sangeetha 280கடந்த பத்தாண்டுகால மத்திய காங்கிரஸ் ஆட்சியின் வரலாற்றில், அமெரிக்கா மீது இந்த அளவுக்குக் கோபப்பட்டதோ, ஆத்திரப்பட்டதோ, கடுமை காட்டியதோ கிடையாது. துணைத் தூதர் தேவயானி கைது செய்யப்பட்ட நிகழ்வில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசும், எதிர்க்கட்சியான, பா.ஜ.க.,வும் ஒரே குரலில் அமெரிக் காவை எதிர்ப்பதற்குப் பல்வேறு கோணங்களில், பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பெரும்பான் மையோர் சொல்வது போல், நாடாளு மன்றத் தேர்தல் நெருங்குவது ஒரு முக்கிய காரணமாகப் படுகிறது.

குழந்தைகள் முன்பாக, பெற்றோர் களைக் கைவிலங்கிட்டுக் கைது செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகள் அமெரிக்காவில் மேற்கொள்ளப் படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் ஒரு நாட்டின் துணைத் தூதரை அமெரிக்கா நடத்திய விதம் சற்று அதிகப்படியானது தான். மனித உரிமை மீறல் என்பது அமெரிக்காவிற்கு ஒன்றும் புதியதில்லை - பிற நாடுகளில். எனவே அமெரிக்காவின் நாட்டாமைத் தனத்தை ஒருநாளும் நியாயப்படுத்த முடியாது.

தேவயானி, சங்கீதாவை வீட்டு வேலைக்காக அமெரிக்கா அழைத்துச் சென்றிருக்கிறார். சங்கீதாவுக்குக் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட மாத ஊதியம் 90,000 ரூபாய். வாரத்தில் 40 மணி நேரம் வேலை நேரம். ஆனால், அதற்கு மாறாக 80 மணிநேரம் நேரம் சங்கீதாவை வேலை வாங்கியிருக்கிறார் தேவயானி. கொடுத்த ஊதியமோ, 30,000க்கும் குறைவு. இதற்காகத்தான் அமெரிக்க அரசு அவர் மீது வழக்குத் தொடுத்திருக்கிறது.

ஆனால் தேவயானிக்காகக் குரல் கொடுப்பவர்கள், ஏன் சங்கீதாவுக்காகப் பேசவில்லை? தேவயானி தலித் பெண் என்கிறது பா.ஜ.க., சங்கீதாவும் தலித் பெண்தானே? உண்மைதான், ஆனால் தேவயானி - இந்து தலித், சங்கீதா - தலித் கிறிஸ்தவர்! தேவயானியின் தந்தை முன்னால் ஐ.ஏ.எஸ். அதிகாரி, சங்கீதாவுடையது ஏழைக்குடும்பம்.

சங்கீதா, அமெரிக்காவிலுள்ள, குடியேறியவர்களுக்கான சட்ட உதவி மையத்தை அணுகிய பிறகு, அமெரிக்காவிலுள்ள வீட்டுவேலை செய்வோர் அமைப்பு சங்கீதாவுக்காகப் போராட்டத்தில் இறங்கிய பிறகு - சங்கீதா - சி.ஐ.ஏ.வின் உளவாளி என்றும், அதிகப் பணம் கேட்டு மிரட்டினார் என்றும் ‘திடுக்கிடும்’ செய்திகளை வெளியிடுகின்றனர். உடனடியாக, இந்தியாவிலுள்ள சங்கீதாவின் கணவர் பிலிப் மற்றும் இரண்டு குழந்தைகளும் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றனர். தில்லி நீதிமன்றம், சங்கீதாவுக்கு எதிராகக் கைது ஆணையைப் பிறப்பிக்கிறது.

இரண்டு பேரும் இந்தியப் பெண்கள்தான். ஆனால் தேவயானிக்கு, ஐ.நா.வுக்கான நிரந்தர சிறப்புப்பிரதிநிதி என்னும் பதவி உயர்வு வழங்கப்பட்டு, அவருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப் படுகிறது. சங்கீதா இந்தியா வந்தால், சிறை காத்திருக்கிறது. எல்லாம் அரசியல் படுத்தும்பாடு!

Pin It