கடுமையான சட்டங்கள் திறமையான குற்றவாளிகளை உருவாக்கும் என்பதை நிரூபித்து இருக்கிறது, நீட் தேர்வுமுறை.

இந்தியக் கல்வித் தேர்வு முறைகளிலே கடுமையான பரிசோதனைக்குப் பின் நடக்கும் தேர்வுமுறையாக மருத்துவத்திற்கான நீட் தேர்வுமுறை கடந்த மூன்றாண்டாக நம்ப வைக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம், நீட் தேர்வு எழுதியவர் ஒருவர், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர் மற்றொருவர் என்கிற ஆள் மாறாட்ட விவகாரம் வெளிவந்தது.

உதித் சூர்யா என்கிற மாணவர் பெற்றோரோடு கைது செய்யப்பட்டார்.

neet exam 600அடுத்து சென்னை மாணவி பிரியங்காவுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பெண் யார் என்று விசாரிப்பதாகவும், இதோடு மதிப்பெண் சான்றிதழைத் திருத்தியும் மோசடி செய்துள்ளதாகவும் இதற்கு மருத்துவத் துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கலாம் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சந்தேகிப்பதாகத் தகவல் வெளியானது.

ஆள் மாறாட்ட வழக்கில் இதுவரையில் 10 பேர் பிடிபட்டுள்ளனர். நீட் தேர்வுப் பயிற்சி மையங்கள் மூலமாகவே தரகர்கள் ஆள் மாறாட்டத்துக்கு ஆட்களைத் தேர்வு செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி வழங்கும் முதுநிலை ஆசிரியர்களுக்கு மதிப்பூதியமாக வழங்க 58,800 ரூபாய், LCD projector, கணிணி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக 1 லட்சத்து 66 ஆயிரம் என மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 800 ரூபாய் ஒதுக்கப்பட்டதில் கூட, மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்பு நடத்தாமல் அரசு உபகரணங்கள் வாங்கக் கொடுத்த பணத்தையும் முறைகேடு செய்த பிரச்சினை திருநெல்வேலி, கடையநல்லூர் பகுதியில் நடந்துள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடு, வழக்காகி அது உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் ஒரு கருத்தை வெளியிட்டனர். நீட் தேர்வுப் பயிற்சிக்கு ரூ.5 லட்சம் என்றால், கிராமப்புற மாணவர்களின் டாக்டர் கனவு எப்படிச் சாத்தியமாகும்? முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் அடுத்த (இன்றைய) அரசு முடக்கி வைப்பது போல நீட் தேர்வையும் மத்திய அரசு திரும்பப் பெற்றிருக்கலாமே என்று கேள்வி எழுப்பினர்.

நீட் தேர்வு முறையால் தமிழகத்தின் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு எப்படிச் சிதைக்கப்பட்டது என்பதைத் தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் அறிக்கை தெளிவாக விளக்குகிறது.

தமிழகத்தில் 48 மாணவர்கள் மட்டுமே தானாகப் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர்ந்துள்ளனர். மீதி 3033 மாணவர்கள், நீட் தனியார் பயிற்சி மையங்களில் படித்துத்தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுச் சேர்ந்துள்ளார்கள்.

 தானாகப் படித்து நீட் தேர்வு மூலம் வந்தவர்கள் 1.6 சதவிகிதம் மட்டுமே நீட் பயிற்சி தேர்வு மூலம் வராமல் நேரடியாக வந்தவர்கள்.

அதே போல், வெறும் 52 மாணவர்கள் மட்டுமே தானாகப் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

1,598 மாணவர்கள் நீட் பயிற்சி மையங்களில் படித்துத் தேர்ச்சி பெற்று, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

மேலும், 1,628 பேர் மட்டுமே முதல்முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

3,103 மாணவர்கள் 2வது, 3வது முறைகளில்தான் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இந்தத் தகவல்கள் அரசு அளித்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. (இவர்கள் எல்லாம் நீட் பயிற்சிக்காக பத்து லட்சம் ரூபாய் வரை செலவு செய்து இருக்கக்கூடும்)

நீட் தேர்வுப் பயிற்சி வகுப்பில் சேராமல் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வெறும் 100பேர் மட்டுமே என்று அரசு ஆவணம் சொல்கிறது.

ஒட்டுமொத்தத் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் நீட் பயிற்சி மையம் மூலம் படித்துத் தேர்வு எழுதியவர்களின் விழுக்காடு 96.63%, நீட் பயிற்சி மையத்தில் படிக்காமல் நீட் தேர்வில் வெற்றி பெற்றுக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் 3.2 % மட்டுமே.

96.63% மருத்துவக் கல்லூரி மாணவர்களைத் தீர்மானிப்பது தனியார் நீட் பயிற்சிப் பள்ளிகளே.

ஒரு மாணவன் தனியார் நீட் பயிற்சிப் பள்ளியில் படிக்கவேண்டும் என்றால் ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் செலவிட வசதி இருந்தால் மட்டுமே சாத்தியம்.

இந்த 2019 நீட் தேர்வில் ஒரு லட்சத்து இருபதாயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தார்கள். அதில் ஒரு லட்சம் பேர் தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் எனக் கணக்கிட்டு ஒவ்வொரு மாணவரும் தலா மூன்று லட்சம் செலவு செய்ததாகக் கணக்கிட்டாலே மொத்தம் 30ஆயிரம் கோடி அளவுக்கு, நீட் பயிற்சிப் பள்ளிகள் வருவாய் ஈட்டி இருக்கின்றன (இந்தத் தொகை தமிழகத்தின் மொத்த பட்ஜெட் தொகையில் 15விழுக்காடு).

உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமாக உள்ள நீட் தேர்வு தேவைதானா என்ற கேள்வி எழுப்புகிறார்கள். இதே கேள்வி தமிழகம் முழுக்க பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுந்து கொண்டே தான் இருக்கிறது.

தகுதியற்ற ஆளுமைகளால் தமிழ்நாடு ஆளப்படுகிறது. அவர்கள் நீட் தேர்வை நீக்க மத்திய அரசிடம் வலியுறுத்தாமல் அடிமைகள் போலச் செயல்படுகிறார்கள். இன்றைய நிலையில் ஆட்சி மாறினால் காட்சி மாறும். காட்சி மாறினால்தான் நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்வித் துறையில் சூழ்ந்துள்ள திறமையான குற்றவாளிகளுக்கு எதிராகப் போராடி நீட் தேர்வை நம் மாநிலத்தை விட்டே விரட்டமுடியும் என்கிற சூழலே நிலவுகிறது.எதிர்கால அரசியல் மாற்றத்தில் தான்... ஏழை எளியோர்களின் மருத்துவக் கனவும் அடங்கி இருக்கிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?!

Pin It