குமார் என்று அன்போடு அழைக்கப்பட்ட குமார் சஹானி, வணிக இந்திய சினிமாவுக்கு எதிரான திரைப்பட ரசிகர்கள் மத்தியில் நன்கறியப்பட்ட பெயர். குறிப்பாக 70 மற்றும் 80 களில் திரைப்பட விழாக்களில், பிலிம் சொசைட்டி இயக்கங்கள் மத்தியில் ஒரு நட்சத்திரப் பெயராகவே அறியப்பட்டது.

இன்றைய தலைமுறையில் சினிமா பயிலும் மாணவர்களிடம், குமார் சஹானியைப் பற்றி கேட்ட பொது, பெரும்பாலான மாணவர்கள் அவர் பெயரைக் கூட அறிந்திருக்கவில்லை. இந்த கசப்பான உண்மைக்கு காரணம் என்ன என்று யோசித்த போது, அவரின் சினிமா, சினிமா பற்றிய பார்வை, இன்று, சினிமா பற்றிய எண்ணங்களிலிருந்து வெகு தொலைவில் இருந்ததுதான்.

kumar sahaniஅவரின் மிக முக்கிய படமான "மாயா தர்பன்" (Maya Darban) 1972ல் வெளியான போதே, சினிமா உலகத்தைச் சேர்ந்த பலரே, இதெல்லாம் சினிமாவா என்று திகைத்துப் போயினர். அந்த ஆண்டு சிறந்த ஹிந்தி திரைப்படத்திற்கான தேசிய விருது இப்படத்திற்கு வழங்கப்பட்டது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியிடப்படவே இல்லை. இத்திரைப்படம் மாத்திரம் அல்ல, குமாரின் எந்த திரைப்படமும் திரையரங்குகளில் வெளியிடப்படவே இல்லை. ஆனாலும் உலகெங்கிலும் சில திரைப்பட விழாக்களிலும், தீவிர சினிமா மனவர்களிடையேயும் இவரின் படங்கள் பார்க்கப்பட்டன, விவாதிக்கப்பட்டன.

அதற்குக் காரணம், சினிமா, சினிமா கலை குறித்த தனது பார்வையில் அவர் ஒரு தனித்ததொரு மனிதராக இருந்தார், அந்தப் பார்வையில், எந்த சமரசமும் இல்லாமல் தீவிரமாக இருந்தார்.

அந்தப் பார்வைதான் என்ன? "மாயா தர்பன்" குறித்து குமார் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.:

 "ஒருவர் திரைப்படம் எடுக்கும் பொழுது, அதை தனித்ததொரு படைப்பாக உருவாக்கவே முயற்சி செய்கிறார். குறிப்பாக படைப்பில் சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் பொழுது, அப்படி இருந்துதான் ஆக வேண்டும். சுதந்திரம், அதைத்தானே எல்லோரும் விரும்புகிறார்கள். சினிமாவும், நாட்டியமும் ஒன்று சேர்ந்து அந்த சுதந்திரத்தை உருவாக்க முயற்சிக்கிறது. அதற்கு, நம் நாகரிகத்தின் இசையும், சமூகத்தின் ஒட்டு மொத்த தொகுப்பும் தேவைப் படுகிறது இதைத்தான் நான் "மாயா தர்பனில்" செய்ய முயற்சித்தேன்.

தாலாட்டுப் பாடல் ஒன்றை ஒரு அரிய புத்தகத்தில் படித்தேன். அதை படத்தின் இசை அமைப்பாளர் "பாஸ்கர் சந்தர்வார்க்கரிடம்" இசைப் பாடலாக மாற்ற சொன்னேன், அவரும் அதை விரும்பி செய்தார். அப்பாடலைப் பாடியது வாணி (ஜெயராம்). அதற்கான புல்லாங்குழல் இசையைத் தந்தது. ஹரிப்ரசாத் சவுராஸ்யா. அந்த இசையும், சப்தமும், என் உணர்வின் வெளிப்பாட்டிற்கு, தனித்ததொரு மெருகைத் தந்தது. இதைத் தொடர்ந்து, நான் எடுத்த எல்லா படங்களுமே எதோ ஒரு விதத்தில், இசைக் காவியமாகவே அமைந்தது.”

தன் 60 ஆண்டு கால சினிமா வாழ்வில் குமார் எடுத்தது, ஒரு சில படங்களே. அவற்றில் நன்கறியப்பட்ட படங்கள்: மாயா தர்பன் (Maya Darpan), தரங் (Tarang), காயல் கதே (Kayal Gatha), கஸ்பா (Kasba), சார் அத்யாய் (Char Adhyay).

குமார் எடுத்த படங்களை விட, எடுக்க விரும்பி, பாதியில் நின்ற, அல்லது முடியாமலே போன படங்கள்தான் அதிகம்.

குமார் இறப்பதற்கு (24, பிப்ரவரி, 2024) ஒரு மாதம் முன்பு என் நண்பர் ஹரிஹரனோடு பேசிக் கொண்டிருந்த போது குமார் பற்றிய பேச்சு வந்தது. ஹரிஹரன் குமாரோடு தொடர்பில் இருந்தார். அவர் தற்போது கொல்கத்தாவில், தன் வாழ்க்கைத் துணையோடு ஒரு சிறிய பிளாட்டில் இருப்பதாக சொன்னார். நல்ல விஷயம், அவருக்கு இப்போது ஒரு பெரிய பிலிம் ப்ராஜெக்ட் வந்திருப்பதாக சொன்னார். அமெரிக்க தயாரிப்பாளர் ஒருவர் "இந்திய அரசியலமைப்பு" குறித்த ஒரு தொடர் எடுக்க குமாரை அணுகியிருப்பதாக சொன்னார். ரொம்பவே சந்தோஷப் பட்டேன்.

குமார் இப்படிப்பட்ட தனித்ததொரு திரைப்படக் கலைஞனாய், அறிஞராய் உருவானது எப்படி என்று தெரிந்து கொள்ள, அவரின் வாழ்வு மற்றும் கல்விப் பின்புலத்தை சொல்லியாக வேண்டும்.

குமார் சுதந்திரத்திற்கு முன் 1940ல் பாகிஸ்தானின் சிந்து பகுதியில் பிறந்தவர். பின்னர் இந்தியாவிற்கு குடியேறிய பின்பு, பம்பாய் பல்கலைக்கழகத்தில், அரசியலும், வரலாறும் படித்தார். பின்னர் பூனா திரைப்பட கல்லூரியில் சினிமா இயக்கம், திரைக்கதை படித்தார். அப்போது திரைப்படக் கல்லூரியின் முதல்வராக இருந்தவர் புகழ் பெற்ற வங்க இயக்குனர் "ரித்விக் கட்டக்". குமார் எனது சிறந்த மாணவன் என்று பலமுறை ரித்விக் கட்டக் சொல்லியிருக்கிறார். அப்போது, அவர் வகுப்பில் சக மாணவர்களாக இருந்தவர்கள், மணி கவுல் மற்றும் அடூர் கோபாலகிருஷ்ணன். 70 களில் புதிய இந்திய சினிமா இயக்கம் தோன்றியபோது, அதில் பல பிரிவுகள் இருந்தன. பிரதான பிரிவு சத்தியஜித் ராயின் தலைமையிலான பிரிவு. அவர்கள் எல்லோரும், இயல்பாக, உணர்வு பூர்வமான கதை சொல்லும் போக்கை கொண்டிருந்தனர். அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள், சத்தியஜித் ராயின் போக்கை கடைபிடித்தனர். இன்னொரு பிரிவோ, ரித்விக் கட்டக்கின் தலைமையில் செயல் பட்டனர். இவர்கள் எல்லோரும் எதோ ஒரு விதத்தில் யதார்த்தமாக கதை சொல்லும் போக்கிற்கு எதிராக இருந்தனர். குமார், மணி போன்றவர்கள் சினிமாவை தனி மனிதனின் கலாப்பூர்வ வெளிப்பாடாகக் கருதினர். யதார்த்த கதை சொல்லும் போக்கே, இந்தியா மாற்று சினிமாவில் பிரபலமாக இருந்தது. அதனால்தானோ என்னவோ, 1972ம் ஆண்டு தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த இந்திய திரைப்பட விருது, அடூர் கோபாலகிருஷ்ணனின் "சுயம்வரத்திற்கும்" சிறந்த ஹிந்தி திரைப்பட விருது, குமார் சஹானியின் "மாயா தர்பனுக்கும்" தரப்பட்டது.

பூனா திரைப்படக் கல்லூரி, ரித்விக் கடக்கை தாண்டி குமாரின் படங்களில் வேறு முக்கிய தாக்கங்களும் இருந்தன. அவர் பூனா திரைப்படக் கல்லூரியில் படித்த போது, பூனாவில் அப்போது இருந்த மார்க்சிய வரலாற்று ஆசிரியரும், கணிதவியலாலருமான டி.டி கோசாம்பியின் நட்பும் அவரின் கலை சார்ந்த பார்வையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பூனா திரைப்படக் கல்லூரிக்கு பின்பு, விஷேச அழைப்பின் பேரில், பிரெஞ்சு திரைப்படக் கல்லூரியிலும் படித்தார். அங்கே, பிரெஞ்சு திரைப்பட மேதையான ராபர்ட் ப்ரேஸோனின் வழிகாட்டல் கிடைத்தது. ப்ரெஸ்ஸோனின் Un femme Douce படத்தில் குமார் உதவி இயக்குனராய் பனி புரிந்தார்.

இன்றைய சினிமா, குமார் சஹானி போன்ற கலைஞர்களின் சினிமாவிலிருந்து வெகு தூரம் வந்திருக்கலாம். அனால் சினிமாவை கலையாகவும் பார்க்கும் சினிமா ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு, குமார் சஹானியின் படங்களை தேடி பார்த்து விவாதிப்பது, ஒரு அவசியமாகிறது.

- எம்.சிவக்குமார், சினிமா பேராசிரியர், சினிமா செயற்பாட்டாளர், ஆவணப்பட இயக்குநர்.

Pin It