“சிவப்பு, பலருக்கும் உதட்டுச் சாயம். இன்குலாபிற்கோ காயத்திலிருந்து வடிகிற ரத்தம்” என்னும் கவிக்கோவின் கூற்றிற்கேற்ப மக்கள் கவிஞர் என்றழைக்கப்படுகின்ற இன்குலாப் விருதுகளால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர். காவல்துறையின் இரவு நேரத்து அழைப்புகளும், விசாரணைகளும், சிறைகளுமே அவருக்கு வழங்கப்பட்ட விருதுகள் எனச் சொல்லலாம்.

எவ்வகையான சாதி, மத வட்டத்திற்குள்ளும் தன்னை அடையாளப்படுத்தாமல் மக்கள் மனங்களில் நிறைந்த, பாவலர் இன்குலாபின் நேர்காணல்கள் “மானுடக் குரல் - இன்குலாப் நேர்காணல்கள்” என்னும் பெயரில் தமிழ் அலை பதிப்பகத்தாரால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. வெவ்வேறு இதழ்களில் வெவ்வேறு கால கட்டங்களில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பாக இது அமைந்துள்ளது.

நேர்காணல்களுக்குள் நுழையுமுன் கவிஞரது கவிதை வரிகள் சிலவற்றை மீளவும் நினைவு கொள்ளல் பொருத்தமானது என்பதால், சில கவிதைகள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன.

இன்குலாப் கவிதைகள் எத்தகைய சூழலில் பிறப்பெடுக்கின்றன என்னும் கேள்விக்குக் கவிஞர், “பல சமயங்களில் சொல்லியாக வேண்டும் என்ற உணர்வுகள் அழுந்த நான் எழுதுகின்றேன். அண்மைக் காலங்களில்தான் சஞ்சிகைகளின் கோரிக்கைகள் அடிப்படையிலும் எழுதத் தொடங்கியுள்ளேன். ஆனால் முன்னர் அவ்வாறில்லை.

மேலும், பல சந்தர்ப்பங்களில் எமது தோழர்கள் நடத்தக் கூடிய கவியரங்குகளுக்காகவும் எழுத நேர்ந்தது. ஆக எனது கவிதைகள் மூன்று வகைப்பட்டவை எனக் கூறலாம்” என்கிறார். தன் விருப்பம், கவியரங்கக் கவிதைகள் மற்றும் இதழ்களுக்காய் எழுதியது என்று தன் கவிதைகளுக்குரிய சூழலைத் தெளிவுபடுத்துகிறார்.

நிகழ்ந்த ஒரு சூழலின் பின்னணியில் உருவான, ‘கண்மணி ராஜம்’ கவிதை ஒடுக்கப்பட்ட மக்களின் பாதிப்பினை அம்பலமாக்கிக் கண்டனமும் செய்த கவிதையாகும். இக்கவிதை மிகுந்த வரவேற்பிற்கும், விவாதத்திற்கும் உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா ஆரம்பக் காலக் கவிஞர்களும் தங்கள் கவிதைக்கான உந்துதலைத் திரைப்படப் பாடல் மெட்டுகளிலும், நாட்டுப்புறப் பாடல்களின் ஈடுபாட்டிலும் பெறுவார்கள். அதைப் போன்று கவிஞர் இன்குலாப் தன்னுடைய கவிதை இலக்கியத்தின் பிரவேசம் முதலில் பாடல்களாக அரும்பிப் பின்னர், புதுக்கவிதையாகப் பரிணமித்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னுடைய கல்லூரிப் படிப்பின் போது, அறிமுகமான மீரா - இராசேந்திரன்(வகுப்பாசிரியர்), பிரேம்சந்திரன் (ஆங்கிலப் பேராசிரியர்) சுப்பையா என நீளும் ஆசிரியர்களின் மூலமாகத் தமிழுணர்வும், இயக்கச் சிந்தனையும் கொண்டவராகத் தன்னை மெருகேற்றிக் கொண்டதை நினைவு கூர்கிறார்.

தொடக்கக் காலத்தில் தி.மு.க.வின் ஆதரவாளராக இருந்தவர் கவிஞர் இன்குலாப். 1968இல் நடந்த வெண்மணிச் சம்பவம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதைப் பதிவு செய்துள்ளார். அந்நிகழ்வைக் குறிப்பிடுகையில், “உழைக்கின்ற தொழிலாளி வகுப்பினர் மீது, உழவுத் தொழிலாளியினர் மீது தொடுக்கப்பட்ட கோரமான, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்” (ப.44) என்று கூறியிருக்கிறார்.

அதன் பின்னர் 69களில் நக்சல்பாரி இயக்கங்களுடன் கொண்டிருந்த தொடர்பு பொதுவுடைமை இலக்கியங்களை ஆர்வமுடன் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது. சோஷலிசமும், கம்யூனிசமும் பேசியவர்களின் பேச்சில் ஈர்க்கப்பட்டு அவர்களோடு தொடர்பு கொண்டார். புரட்சிகர அமைப்பில் இணைத்துக் கொண்டு, இலக்கியப் பணிகள் ஆற்றியவண்ணம், இன்னும் சொல்லப்போனால் தலைமறைவு வாழ்க்கையையும் கொஞ்ச காலம் வாழ்ந்தவர்.

அவசர கால நிலை 1975இல் பிறப்பிக்கப்பட்டபோது, ‘மனிதன்’ இதழில் வெளிவந்த பல்வேறு கவிதைகளும் அதற்காக அன்றைய நாளில் காவல்துறை தேடியலைந்ததும் தனிக்கதையாக இந்நேர்காணல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

தற்காலத்தில் தலித் இலக்கியங்கள், பெண்ணிய மொழி ஆகியனவற்றின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படுகிறது. இது குறித்து வினா முன்வைக்கப்படுகையில், மொழி என்பது சிந்தனையை வெளிப்படுத்தும் முறை. சிந்தனை விடுதலையை அவாவி நிற்கையில் மொழியின் மீது விதிக்கப்பட்டுள்ள மரபு ரீதியான கட்டுப்பாடுகளை மீறுதல் தவிர்க்க முடியாது. இதைக் காண்பவர்கள் அதிர்ச்சியடைகின்றனர்.

மொழி என்பது உயர் மக்களுடைய பண்பாட்டுத் தளத்தில்தான் இயங்கி வருகின்றது. ஆகவே, அத்தகைய பண்பாட்டுத் தளத்தை நாடாமல், தனித்த தொரு விடுதலையை நோக்கிய நகர்வாக தலித், பெண்ணிம் சார்ந்த இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. மதம், சாதி, அரசியல் முதலானவற்றின் அதிகாரம் குறித்துக் கேள்வி எழுப்புகையில் தெரியக்கூடிய நியாயம், அந்த நியாயங்களுக்குத் தடையாக அதிகாரம் நிற்கையில் அதை உடைத்துவிட்டுத் தாண்டிச் செல்ல வேண்டும் என்னும் நினைப்பே தன் கவிதையில் பாடுபொருளாக இருப்பதை உணர்த்துகிறார்.

கவிதைகள் மட்டுமின்றி, சிறுகதை, கட்டுரை, நாடகம் எனப் பல்வேறு தளங்களில் இயங்கிய இன்குலாபின் நாடகங்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நீண்ட நெடிய போராட்ட வரலாறே ஆகும். இது குறித்த நேர்காணலில்,

“வரலாற்றை ஒரு திறனாய்வு அடிப்படையில் பொற்கால மாயைக்கு இடம் கொடுக்காத வகையில், மன்னனுக்குரிய புகழ்பாடாமை, அதே சமயம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலை மீண்டும் ஒலிக்கச் செய்வதன் மூலமாக - கடந்த காலத்துல அவங்களுக்கு ஒரு புரட்சிகர பாத்திரம் இருந்ததுங்கிறத சொல்லணும்னு நெனைக்கிறேன்.

அதனுடைய விளைவுதான் - அவ்வை” என்று நாடகப் பனுவல் தொடர்பாகக் குறிப்பிடுகிறார். பரத்தமைக்கு எதிரான மணிமேகலையும், புலம்பெயர்ந்த மக்களுக்குரியதான குறிஞ்சிப்பாட்டும் குறிப்பிடத்தக்கவை.

போராட்டத்தையும் அழகியலையும் இணைக்கும் முயற்சி குறித்துக் கவிஞரின் நேர்காணலொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘அழகியல் என்பது ஓர் உயிர் இயல்பு. நான் இயற்கையைப் பார்க்கிறேன். என் படைப் புகளில் அதைக் கொண்டு வர முயற்சிக்கிறேன்’ என்று கூறும் கவிஞர் இன்குலாப் போராட்டத்தைப் பற்றி எழுதுவதும், அழகியல் மறுக்கப்பட்ட நிலையில் வெவ் வேறு விதங்களில் அதனை மீட்டெடுப்பதற்கான கோரிக்கைதான் என்பார். (பக்.125)

போராட்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த ஓர் அனுபவமிக்க கவிஞரின் வாழ்வியலைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இந்நூல் அமைகிறது-. தமிழ்த் தேசியப் போராட்டத்தின், குறிப்பாக, ஈழப்போராட் டத்தின் பல்வேறு காலங்களில், நிகழ்ந்த துயரங்கள், துரோகங்கள் இவற்றையும் சில நேர்காணல்கள் பதிவு செய்துள்ளன.

தமிழ் அலை இசாக்கின் முயற்சியினால் ஒரு வரலாற்று ஆவணமாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் பதினான்கு நேர்காணல்கள், அவற்றின் உள்ளடக்கத்தை ஒட்டிய தலைப்புகளில் அமைக்கப் பட்டுள்ளன.

ஓவியர் மணிவர்மாவின் தூரிகை கவிஞர் இன்குலாபின் பல்வேறு வகைப்பட்ட முகபாவங்களை நேர்த்தியாக வரைந்து அழகு சேர்த்துள்ளது.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் குறிப்பிடுவது போல, ‘பரிசுகளின் விருதுகளின் உறவைவிடப் புண்களோடும், போராட்டங்களோடும் நெருக்கமானவை அவர் கவிதைகள்’.

மானுடக் குரல் - இன்குலாப் நேர்காணல்கள்

வெளியீடு : தமிழ் அலை

80/ 24பி, பார்த்தசாரதி பேட்டைத் தெரு,

தேனாம்பேட்டை, சென்னை.

தொலைபேசி : 044 -- 2434 0200

விலை : ரூ.170/-

Pin It