(அதிகாலை நேரம். கதவு தட்டப்படும் ஓசை. தூக்கக் கலக்கத்துடன் எழுந்துபோய், சுவாமிநாதன் கதவைத் திறக்கிறார். வாசலில் அ.தி.மு.க. கரை வேட்டியோடு மூன்று பேர் நின்று கொண்டிருக்கிறார்கள்)

sreerangam temple 350சுவாமிநாதன்: யாரு நீங்க?

வந்தவர்கள் : கதவத் திறங்க உள்ள வந்து சொல்றோம். (கதவு திறக்கப்பட்டு மூவரும் உள்ளே வருகிறார்கள்)

வந்தவர்கள் : நாங்க அ.தி.மு.க. கட்சியிலிருந்து, இடைத்தேர்தல் விசயமா உங்களப் பாக்க வந்திருக்கோம். இந்த வீட்டுல மூணு ஓட்டுதானுங்களே?

சுவாமிநாதன் : ஆமா, நானு, என் பையன், மருமக

வந்தவர்கள் : எல்லாரும் இங்கதான் இருக்கீங்களா?

சுவாமிநாதன் : நான் மட்டுந்தான் இருக்கேன். அவங்க ரெண்டு பேரும் வெளியூர்ல இருக்காங்க.

வந்தவர்கள் : தேர்தல் அன்னிக்கு ஓட்டுப்போட வந்துருவாங்களா?

சுவாமிநாதன்: உறுதியாச் சொல்ல முடியாது, வந்தாலும் வரலாம்.

வந்தவர்கள் : அடடே, அப்படிச் சொல்லக் கூடாது. கண்டிப்பா வரச்சொல்லுங்க. வந்துபோற செலவ எல்லாம் நாங்க பாத்துக்குறோம். அப்புறம், இந்தக் கவர்ல, 6000 ரூவா இருக்கு. வச்சிக்கங்க. மறக்காம ரெட்டை எலயில ஓட்டு போட்டுருங்க. வந்து போற செலவு தனி, இதுல சேராது.

சுவாமிநாதன் : அய்யய்யோ பணமெல்லாம் வேண்டாங்க.

வந்தவர்கள் : ஒன்னும் தப்பா நெனச்சிக்காதீங்க. காலங்காத்தால வீட்டுக்கு வந்த லட்சுமிய வேண்டான்னு சொல்லாதீங்க. அப்புறம், இந்த வேட்டியவும் நீங்க வாங்கிக்கனும். (விலை உயர்ந்த புத்தம் புது வேட்டி. சுவாமிநாதன் திகைத்துப் போய்ப் பார்க்கிறார்)

சுவாமிநாதன் : நான் ஒரு பெரிய நிறுவனத்துல வேல செஞ்சி ஓய்வு பெற்றவன். இப்படி ஓட்டுக்காகப் பணம், வேட்டியெல்லாம் வாங்கிக்கிறது கொஞ்சம் கூட நல்லாருக்காது. இதையெல்லாம் யாராவது, ஏழை பாளைங்களுக்குக் கொண்டுபோய்க் குடுங்க.

வந்தவர்கள் : இது எங்களுக்கு மேலிடத்து உத்தரவு. இதையெல்லாம் குடுக்காமப் போனா எங்க நெலம ஆபத்தாயிடும். ஏழை பாளைங்களுக்கு, யாருக்கு வேணுன்னாலும் நீங்களே உங்க கையால குடுங்க. நாங்க திருப்பி எடுத்துக்கிட்டுப் போக முடியாது.

சுவாமிநாதன் : சொன்னா கேளுங்க. வேண்டாங்க.

வந்தவர்கள் : நாங்க சொல்றத நீங்க கேளுங்க. எங்கள பகைச்சிக்காதீங்க...அவ்வளவுதான். வர்றோம். (வாசல் வரை சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்து)

வந்தவர்கள் : அவுங்க வந்துபோற செலவு, எவ்வளவுன்னாலும் குடுத்துர்றோம். ஆனா, அவுங்க கண்டிப்பா வரணும்னு சொல்லிடுங்க. போயிட்டு வர்றோம்.

(13.02.2015ஆம் நாள், சிறீரங்கத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலை ஒட்டி, அத்தொகுதி வாக்காளர்கள் பல்லாயிரக்கணக்கானோரின் அனுபவம் இதுதான் என்று பலரும் கூறுகின்றனர். உண்மைதானா?)

Pin It