“ஈடேற வழி: பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் ஆகியவற்றை விட்டொழிப்பதே” – பெரியார் ஈ.வெ.ரா. 

சென்ற இதழுக்குக் கிடைத்த அதிகபட்ச வரவேற்பால் உந்தப்பட்டு இந்த இதழைச் சற்றே அதிகப்பக்கங்களுடன் அளிக்கிறோம். அதிகப் பக்கங்கள் தாமதத்தை ஈடுசெய்யும் என்ற நம்பிக்கையுடன். இந்த இதழ் முடியும் தருவாயில் ‘அநிச்ச’ முயற்சியில் ஈடுபாடு கொண்டிருந்த தோழர் சி. புஸ்பராஜாவின் மரணச் செய்தி அதிர்ச்சியாக எங்கள் மீது கவிழ்ந்தது. அவரைப்பற்றிய விரிவானக் கட்டுரையை வெளியிட நேரம் வாய்க்கவில்லை. சிறிய குறிப்பொன்றே எழுத முடிந்தது. எனினும் சில மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஷோபாசக்தியின் அவர் நூல் மீதான விமர்சனம் இந்த இதழில் இடம் பெற்றுள்ளது.

 ஜப்பானிய திரை இயக்குனர் நகிஸா ஒஷிமாவின் இரு முக்கிய திரைப்படங்களை முன்வைத்து ராமாநுஜம் எழுதியுள்ள கட்டுரை இந்த இதழின் சிறப்பம்சம். தேசியம் கட்டமைக்கின்ற உடலை இவ்விரு திரைப்படங்களின் மூலம் எதிர்கொள்ளும் ஒஷிமாவின் உடல் அரசியலை நுண்ணியமாக அலசுகிறார் ராமாநுஜம். தனது மொழியாக்கங்களின் மூலம் மண்ட்டோவை விரிந்த தளத்தில் அறிமுகம் செய்த ராமாநுஜம் இது போன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து எழுத வேண்டும்.

கதைக்களம் நைஜிரியாவாக இருந்த போதிலும் ஷோபாசக்தி படைத்துள்ள மம்முடு சாதியின் சிறுகதை (திரு. முடுலிங்க) நைஜீரியாவில் அதிகாரியாக பணியாற்றுகிற கதை எழுதுகிற ஒரு ஈழத்தமிழரைப் பற்றியது. நிச்சயம் ரசிப்பீர்கள்.

பரிணமித்து வரும் மதிவண்ணன் இம்முறை சுந்தர ராமசாமியின் மூன்று நாவல்களை விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்கிறார். ஜே.ஜே. சிலகுறிப்புகள் மற்றும் புளியமரத்தின் கதை ஆகிய நாவல்களில் வெளிப்படும் மேற்ச்சாதி சனாதனக் குரலை அடையாளம் காட்டும் மதிவண்ணன் யாராலும் கவனிக்கப்படாது போன ‘குழந்தைகள் ஆண்கள் பெண்கள்’ நாவலில் வெளிப்படும் பெண் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான குரலை பாராட்டவும் தயங்கவில்லை.

அ.மார்க்ஸின் பத்திகள் வழக்கம் போல பல்வேறு பிரச்சினைகளைப் பேசுகின்றன மனித உரிமை நோக்கில் என்கவுன்டர் கொலையாளிகளை நாயகர்களாக்கும் பண்பாடு குறித்தும், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் மீது நிகழ்த்தப்படும் பொய்க் கண்டுபிடிப்பு சோதனைகள் குறித்தும் அவர் எழுதியுள்ளவை தமிழ்ச்சூழலில் வேறு எவரின் கவனத்திற்கும் வராதவை.

ஈழத்து தலித் எழுத்தாளர்களில் ஒருவரான என்.கே. ரகுநாதனின் நேர்காணலை மகிழ்ச்சியுடன் உங்கள் முன்வைக்கிறோம் கே.டானியலின் மைத்துனர் என்கிற அடைமொழி அவருக்குத் தேவையில்லை எனினும் ஒரு தகவலுக்காக அதை பதிவு செய்கிறோம்.

சில மாதங்களுக்கு முன் பாரிஸில் ஏற்பட்ட கருப்பர் எழுச்சி வரலாற்று சிறப்பு மிக்கது. வழக்கம் போல நமது தமிழர்கள் சக வெளிநாட்டவர்களுடன் நிற்காமல் ஒதுங்கியிருந்தனர். பாரிஸ் கலவரம் குறித்த நேரடி சாட்சியமாக அமைகிறது அசுராவின் கட்டுரை.

தமிழைக்காட்டிலும் உருது சென்ற நூற்றாண்டின் வரலாற்றின் தாக்கத்தால் வளமுற்ற ஒரு மொழி பின்நவீனத்துவம் குறித்தும் அமைப்பியல் குறித்தும் அம்மொழியில் உருவாகி வரும் நவீனத்துவத்தை சுட்டிக்காட்டும் சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ள இந்நூலை கண்மணி அறிமுகம் செய்கிறார்.

தேர்தலில் தமிழகம் அமளிப்பட்டுக் கொண்டிருக்கிறது யாரும் மக்கள் பிரச்சினையை பேசுவதாக இல்லை. யார் எந்தக் கூட்டணியில் என்பதே முக்கியக் கேள்வியாக முன்வைக்கப் படுகிறது. இன்றைய தேர்தல் முறை சீரமைக்கப்படாதவரை இந்நிலைத் தொடரவே செய்யும்.

பிரான்சிலும் இங்கிலாந்திலும் உள்ள ஒட்டுமொத்த அய்ரோப்பியரின் எண்ணிக்கையை காட்டிலும் அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடு நம் நாடு. பிரிட்டிஷ் ஆட்சியில் வழங்கப்பட்ட உரிமைகளும் பறிக்கப்பட்டு இந்துப்பாசிசத்தின் ஒடுக்கு முறைக்குள்ளாகி நிற்கும் இம்மக்களின் இடஒதுக்கீடு பிரச்சினை இன்று மேலெழுந்து வந்துள்ளது. கடந்த நான்கைந்து ஆண்டுகளில் முஸ்லிம் இயக்கங்கள் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான பணியின் விளைவு இது. கோரிக்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை.

பிராமண சங்க மாநாடொன்று நடத்தப்பட்டு பாலசந்தர் சுஜாதா போன்றோர் அதில் கவுரவிக்கப்பட்டுள்ளனர். கவுரவிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி சுஜாதா போன்றவர்கள் அதுகுறித்துப் பெருமையாக ஊடகங்களில் எழுதியும் வருகின்றனர். 3 சதமே உள்ள பார்ப்பனர்களுக்கு 11 சதம் இடஒதுக்கீடு கேட்டுத்தீர்மானங்கள் எல்லாம் இயற்றி உள்ளனர். வழக்கம் போல சிறுபத்திரிகைகள் இதைக்கண்டுக்கொள்ளவில்லை வழக்கம் போல திராவிடர் இயக்க பத்திரிகைகளும் கவிஞர் அறிவுமதியின் ‘தை’ இதழும் மட்டுமே இதை கண்டிக்க மனம் கொண்டன அவற்றைப்பாராட்டுகிறோம்.

ஈழத்தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை மீண்டும்போர் மூளுமோ என்கிற அச்சம் ஜெனீவா பேச்சுவார்த்தையின் மூலம் தற்காலிகமாகவேனும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையைப் பொறுத்தவரை இந்தியாவின் தலையீடு ஈழத் தமிழரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் இருக்க வேண்டும் என்பது மனித உரிமையாளர்களின் விருப்பம். நமது விருப்பமும் கூட அதுவே.

அதேபோன்று ரயில்வேயில் “மனிதக் கழிவை மனிதர்கள் அள்ளமாட்டோம் இயந்திரத்தைப் பயன்படுத்துக” என அருந்ததியர்கள் நடத்தியப் போராட்டத்தை தமிழ்ச்சமூகமும் வழக்கம் போல சிறுபத்திரிகைகளும் கண்டு கொள்ளாததும் பேரவலம். ரெயில்வே பட்ஜெட்டை பாராட்டித் திரிகிறவர்களும் கூட ரயில் நிலையங்களில் ‘ஆதித்தமிழர் பேரவை’ நடத்திய இந்தப் போராட்டத்திற்கு ஒரு வார்த்தையைக் கூட ஆதரவாய்த் தரவில்லை என்பது வெட்கக்கேடானது.

புஷ்ஷை எதிர்த்து இடது சாரிகளும் முஸ்லிம்களும் மாணவர்களும் இந்தியாவெங்கிலும் கிளர்ந்தெழுந்தது சமீப கால இந்திய அரசியலில் உற்சாகமூட்டிய ஒரு காட்சி இது குறித்து கட்டுரை ஏதும் இவ்விதழில் இடம்பெறாதது ஒரு குறை. இந்தியாவின் அமெரிக்க சார்பு போக்கை ஆய்வு செய்யும் விரிவானக் கட்டுரை ஒன்று அடுத்த இதழில் இடம்பெறும்.

இடப்பற்றாக்குறையின் காரணமாக தோழர் ஓடை. பொ. துரையரசனின் ‘எதிர்ப்பும் எழுத்தும்’ நூலின் மீதான மதிப்புரையும் அடுத்த இதழில் வெளியாகும்.

Pin It