1959ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவரும் சட்ட முன்வடிவு(மசோதா) ஒன்று, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசினால், தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, ‘கடவுள் நம்பிக்கை உடையவர்கள்தான் கோயில்களில் அறங்காவலர்களாகப் பணியாற்ற முடியும்’.

சமய நிறுவனங்கள் எதற்கும் அறங்காவலராகப் பணியமர்த்தம் செய்வது குறித்த, (தமிழ்நாடு சட்டம் 22--/1959)இன் 26ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவு உள்பட சில பிரிவுகள் திருத்தம் செய்யப்பட இருக்கின்றன. 26(1) பிரிவு அறங்காவலர்களின் தகுதி யின்மைகள் குறித்துச் சொல்கிறது. இந்தப் பிரிவிற்கு முன்பாக, 25 - கி என்ற பிரிவு புதிதாகச் சேர்க்கப்பட இருக்கிறது. இந்தத் திருத்தப் பிரிவு, அறங்காவலர்களின் தகுதிகளைப் (Qualifications of trustees) பற்றிச் சொல்வதாகும்.

நேர்மையானவராக இருக்க வேண்டும், எந்தவிதமான குற்றமும் செய்யாதவராக இருக்க வேண்டும், அறங்காவலர் பணியைச் செய்வதற்குப் போதுமான நேரம் ஒதுக்கக்கூடியவராக இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் விட, முதல் தகுதியாக, அவர் கடவுள் நம்பிக்கை உடையவராக இருக்க வேண்டும் (If he has faith in God) என்கிறது அந்த மசோதா.

அர்ச்சகர் பணிக்கு ஆள் எடுக்கும் போது, அவருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது சரிதான். ஆனால் அறங்காவலர் பணி என்பது நிர்வாகத்தோடு மட்டுமே தொடர்புடையது. கோயில் பணிகள் சரியாக நடக்கின்றனவா, வரவு - செலவுக் கணக்குகள் முறையாக இருக் கின்றனவா என்பன போன்ற பணிகளே, அறங்காவலர்களுக்கு உரியவை. இதற்கும், கடவுள் நம்பிக்கைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? கணக்குகளைச் சரிபார்ப்பதில் பயிற்சியும், நிர்வாகத் திறனும், நேர்மையும் உடையவராக இருந்தால், அவையே போதுமான தகுதிகள். ஆனால், புதிதாகக் கடவுள் நம்பிக்கையும் வேண்டும் என்னும் திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பது ஏன் என்று புரியவில்லை.

கோயில் தொடர்புடைய பணி என்பதனாலேயே, கடவுள், மதம் ஆகியனவற்றில் ஈடுபாடு இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணம் மக்களிடையே இருக்கக் கூடும். கடவுள் நம்பிக்கை உடையவர்கள் கணக்குகளைச் சரியாக எழுதுவார்கள் என்பதும், கோயில் பணத்தைத் தொடுவதற்கு அஞ்சுவார்கள் என்பதும் பொதுவான நம்பிக்கை. ஆனால் நடைமுறை உண்மைகளோ வேறு மாதிரியாக உள்ளன.

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, இடங்கள் 473 பேருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அவர்களில் ஏறத்தாழ 60 விழுக்காட்டினர் ஒழுங்காக வாடகை களைக் கொடுப்பதில்லை. இதனை ஆதாரப்பூர்வமாக அண்மையில், அரசு வெளியிட்டுள்ளது. அக்கோயிலின் துணை ஆணையரும், செயல் அலுவல ருமான, ஏ.டி.பரஞ்சோதி, வாடகை பாக்கி உள்ளவர்களின் பட்டியலை அச்சிட்டு வெளியிட்டுள்ளதோடு, அவரவர் இடங்களில் அந்த அறிக்கையை கொண்டு போய் ஒட்டுவதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். அந்தப் பட்டியலைப் பார்த்தால், நமக்குத் தலை சுற்றுகிறது.

பக்தி நிரம்பிய, செல்வம் கொழிக்கும் தனிமனிதர்களும், நிறுவ னங்களும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவாள்களையே பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் மயிலாப்பூர் கிளப் பெரும்தொகையை நிலுவையாக வைத்துள்ளது-. பாரதிய வித்தியா பவன் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 31 இலட்சத்திற்கும் கூடுதலாக இருக்கிறது-. வெங்கடேசா அக்கரகாரத் தெருவில் உள்ள செலக்ட் அன் கோ, 7.38 இலட்சம் ரூபாயை இன்னும் கட்டாமல் இருக்கிறது. இப்படி ஒரு பெரிய பட்டியலே உள்ளது. எனவே, கடவுள் நம்பிக்கை உடையவர்கள் கோயிலுக்-குக் கொடுக்க வேண்டிய பணத்தில் நிலுவை எதுவும் வைக்க மாட்டார்கள் என்று கருதுவது வெறும் மூடநம்பிக்கையாகத்தான் உள்ளது-.

இதனை விட, இன்னொரு பெரிய செய்தி இருக்கிறது. சிதம்பரத்தில் உள்ள, தில்லையாண்டவர் கோயிலை, கலைஞர் தலைமையிலான சென்ற அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டபோது, அதற்குத் தீட்சிதர்கள் உள்ளிட்ட பக்த கோடிகள் அனைவரும், பெரும் எதிர்ப்பைக் காட்டினர். கால காலமாக இருந்துவரும் மரபை உடைக் கக் கூடாது என்றனர். தீட்சிதர்களிடம் இருந்தால்தான், கோயில் சொத்துகள் பத்திரமாக இருக்கும், அரசு அதிகாரி களிடம் போனால், செல்வமெல்லாம் கொள்ளை போய்விடும் என்றார்கள். உண்மையோ எதிர்மாறாக இருக்கிறது. அரசே தந்திருக்கும் புள்ளிவிவரத்தை நாம் பார்க்கலாம்.

தீட்சிதர்களின் பொறுப்பில் சிதம்பரம் கோயில் இருந்தபோது, அவர்கள் காட்டிய சராசரி ஆண்டு வருமானம், வெறும் 35ஆயிரம் ரூபாய் மட்டுமே. 2007ஆம் ஆண்டு அவர்கள் காட்டிய வருமானம் 37,199 ரூபாய். அப்போதெல்லாம், ஆண்டுக்கு ஒரு முறைதான் உண்டியல் திறக்கப்படுவ தாக அவர்கள் கூறினர். ஆனால், இப்போது இரண்டு மாதங்களிலேயே உண்டியல் நிரம்பி விடுகிறது. அதனால், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் திறக்கப்படுகிறது. இன்று, அரசின் பொறுப்பில் இருக்கும் நிலையில், இரண்டு மாதங்களில் உண்டியலில் சேர்ந்திருக்கும் தொகை 9,25,631 ரூபாய். பணம் மட்டுமல்லாமல், 12 கிராம் தங்கம், 65 கிராம் வெள்ளி, 20 இங்கிலாந்து பவுண்டுகள், 10 ஆஸ்திரேலிய டாலர்கள் ஆகியனவும் இருந்துள்ளன. இந்தக் கணக்கின் படி ஆண்டுக்கு ஐம்பது லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வருகிறது. தீட்சிதர்கள் காட்டிய 37ஆயிரத்துக்கும், அரசாங்கம் காட்டும் ஐம்பது லட்சத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு எவ்வளவு பெரியது என்பதை பொதுமக்களும், பக்த கோடிக ளும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்த உண்மைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு, தமிழக அரசு கொண்டுவர முயலும் சட்டத் திருத்தத்தை உடனே திரும்பப் பெற வேண்டும். இதுபோன்ற பொருந்தாத சட்டங்கள், தேவையற்ற விவாதங்களையே கிளப்புவதோடு, அரசின் மதச்சார் பின்மையைக் கேள்விக்குரியதாகவும் ஆக்கிவிடும் என்பதை இன்றைய அரசு உணர வேண்டும்.

Pin It