Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

கருஞ்சட்டைத் தமிழர்

brahmins 350அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள இந்துத்துவம் எதிர்பார்த்ததுபோல கல்வித் துறைக்குள் ஊடுருவுவதிலிருந்து தன் வேலையைத் தொடங்கியுள்ளது. அவர்கள் எதையும்   சிந்தித்துச் செயல்படுபவர்கள். ஆட்சி அதிகாரத்தை அவர்கள் இரு வழிகளில் பயன்படுத்துவர்.

1. உடனடிப் பயன் விளைவிக்கக் கூடிய பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள். இதன் மூலம் பின்னாளில் நாட்டுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள் .

2. தொலை நோக்கில் என்றென்றும் தமக்குப் பயனளிக்கத் தக்க வகையில்,  கிடைத்திருக்கும் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திப் பெரும்பான்மைச் சமூகத்தை இந்துத்துவக் கருத்தியலுக்கு ஆட்படுத்துவர்.

ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதும் இந்தத் தொலை நோக்குப் பணிகளை, சொந்த பலத்தில் நின்றும், மேலை நாடுகளில் பணி செய்யும் உயர்சாதி இந்துத்துவ சக்திகளின் துணை கொண்டும், சற்றே அடக்கி, ஆனால் உறுதியுடன் தொடர்வர்.

இந்தியாவெங்கும் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை அவர்கள் செயல்படுத்துவது குறிப்பிடத் தக்கது. போன்ஸாலே இராணுவப் பள்ளி மூலம் பயிற்சி அளித்து இராணுவத்திற்குள் ஊடுருவுவது, இந்தியாவெங்கிலும் உள்ள பழங்குடி மக்களை இலக்காக்கிச் செயல்படுவது..... என அவர்களின் வேலைகள் ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் தொடரும்.

ஹிட்லர், முசோலினி முதலானோரின் 'பலில்லா', 'அவான்கார்டி' முதலான நிறுவனங்களை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படும் இந்துத்துவ அமைப்புகள் கல்வித்துறையை அவர்களின் முக்கிய ஆயுதங்களில் ஒன்றாகப் பயன்படுத்துவர். 1950இல் உருவாக்கப்பட்ட இந்துமகா சபையின் "குறிக்கோள்களில்" ஒன்று, "இந்து ராஷ்டிரத்திற்குப் பொருத்தமான கல்வித் திட்டத்தை உருவாக்குவதற்கான கல்வி வாரியம்" ஒன்றை அமைப்பது.

இந்தக் கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சம் வைதீக மதிப்பீடுகளைப் புத்துருவாக்குவது. வேத மொழியாகிய சமஸ்கிருதத்துக்கு உயிரூட்டி அதன் மூலம் இந்துக்களை ஒருங்கிணைப்பது. அவர்களைப் பொருத்த மட்டில் "இந்திய ஒருமைப்பாடு" என்பது இந்துக்களை இணைப்பதுதான். அதுவும் கூட உயர்சாதி மதிப்பீடுகளைக் (வைதீக மதிப்பீடுகள் என்பன வேறென்ன) கொண்டு அதன் கீழ் அடித்தள இந்துக்களை இணைப்பதுதான். இது எத்தனை காரிய சாத்தியமற்ற அபத்தம் என்பதை இறுதியில் பார்ப்போம்.

இந்துக்கள் என்போர் தம்மளவில் ஒரு 'தேசமாகவும்' ((Nation), 'ஜாதி' ((race) ஆகவும் மட்டுமின்றி ஒரு பொதுவான 'சமஸ்கிருதி' ((sanskriti) பண்பாட்டிற்கும் உரியவர்கள் என்றார் சாவர்கர். இந்தப் பண்பாடு சமஸ்கிருத மொழி  மூலமாகவே காப்பாற்றப்படுகிறது, "இந்து இனத்தின் தாய் மொழி சமஸ்கிருதம்தான்" என்றார். இந்தியப் பண்பாடு என நாம் எதைச் சொல்கிறோமோ அவை அனைத்தும் சமஸ்கிருதத்திலேயே பொதிந்துள்ளது என்றார் பாரதீய ஜன சங் கட்சியைத் தோற்றுவித்த ஷ்யாமா பிரசாத் முகர்ஜி. "சமஸ்கிருதம்தான் ஒரே அனைத்திந்திய மொழி, பார்ப்பனர்களே ஒரே அனைத்திந்திய சாதி, அவர்களே இந்தியப் பண்பாட்டைக் காத்து வருபவர்கள்" என்றார் அருண்ஷோரி.

சமஸ்கிருதத்தை இப்போது அவர்கள் முன்னெடுப்பதன் பின்னணி இதுவே. "இந்து இனம்" என்பதும், "இந்தியப் பண்பாடு" என்பதும் அறிவுக்குப் பொருந் தாத அபத்தங்கள். இங்கு தனித்துவம் மிக்க பல இந்தியப் 'பண்பாடுகள்'தான் உண்டு. பார்ப்பனர்கள் பொத்திப் பொத்திப் பாதுகாத்து வந்த "இந்தியப் பண்பாடு" என்பது தீண்டாமை, சாதி வேற்றுமை முதலான அடியோடு அழித் தொழிக்கப்பட வேண்டிய கொடுமைகள்தான்.

இந்த அடிப்படையிலேயே அவர்கள் சென்ற முறை ஆட்சிக்கு வந்தபோது (1998 &- 2004) சமஸ்கிருத ஆண்டு, சமஸ்கிருத வாரம் ஆகியவற்றைக் கொண்டாடினர்; 2000 பிரதிநிதிகள் பங்கேற்ற 'உலக' அளவிலான சமஸ்கிருத மாநாடொன்றை நடத்தினர்;, சமஸ்கிருத மொழி, வேதக் கல்வி, ஜோதிடம் முதலியவற்றைப் பள்ளிக் கல்வி முதல் பல்கலைக் கழகங்கள் வரை பாடத் திட்டத்தில் புகுத்த முயற்சித்தனர். "சமஸ்கிருதம் பேசும் இயக்கம்" ((Speack Sanskrit Movement), தொலைக்காட்சிகள் மூலம் சமஸ்கிருத பாடம் நடத்துவது என்றெல் லாம் தொடங்கினர். இவற்றை விரிக்க இங்கு இடமில்லை.

இதன் தொடர்ச்சியாகத்தான் இன்று "மொழிகளின் தாய்" எனக் கூறி CBSE பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண் டாட ஆணையிடப்பட்டுள்ளது இன்று.

இந்திய மொழிகளின் தாய் என்பதி லிருந்து அனைத்து மொழிகளின் தாய் என்கிற 'ரேஞ்சு'க்கு அவர்கள் கிளம்பியுள் ளனர். இதன் பின்னணி சுவாரசிய மானது. மத்திய ஆசிய ஆரியர்களோடு இங்கு வந்த பூர்வ சமஸ்கிருதம் அய்ரோப்பிய மொழிக் குடும்பத்திற்கு உரியது என 1786இல் வில்லியம் ஜோன்ஸ் நிறுவினார். இத்தாலி, ஃப்ரென்ச், ஜெர்மன் போன்ற மொழிகளின் சகோதர மொழி அது என்பது இன்று மொழி இயல் அடிப்படையில் உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவியல் உண்மை. அங்கும் கூட அது தய்மொழி அன்று, சகோதர மொழிதான்.

1816 மற்றும் 1856ஆம் ஆண்டுகளில் ஃப்ரான்சிஸ் எல்லிஸ் ஒயிட் மற்றும் ராபர்ட் கால்டுவெல் ஆகியோர் இந்தியத் துணைக் கண்டத்தில் பயிலப்படும் முக்கிய மொழிகள் குறைந்தது, இரு வேறு, ஒன்றுக்கொன்று தொடர்பற்ற மொழிக் குடும்பங்களைச் சார்ந்தன என நிறுவினர். தமிழ் முதலான தென்னிந்திய மொழிகள் ப்ராஹ¨ய் முதலான சிந்து வெளியை ஒட்டிய பகுதியில் பயிலப்படும் மொழி முதலியன திராவிட மொழிக் குடும்பத் தைச் சார்ந்தவை. இன்றைய சமஸ்கிருதம். இந்தி, போஜ்புரி, மைதிலி முதலானவை இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட 'இந்தோ ஆரிய' மொழிக் குடும்பத்திற்கு உரியவை என்பது இன்று நிறுவப்பட்ட உண்மை.

திராவிட மொழிகளே சமஸ்கிருதத் தைக் காட்டிலும் இந்திய மண்ணுக்கு உரியவை என்பதை இந்துத்துவவாதி களால் செரிக்க இயலவில்லை. வழக்க மான பார்ப்பன யுக்தியை அவர்கள் மேற் கொண்டனர். சமஸ்கிருதம் தோன்றிய இடமே இந்தியாதான், ஆரியர்களே இந்தியாவின் பூர்வ குடிகள், சிந்து வெளி நாகரிகமே ஆரியருடையதுதான் என்று ஒரு 'மெகா' கதையை அவிழ்த்து விட்டனர். அதற்கு அவர்கள் காட்டிய "ஆதாரங்கள்" எல்லாம் அப்பட்டமான 'ஃப்ராடு' வேலைகள் என்பதை மிஷேல் விட்செல், ஸ்டீவ் ஃபார்மர் என்கிற இரு மொழி இயல் மற்றும் இந்தியவியல் வல்லுனர்கள் அடித்து நிறுவியபின் (பார்க்க எனது 'ஆரியக் கூத்து' நூல்) இப்போது சற்று அடங்கியுள்ளனர்.  இருந்தாலும் அவ்வப் போது இப்படி நாம் அசந்த நேரங்களில் "மொழிகளின் தாய்" என்றெல்லாம் நூல் விட்டுப் பார்ப்பார்கள்.

இந்திய அரசியல் சட்டத்தைப் பொருத்த மட்டில் எட்டாவது பட்டியலில் காணப்படும் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் சமஸ்கிருதமும் ஒன்று, அவ்வளவே. தவிர செம்மொழிகளாக அறிவிக்கப்பட்ட மொழிகளில் அதுவும் ஒன்று. வேறு எந்தச் சிறப்பும் அதற்குக் கிடையாது. சொல்லப் போனால் அவற்றில் இன்று முற்றிலும் வழக் கொழிந்த மொழி இது.

சமஸ்கிருதம் ஒரு செம்மொழி, இலக்கிய வளங்கள் நிறைந்த மொழி எனச் சொல்லிக் கொள்வதில் நமக்கு மறுப் பில்லை. அதற்கு சிறப்பு நிலை கொடுக்க முயற்சிப்பது, தமிழ் உள்ளிட்ட தொன் மையும், வளமும், தனித்துவமும், இம்மண் ணுக்குக் கூடுதல் நெருக்கமும் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி என்பது, அதன் 'வளர்ச்சி'க்கு சிறப்பு நிதி ஒதுக்குவது என்பதற்கெல்லாம் அரசியல் சட்டத்தில் இடமில்லை என்பதோடு, அது தமிழ் முதலான மொழிகளை இழிவு படுத்துவதும் ஆகும். 

செம்மொழி மாநாட்டில் பேசிய மொழி இயல் வல்லுனர்கள் பலரும் தமிழைச் சிந்து வெளிப் பண்பாட்டுடன் இணைத்துப் பார்ப்பதற்கான ஆதாரங்கள் சமீப காலத்தில் அதிகரித்துள்ளதை ஏற்றுக் கொண்டனர். அந்த வகையில் சமஸ்கிருதத்தைக் காட்டிலும் தொன்மை மிக்க மொழி தமிழ் என்பது இன்று உறுதியாகிக் கொண்டுள்ளது. தவிரவும் பிராகிருதம், பாலி முதலான இதே அளவு தொன்மை மிக்க இந்தோ ஆரிய மொழிகள் மக்கள் மொழிகளாக இருந்தவை; இலக்கிய வளம் மிக்கவை; பவுத்த, சமண அளவையியல் நூற்களைத்  தன்னகத்தே ஏராளமாகக் கொண்டவை. சமஸ்கிருதத்திற்கு எந்த வகையிலும் குறையாதவை.

சடங்கு மொழியாகவும், காவிய மொழியாகவும் உருப் பெற்ற சமஸ்கிருதம் பின்னாளில் வழக்கொழிந்து போனது எனச் சொல்வதைக் காட்டிலும் அது எந்நாளுமே மக்கள் மொழியாக இருந்ததில்லை என்பதே உண்மை. கி.மு 6ஆம் நூற்றாண்டில் உருவான அவைதீக மதங்களான சமணமும் பவுத்தமும் பாலி, பிராகிருதம் முதலான மக்கள் மொழிகளையே தங்களின் ஆக்கங்களுக்குப் பயன்படுத்தின. எனினும் ஒரு அரசவை மொழியாகவும் தத்துவ விவாதங்களுக்கான மொழியாகவும் சமஸ்கிருதம் தொடர்ந்த போது, கி.பி3,4ஆம் நூற் றாண்டுகளில் இந்த மதங்களின் அளவை நூல்களும் சமஸ்கிருதத்தில் எழுதப்படும் நிலை உருவாகியது. எனினும் அடுத்து உருவான அரசியல் பண்பாடு பெரிய அளவில் மக்கள் தொடர்பைப் பேண வேண்டியதாக இருந்தது.

கல்வெட்டுகள் முதலியன மக்கள் மொழி களில் ((vernacular languages) வெளியிடப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தர்க்க, அளவை விவாதங்கள் என்பன உள்ளூர் மொழிகளில் செய்யப் பட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்குரிய வகையில் வீரசோழியம் முதலிய புதிய இலக்கண நூல்களும் உருவா யின. இது போன்ற செயல் பாடுகளுக்கான ஒரு  மொழி என்கிற நிலையை சமஸ்கிருதம் இழந்தது. உள்ளூர் மொழிகள் ஓங்கும் நிலை ஏற்பட்டது. பாரதம், இராமாயணம் முதலியனவும் இனி உள்ளூர் மொழிகளில்தான் எழுதப் பட வேண்டும் என்கிற நிலை உருவானது. இலக்கிய உருவாக்கம் என்பதும் இனி அரசவை மற்றும் புலமையாளர்களின் குழுமம் என்பவற்றைத் தாண்டிச் செல்லும் நிலை இந்தியாவெங்கும் உருவானது.

சமஸ்கிருதம் செத்துப்போன கதை இதுதான்.

இனி அதை உயிர்ப்பிக்கும் முயற்சி போன்ற முட்டாள்தனம் ஏதுமில்லை. சனாதனத்தைத் திருப்பி உயிர்ப்பிக்கும் முயற்சி கேலிக் கூத்தாக முடிவதுதான் இயற்கை, அதுதான் இப்போது நடந்து கொண்டுள்ளது. அரை இந்துத்துவக் கட்சியான காங்கிரஸ் ஆட்சியிலும் எட்டாவது அட்டவணை மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்தை 'உயிர்ப்பிக்க' 1947 தொடங்கி எடுத்த முயற்சிக ளெல்லாம் நகைச்சுவையாகத்தானே முடிந்தன.  சமஸ்கிருதம் பேசும் பயிற்சி, 'ஆகாஷ்வாணி'களில் சமஸ்கிருதத்தில் செய்தி வாசித்தல், பள்ளிகளில் சமஸ் கிருதப் போட்டிகள் நடத்துதல் என்ப தெல்லாம் என்ன பயனை விளைவித்தன? புதிய சமஸ்கிருத இலக்கியங்களுக்குச் சாகித்ய அகாதமி  அளித்த பரிசுகளில் முதல் ஐந்து சமஸ்கிருதம் குறித்து ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதப்பட்ட நூல்களுக்குத்தானே கொடுக்கப்பட்டன. இது விமர்சனத்துக்கு உட்படுத்தப் பட்டவுடன் 'சித்திர காவ்யா' என்றொரு நூலுக்குப் பரிசளித்தனர். அது சுத்தானந்த பாரதியின் நூலுக்குத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் பரிசளித்ததுபோலக் கேலிக் கூத்தாகியது.

1857இல் குஜராத்திக் கவிஞர் தல்பத்ராம் தாஹ்யாபாய் இயற்றிய ஒரு கவிதையை ஷெல்டன் பொல்லாக் மேற்கோள் காட்டுவார். அது:

"போஜ மன்னன் பார்ப்பனர்களுக்கு அளித்த விருந்துகளும் பெருநிதிக் குவியங்கள் எல்லாமும் தேவ பாஷையின் சாவைக் கண்டு அதன் இறுதிச் சடங்குகளுக்காக அவன் அளித்தவை தான்...

ஆடம்பரமாக அமர்ந்திருந்த பாஜிராவ் அந்தச் சாவுச் சடங்குகளைச் செய்தான். இன்றும் கூட  வழி  வழி வரும் ஆட்சியாளர்கள் ஆண்டு தோறும் அதற்குத் திவசம் செய்யத் தவறுவதில்லை.."

மக்களின் வரிப் பணத்தில் பா.ஜ.க அரசு சமஸ்கிருதத்துக்குத் திவசம் செய்தலை நாம் அனுமதிக்கலாமா?

குறிப்பு 1. இந்தி ஆதிக்கத்தைத் தமிழர்கள் எதிர்த்தது போக இன்று வட இந்தியர்கள் எதிர்க்கத் தொடங்கி விட்டனர், மைதிலி, போஜ்புரி, பாகதி, ஹர்யான்வி, சடிஸ்கரி, சந்தாலி, பிரஜ்பாஷா இப்படியான பல மக்கள் மொழிகளை நசுக்கி உருவாக்கப்பட்ட இந்தி எனும்'ராஷ்டிர பாஷா' வுக்கு எதிராக இன்று இம்மொழியினர் தம் தனித்துவங்களுக்குக் குரல் கொடுக்கத் துவங்கிவிட்டனர்.

குறிப்பு 2. சமஸ்கிருதம் தேசிய ஒற்றுமையை வளர்க்கும் என்பதற்குத் தந்தை பெரியார் அளித்த மறுமொழி:

"தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து, பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கிவைத்துக் கொள்ள, பார்ப்பனக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது.

நமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக, சண்டாளர்களாக, நமது கிறித்துவத் தோழர்களையும், முஸ்லிம் தோழர்களையும் மிலேச்சர்களாக வைத்திருக்கச் செய்யப்படும் சூழ்ச்சிதான் இது.

‘கன்னிகாதானம்' என்பதை வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்று மாற்ற எவ்வளவு சிரமப்பட வேண்டி இருந்தது? ‘மாங்கல்ய தாரணம்' என்பதை ஒழிக்க எவ்வளவு இம்சைப்பட வேண்டி இருந்தது? மற்றும், தேவை இல்லாத சடங்குகளை, புராண இதிகாசக் குப்பைகளின் மீதும், வெறும் கற்கடவுள், செம்புக் கடவுள் இவற்றின் மீதும் இருந்த மூடநம்பிக்கையையும், மூட பக்தியையும் மாற்ற எவ்வளவு காலம் ஆகியது? இவ்வளவு முற்போக்கும் மறுபடியும் அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்களா?"

(பெரியார் ஈ.வே.ரா அவர்கள் சென்னை செயின்ட் மேரீஸ் அரங்கில், 17.7.1948 அன்று ஆற்றிய சொற்பொழிவிலிருந்து)

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

+1 #1 parani 2014-09-24 19:59
who are stay to implement tamil as official longuvage if education from 1std to mbbs. then why you raise voice to against sanscrite. nobady tamilian/thirav idan/communist having no moral right. all are bogus, fancy,commerici al. pls consider my view then raise voice as against sancrit.
Report to administrator
0 #2 parani 2014-09-24 20:02
inthiya thesiyam enbathu pithalattame athaivida periya pithalattam thiravidam enbathu. ore vithyasam munnathu parpanar pithalattam pinnathu suthirar pithalattam.
Report to administrator

Add comment


Security code
Refresh