“சமூக ஒழுக்க நெறிக்கு வித்திடும் மதம் மற்றொரு பரிசோதனைக்கும் ஆட்பட வேண்டும். மதம் வெறும் ஒழுக்க நெறிகளைக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதன் ஒழுக்க நெறிகள் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இம்மூன்று அடிப்படைக் கொள்கைகளை சமூக வாழ்வின் கோட்பாடாகக் கொண்டிருக்கவில்லை எனில், அம் மதம் அழிந்துவிடும்” என்றார் டாக்டர் அம்பேத்கர்.

ஆனால், இந்தியாவில் இதற்கு நேர் எதிராக நடந்திருக்கிறது. படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின் மையை தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் (இந்து) மதம் பல்கிப் பரவியுள்ளது. ஆனால் சமத்துவத்தை உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் பவுத்தம் அது தோன்றிய மண்ணிலேயே அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது.

பவுத்தத்தை ஏற்றுப் போற்றும் மக்கள் இன்றளவும் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுகின்றனர். இத்தகைய முரண்பாடுகளைக் கண்டறிய தீவிரமாகத் தேட விழைந்ததன் விளைவுதான் ‘பவுத்தம்: ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்’ என்ற தலைப்பில் எழில். இளங் கோவனால் சிறப்பான முறையில் நூலாக்கம் பெற்றிருக்கிறது.

மதங்களுக்கு உலகளவில் அளிக்கப்பட்டுள்ள வரையறைகளின் அடிப்படையில், ‘இந்து’ என்பது மதமே அன்று என்று நிறுவியிருக்கிறார் அம்பேத்கர். மதத்திற்கு அவர் அளிக்கும் வரையறை முதன்மையானது. “மதம் முதலில் அறிவியல் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்...

மதம் இயங்க வேண்டும் எனில், அது பகுத்தறிவோடு இருக்க வேண்டும்.” ஆக, மதத்திற்கு அம்பேத்கர் அளிக்கும் விளக்கம் நம் பொதுப்புத்தியில் புழங்கும் புரிதலுக்கு முற்றிலும் எதிரானது. ஒரு பகுத்தறிவு நெறியாகத்தான் அம்பேத்கர் பவுத்தத்தை முன்மொழிந்து, அதை லட்சக்கணக்கான மக்களுடன் ஏற்கவும் செய்தார்.

இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் நிறுவனமயமாக்கப் பட்ட பவுத்தம் புத்தரைக் கடவுளாக்கியுள்ளது. இதை அம்பேத்கர் முற்றாக நிராகரித்தார். அவர் மட்டுமே புத்தரை மனிதருக்கும் மனிதருக்கும் பிறந்த மனிதர் என்றார். ஆனால், அம்பேத்கர் இறுதியில் ஒரு மதத்தைத் தழுவிவிட்டதாகக் கூறி மார்க்சிஸ்டுகளும், பகுத்தறிவா ளர்களும் கூட அம்பேத்கரிய பவுத்தத்தை ஏற்பதில் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், பெரியார் அம்பேத்கருக்குத் துணை நின்றார் என்பது வரலாற்று உண்மை!

ஆரியத்தை வேரோடு சாய்க்க பவுத்தக் கொள்கை மட்டுமே சிறந்த ஆயுதமாக இருக்க முடியும் என தனது 144 பக்க நூலில் ஆசிரியர் ஆதாரங்களுடன் முன்னிறுத்து கிறார். அணைத்து அழிப்பதுதான் ஆரியம். அது பவுத்தத் திற்குள் ஊடுறுவி அதன் கொள்கைகளைத் திரித்து, சமத்துவத்தை அழித்து, புத்தரை விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாகவும் மாற்றிவிட்டது. இதைத்தான் ஆரிய - திராவிடப் போர் என்கிறார். இப்போர் இன்றுவரை தொடர்ந்தாலும் திராவிட இயக்கமோ, தலித் இயக்கமோ கூட - பவுத்தத்தை முன்வைத்து - இப்போரை நிகழ்த்த வில்லை என்பது வரலாற்றில் மாபெரும் பிழை என்றே சொல்ல முடியும். இந்நூலை முன்னிறுத்தி இதற்கான காரணத்தையும் நாம் கண்டறிய வேண்டிய தேவை இருக்கிறது.

புத்தர் காலத்தில் இருந்த நான்கு வர்ணங்கள் பற்றி ஆசிரியர் விரிவாக ஆய்வு- செய்துள்ளார். ஆனால், நால் வர்ணத்திற்கு வெளியில் தள்ளப்பட்ட ‘அவர்ணர்’கள் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. மாறாக, “சூத்திரர்கள் தாழ்த்தப்பட்டார்கள். தீண்டாமைக்கு உள்ளாக்கப் பட்டார்கள். ஒதுக்கப்பட்டார்கள். ஒடுக்கப்பட்டார்கள்” (பக்:97) என்கிறார். இன்று அருந்ததியர், பறையர் என்று அறியப்படும் தீண்டத்த காதவர்கள் அன்று ‘அவர்ணர்’களாக இருந்தவர்கள். அதாவது, வர்ணாசிரமத்தை முற்றாக ஏற்க மறுத்தவர்கள்.

ஆனால், சூத்திரர்கள் நான்கு வர்ண அமைப்பில் அங்கம் வகிக்கின்றனர். ‘விபச்சாரி மக்கள்’ என்று இழிவுபடுத்தப் பட்டாலும் வர்ணாசிரமத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. அந்த அமைப்பின் காலாட்படையினராகத்தான் செயல்பட்டனர். மேலும் சூத்திரர்கள் தீண்டாமைக்கு உள்ளாக்கப்படவில்லை. இன்றுவரை இந்து என்று அழைக்கப்படும் மதத்தின் தீவிர அடிமைகளாக இருந்து கொண்டு, இம்மதத்தில் அங்கம் வகிக்காத சேரி மக்கள் மீது தீண்டாமையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர்.

ஆனால், ‘அவர்ணர்’கள் நால்வர்ணக் கோட்பாட்டைக் கடுமையாக எதிர்த்ததால்தான் தீண்டத்தகாதவர்கள் என ஊருக்கு வெளியே தள்ளப்பட்டு இன்றளவும் சேரிகளில் வாழ்கின்றனர். தங்கள் மீது திணிக்கப்படும் அத்துனை வன்கொடுமைகளையும் சுமந்து கொண்டு சாதிய சமூகத்தை ஜனநாயகப்படுத்த, சாதியை அழித்தொழிக்க, சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்ற மனிதப் பண்பாட்டை நிலைநிறுத்தப் போராடுகின்றனர். வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்தும் பவுத்த தம்மத்தை முன்வைத்தும் போராடுவதால் தான் இவர்கள் (இந்து) சமூக வெறுப்புக்கு ((social ostracisation) ஆளாக நேரிடுகிறது. ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையில் நடைபெறும் போரில் இன்று ‘அவர்ணர்’களாக உள்ள (ஆதி) திராவிடர்கள் மட்டுமே பவுத்த மறுமலர்ச்சி குறித்து விவாதிக்கின்றனர்.

‘புத்தர் ஒரு சூத்திரர்’ என்பதை நூலாசிரியர் நிறுவியி ருக்கிறார்.

இந்நூலின் 13ஆவது அதிகாரத்தில் (‘புத்தர் காலத்தில் சாதி’), “சதுர்வர்ணம் என்றால் மனித இனத்தை நான்கு வர்ணங்களாகப் பிரிவுபடுத்தி வைக்கும் அமைப்பு முறை. அதன்படி பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்ற அமைப்பு முறை சதுர்வர்ணம் ஆயின. இந்த வர்ண அமைப்பு முறைக்கு அடிப்படையாகச் சொல்லப்பட்டவை தொழிலும் தகுதியும்” (பக்:94) என குறிப்பிடப்பட்டுள்ளது. சதுர்வர்ணத் திற்கும் சரி, சாதிக்கும் சரி பிறப்புதான் முதன்மையான அடிப் படைக் கூறு.

இந்நூலின் மிகவும் உயிர்ப்புள்ள பகுதி மக்கள் சந்திக்கும் துன்பம் பற்றியது. அதை நூலாசிரியர் மிகவும் அழகாக விளக்குகிறார்(பக்: 54) : “ இங்கே துன்பம் என்று புத்தர் எதைச் சொன்னார் என்பது முக்கியமான கேள்வி. மக்களிடம் துன்பம் இருக்கிறது - இது புத்தர் சொன்னது. இப்பொழுது துன்பம் என்ற சொல்லை மட்டும் எடுத்துவிட்டு, அந்த இடத்தில் வர்ணம் என்ற சொல்லைப் போடுவோம். மக்களிடம் வர்ணம் இருக்கிறது. வர்ணம் என்ற சொல்லை எடுத்துவிட்டு சாதி என்ற சொல்லைப் போடுவோம். மக்களிடம் சாதி இருக்கிறது. சாதி என்ற சொல்லை எடுத்துவிட்டு வர்க்கம் என்ற சொல்லைப் போடுவோம்.

மக்களிடம் வர்க்கம் இருக்கிறது-. வர்க்கம் என்ற சொல்லை எடுத்துவிட்டுச் சுரண்டல் என்ற சொல்லைப் போடுவோம். மக்களிடம் சுரண்டல் இருக்கிறது. சுரண்டல் என்ற சொல்லை எடுத்துவிட்டு மதம் என்ற சொல்லைப் போடுவோம். மக்களிடம் மதம் இருக்கிறது. துன்பம் என்ற ஒரு சொல்லுக்குள் எத்தனை பொருள்கள் பொதிந்துள்ளன என்பதை புத்தரின் பார்வையில் பார்த்தால் மட்டுமே அறிய முடியும்... அதனால்தான் வர்ணம் மக்களின் துன்பம் என்றார் புத்தர்.” அதேபோல ‘பஞ்சசீலம்’ என்ற மூன்று அதிகாரங்களில் இடம்பெற்றுள்ள பஞ்சசீலம் குறித்த ஆசிரியரின் விளக்கங்கள் அம்பேத்கரிய பார்வையில் அமைந்திருப்பது மிக மிக அருமை.

“ஒரு பவுத்தனின் கடமை ஒரு நல்ல பவுத்தராக இருப்பது அல்ல என்பதை உணர வேண்டும். ஒரு நல்ல பவுத்தனின் கடமை அதைப் பரப்புவதே. பவுத்தத்தைப் பரப்புவது என்பது மனித இனத்திற்குத் தொண்டாற்றுவதே என்பதை உணர வேண்டும்” என்றார் அம்பேத்கர். அந்த வகையில் மனித இனத்திற்குத் தொண்டாற்றுவதை - பவுத்தத்தைப் பரப்புவதை எழில். இளங்கோவன் இடையறாது செய்ய வேண்டும்.

Pin It