ஒரு ஜனநாயக நாட்டில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் எல்லாவற்றுக்கும் அனுமதி உண்டு. அவை அனுமதிக்கப்பட வேண்டும்.

ஆனால் ஆர் எஸ் எஸ் பேரணிக்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்புகள்? ஏன் இத்தனை வழக்குகள்? ஏன் காவல்துறையின் இத்தனை தடைகள்?

காரணம் இருக்கிறது.

எந்த ஓர் இயக்கம் அல்லது கட்சி பேரணியை நடத்தினாலும், அந்தக் கட்சி அல்லது இயக்கத்தின் முந்தைய வரலாறு என்ன என்று பார்ப்பது இயற்கையானது!rss rallyஇதற்கு முன்னால் இந்தியாவின் பல மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்கப் பரிவாரங்கள் நடத்திய பேரணிகள் எவ்வாறு இருந்திருக்கின்றன, அவற்றுள் எப்படிப்பட்ட வன்முறைகள் நடந்திருக்கின்றன என்பதைக் கணக்கில் கொண்டுதான், அந்த இயக்கம் நடத்தவிருக்கும் பேரணியை அனுமதிப்பார்கள்.

சங் பரிவாரங்கள் பெரும்பாலும் தங்களின் செயல்பாடுகளை மக்களிடையே மோதல் ஏற்படுத்துவதற்காகவே செய்திருக்கின்றனர் என்பதைக் கடந்த காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செய்திகள் உறுதிப்படுத்துகின்றன! எனவேதான் ஜனநாயக சக்திகள் இந்தப் பேரணிக்கு இவ்வளவு தடைகளை விதிக்கின்றன.

எல்லாவற்றையும் மீறி இன்றைக்கு நீதிமன்றம் 44 இடங்களில், நவம்பர் 6ஆம் தேதி பேரணி நடத்த அவர்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. கோவை, பொள்ளாச்சி. பல்லடம், நாகர்கோயில் உள்ளிட்ட ஆறு இடங்களில் மட்டுமே தடை விதித்திருக்கிறது! அங்கும் கூட இரண்டு மாதங்களுக்குப் பிறகு விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது.

ஆகையால் தமிழ்நாட்டில் 44 இடங்களில் நாளை நடக்கவிருக்கும் பேரணியில் கலவரங்கள் வரக்கூடுமோ என்று அச்சம் பலரிடமும் இருக்கிறது. நீதிமன்றத்திற்கே அந்த ஐயமும் அச்சமும் இருக்கின்ற காரணத்தால்தான், பேரணியில் ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடாது, மோதல்களை ஏற்படுத்தும் வகையில் முழக்கங்களோ பாடல்களோ இருக்கக்கூடாது என்று முன் நிபந்தனை விதித்துள்ளது. வேறு எந்தக் கட்சி ஊர்வலம் அல்லது பேரணி நடத்தும் போதும் ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடாது என்று நிபந்தனை விதிக்க வேண்டிய தேவை ஏற்படுவதில்லை.

ஆர் எஸ் எஸ் மற்றும் சங்கப் பரிவாரங்களின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான்! கடவுள் நம்பிக்கையைப் பரப்புவதோ, இந்து மதத்தை இந்தியாவெங்கும் கொண்டு செல்வதோ அவர்களின் நோக்கம் இல்லை. இந்துக்கள் இந்துக்கள் அல்லாதார் என்று மக்களைப் பிளவுபடுத்திப் பெரும்பான்மையாக இங்கு வாழும் இந்துக்களின் வாக்குகளைப் பெற்று விட வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கம்.

இது மதப்பற்று என்று சொல்ல முடியாது. மத அரசியல் என்றே இதனைச் சொல்ல வேண்டும்!

சரி, நாளை நடக்க இருக்கும் பேரணி எப்படி இருக்கும், என்ன விளைவுகள் ஏற்படுத்தும்?

நாளைக்கு எங்கும் கலவரங்களோ மோதல்களோ இருக்காது என்றே தோன்றுகிறது! அமைதியாகத்தான் ஊர்வலத்தை நாளை நடத்துவார்கள்!

ஆனால் அதற்குள்ளும் ஒரு உள்நோக்கம் கட்டாயம் இருக்கும். இந்த ஆண்டு அமைதியாக நடைபெற்ற பேரணிகளைச் சுட்டிக்காட்டி, அடுத்த ஆண்டு அனுமதி கேட்பார்கள். அப்போது கலவரங்கள் வெடிப்பதற்குப் பல்வேறு வகையான வாய்ப்புகள் இருக்கின்றன!

இந்த ஆண்டு ஏற்படுத்தாத கலவரங்களை ஏன் அடுத்த ஆண்டு அவர்கள் ஏற்படுத்த வேண்டும்? அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

ஒன்று இந்த ஆண்டு நடத்தப்படுகிற அமைதியான பேரணியின் மூலம், இது ஓர் அற வழி இயக்கம் என்னும் நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தலாம். இன்னொன்று, அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி, அடுத்த ஆண்டும் பேரணிக்கு அனுமதி பெற்றுக் கலவரத்தை ஏற்படுத்தலாம். அதன் மூலம் மக்களை மதத்தின் அடிப்படையில் பிரித்து, 2024ஆம் ஆண்டில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், இந்துக்களின் வாக்குகளைத் தாங்கள் பெற முயற்சி செய்யலாம். இவைதான் அவர்களின் நோக்கமாக இருக்கக் கூடும் என்பது என் போன்றவர்களின் கருத்தாகும்!

எப்படி இருந்தாலும் அரசும், காவல்துறையும், மக்களும் கவனமாக இருக்க வேண்டும். மதத்தின் பெயரால் மக்கள் மோதி மாண்டு போகாமல் தடுத்திட வேண்டும்.

நாட்டில் கலவரங்கள் ஏற்படாமல் தடுப்பது ஒவ்வொருவரின் கடமையும் உரிமையும் ஆகும்!!

- சுப.வீரபாண்டியன்

Pin It