1951இல் நேரு இந்தியத் திட்டக் குழுவை வடிவமைத்தார். ஏனென்றால் நேரு 1930இல் சோவியத் யூனியனுக்குப் பயணம் செய்தபோது, அங்கு 5 ஆண்டுத் திட்டங்கள் பெருமளவில் வெற்றி பெறுவதைக் கண்டார். அன்று உலகமே சோவியத் பெற்ற பொருளாதார வளர்ச்சியைக் கண்டு வியந்தது. எனவே, விடுதலை பெற்ற இந்தியாவிலும், பின்தங்கிய பொருளாதார நிலையை மாற்றி, சிறந்த வளர்ச்சியை அடைவதற்கு ஒரு திட்டக்குழு தேவையென்று உறுதியாக நடவடிக்கை எடுத்தார்.

நேரு காலத்தில் திட்டக்குழு மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. இந்தியாவில் முதல் 2 ஐந்தாண்டுத் திட்டங்கள், தொழில் மற்றும் வேளாண் வளர்சியை உறுதிப்படுத்தின. 1964இல் நேரு மறைந்த பிறகு, திட்டக்குழுவின் செயல்பாடுகள் மெல்ல மங்கத் தொடங்கின. நேரு காலத்தில் விரைந்து ஓடிய திட்டக்குழு, இந்திரா காந்தி காலத்தில் வேகமாக நடக்கத் தொடங்கியது. ராஜீவ்காந்தி காலத்தில் மெல்ல நடக்கத் தொடங்கியது.

நரசிம்மராவ் காலத்தில் திட்டக்குழு தூங்க ஆரம்பித்தது. எதற்காகத் திட்டக்குழு அமைக்கப்பட்டதோ, அதனுடைய இலக்குகள் திசை மாறின. தனியார் துறைக்கு முன்னுரிமை அளிக்கும் உலகமயமாதல் கொள்கை ஏற்கப்பட்ட பிறகு, லட்சியங்களும் மாறின, இலக்குகளும் மாறின. தனியார் வணிகக் குழுமங்களின் தரகர் போல திட்டக்குழு செயல்படத் தொடங்கியது.

திட்டக்குழுவை மாற்றி அமைக்கப்போகிறேன் என்று மோடி அறிவித்தபோது, நல்லது நடக்கும் என்று நாடே எதிர்பார்த்தது. மாநிலங்களுடைய உரிமைகளையும் மதித்துப் போற்றுவார் என்றே மாநிலக் கட்சிகளும், மக்களும் எதிர்பார்த்தனர். தற்போது, முதலுக்கே மோசம் வந்துவிட்டது. மாற்றியமைக்கப்பட்ட திட்டக்குழு, பழைய திட்டக்குழுவைக் காட்டிலும், எல்லா வகையிலும், நடுவண் அரசின் அதிகாரக் குவிப்பு மையமாகவே மாறிவிட்டது.

பிரதமர் நரேந்திரமோடி நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில், விரைந்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க பல முன்னோடியான திட்டங்கள் தீட்டப்படும் என்று அறிவித்தார். ஆனால், திட்டக்குழுவை மாற்றி, அவர் இன்று அறிவித்திருக்கிற, ‘நிதி ஆயோக்’ முழுமையாக அந்த நம்பிக்கையைச் சிதைத்து விட்டது. ஏற்கனவே இருந்த திட்டக்குழுவில் நிறைய பல்துறைசார்ந்த வல்லுனர்கள் இருந்தார்கள்.

இன்றைக்கோ, தனியார் துறைக்கு வாதிடும் பொருளாதார வல்லுனர்களை இடம் பெறச் செய்து, தனது அமைச்ரவையில் இருப்பவர்களையும் உறுப்பினர் ஆக்கியுள்ளார். எனவே இந்த நிதி ஆயோக் குழுவை, நடுவிண் அரசின் சிறு அமைச்சரவையைப் போன்று உருவாக்கி இருக்கிறார்கள். வல்லுனர்கள் வாய்திறந்து பேச மாட்டார்கள். அமைச்சர்கள் கூறுவதற்கு ஆமாம் போடுவார்கள். இதுதான் இன்றைய நிதி ஆயோக்கின் முதல் வடிவமாகத் தெரிகிறது. மோடி காட்டும், இந்துத்துவ வித்தைகளில் இதுவும் ஒன்றாக இருக்குமோ?

தொகுப்பு: இரா.உமா

Pin It