நந்தவம்சப் பேரரசின் வீழ்ச்சியில் இருந்து மவுரியப் பேரரசு எழுச்சி பெற்றது என்பது வரலாறு.
நந்தமன்னன் தன்னை அவமானப்படுத்தி விட்டான் என்பதனால், அந்த வம்சத்தின் ஆட்சியைப் பூண்டோடு அழித்து விட்டான் சாணக்கியன் என்பது வரலாறன்று. ஒருகதை.
நந்தர்களை ஒழித்துக் கட்டுவதில் முனைப்புக் காட்டியவன் சாணக்கியன் என்பதை எப்படி மறுக்க முடியாதோ, அப்படியே அவனை இயக்கியது பார்ப்பனியம் என்பதையும் மறுக்கக்கூடாது.
யார் அந்த நந்தர்கள்?
ஒரு நாவிதருக்கும், ஒரு கணிகைப் பெண்ணுக்கும் பிறந்தவன் மகாபத்மநந்தன் என்கிறது சமண நூலாகிய பரிஸ்தவபர்வ. இவனே நந்தப் பேரரசை நிறுவியவன்.
நாவிதன் மகாநந்திக்கும், ஒரு சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்தவனே நந்தவம்சத்தை நிறுவிய மகாபத்மநந்தன் என்று புராணங்கள் சொல்கின்றன.
மகாபத்மநந்தன் “நாவீததாசன்” என்கிறது அவாங்யக சூத்ரம்.
மகாவம்சம் உள்ளிட்ட பவுத்த நூல்கள் நந்தர்களை “அனாதகுலத்தவா” என்று கூறுகின்றன.
நந்தர்களின் ஆட்சியை நிறுவியவர்; ஒரு தாழ்ந்த குலத்தவர்; என்கிறார் கர்டியஸ் என்ற கிரேக்க அறிஞர்.
மொத்தத்தில் நாவிதருக்கும், கணிகைக்கும் பிறந்தவர் மூலம் அரசும், நந்தவம்சமும் அமைவதனால் - நந்தர்கள் தாழ்ந்த குலத்தவர்கள் என்ற செய்தியை வரலாறு நமக்குத் தருகிறது.
இங்கு கவனிக்க வேண்டிய செய்தி நந்தர்கள் தாழ்ந்தவர்கள், நான்காம் வருணத்தவர்- - சூத்திரர்.
வட இந்தியாவில் முதல் முதலாக நிறுவப்பட்ட நந்தர்களின் பேரரசு ஒரு சூத்திர அரசு என்பதால், அதைப் பார்ப்பனர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதை ஒழித்துக் கட்ட சாணக்கியனை முன்னிறுத்தியது பார்ப்பனியம்.
சாணக்கியன் சந்திர குப்த மவுரியனைத் தன் கைப்பாவையாக்கினான்.
இப்பொழுது அடுத்த கேள்வி! சந்திரகுப்த மவுரியன் யார்?
சாக்கிய இனக்குழுவின் ஒரு பிரிவு மவுரியர். இந்த மவுரிய இனக்குழுவின் அடையாளம் மயில். இனக்குழுவின் அழிவில் இருந்து அரசுகள் தோற்றம் பெற்ற பின்னர், மவுரியர் என்பது இனமாக அடையாளம் பெற்றது. மவுரிய இனத்தில் வைசியர்கள் என்ற மூன்றாம் வருணம் “குப்த” என்ற பெயரால் வட இந்தியாவில் அழைக்கப்பட்டது.
சந்திரகுப்த மவுரியன் வருணாசிரம அமைப்பில் மூன்றாம் படிநிலையில் வைசியனாவான்.
சரியாகச் சொன்னால் வருண அமைப்பில் மூன்றாம் இடத்தில் உள்ள வைசிய சந்திர குப்தனை வைத்து, நான்காம் இடத்தின் சூத்திர நந்தப் பேரரசை வீழ்த்துகிறது பார்ப்பனியம், சாணக்கியன் மூலம்!
இங்கே பார்ப்பனியத்தின் இன்னொரு சதிச் செயலையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.
நந்தப் பேரரசின் இறுதி மன்னன் தனநந்தன். இவனின் ஆட்சிக்காலம் கி.மு. 329 முதல் 321 வரை எட்டுஆண்டுகள். இவனின் மூன்றாம் ஆட்சியாண்டில், அதாவது கி.மு. 326-இல் கிரேக்கப் பேரரசன் அலெக்சாண்டர் இந்தியாவிற்குள் நுழைந்து பியாஸ் நதிக்கரையில் முகாமிட்டு இருந்தான்.
இப்பொழுது கிரேக்க ஆசிரியர் புளுட்டார்க் சொல்வதைக் கேட்போம்:
“நந்த அரசன் மக்களின் ஆதரவை இழந்துவிட்டான். அவனுக்கு எதிராக மக்கள் எழுச்சி ஏற்படுகிறது. அதனால் பியாஸ் நதியைக் கடந்து நந்த அரசைத் தாக்க வேண்டும்” என்று அலெக்சாண்டரிடம் சந்திரகுப்தன் அழைப்பு விடுத்தான்’’ என்ற இந்த கிரேக்க ஆசிரியரின் எழுத்தைத் தந்தவர் ஏ.எல்.பாஷ்யம்.
அதாவது கீழ்ச்சாதியான சூத்திர நந்தர்களை ஒழிக்க அந்நியரான கிரேக்க மன்னனிடம் பணிந்து அழைப்பு விடுக்கக்கூட தயங்கவில்லை சந்திரகுப்தனும், சாணக்கியனும். இதுதான் வரலாற்றில் பார்ப்பனிய வருணாசிரமம்.
மூன்றாவதும் ஒரு செய்தி இருக்கிறது.
சந்திரகுப்தன் ஆட்சிக்காலத்தில், அலெக்சாண்டரின் ஆளுநர் செல்யுகஸ் நிகேட்டர் மீது படையெடுத்து, அவனை வென்று ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டான் சந்திரகுப்தன். இவனை இயக்கியவன் சாணக்கியன் என்கிறது இன்னொரு வரலாறு! இது முற்றிலும் தவறான செய்தி.
அலெக்சாண்டர் கி.மு. 323 ஆம் ஆண்டு பாபிலோனில் நெடிகண்ட் மாளிகையில் மரணம் அடைகிறான்.
இதை ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட செல்யுகஸ் நிகேட்டர் உடனடியாக மெசபடோமியா (இன்றைய ஈராக்) மீது படையெடுத்துச் சென்று அந்நாட்டின் மன்னனாக முடிசூடினான். அனடோலியா, சிரியா, கார்த்திரியா போன்ற பகுதிகளையும் பிடித்துத் தென்கிழக்குக் கிரேக்கத்தின் பேரரசராகத் தன் 82 வயது வரை வாழ்ந்து மறைந்தான் கிரேக்கத்தில்.
இப்படி நாட்டில் இல்லாத ஒரு மாவீரனை வென்றதாகவும், ஒப்பந்தம் போட்டதாகவும் சொல்வது வரலாற்று மோசடி.
ஒரு சூத்திர நந்த அரசை, ஒரு வைசிய சந்திரகுப்தனைக் கொண்டு வீழ்த்தியதில் பார்ப்பனிய வர்ணாசிரமம் இருக்கிறது.
அலெக்சாண்டரைப் பணிந்து நந்தர்களை வீழ்த்த அவர்களை அழைத்ததால் அங்கே பார்ப்பனியச் சதி இருக்கிறது.
செல்யூகஸ் நிகேட்டரை வென்றதாகச் சொன்னதில் பார்ப்பனியப் புரட்டு இருக்கிறது.
சந்திரகுப்தனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஒன்பது மவுரிய மன்னர்களும் பவுத்த நெறியில் அரசை நிறுவி ஆட்சி செய்தார்கள்.
பார்ப்பனியம் பதுங்கியது அங்கே!
அதைப் பார்ப்பதற்குச் சாணக்கியன் இல்லை அன்று!
சந்திரகுப்தனும் கூட பார்ப்பன விரக்தியில் சமணம் தழுவி கார்நாடக சரவணபெலகொட என்ற இடத்தில் மரணம் அடைந்தான்.
இன்று அந்த இடம் “சந்திரகிரி”.