கடந்த 15_10_2005 அன்று திண்டிவனத்தில் பேராசிரியர் கல்யாணி முன்னின்று நடத்திய “தமிழக பழங்குடியினர் நிலவுரிமை மாநாட்டில்” நூல்கள் விற்பனை செய்து கொண்டிருந்த தோழர் நீலகண்டனை விடுதலை சிறுத்தைகள் ‘என்னடா அண்ணனுக்கு எதிரா ஏதோ பிட் நோட்டீஸ் கொடுக்குறியாமே’ எனச் சொல்லி மூக்குத் தண்டில் காயமேற்படும் அளவிற்கு தாக்கியுள்ளனர். தாக்குதலை தடுக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் அய்யனாரையும் மார்பிலும் முகத்திலும் அடித்துள்ளனர்.

தோழர் நீலகண்டன் தாக்கப்படுவது இது இரண்டாவது முறை. விடுதலை சிறுத்தைகளின் பெயர் மாற்ற அரசியலை விமர்சித்ததும் பெரியார் மீதான அவதூறுகளுக்கு எதிர்வினை பிரசுரம் வெளியிட்டதும், குஷ்புவின் கருத்தை ஆதரித்து துண்டறிக்கை வெளியிட்டதற்குமான எதிர்நடவடிக்கையே இந்தத் தாக்குதல்கள். கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளாமல் அடித்து விரட்டுகிற இந்நடவடிக்கையை தாய்மண் இதழின் வன்னி அரசே தூண்டி விடுவதாகவும் இது குறித்து சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் நண்பர்கள் அளித்த ஆலோசனைகேற்ப திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் நீலகண்டன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தை கண்டித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் வழக்கறிஞர் ரத்தினம், தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன், மக்கள் உரிமை கூட்டமைப்பின் கோ. சுகுமாறன், பெரியார் திராவிடர் கழகம், நீலப்புலிகள் இயக்கம், விடுதலை இயக்கம் செங்கொடி, மா.பெ.க., பேராசிரியர்கள் ப. சிவக்குமார், திருமாவளவன், பொறியாளர் ராஜாராமன், தமிழ் முழக்கம் தமிழரசன், மனிதம் பதிப்பகம் அறிவொளி ஆகியோர் கலந்து கொண்டனர். தாக்குதலைக் கண்டித்து கண்டனத் துண்டறிக்கை ஒன்றும், விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச் செயலாளர் திருமாவளவனுக்கு பகிரங்க கடிதம் ஒன்றும் எழுதுவது எனவும் கூட்டமைப்பு முடிவு செய்தது. கூட்டு செய்றபாடுகளில் தங்களையும் இணைத்துக் கொள்ள விடியல் பதிப்பகம் சிவா, தமிழக குடியுரிமை பாதுகாப்பு நடுவமும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Pin It