periyar 90sதமிழ்நாட்டில் பார்ப்பனர்களில் திரு.சத்தியமூர்த்தியும் பார்ப்பனரல்லாதார்களில் திரு.வரதராஜுலுவும் இரண்டிற்கும் நடுவில் அதாவது பண்டிதக் கூட்டத்தில் திரு.கலியாணசுந்தர முதலியாரும் ஆக மூவர்கள் எப்படியாவது ஒரு வழியில் தினம் தங்களை விளம்பரம் செய்து கொண்டும், எப்படியாவது ஒரு வழியில் நாடோறும் சூரிய உதயமும் அஸ்தமனமுமாகி இன்றைய நாள் கழிந்ததா என்கின்றதுமான கவலையே வாழ்க்கையாகக் கொண்டவர்களே யல்லாமல், மற்றபடி ‘நேற்று என்ன சொன்னோம், என்ன எழுதினோம், எப்படி நடந்தோம், இன்று என்ன சொல்லுகின்றோம், எப்படி நடக்கப் போகின்றோம், நாளை நமது கதி என்ன’ என்கின்ற கவலையே அணுவளவும் இல்லாதவர்களாய், அவ்வளவு பெரிய ‘துறவிகள்’, முற்றும் துறந்த ‘ஞானிகள்’ என்று சொல்லத்தக்க வண்ணம் நடந்து வருகின்றார்கள்.

இம் மூவருக்கும் கொஞ்ச காலமாய் தமிழ்நாட்டில் ஒன்று போலவே நாணயம் குறைந்து வெளியில் தலைநீட்ட யோக்கியதை இல்லாத அளவு செல்வாக்கு ஏறிவிட்டது. இவர்களில் திரு.சத்தியமூர்த்தியோ வெளிப்படையாய் காலித்தனத்தில் இறங்கி விட்டார். இவர் கொஞ்ச நாளைக்கு முன் சென்னை கார்ப்பரேஷன் பிரசிடெண்டு திரு.எ.ராமசாமி முதலியாரை நாய், கழுதை, பன்றி, மடையன் என்பது போன்ற மொழிகளைக் குடி வெறியில் உளறுவது போல் உளறி கலகம் செய்துவிட்டு, மறுநாள் மன்னிப்பு கேட்டுக் கொண்டது யாவருக்கும் தெரியும். அது போலவே இந்த வாரத்திலும் சட்டசபைக் கூட்டத்தில் கனம் டாக்டர் முகமது உஸ்மானைப் பார்த்து ‘உமக்கு சீனிவாசய்யங்காருடைய கால் பூட்சு கழற்ற யோக்கியதை உண்டா’ என்று கேட்டுவிட்டு உடனே வாபீசு வாங்கிக் கொண்டார்.

திரு.சத்தியமூர்த்தியின் இம்மாதிரியான அயோக்கியத்தனங்கள் நாட்டில் பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளான காங்கிரஸ்காரர்கள் என்பவர்களாலும் பாராட்டப்பட்டே வருகின்றது. காங்கிரஸ்காரர்கள் சென்ற பக்கமெல்லாம் உதைபட்டுக் கொண்டு வருகிறார்கள். இழிவாய் நடத்தப் படுகிறார்கள் என்றால் அவர்கள் உதைபடுவதிலும் இழிவாய் நடத்தப் படுவதிலும் ஏதாவது அதிசயமிருக்க முடியுமா?

ஒரு வேடிக்கைக் கதை சொல்லுவார்கள், அதாவது ஒரு பெரியார் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டி ருந்தார், ஒரு அயோக்கியன் போகும் போதும் வரும் போதும் தனது கால் அவர் மீது படும்படி ஆணவமாக நடப்பதும், உடனே “தெரியாமல் கால் பட்டுவிட்டது மன்னிக்க வேண்டும்” என்று சொல்லி கால்பட்ட இடத்தை தொட்டு கண்ணில் ஒத்திக் கொள்வதுமாயிருந்தான். அப்பெரியவர் பார்த்தார். இவன் ஆணவத்தையும் மானம் கெட்ட தன்மையையும் பார்த்து இவனுக்கு சரியானபடி புத்தி கற்பிக்க எண்ணி, அவ்வயோக்கியன் உட்கார்ந்திருக்கும் போது பிடரியில் ஒரு சரியான உதை கொடுத்து கழுத்து முறியும்படி செய்துவிட்டு, ‘தெரியாமல் கால்பட்டு விட்டது’ என்று சொல்லி இரண்டு கையாலும் அவன் கழுத்தைத் தொட்டு இரு கண்களிலும் நன்றாய் ஒத்திக் கொண்டாராம். உடனே உதைப்பட்டவனுக்கு புத்தி வந்து “என் கால் அவ்வளவு தடவை பட்டதற்கும் தங்கள் கால் ஒரு தடவை பட்டதற்கும் தங்கள் கால் சற்று பலமாய் பட்டு விட்டதால் நம் இருவர்களுக்கும் கணக்கு சரியாய் விட்டது. இனி யார் மீதும் பாக்கியில்லை, ஆதலால் தயவு செய்து மீதி எண்ணிக்கைகளை மறந்து விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டானாம்.

இக்கதைப் போல் இவர்கள் விடிந்தெழுந்தால் ஏதாவது பேசுவதும், பிறகு பல்லைக் காட்டுவதும், மன்னிப்பு கேட்பதும், காணாமல் மற்றும் தங்களைப் போலுள்ள காலிகளுடன் இதைப் பெருமையாய்ப் பேசி மகிழ்ந்து கொள்ளுவதும், பிறகு இவர் காலித்தனத்திற்கும் சூத்திரர்களாய் இருக்கின்ற அயோக்கியரிடம் போய் கூலி பெற்றுக் கொள்ளுவதும் நித்திய கர்மமாய் போய்விட்டது.

இம்மாதிரி பொறுப்பற்ற காலிகளின் நடவடிக்கைகள் வெகு சீக்கிரத்தில் நமது நாட்டு மக்களை ராணுவச் சட்டத்தின் கீழும் தண்டப் போலீஸ் அதிகாரத்தின் கீழும் வாழ வேண்டிய நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டு விடும் என்று வெகு அழுத்தமாய் எச்சரிக்கை செய்கின்றோம். இதன் உண்மையை அறிய வேண்டுமானால் இதை எழுதி வைத்துக் கொள்ளட்டும். தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட காலித்தனம் இந்திய சட்டசபைக்கும் பரவி அங்கும் கை கலக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதும், திரு.நேரு என்கின்ற ஒரு பார்ப்பனர் இந்திய தேசீயத் தலைவர் என்னும் பேரால் அங்கும் காலித் தனமாய் நடந்து கொண்டதும் நமக்கு இந்த எண்ணத்தை உறுதிப்படுத்துகின்றது.

நிற்க, தன்னை சதா தேசீயவாதி என்று சொல்லிக் கொள்வதன் மூலம் வாழும் திரு.வரதராஜுலுவுக்கு நமது நாட்டுப் பார்ப்பனர்களின் இந்த விதமான காலித்தனமான காரியங்களில் கவலையில்லாமல் “நாயக்கர் பிரசாரத்தால்” உலகம் முழுகிப் போவதுபோல் நீலிக் கண்ணீர் விட்டு பார்ப்பனர்களின் காலுக்குள்ளாக புகுவதற்கே புத்திபோய் கொண்டிருக்கின்றது. இதுவரை ‘நாயக்கர் பிரசாரத்தை’ பற்றி இவ்வளவு ஆபத்து வந்து விட்டதாய் ஊளையிடும் எவராவது ‘நாயக்கரின்’ எந்தப் பிரசாரத்திற்கு எந்தக் கருத்துக்கு எந்த வாக்கியத்திற்கு தாங்கள் கவலைப்படுகின்றார்கள் என்று பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டி சமாதானம் சொல்லி கூப்பாடு போட்டிருக்கின்றார்கள்? மொத்தத்தில் “நாயக்கர் பிரசாரம்” “நாஸ்திகப் பிரசாரம்” “சுயமரியாதைப் புரட்டு” “மதம் போச்சு” “சமயத்திற்கு ஆபத்து” என்று எழுதியும் பேசியும் பாமர மக்களை ஏமாற்றி வாழப் பார்ப்பதைத் தவிர இவர்கள் நம்மீது கண்டுபிடித்த குற்றம் என்ன என்று கேட்கின்றோம்.

16-3-29 தமிழ்நாடு பத்திரிகை தலையங்கத்தில்: -

“தமிழ்நாடு காங்கிரசுக்கு ஒரு கண்ணாயிருந்த ஸ்ரீ ஈ.வெ. ராமசாமி நாயக்கர் சமய சமூக அரசியல் விஷயங்களில் கண்ணிழந்த குருடர்போல் மனம்போன போக்கில் பிரசாரம் செய்ததின் பயனாக தமிழ்நாட்டில் எதிர்ப்பு சக்தி தோன்றியிருப்பதை யாரும் மறுக்க முடியாது”.

“சமதர்மக் கொள்கைகளில் நமக்கும் நாயக்கருக்கும் பேதமிருப்பதாக ஒருவரும் சொல்ல முடியாது.”

“செங்கல்பட்டில் செய்த தீர்மானத்தை நாம் ஒப்புக் கொள்ள முடியாது,”

என்று எழுதியிருக்கின்றார்.

சமய சமூக விஷயங்களில் திரு.வரதராஜுலுக்கு இஷ்டமில்லாத நமது கொள்கை எது? கண்மூடித்தனமாக நாம் செய்த பிரசாரக் கருத்து எது? என்று திரு. வரதராஜுலுவால் எடுத்துக் காட்ட முடியுமா? என்று கேட்கின்றோம். நம்மைவிட “மோசமாகவும் கண்மூடித்தனமாகவும்” உத்திரவு போட்டும், எதிர்த்தவர்களை சிறையில் போட்டும் நிர்ப்பந்தம் செய்த திரு.ஆப்கன் அமீர் அமானுல்லாவுக்கு “பணமும் படையும்” திரட்டியும் தயாராய் வைத்துக் கொண்டு அங்கு செல்வதற்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உத்திரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த “சமூக சமூதாய சீர்திருத்த வீரருக்கு” நம்மிடம் என்ன குறை காணப்பட்டது? என்று கேட்கின்றோம்.

தவிர, செங்கல்பட்டு தீர்மானத்தில் இவர் எதை ஆnக்ஷபிக்கிறார் என்று கேட்கின்றோம். ஜாதிப் பட்டத்தையும் சமயக் குறிகளையும் எடுத்து விடுவதைப் பற்றியா? பெண்கள் தங்கள் இஷ்டப்படி கணவனை தேடிக் கொள்வதைப் பற்றியா? இஷ்டமில்லாத போது விலகிக் கொள்வதைப் பற்றியா? கடவுள் பூசைக்கு பணச் செலவும் தரகனும் கூடாது என்பதைப் பற்றியா? என்று கேட்கின்றோம்.

திரு.வரதராஜுலு வெகுகாலத்திற்கு முன்பே ஜாதிப் பட்டத்தையும் சமயக் குறிகளையும் எடுத்து விட்டதாக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் ருஜுப்பிக்க முடியும். பெண்கள் விஷயத்தைப் பற்றியும் தனது மனைவியார் அவர்களது கழுத்தில் இருந்த தாலியைக் கூட அறுத்தெறிந்து விட்டதாகவும் சர்வ சுதந்திரத்துடன் இருக்க அனுமதித்திருப்பதாகவும் தானும் எழுதியதோடு தனது மனைவியார் பேராலும் வெளிப்படுத்தி இருக்கின்றார். கடவுள் விஷயத்திலும் தான் கோவிலுக்கே போவதில்லை என்றும் விக்கிரக வணக்கமே செய்வதில்லை என்றும் அநேக இடங்களில் சொல்லி இருக்கின்றார்.

அன்றியும் .இவர் விக்கிரக ஆராதனை இல்லாத ஆரிய சமாஜத்தில் சேர்ந்து கொஞ்சம் காலம் இருந்தார். இப்பேர்ப்பட்டவருக்கு செங்கல்பட்டு தீர்மானத்தில் எது பட்டுக் கொண்டது என்பது நமக்கு விளங்கவில்லை.

நிற்க, திரு.கலியாணசுந்தர முதலியாரின் விஷயம் வரவர மிக இழிவான துறையில் போய்க் கொண்டிருக்கின்றது. இவருக்கும் திரு.சத்திய மூர்த்திக்கும் கடுகளவு வித்தியாசமாவது இருப்பதாகக் கண்டுபிடிப்பதற்கில்லை. ஆனால் முந்தினவர் மன்னிப்பு கேட்டுக் கொள்வார், இவரோ தான் சொல்லவில்லை என்று பொய் சொல்லி விடுவார். இது இரண்டிலும் பிந்தினவர் குணமே மிகவும் இழிந்துரைக்கத் தக்கது.

இவரும் தனது பத்திரிகையில் “நாயக்கர் எனது அன்பர் அவர் சிங்கக்குட்டி” என்று எழுதுவதும், திருவாளர்கள் பாவலர், குழந்தை, ஷாபி முதலிய ஆசாமிகளுடன் கூடிக் கொண்டு இழித்தன்மையில் விஷமப் பிரசாரம் செய்வதும், “சுயமரியாதை இயக்கம் நல்லதுதான்; ஆனால் அது ஜஸ்டிஸ் கக்ஷியில் சேர்ந்து கெட்டுப்போய் விட்டது” என்று சொல்லுவதும், ஜஸ்டிஸ் கக்ஷி நல்லதுதான்; ஆனால் அது சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து கெட்டுப் போய் விட்டது என்பதும், கூட்டத்தில் எங்காவது சிக்கிக் கொண்டால் பல்லை காட்டி கெஞ்சுவதும் தனது அறையில் இருக்கும்போது அவன் முட்டாள், இவன் எட்டன், படியாதவன் என்பதுமான முறையில் பேசுவதுமாய் நடந்து கொள்கின்றார். எனவே இம் மூவரும் சேர்ந்துதான் ‘இந்திய நாட்டு தேசீய’ காங்கிரசை காப்பாற்றுகின்றவர்களாக பறை அடித்துக் கொள்ளுகின்றவர்கள் என்பதை பொது ஜனங்கள் உணர ஆசைப்படுகின்றோம்.

நிற்க, ஆஸ்திகச் சங்கம் ஸ்தாபித்தவர்களும் அதன் மூலம் “கடவுளைக் காப்பாற்றவும் சமயங்களைக் காப்பாற்றவும் வேலை செய்கின்றோம்” என்று சொல்லிக் கொண்டு புறப்பட்டிருப்பவர்களுமான திருவாளர்கள் பாவலர், குழந்தை, ஷாபி சாயபு, ஜயவேலு, கல்யாணசுந்தர முதலியார் முதலிய கனவான்களுக்கு முதலாவது “கடவுள் பக்தியோ”, “சமய” ஒழுக்கமோ நாணயமோ உண்டா என்பதை யோசித்துப் பாருங்கள். சிஷ்யர்களுடைய யோக்கியதை அறிய வேண்டுமானால் குருவின் யோக்கியதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இவர்களின் குருவான திரு. கல்யாணசுந்தர முதலியாரின் கடவுள் எது? அதற்கு கற்பிக்கப்பட்ட ஒழுக்கம் எது? என்று அவராவது மற்றும் யாராவது சொல்ல முடியுமா? அதுபோலவே திரு.முதலியாருக்கு அவரது சமயம் எது? அதன் கொள்கைகள் எவை? அவற்றுள் அவர் பின்பற்றுவது எது? என்று அவராவது மற்றும் யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

திரு.முதலியார் சிஷ்யர்களில் ஒருவர், “நாயக்கருக்கு” ஒரு பகிரங்கக் கடிதம் எழுதி இருக்கிறாராம். அதாவது அதில் திரு.நாயக்கர் அந்த சிஷ்யருடன் வாதுக்கு வர வேண்டுமாம், எதைப் பற்றி என்றால் திரு.நாயக்கர் வாதம் வியர்க்காத தோஷமுடையதாம். ஆதலால் “நாயக்கர்” இலக்கிய இலக்கண தர்க்க சமய சாஸ்திர அனுபவ ஞானம் இல்லாதவரென்று நிரூபணம் செய்யத் தயாராயிருக்கின்றாராம். இதைத்தான் பத்திரிகைகளுக்கு பகிரங்கக் கடிதம் என்று எழுதி இருக்கின்றார்.

திரு. ‘நாயக்கர்’ தனக்கு இலக்கண இலக்கியம் தெரியுமென்று எப்போதாவது சொன்னாரா? தர்க்க சமர சாஸ்திரம் பார்த்திருப்பதாய் எப்போதாவது சொன்னாரா? மனிதனுக்கு பகுத்தறிவு இருக்கின்றதா? இல்லையா என்றும், அந்த அறிவு என்ன சொல்லுகின்றது என்றும், தான் சொல்லுவது அந்த அறிவுக்குப் பொருத்தமானதா விரோதமானதா என்றும் தான் கேட்கின்றாரே ஒழிய வேறு என்ன? இதற்கு சமாதானம் சொல்ல முடியாமல் இலக்கணத்தில் வெல்லுவேன்; இலக்கிய சாஸ்திரத்தில் வெல்லுவேன்; அதுவும் “இலக்கிய இலக்கண தர்க்க சாஸ்திர பண்டிதர்”களான தமிழ் பேசத் தெரியாத திருவாளர்கள் ஏ.ராமசாமி முதலியாரும் தணிகாசலம் செட்டியாரும் தான் இதற்கு மத்தியஸ்தராயிருக்க வேண்டுமாம்.

எனவே இந்த அறிவாளிகளின் தீரத்தை வாசகர்களே உணர்ந்து கொள்ளலாம். இந்த ‘பண்டிதர்களை’ மத்தியஸ்தமாக வைத்துக் கொள்ளும் பண்டிதருக்கு எவ்வளவு இலக்கண இலக்கிய அனுபவ ஞானம் இருக்கும் என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.

எனவே, இதிலிருந்தே ஆஸ்திகப் பிரசாரர்களின் அறிவு எவ்வளவு என்பதை உணர்ந்து கொள்ளலாம். ஆஸ்திகர்கள் தங்களின் காலித்தனத்தாலும் தேசத்துரோக பூச்சாண்டியாலும் நாஸ்திக பூச்சாண்டியாலும் சுயமரியாதை இயக்கத்தை அசைத்துவிட முடியாது என்பதையும், அசைக்கப் புறப்பட்டிருப்பதாய்ச் சொல்லிக் கொள்ளும் நபர்களும் வெறும் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்றும் தெரிவித்து கொள்வதோடு இதற்காக சுயமரியாதைக்காரர்கள் மெனக்கெட்டு அவர்களுக்கு எதிர்பிரசாரம் செய்வதற்கென்று காலத்தையும் எண்ணத்தையும் வீணில் செலவழிக்க வேண்டாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 24.03.1929)

Pin It