பூ

களங்கமற்றுத் திறந்தே கிடக்கின்றன உன் அறைகள்

வந்து போகிறார்கள் விரும்பியதைச் சுவைக்க

மதுவாகவும் இருக்கக்கூடும்

சாவின் துயரம் உறைந்து கிடக்கும்

வறண்டுடைந்த தரைகளில்

வக்கிரமற்றுப் பதிந்திருக்கும்

இருக்கை ஒன்றில்

படியவிட்டு வந்திருக்கிறேன்

என்னை!

உதிர்மயிரெனக் கருதி நீ

கழித்துத் தள்ளும் காலத்தின்

கெக்கலிச் சிரிப்புகளை

சகித்தலையும் எனதுயிரில்

கசிகிறது காதல்

உன் எல்லா வேர்வைகளுக்காகவும்

குறிகளற்ற ஒரு பிரபஞ்சத்திற்கான

சாப மந்திரத்தை தேடித்திரியும்

என் மன இடுக்குகளில்

முண்டச்சியாய் நின்றாடும் காளி

உன் அடவுகளிலிருந்து

தெறித்து விழுகிறது ஒரு பூ

என் மேல்.

 அக்கா

அக்கா ஒரு காலைப் பொழுதில்

முண்டச்சியானாள்

அதற்கு முன்னும் ஒரு கூலிகாரனோடு

ஓடிப்போனதாக அறியப்பட்டிருந்தாள்

ஒரு தென்றலைப் போலத்

திரும்பி வந்த அவளுக்கு

இரண்டு குழந்தைகளும்

சரியாகப் பிறந்ததாக சந்தோசப்பட்டார்கள்

அதன் பின்னரும் அக்கா காண்ட்ராக்டர்களோடு

முயங்கியதாய் முனுமுனுத்தார்கள்

அக்கா தனக்குப் பிடித்த வாசனையை

தன் உடல் முழுக்கப் பூசிக் கொண்டலைந்தாள்

எதிர்ப்பட்ட குழந்தைகளை வாரியணைத்து முத்தமிட்டாள்

அதில் வீசும்

அன்பின் மதுரத்தில் அவர்கள் கரைந்தார்கள்

அக்கா மேலும் இருவரோடு காதல் கொண்டதாய்ச்

சொல்லிச்.. சொல்லிச்.. சொல்லி.

சொப்பனஸ்கலிதங்களில் ஆழ்ந்து கிடக்கிறார்கள்

ஓடிக் கொண்டிருக்கும் காலநதியில்

அன்பில் மூழ்கி அழிந்து கொண்டிருக்கிறாள் அக்கா!

 மீண்டெழுதல்

உன் குழந்தைகளைக் கொன்று போட்டாயிற்று

உனது நூலகம் எரிக்கப்பட்டுவிட்டது

உனது நிலமும் சிதைந்ததைக் கண்டோம்

உனது வரலாறு கேவலப்படுவதையும் பார்க்கக்கூடும்

உனது கனவுகள் உனது முகம் உனது குரல்

உனது உடை உனது புத்தகம் உனது துப்பாக்கி

உனது அறிவு உனது காதல் உனது மனைவி

உனது.. உனது... உனது... உனது..

எதுவுமே இனி உனதல்ல

தம்பி நீடுதுயிலறுத்து எழுந்து வா!

2000 ஆண்டு மரபின் களிறு போந்த வயிறு தேடாதே

பிணைக்கப்பட்ட கைகளுடன்

அந்திப் பொழுதில் நந்திக் கரையில்

காத்திருக்கிறேன் திறந்த யோனியோடு!

 கைக்கிளை

கோடை நீங்கிய இரவில்

ஒரு வெண்பனியென

நீ வந்தாய்

தகிக்கும் இருள்வெளி நழுவும்

கானக வெளியிடை

மனதிற் பீறிடும் காதலோடும்

ஒழுக்க விதிகளின் ஓயாத் துரத்தல்களோடும்

படபடக்கும் இதயத்தைக்

உன் குடையில் பொதிந்தபடி

நொறுங்கிச் சிதைந்த தேக்கிலை

ஒலியின் வழிநடந்த உன் பாதங்களின்

சுவடுகள் மறைத்த வண்ணம்

பெருமழை பின்தொடர்ந்து

நிலமிறங்கத் தொடங்கிய போது

உன் அணைப்பின் பனிக்குள்

உறைந்து கிடந்தேன் நான்

நீ போய்விட்டாய்

அறை முழுதும் நீ நிறைத்த

முத்தத்தின் வாசனைகளோடு

எப்போதும் பெய்து கொண்டிருக்கும் மழையில்

நனைந்து நனைந்து கருகுகிறேன் நான்.

 உயிரழித்தல்

பேசிக் கொண்டிருக்கிறோம்

கனவுகளில் பெய்த மழைகளைப் பற்றி,

கசியும் துயரங்களின் வலிகளைப் பற்றி,

பெருமூச்சுக்களின் அடியாழ விருப்பங்கள் குறித்து

சாவின் கதவிடுக்குள் நுழையும் தருணங்களைப் பற்றி.

சொற்களில் சோகங்களைப் புதைப்பது பற்றி.

உடல்களை இடமாற்றிக் கொள்ளும் சாத்தியம் பற்றியும்

முத்தத்தின் துரோகங்களைப் பற்றி,

துரோகத்தின் காயங்களைப் பற்றி,

பேசிக் கொண்டிருக்கிறோம்

மிருது உடைகளில் புதைந்து

வருகிறார்கள் நீதிமான்கள்.

முடிவற்ற வார்த்தைகளால் பின்னப்பட்ட

கனக்கும் புத்தகங்களிலிருந்து

தேடித் தேடிக் கண்டடைகிறார்கள்

உயிர் பறிக்கும் வரிகளை

தண்டனைகளை வன்புணர

காத்திருக்கிறது நீதி.

 பிரிவு

என்னிடம் சாத்தான் குடிகொண்டது

காதலாய்

காமத் தேவனின் தேனீர் விருந்தொன்றில்

சந்தித்துக் கொண்டோம்

சாத்தானின் அன்பில் திளைத்த தேவன்

பகலும் இரவும் காலமுமற்ற பொழுதில்

தனது சிங்காசனத்தை நமக்களித்தான்

ஆப்பிள் வனங்களில் அலைந்து களைத்தோம்

துயரம் வழியும் பிரிவின் கணங்களில்

எனது தேவனை நீயும் உனது சாத்தானை நானும்

அபகரித்துக்  கொண்டோம்.

இறந்து கொண்டிருந்த இரவை

எடுத்துச் சென்றாய் ஒரு பாடலாக்கி

தனிமை படர்ந்து வெம்மைத் துயரெழுப்பும்

அடர்கானகங்களில் ஒலிக்கும் அப்பாடல்

தவறாமல் கொண்டு வருகிறது

பெருமழையை.

வனங்களில் திரள்கின்றன சாதகப் பறவைகள்.

 போதி

வனாந்திரங்களைக் கடந்தான்

பாவங்களைச் சுமந்தழுது

ஓடையாய் ஒதுங்கிய நதியைத்

தன் துயர்மிகு தாலாட்டில் அருவியாக்கினான்

கந்தகமேறிப் புலம்பிய காற்றை

பச்சையத் தொடுதலில் சொஸ்தமாக்கினான்

கலங்கிய நிலவுக்கு கருகிய புல்லிற்கு

செருமிய பறவைக்கு இறுகிய கல்லிற்கு

தன் கவிதையை உணவாக்கினான்

பொன்வண்டின் ஒளிதொடர்ந்த கால்களுக்கு

காட்டின் பாடல் வழிகாட்டியது

தேனும் மீனும் பகிர ஆளின்றி பருகாமல் கிடக்கின்றன

எல்லாக் குடில்களும் வரவேற்ற பத்தினிப் பெண்டிரின்

அந்தரங்களில் மிதந்து காதலுற்றான்

காலங்களின் முகத்தின் துப்பித் திரிந்த அவன்

களைத்துக் கிடந்த போதியோடு உரையாடத் தொடங்கினான்

அறையப்பட வேண்டிய சிலுவையைக் கண்டடைந்தாயிற்று

மிசையா நீ விலகு

சுவிசேசக்காரர்களின் மரணப் பிரசங்கங்கள் கேட்கத் தொடங்கிவிட்டது

அறிவிக்கக் காத்திருக்கிறது தேவனின் மரணம்.

  

Pin It