vijayabaskar ministerகுட்கா வழக்கில், ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது குட்கா உற்பத்தி உரிமையாளர் மாதவராவ் மட்டுமில்லை. சென்னையின் முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜூம்தான். “ஊழலே நடக்கவில்லை என்று சொல்ல மாட்டேன். ஏதோ நடந்திருக்கிறது” என்பது அவர் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ள செய்தி!

தி.மு.கழகம் தொடுத்த வழக்கில், இதனை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, ஓர் அரசு ஊழியர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறார் (இது என்ன கூத்து!). இப்போது அந்த மேல் முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து சி.பி.ஐ. விசாரிக்க ஆணையிட்டுள்ளது. அதன் விளைவாக, அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோருக்குத் தொடர்புடைய 40 இடங்களில் சோதனை நடந்துள்ளது.

இத்தனைக்கும் பிறகு, அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படவில்லை என்பது மட்டுமில்லை, அவர் அமைச்சராகவே பதவியில் தொடர்கிறார்.

இந்த குட்கா ஊழலை மறைக்க அ.தி.மு.க.வின் மூன்று முதலமைச்சர்களும், இரண்டு தலைமைச் செயலாளர்களும், லஞ்ச ஊழல் தடுப்புத் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அவமானம் இங்கு நடந்தேறியது. தேதி வாரியாக லஞ்சம் பெற்ற அமைச்சர் உள்ளிட்டோர் பற்றிய விவரங்களை மறைக்க வருமானவரித் துறையே முயல்கிறதோ என்ற அய்யத்தில், விசாரணையில் இறங்கிய டி.ஜி.பி. அசோக் குமார், இரவோடு இரவாக பதவி விலக நேரிட்டது.

வருமான வரித்துறை எழுதிய கடிதத்தைக் காணாமல் ஆக்கிவிட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் இப்போது வேறு அரசு பதவியில் உள்ளார். அந்தக் கடிதம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ள கிரிஜா வைத்தியநாதன், இப்போது தமிழகத்தின் தலைமைச் செயலாளராக உள்ளார்.

யாருக்கும் வெட்கமில்லை!

Pin It