அமிதாப்பச்சன் - இவ்வாண்டு அவரின் இணையதளம் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. அவரின் தினசரி வாழ்க்கை நிகழ்வுகள் செய்திகள் என்று சுவாரஸ்யமான வகையில் இணையதளத்தில் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இணையதளத்தில் அவரின் ரசிகர்களின் எதிர்வினையை மிகவும் முக்கியமாகக் கருதுகிறார். அவருக்கு இவ்வாண்டின் இரு முக்கியமான விருதுகள் கிட்டியுள்ளன. ‘‘வொரால்டு எக்னாமிக் பாரம் கிறிஸ்டல் விருது’’ அதில் முக்கியமானதாகும். ‘கடைசி லியர்’ என்ற படத்திற்காக அவ்விருது கிடைத்திருக்கிறது.
முதிர்ந்த நாடக நடிகரான அமிதாப்பச்சனுக்கு திரைப்படமொன்றின் நடிக்கும் வாய்ப்பொன்று வருகிறது. வேலையில்லாத முதிர்ந்த கோமாளி பற்றின படமாகும். ஆனால் அமிதாப்பச்சன் மறுத்துவிடுகிறார். “நாடகத்தில் நடிக்கிற போது உடனடி எதிர்வினைகள் கிட்டும். ரசிகனின் எதிர்பார்ப்பு என்னவென்றும் தெரிந்துவிடும். உடல் மொழியை இறுக்கமாக வைத்துக் கொள்ளாமல் இயல்பாக அது போகும் போக்கில் விட்டுவிடலாம். ஆனால் திரைப்படத்தில் அப்படியில்லை. பிரேமில் கைவருகிறது; தோள் தேவையில்லை என்று உடலை சாதாரணமாக வைத்துக் கொள்வதிலும் ஏகப்பட்டக் கட்டுப்பாடுகள். நடிகனை சுதந்திரமாக இயங்க அது அனுமதிக்காதே”
ஹரிஸ் மேத்தா என்ற நாடக நடிகராக அமிதாப்பச்சன் நடித்திருக்கும் படம் “கடைசி லியர்”. உத்பத் தத் என்ற வங்காள நாடகாசிரியரின் “ஆஜ்கர் சகாஜ்ய ஹான்” என்ற நாடகமொன்றின் திரைவடிவமாகும் இது. மார்க்சியவாதியான உத்பத் தத் தெருநாடகங்கள் மூலம் கட்சிக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்றவர். இந்திய மக்கள் நாடக அமைப்பை ஒரு வலுவான அமைப்பாக்கி நடத்தியவர். இதை வங்காள இயக்குனர் ரிதுபர்னோகோஷ் திரைப்படமாக்கி யிருக்கிறார். இவரின் இதற்கு முந்தின படமான கேலாவும் திரைப்படத்துறை பற்றின படமாகும். லட்சியவாதியான பட இயக்குனர். குழந்தை பெற ஆசைப்படும் மனைவி. அவனுள்ளும், அவளுள்ளும் குழந்தைமையைக் கண்டு கொள்கிறாள் அதில். இவரின் “மழைகோட்டு” என்ற படம் அஸ்வர்யாராய், அஜய் தேவ்கான் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்ததால் பலரின் கவனத்திற்கு வந்த படம். தாகூரின் விநோதினி நாவலை சோக்கர் பாலி என்ற பெயரில் திரைப்படமாக்கியிருந்தார். அதிலும் அஸ்வர்யாராய் நடித்திருந்தார், இளம் விதவையாக. தோசர் என்ற படம் பன்னாட்டு நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஒருவன் தன் காதலியோடு வார இறுதியை வெளியில் கழிக்கச் செல்லும்போது வாகன விபத்து ஏற்படுகிறது. அவன் மனைவிக்குத் தகவல் தெரிந்து குடும்பம் அந்த உறவை உணர்ந்து அதிர்ந்து போகிறார்கள். அப்படத்தின் இன்னொரு பகுதியாய் சற்றே முதிர்ந்த திருமண வாழ்வில் திருப்தியில்லாமல் இளைஞன் ஒருவனுடன் உறவு கொண்டு கர்ப்ப மடையும் இன்னொரு பெண்ணும் பிரதானமாய் பங்கு பெறுகிறார்கள். ரிதுபர்னோ கோஷ் இயக்கிய முதல் ஆங்கிலப் படமாகும், “கடைசி லியர்”.
ஹரிஸ் மேத்தா ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் நடிப்பதில் அக்கறை கொண்ட வர். அவரின் ஓய்பு வாழ்க்கையில் வேலையில்லாத முதிர்ந்த கோமாளியாக திரைப்படமொன்றில் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஷப்னம் என்ற நடிகை தீபாவளி அன்று தான் ஹரிஸ் மேத்தாவுடன் நடித்த “முகமூடி” படத்தின் முதல் காட்சிக்கு செல்லும் கணவனிடமிருந்து மாறுபட்டு படுக்கையில் கிடக்கும் ஹரிஸ் மேத்தாவை பார்க்க அவரின் வீட்டிற்குச் செல்கிறாள். அவளுக்கு அப்படத்தில் நடிக்க நாடகபாணி அம்சங்களுக்குக் கற்றுக் கொடுத்தவர் மேத்தா. படத்தின் இறுதிக்காட்சியில் மேத்தா கீழே விழுகிற காட்சி இன்னும் தத்ரூபமாக காண்பிக்கப்பட வேண்டும் என்று இன்னொரு முறை காட்சி எடுக்கப்படும்போது மேத்தா அடிபட்டு மிக மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நர்ஸ் ஒருத்தி அவரை கவனித்துக் கொள்கிறாள். மேத்தாவின் ரசிகையாக இருந்து அவருடனே குடும்பம் நடத்தும் பெண்ணும், நர்சும், ஷப்னாவும் தீபாவளி இரவை தூங்காமல் பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு கழிக்கிறார்கள். ஹரிஸ் மேத்தாவிற்கு “லியர் அரசனாக” நடிக்க வேண்டும் என்று ஆசை. படத்தின் இயக்குனர் சித்தார்த், மேத்தாவை நடிக்க வைக்க வெகு சிரமப்பட்டு ஒத்துக் கொள்ள வைத்தவர். ஆனால் விபத்திற்குப் பின்னால் அவரை வந்து பார்ப்பதில்லை. மரணப்படுக்கையில் கிடப்பவரின் வாய் “லியர் அரசன்” வசனங்களை ஒப்பித்துக் கொண்டே இருக்கிறது.
ஒருவகையான நாடகத்தன்மையில் இயக்கப்பட்டிருக்கும் இப்படம் அந்த அளவில் அது விசேசத் தன்மையானாதாகவும் ஆகிறது. நாடக செட் போன்ற அமைப்பில் பெரும்பாலும் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நர்சு, சப்னம், உடன் வாழ்பவள் ஆகியோர் இரவைக் கழிக்கும் காட்சியமைப்பு போன்று பல கனவுக் காட்சிகளும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மலையில் நின்று கொண்டு எதிரொலிக்கும் விதமாய் ஷப்னம் கத்துவதை பயிற்சியாக மேத்தா தரும் காட்சி கூட நாடகத்தன்மைக்கு ஏற்றவாறு உரத்த கத்தலாக இருக்கிறது. ஷேக்ஸ்பியரை, இந்திய சூழலை மையமாகக் கொண்டு அணுகும் நோக்கு இப்படத்திற்கு புதிய பரிமாணத்தைத் தருகிறது. எழுபதுகளில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் நடித்து வந்த ஒருவரை 30 ஆண்டுகள் கழித்து ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தரப்படும் போது அவரின் நாடகீயமான விஷயங்கள் அதில் உள்ளூர பதிந்திருப்பதை படம் காட்டுகிறது. உலகமே நாடக மேடை. ஒருவனே பல பாத்திரங்களில் நடிக்கிறான் என்று ஷேக்ஸ்பியர் சொன்னார். அவரின் முக்யமான “லியர் அரசன்” வேடத்தில் நடிக்காமல் போன வருத்தத்தில் மேத்தா உயிரை விடுகிறார். அவரே பல பாத்திரங்களாய் வாழ்க்கையில் வாழ்ந்த அனுபவக் குறியீடாகி விடுகிறார்.