகளையும். கற்பிதங்களையும். அவற்றின்மேல் கட்டப்பட்ட மேலாதிக்க தர்மங்களையும் வேர்மூலச் சாரங்களாகச் சமுதாயத்தினுள் சவ்வூடு பரவலாக்கி, தன்னளவில் சிறுபான்மையாக இருந்தாலும் அசைக்க முடியாத அரூபமாய் அதிகாரம் செலுத்தி வருகிறது. அதை வெல்வதென்பது காற்றில் வாள் வீசிக் கை சலிப்பதாய் உள்ளது. ஏனெனில் அது ஒரு பண்பாக்கமாகத் திரண்ட இரத்தப் புற்று நோய். பொதுவில் அடிமைச் சமூகம் சிறுபான்மையாய் இருந்துவிட்டால். அதன் மீட்சி என்பது ஆட்சியதிகார வர்க்கத்தின் கருணை மிக்க சலுகையாகவே இருக்க முடியும். ஆனால் பெரும்பான்மையாகவும் இருந்து, சிதறிவிடாமல் காக்கும் தலைமையும் இருந்து, ஆட்சிக்கெதிராக மூர்க்கம் பெற்று வெடித்தெழுந்தால், குறைந்தபட்ச சேதாரங்களோடு தன் விடுதலையை வென்றெடுத்துவிடலாம்.

ருஷ்யாவிலும், சீனாவிலும் (அதற்கு முன்னரே பிரான்சிலும்) பிற தேசங்களிலும் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்த பெரும்பான்மையின் விடுதலை அவ்விதமே சாத்தியமாயிற்று. சாத்தியமாகும்படி அவர்களை நேர்த்தி செய்ய மார்க்சியத் தத்துவமும் பின்னர் பேருதவி புரிந்தன. நல்லறமாக, வர்க்க முரண்களையே உறிஞ்சிக் குடித்துவிடும் சாதி விலங்குகள் அங்கு கால்கொள்ளவில்லை. இந்தப் பின்புலத்தில்தான் விடுதலையை வென்றெடுக்க வேண்டியுள்ளது. அதன் வெற்றிக்கு, எதனாலும் அர்த்தப்படுத்த முடியாத மனிதக் கயமையாகப் படிந்துவிட்ட சாதிய மனோபாவத்தைக் கொன்றழிப்பதைத் தவிர அச்சு அசலாக வேறெந்தச் சூத்திரமும் இருப்பதாகத் தெரியவில்லை.

அதற்கான முயற்சிகளாகத்தான் தலித் தலைவர்கள் தங்களுக்குச் சரி என்று படும் சாத்தியப்பாடுகளை அவ்வப்போது முன்வைக்கிறார்கள். இயக்கப்படுத்துகிறார்கள். அம்பேத்கர் இரட்டை வாக்குமையை முன் வைத்தார். காந்தி அதை முறியடித்து, தனி ஒதுக்கீட்டால் அதை ஈடுகட்டினார். தலித்துகளுக்குப் பயன்படாத அந்தத் தனி ஒதுக்கீட்டைத் தலித் ஒதுக்கீடாக மாற்றிக்காட்டிய கெட்டிக்காரத்தனம் மாயாவதி முன்வைத்துள்ள ராஜதந்திரம். இவை யாவும் பசோதனை முயற்சிகளாகத்தான் நிற்கின்றன. இந்தியச் சூதாட்டக் களத்தில் தலித்துகள் இன்னமும் சொக்கட்டான் காய்களாகத்தான் குலுக்கிப் போடப்படுகிறார்கள்.

தலித்துகளை மூங்கையர்களாகச் சித்தரிப்பதுண்டு. ஆனால் குரலற்றவர்களாயிருந்த கொடுங்காலம் முடிந்துவிட்டது. இன்று அவர்கள் முழக்கம் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்கிறது; அதிர வைக்கிறது. இல்லையெனில் அவர்கள் இருப்பே கேள்விக் குறியாகிவிடும் அபாயம் இருக்கிறது. ஒன்று மட்டும் உறுதி. தலித்துகள் அடங்கி இருப்பதற்காகவே குலைக்கப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள்; அழிக்கப்படுவதற்காக அல்ல. எனில் அவர்கள் எதிர்தாக்குதலுக்காகவே வாழப் பழகிக் கொள்பவர்களாய் இருந்தாக வேண்டும்.

இந்தியாவானது நிலவுடைமைச் சமுதாயமாகத் திரண்ட, அதில் தலித்துகள் கூலிக்கு யாசித்து நிற்கும் தொண்டூழியச் சிறுபான்மையினராகக் கட்டமைப்புச் செய்யப்பட்டிருப்பது உலகிலேயே ஆகக் கொடியதும் உடைத்தெறிய எளிதல்லாததுமான திகைப்பூட்டும் அடிமைச் சாசனம். இதனோடு வாக்குரிமையில் மட்டும் சமத்துவத்தைக் கடைப்பிடிக்கும் ஜனநாயகமும் இணைந்துகொண்டது. ஜனநாயகம் என்பது குடிகார நொண்டிக்குதிரை மாதிரி. அது விழுந்து விழுந்து எழுந்தாடும்; ஆனால் இடத்தை விட்டு நகராது. நகர்ந்திருந்தால் விடுதலை பெற்ற இந்த 60 ஆண்டுகளில் தலித்துகளை மகிழ்ந்தேற்றுக்கொள்கிற ‘ஜனநாயக இந்துக்களை’ உருவாக்கியிருக்க வேண்டாமா?

‘ஜனநாயக இந்து’ என்னும் பதத்தை நல்ல விதமாகப் பயன்படுத்தவே விரும்புகிறேன். ஆனால் அது ஒரு 'நல்ல விதமான போக்கித்தனம்’ என்பதாகவே நம் முகத்தில் அறைகிறது. 'ஜனநாயக இந்து’ என்பதன் ஆய்ந்த பொருளை பெ. மணியரசன் - இராசேந்திரசோழன்கள்தாம் விளக்க வேண்டும். 3000க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் கொலைக்கு ஒரு சிறு வருத்தம் கூடத் தெவிக்காத மோடி அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதலமைச்சராகிவிட்டார். அவர் ஒரு நல்ல ஜனநாயக இந்துவா, இல்லையா? இல்லையென்றால் எப்படி? இந்துவை ஜனநாயகப்படுத்துவது வேறெப்படியாகும்?

கோயிலைப் புறக்கணிக்கக் கூடாது என்றால் அதனுள்ளிருக்கும் குருக்களையும்தானே. அவனோடு சேர்த்து வேதங்களையும். மனுதர்மத்தையும்தானே. கரையான் எடுத்த புற்று கருநாகத்தை வெளியேற்றிய பிறகல்லவா கரையானுக்குச் சொந்தமாகும்? வழிபாட்டுணர்வில் தமிழன் தமிழனாயிருக்கும் கணங்கள் அவன் நடுவீட்டுச் சாமியையும் குலதெய்வத்தையும் கொண்டாடும் வரைதான். அந்தக் கணங்களில் சாமியும் அவனும் ஒன்றுக்குள் ஒன்றாய் இருக்கிறார்கள். அந்த எல்லையைவிட்டு வெளியேறி, பெருந்தெய்வ வழிபாட்டுக்கு வரும்போது, அவன் 'நில்’ என்றால் நிற்கவும். 'செல்’ என்றால் செல்லவும் பழக்கப்படுத்தப்பட்ட நாய்க்குட்டி. நாய்க்குட்டியாவது சீற்றம் வந்தால் கடித்துக் குதறிவிட்டு அடிபட்டுச் சாகும். இவனோ தன்னைத்தானே கடித்துக்கொண்டு சாகப் பழக்கப்பட்ட தொழும்பன். அப்படிப்பட்ட ஒரு நல்ல இந்துவாகத்தானே. பெருந்தெய்வக் கோயிலுக்குள் பெயரற்றவனாக நுழைந்து, விழுந்து கும்பிட்டு, கையேந்தி, பிரசாதம் வாங்கி, புத்தி போட்டுக்கொண்டு வெளியேறுகிறான்.

பெ. மணியரசன். இராசேந்திர சோழனுக்குப் பெரியார் மீது கேள்வியற்ற மரியாதை ஒன்றும் கிடையாது. சுயசிந்தனையைச் செழுமைப்படுத்திக் கொள்கிறவனுக்கு அது தேவையும் இல்லை. ஆனால் அவர்களது சுயசிந்தனை தமிழ்த் தேசியம் என்னும் பெயரில் நவீன இந்துத்துவ பெயாஸ்டுகளாக அவர்களை வளர்த்தெடுக்குமோ என்னவோ. இந்தத் தமிழ்த் தேசியர்கள் ‘மருத்துவர் ஐயா’வையும் உள்ளிழுத்துக்கொண்டு ஜனநாயகப்படுத்தப்பட்ட நல்ல இந்துக்களின் தென்னாட்டு பால்தாக்கரேக்களாக வடிவெடுப்பார்களாயிருக்கும். பால்தாக்கரேக்கு மண்முகமும் இந்துத்துவமும் ஒன்று. தமிழனுக்கு அவை இரண்டும் காந்தத் தண்டின் எதிர்த் துருவங்கள் போல. அவை ஒட்டாதவரைதான் அவன் தமிழன்.

ஒரு போராட்டக் களத்தில் முழக்கமிடும் லட்சியவாதி சாத்தியமானதைத்தான் கேட்க வேண்டும், ஏற்கவேண்டும் எனில். கிடைக்கப்போவது குதிரை தன் சிலுப்பலில் உதிர்க்கும் கடைசிப் பூனைமயிராகத்தான் இருக்கும். 'கருப்பையை எடுத்தெறி’ என்று ஒரு முழக்கம் வைத்தால் அதன் ஆகுபொருள் ‘அதை நிரப்பிக் கொள்வதும் நிரப்பிக் கொள்ளாததும் என் அதிகாரத்தில் இருக்க வேண்டும்’ என்னும் பெண்ணுரிமைதான். அல்லாமல் ‘'சிறுஷ்டியை ஸ்டாப் பண்ணன்னா சொல்றா. என்ன பேத்தல்’’ என்னும் திண்ணைக் கிழங்களின் பொழுதுபோக்கு விசாரங்களை அரசியல் தத்துவங்களாக்கிப் பார்த்தால் எப்படி? இதெல்லாம் எங்கே போய் முடிகிறதெனில் ஒரு தலித் தன் தொழில்முறை வசதிகளைப் பெருக்கிக்கொண்டு. தொழில் தர்மம் பேணும் நல்ல தலித்தாக சுதந்திரமாய் வாழலாம் என்னும் எல்லையில்தான். இந்திய ஜனநாயகத்தில் ஜனநாயகப்படுத்தப்பட்ட இந்து இதை அனுமதிக்கிறவனாய் இருப்பான் என்பதில்தான்.

'இந்தியாவில் இந்து மதத்தைவிட்டு வேறு எந்த மதத்துக்குப் போனாலும் ஒரு தலித் தலித்தாகவேதான் இருக்க நேர்கிறது என்பதால், அவன் பேசால் இந்து மதத்தில் இருந்துகொண்டே தன் உரிமைக்குப் போராடலாமே’ என்பது ஒரு ஜனநாயகப்படுத்தப்பட்ட இந்துவின் வெகு நியாயமான கேள்வியாக இருக்கும். இதில் உள்ள சிறப்பு என்னவெனில். அவன் அறிந்தோ அறியாமலோ ஒரு தலித் இந்து மதத்தில் தொடர்வதை அனிச்சையாக வரவேற்கிறான்; அதற்காக மகிழ்கிறான். அதே நேரத்தில் எல்லா மதங்களையும் இந்து மதம் சீரழித்துவிட்டதற்காக அவன் வருத்தப்படவில்லை. அது அவனுக்கு முக்கியமான விஷயமாகவும் படவில்லை. ஆகவே வெளிப்படையான நடைமுறை இருப்பை ஒரு நியாயமான தீர்வாக முன்வைப்பதில் நிறைவடைகிறான்.

இந்துக்கள் எங்கே சிறுபான்மையாகி விடுவார்களோ என்ற அச்சத்தால்தான் தலித்துகள் இந்துக்களாக உள்வாங்கப்பட்டார்கள் என்பதோ, இந்திய மதங்களான பௌத்தம், ஜைனம், சீக்கியம் முதலானவை இந்து மதத்தின் அங்கங்களாகப் பேணப்படுகின்றன என்பதோ அவன் கவனத்துக்கு வருவதில்லை. இந்துக்களில் தலித்துகள் சிறுபான்மையினராய் இருப்பதுதான் அவர்கள் விடுதலைக்கு விடப்படும் முதல் அறைகூவலாயிருக்கிறது என்பதை அவன் மறந்துவிடுகிறான். இந்து மதத்தினர் சிறுபான்மையினராகிவிட்டால் அதன் உடனடி எதிர் விளைவாக, சாதி ஏற்றத்தாழ்வுகளும் மனுதர்மங்களும் நொறுங்கிப்போவதும்,

இந்தப் புத்தாக்கத்தால் பிற மதங்களில் ஊடுறுவியுள்ள சாதியச் சூழல்கள், அம்மதங்களின் உலகப் பெரும்பான்மையினரால் துடைத்தெறியப்படும் என்பதும் தலித்துகளுக்கான விடுதலையை நிகழ்ப்படுத்தும் மாபெரும் அம்சமாயிருக்கும். ஒட்டுமொத்த மதமாற்றம் உடனடிச் சாத்தியமில்லை என்றாலும் தலித்துகளின் அலையலையான மத மாற்றம் இந்துக்களை வெறிகொள்ள வைக்கும் அதே நேரத்தில் மனிதர்களாய் இருக்கவும் நிர்ப்பந்திக்கும். புரட்சிகர சமூக மாற்றங்கள் உடனடிச் சேதாரங்களை நிகழ்த்தும். அடுத்து வரும் காலங்களில் தலித்துகள் தலித்துகளாய் இல்லாமல் பிறப்பார்கள். ஜனநாயகப்படுத்தப்பட்ட இந்துவுக்கு இது உடன்பாடாய் இருக்குமெனில் அவன் ஏன் இந்துவாக ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என்பது கேள்வியாகிறது.

இவையெல்லாம் சாத்தியமா என்று நகைக்கிறவன் அடிப்படையில் இந்துவாக இருக்கச் சபிக்கப்பட்டவன்.
இவ்விதமாகவே தலித்தியம் எங்களுக்குத் தவிர்க்கமுடியாத பேசுபொருளாகிறது. ஆனால் தலித்தியம் பேசுவது அப்படியொன்றும் எளிதாயிருக்கவில்லை. இந்துவியத்தின், அதாவது சாதியத்தின் நுட்பமான எதிர்வுகளைச் சகித்தும் புறக்கணித்துமே எங்கள் பயணம் தொடர வேண்டியிருக்கிறது. எங்கள் இதழ் அடுத்தடுத்து கூடுதலாகச் செலாவணியானாலும். இதழ் பற்றிய பேச்சு சரசரவெனக் குறைந்து, ஏறக்குறைய சுழியத்தைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. எங்களைக் கூர்ந்தும் நெருங்கியும் கவனித்து விவாதித்துவந்தவர்கள், காலப்போக்கில் வெறும் கண்காணிப்பாளர்களாகச் சுருங்கிப் போனார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன் பாரதிவசந்தன் என்னைத் தொடர்பு கொண்டபோது. ''என் கவிதைகளைத் தேடும் முயற்சியாக. கவிதாசரண் இதழ்களை மீண்டும் படிக்க நேர்ந்தது. இதழைப் பற்றி ஏன் எவனுமே பேசத் தயங்குகிறான் என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன். ஐயா, தலித்தியம் பேசுவதை நீங்கள் கொஞ்ச காலம் நிறுத்த வேண்டும். பாருங்கள். அடுத்த கணமே உங்கள் மொழி ஆளுமைக்காகவும் சமூகப் பார்வைக்காகவும் உங்களை உச்சிமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள்.’’ என்றார்.

''அப்படியா? இதில் இன்னொரு சங்கடம் இருக்கிறது பாரதி. கொண்டாடுகிறவர்களைக் கொஞ்சமேனும் தூக்கிவைத்துப் பேசவேண்டும். குறைந்தபட்சம் எதிராகப் பேசாமலாவது இருக்க வேண்டும். அல்லாது பேனால் தூக்கிய வேகத்திலேயே தொப்பென்று போட்டு மேலேறி மிதித்துவிடுவார்கள். ஏற்கனவே கை முறிந்து கிடக்கிறேன். இன்னும் எத்தனை முறிவுகளுக்கு உள்ளாவது.’’

''நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. ஐயா.’’

''இருக்கட்டும். பாரதி. நாங்கள் நாங்களாகவே இருந்துவிட்டுப் போகிறோமே. இதழைக் கண்டுகொள்ளாமல் இருக்க ஒவ்வொருவருமாக எவ்வளவு கவனம் எடுத்துக்கொள்கின்றனர் என்பதை நினைத்து சந்தோஷம் கொள்ளுங்கள்.’’ என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

''நீங்க இலக்கியவாதி என்பதையே மறந்துபோக வைத்துவிட்ட இந்த இழவை விடுங்களேன். உடனடியாக விடமுடியாவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டு இலக்கியத்தின் பக்கம் கவனத்தைத் திருப்புங்களேன். நீங்கள் செய்வது நன்றியோ அங்கீகாரமோ இல்லாத பணி என்பது வெளியில் உள்ள எங்களுக்குத்தான் தெரியும்.’’ இது நான் அவ்வப்போது எதிர்கொண்ட அறிவுரை. 'இந்த இழவு’ என்பது தலித் பேச்சைச் சுட்டும் சொல். சிலருக்கு அது ஒரு திறப்புச் சொல் என்பதாக அதைப் புறக்கணித்து விடலாம். ஆனால் இந்த அறிவுரையைச் சொல்வதற்காகத்தான் அவர்கள் என்னோடு நெருங்கிப் பழகினார்களா. அல்லது நெருங்கிப் பழகியதால் இதைச் சொன்னார்களா என்பது இங்கே முக்கியமற்றுப் போகாத கேள்வி. ஏனெனில். அவர்கள் கணிப்பில் நான் அவர்களாக இருந்தேன். நானும் அவ்வப்போது. ''ஆமாங்க. கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்க வேண்டியதுதான். எனக்கும் சில நாவல்கள் எழுதணும். வெகுகாலத் திட்டம்.’’ என்று உண்மையாகவும் போக்காகவும் சொன்னதுண்டு. ஆனால் என் செயலில் மாற்றம் இல்லை என்பதோடு தீவிரம் கூடுவதும் கண்டு. அவர்களில் பெரும்பாலோர் மௌனத்தால் தொலைவு காத்து மெல்லக் கரைந்து போயினர்.

‘முத்து ராமலிங்கத் தேவர் தலித்துகளை அழைத்துக்கொண்டு கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தினார்’ என்று சொல்வது - அதாவது தலித்துகளை அரவணைத்ததாகச் சொல்வது அவருக்குப் பெருமை சேர்க்கிறது என்கிற வகையிலேயே 'தலித் பேச்சு’ எல்லாராலும் வாயுரையாகத் தொட்டுக்கொள்ளப்படுகிறதே தவிர. தலித் அல்லாத பிறரது அடிமனத்தில் அது ஒரு 'புலைப்பேச்சு’ என்பதாகவே அருவருக்கப்படுகிறது. இதற்கு நான் சான்றுகள் தருவதைத் தவிர்த்து விடலாம். இல்லையெனில் ஒரு சிற்றிதழாளர் 'சொந்த வீட்டில் குச்சி கொளுத்திப் போடுகிறவன்’ என்று என்னைச் சாடியதை அவர் நம்பிக்கைப்படி உண்மையாக்கியவனாவேன்.

அவர் அதோடு நிற்கவில்லை. ‘எங்களுக்கு அப்படியெல்லாம் தலித்தியம் பேசவேண்டிய அவசியம் இல்லை’ என்றும் இரக்கமின்றி சுட்டினார். அதாவது நாங்கள் அப்படி சபிக்கப்பட்டிருக்கிறோம் என்பதாக அவர் கொள்ளும் அருவருப்பின் வெளிப்பாடு. விமர்சனங்களில் நுண்ணலகுகளைத் தீவிரப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து செயல்படும் நாங்கள் இதுபோன்ற இலக்கியக் கீழறுப்புகளுக்கு களம் அமைப்பதில்லை. தலித்துகளை எழுத்தால் தொட்டுக்கொள்ளும் முயற்சிகளைக்கூட அச்சுதமாய் வகைப்படுத்தும் சகிப்பின்மைகளின் ஊடாகத்தான் ‘புனிதம் காக்கும்’ இலக்கிய விசாரங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

இன்னுமொரு சுவையான செய்தியும் உண்டு.

ஒரு தலித் இதழாளர் தன் நண்பரோடு கூடிக்கொண்டு பொழுதுபோக்காக எனது தலித் பேச்சை நையாண்டி செய்து மகிழ்வாராம். இது அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சி. இதைத் தொடர்ந்து கவனித்து வந்த ஓர் இளைஞர் ஒருநாள் அவர்களைப் பார்த்து. ''நீங்கள் மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு தலித்தியம் பேசுகிறீர்கள். அவர் தன் சம்பளத்தைக் விலைகொடுத்து தலித்தியம் பேசுகிறார். இதில் யார் யாரை நையாண்டி செய்யவது?” ‘ என்றாராம். நான் அந்த இதழாளரை அர்ப்பணிப்புள்ள தலித் இதழாளர் என்று மனமுவந்து பாராட்டியபோது இந்த இளைஞர் என்னிடம் கோபமாகப் பகிர்ந்துகொண்ட செய்தி. ''அவர் என்னைப் பகடி செய்ததற்காக அவருடைய பணி ஒன்றும் அர்ப்பணிப்பற்றதாகிவிடாது. விடுங்கள்.’’ என்று சொல்லி அவரது கோபத்தை ஆற்றும்படியாயிற்று. இவற்றினூடாக நாங்கள் மெய்யாகவே பாராட்டப்பட்டதும் உண்டு.

ஒரு பதிப்பாளர் - வெள்ளாளர் - என் கட்டுரை ஒன்றைப் படித்துவிட்டு. ''இந்த ஆள் உண்மையிலேயே அசல் தலித்துதான். இல்லேன்னா இவ்வளவு கறாரா எழுத முடியாது. இவனை நம்ம ஆள்னு நெனைச்சது தப்பாப் போயிடுச்சி. ஏமாந்துட்டோம்.’’ என்று புலம்பியதாகச் சொல்லி என்னை ஆழம் பார்த்த அவரது நண்பரிடம். "என்னை சாதியற்றவன்னு அறிமுகப்படுத்திக்கிட்டபோதே நான் தலித்துதான்னு புஞ்சிக்கிட்டிருக்கணும். மற்றபடி எனக்கோ என் மகனுக்கோ இவர்கிட்ட பொண்ணு கேட்டா ஏமாத்திட்டேன். குடிக்கிறது, கூத்தியா வச்சிக்கிறது, கறி தின்றது, கண்ட பொண்ணு மேலயும் கை வைக்கிறது. கடைசியில் போயும் போயும் திருப்பதி உண்டியல்ல நோட்டுக் கட்டைப் போட்டு கழுவாய் தேடிக்கிறது போன்ற வெள்ளாளக் குணங்களுக்கு நான் கொஞ்சங்கூடத் தகுதியில்லாத போது என்னை எதற்குத் தன்னோட ஆளா நெனச்சு ஏமாந்து போனாரு.’’ என்று சரிக்குச்சரி பதில் சொன்னாலும். அடிமனத்தில் 'கடைசியில் இந்த ஆள் ஒருத்தன்தான் என்னை அவமதிப்பதாக எண்ணிக்கொண்டு மெய்யாகப் பாராட்டி இருக்கிறான்’ என்று பரவசப்பட்டுக் கொண்டதுண்டு.

இந்தக் கந்தரகூளங்களுக்கெல்லாம் ஒரு காரணம் இருந்தது. இந்திய ஆதிக்கச் சாதிய மனோபாவம் என்னையும் தலித்தையும் இணைத்துப் பார்க்க மறுத்தது.


எனக்கு இரண்டு அடையாளங்கள் உண்டு. ஒன்று. சாதியற்றவன். மற்றொன்று புலால் மறுத்தவன். "சாதியற்றவன் + புலால் மறுத்தவன் = தலித்’ என்னும் சமன்பாடு முன்னால் போனால் கடிக்கிறது; பின்னால் போனால் உதைக்கிறது. ஆகவே சாதிச் சமூகம் அதை ஏற்க மறுக்கிறது. ஏற்றுத்தான் ஆக வேண்டுமெனில் இதை மனுநீதித் தண்டனைக்குரிய குற்றமாக்கிக் கூண்டிலேற்றப் பார்க்கிறது.

என் வாழ்நாளில் சாதி எனக்கு ஒரு பொருட்டாய் இருந்ததில்லை. வளர்ந்தது, படித்தது, பணியிலமர்ந்தது. மணம் முடித்தது. வாழ்ந்தது, பணி ஓய்ந்தது என எதிலும் சாதியை ஒரு மேலதிகப் பரிந்துரைக் காரணியாக நான் பயன்படுத்திக்கொண்டதில்லை. சாதி சார்ந்த சமூக நெருக்கடிகளில் நான் சிக்கிக் கொண்டதில்லை. சொந்தக் காலில் நிற்கத் தொடங்கியதிலிருந்து சாதியற்றவனாகவே வாழ்வைத் தொடங்கினேன். ஒரு தலித்தாய் இருப்பதைவிட சாதியற்றவனாக இருப்பது கேவலமாகத்தான் கருதப்படுகிறது. கிராமத்தான் கூட ‘சாதி கெட்ட பயலாடா நீ’ என்றுதான் அசிங்கப்படுத்துகிறான் என்று ஒரு கவிஞர் - புகழ் பெற்ற நவீன கவிஞர்- என்னைச் சரமாயாக மிரட்டியதுண்டு. ஆயினும் நான் சாதிக்கு அப்பாற்பட்டவனாகவே என்னைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறேன்.

மாற்றுக்குறையாத தங்கம் மதிக்கப்பவதுபோல 'பெருஞ்சாதியும் அதில் பிறந்த மனிதனைக் கௌரவப்படுத்தும்’ என்னும்போது. சாதியற்றவனாய் இருப்பது தலித்துக்கும் கீழாய் இருக்கச் சம்மதிப்பது போலத்தான். இந்துச் சமூகத்தில் கடவுள் மறுப்பாளனுக்குக்கூட இடமுண்டு. ஆனால் சாதி மறுப்பாளனாய் ஒருவன் இருக்கவே முடியாது. இந்திய சமூகம் இந்துக்களுக்கப்பாலும் விவடைந்திருப்பதால் இன்று அதில் பிடிவாதம் காட்ட வழி பிறந்திருக்கிறது. ஆனால் இந்த நாட்டில் சாதியற்ற ஒருவன் தலித் சாதிகளுள் மேலும் ஒரு சாதியைக் கூட்டுகிறவனாகத்தான் இருக்க முடியும். தலித்துகளுக்கு சாதியுண்டு. சாதியற்றவனுக்கு அது இல்லை. அவ்வளவுதான் வேறுபாடு.

இது தலித்துகளுக்கு அடையாளம் உண்டு, எனக்கு அது இல்லை என்றாகிறது. அதாவது, சாதியற்றவன் என்பது ஒரு அடையாளமற்ற அடையாளமாகத்தான் பார்க்கப்படுகிறது. திரௌபதியின் ஐந்து பிள்ளைகளும் தீயில் கருகி மாண்டபோது. அவள் கணவன்மார்கள் கல்லைப்போல சலனமற்று நின்றார்களாம். எந்தப் பிள்ளை எவனுக்குப் பிறந்தது என்பதில் ஒவ்வொருவனுக்கும் சந்தேகம் இருந்ததுதான் காரணம். சாதியுள்ள தலித்தாய் இருப்பதைவிட சாதியற்ற தலித்தாய் வாழ்வது கொஞ்சம் கூடுதலான அனாதைத்தனத்தை ஏற்பதாகிறது. இந்தியச் சமூகம் அவ்வளவு மோசமான, பொருளற்ற அற்பப் படிமங்களால் நிறைக்கப்பட்டுக் கெட்டிப்பட்டிருக்கிறது என்பதுதான் இதற்குப் பொருள்.

இந்தக் கணத்தில் என்னைக் கொஞ்சம் ஆழமாய்ப் பார்க்கத் தோன்றுகிறது. சாதிச் சமூகம் தன் பேச்சுத் தேவைக்கேற்றபடி எனக்கொரு சாதியை நிரப்பிக் கொண்டதுண்டு. நான் அதை ஒரு புன்னகையால் ஏற்கவோ இல்லை என்று மறுக்கவோ செய்யாமல் ‘எனக்கு இது தேவைப்படவில்லை’ என்று வெகு நளினமாகச் சொல்லிக்கொள்வதுண்டு. ஆனால் அது தலித் சாதியாய் இல்லை என்பதும், இருந்திருந்தால் அதனால் வரும் நெருக்கடிகளையும் இழிவுகளையும் எப்படி எதிர்கொண்டிருப்பேன் என்பதும் நினைத்துப் பார்த்தால், எனக்குத் தனித்துவம் தருகிற விஷயமாய் அது இருக்கப்போவதில்லை என்றே சொல்ல வேண்டும்.

சமூகத்தின் கோர முகத்துக்கெதிரே சாதி மறைத்து வாழும் தலித்துக்கும் சாதியற்று வாழும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதாகவே அந்தச் சூழலை எதிர்கொண்டிருக்கிறேன். அதன் காரணமாகவே எனக்குப் பெரிய சங்கடங்கள் நேரவில்லை என்றாலும் 'இதனால்தான் நான் ஒற்றைப்பட்டுப் போனேனோ’ என்னும் ஆதங்கம் என்னைச் சூழ்ந்திருக்கவே வாழ்ந்திருக்கிறேன்.

இதழ் தொடங்கிய சில ஆண்டுகளில் ஒரு புதிய சுட்டலாக ஆதியோடந்தமாய் சாதிக்கவசத்தை அலசிப் பார்க்க நேர்ந்தபோது. புலால் மறுத்தவன் என்ற என் அடையாளம்தான் என்னைப் பல்லக்கில் வைத்துச் சுமந்து திரிந்ததோ, தலித்தாக அடையாளப்படுவதிலிருந்து தப்பிக்க வைத்ததோ, அதனால் ஏற்பட்ட திளைப்புகளால்தான் நான் கொழுத்துப்போனேனோ என்று சரமாரியான குற்றவுணர்வுகள் என்னைச் சூழ்ந்ததுண்டு. தமிழ்ச் சிற்றிதழ் உலகம் என்னை ஒரு 'சைவனாக’க் கடும் விமர்சனத்திற்குட்படுத்தியபோது. என் எந்த விளக்கமும் செல்லுபடியாகாத நிலையில், சென்ற காலத் தப்பித்தலுக்கான தண்டனை இது என்று உள்ளுக்குள் கண்ணீரோடு ஏற்றுக்கொள்ள வைத்தது.

புலால் மறுத்தவன் ஒன்று வெள்ளாளனாய் இருக்க வேண்டும். அல்லது பார்ப்பானாய் இருக்கவேண்டும். மற்ற சாதியிலும் இருக்க முடியும் என்றாலும், இந்துச் சமூகம் அதை அங்கீகப்பதில்லை. தமிழகத்தில் பார்ப்பனர்களின் மேன்மைவாதத்துக்கு வெள்ளாளர்களின் புலால் மறுப்பு ஒரு அறைகூவலாக உணரப்பட்டபோது பார்ப்பனர் அதைத் தங்கள் பண்பாடாகத் தத்தெடுத்துக்கொள்ள நேர்ந்தது. பார்ப்பனர்களின் திறம் என்பது கால ஓட்டதில் வெள்ளாளர்கள் பார்ப்பனர்களிடமிருந்துதான் அதைக் கற்றுக்கொண்டாற்போல ஒரு மாயத் தோற்றத்தை உண்டாக்கிக் கொண்டதுதான். ஆயினும் இந்த ஒரு பழக்கத்தில் இருவரும் மாமன் மாப்பிள்ளைபோல உறவு கொண்டவர்கள். பாரதியும் வ.உ.சி.யும் அதற்கோர் எடுத்துக்காட்டு.

நடைமுறையில் புலால் மறுத்தவர்கள் எல்லா சாதிகளிலும் உதிரிகளாக இருக்கவே செய்கிறார்கள். ஆனால் தலித் சாதிகளில் அப்படி இருப்பதை சாதிச் சமூகம் ஏற்காதது மட்டுமல்ல. சமூக ஒழுங்கை மீறிய குற்றமாகவும், தங்களுக்கேற்பட்ட அவமானமாகவும் கருதுகிறது. அதற்கான தண்டனை வழங்கவும் துடிக்கிறது. அதுதான் ஆதிக்கச் சாதிகளின் ஆணவம் மிக்க மனத்தயாரிப்பு. இந்து மதம் வழங்கிய நன்கொடை.

ஆதிக்கச் சாதிகளின் தலித் புறக்கணிப்பைச் சொல்லவே இவ்வளவும் சொல்ல வேண்டியதாயிற்று. தலித்தியத்தைப் பேசுபொருளாக்கிக் கொண்ட எனக்கு நேர்ந்த அனுபவங்கள் ஓர் அறிமுகம்தான். கால்டுவெல்லுக்கு நேர்ந்த கொடுமையோ. அராஜகத்தின் உச்சம். தலித்துகளைப் பற்றி அவர் எழுதிய கட்டுரையை அவர் புத்தகத்திலிருந்து உருவிக்கடாசிவிட்டார்களே.

கால்டுவெல் நூலை மூன்றாம் பதிப்புச் செய்தவர்கள் மேலும் பல பகுதிகளை நீக்கியிருப்பினும், இந்த ஒரு கட்டுரைக்காகவே மூல நூலை முழுமையாக வெளியிட்டோம். உண்மையைச் சொன்னால் இந்தக் கட்டுரை நீக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் பிற நீக்கங்களுக்காக எங்கள் கண்டனத்தைப் பதிவு செய்திருப்போமே தவிர நூலையே மீள் பதிப்புச் செய்ய முயன்றிருக்க மாட்டோம்.

இப்புதிய சூழலைத் தமிழ்ச் சமூகம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது. கண்ணை மூடிக்கொள்ளுமா. வாய் திறந்து உரையாடுமா என்பதைப் பார்த்தறியக் காத்திருக்கிறோம்.
Pin It