இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி தோழர் தியாகு அண்மையில் உண்ணாவிரதம் இருந்தபோது, அவரின் மரணப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தலைவர் கலைஞர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதினார்.

அதற்குப் பதில் எழுதிய மன்மோகன்சிங், தி.மு.க.வின் உணர்வுக்கும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்துத் தாம் முடிவெடுப்பதாக ஓர் உறுதிமொழியைக் கலைஞருக்குக் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் “டைம்ஸ் நவ்” என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்தியா, இலங்கை காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணித்தால், அது உலக அளவில் பெரிதாகப் பேசப்படும் என்றும், தமிழக மீனவர் பிரச்சினையை அங்கேதான் பேச வேண்டும் என்று மத்திய அரசு கருதுவதாகச் சொல்லி, இந்தியா அம்மாநாட்டில் கலந்து கொள்வதை இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் உறுதி செய்திருக்கிறார்.

தமிழர்களுக்கு இதைவிட அதிர்ச்சியும், அவமானமும் வேறு என்ன இருக்க முடியும்?

ஈழத்மிழர்கள் மீது இராஜபக்சே ஆடிய கொலை வெறித் தாண்டவத்தை உலகம் பெரிதாகப் பேச வேண்டும் என்பதற்குத்தானே இந்தியா இம்மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்கிறோம்.

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண காமன்வெல்த் மாநாடுதான் வழி என்றார், இந்தியாவில் அரசாங்கம் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியை மக்கள் எழுப்ப மாட்டார்களா? இதுகூடத் தெரியாமல் குர்ஷித் எப்படி வெளியுறவுத் துறைக்கு அமைச்சராக இருக்கிறார்?

24.10.2013 அன்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம், காலம் கருதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம். அந்தத் தீர்மானம் தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இலங்கைக் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்பதோடு, பெயரளவிற்குக் கூட இந்தியா சார்பாக எந்த ஒரு பிரதிநிதியும் கலந்து கொள்ளக் கூடாது என்று அழுத்தமாகக் கூறுகிறது.

சட்டப்பேரவையில் எந்த ஒரு எதிர்ப்பும் இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது என்பதால், இந்தத் தீர்மானம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் தீர்மானம் என்றே கொள்ள வேண்டும்.

இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு கவனத்தில் எடுத்துப் பரிசீலனை செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆனால், மத்திய அரசு அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை என்பதைத்தான் சல்மான் குர்ஷித்தின் பேச்சு உறுதி செய்கிறது.

மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மத்திய அரசு மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன் போன்றவர்கள், மத்திய அரசு காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறிக் கொண்டிருக் கின்றனர். இந்தச் சிக்கல், தமிழக காங்கிரசில் ஒரு பிளவை ஏற்படுத்துகின்ற நிலையை உருவாக்கி இருக்கிறது. மீண்டும் தமிழ்மாநில காங்கிரஸ் தோன்றுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றுகூடச் சொல்லலாம்.

இலங்கை மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று 16.07.2013 அன்று தலைவர் கலைஞர் தலைமையி லான டெசோ, தீர்மானம் இயற்றி இருக்கிறது.

தமிழகத்தில் அனைத்துக்கட்சியினரும் இதே நிலைப் பாட்டில் போராட்டங்களை நடத்தியிருக்கின்றன. மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள்.

காமன்வெல்த் நாடுகளின் முக்கிய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் காற்றில் பற்ற விட்ட இலங்கையில் நடைபெறும் மாநாட்டில், தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துவிட்டர் கனடா நாட்டின் பிரதமர்.

அது என்ன காமன்வெல்த் கொள்கை, கோட்பாடு?

மனித உரிமைகள், சமூக அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் சம உரிமைகளைப் பேணுவதும், பாலினம், இனம், நிறம், மதம், அரசியல் நம்பிக்கை அல்லது வேறு காரணங்களுக்காக ஏற்படுத்தப்படும் வேறுபாடுகளைக் கடுமையாக எதிர்ப் பதும் காமன்வெல்த் நாடுகளின் கொள்கைக் கோட்பாடுகளில் அடங்கும். இதனை காமன்வெல்த் கூட்டமைப் பின் தலைவரான இரண்டாம் இராணி எலிசபெத் உறுதி செய்கிறார்.

சர்வதேச பொது மன்னிப்பு அவையும் பிரதமர் மாநாட்டில் பங்கேற்பதைத் தடுக்க மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொண்டு இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் ஜெனிவா ஒப்பந்தம், சர்வதேச ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு மாறா உள்நாட்டுப் போர் என்ற போர்வையில் மாபெரும் இனப்படுகொலை செய்த இராஜபக்சே, இம்மாநாட்டின் மூலம் தமக்குச் சாதகமான சூழலை உருவாக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்.

இம்மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் நிலையில், இலங்கை மீதான உலக நாடுகளின் அழுத்தங்கள் குறையும், அடுத்த இரண்டு ஆண்டுகள் காமன்வெல்த் தலைவராக ஐ.நா. விசாரணையில் இருந்து தப்பிப் பிழைக்கலாம் என்று நினைத்துக் கொண்டும் இருக்கிறார்.

இப்பொழுதாவது சல்மான் குர்ஷித் சொன்னதைப் பொய்யாக்கி இலங்கை காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் இந்தியா. கோத்தபய ராஜபக்சேவின் இந்திய வருகையை, இந்திய உள்துறை அமைச்சகம் இரத்து செய்திருப்பது சிறு நம்பிக்கையைத் தருவதாக இருந்தாலும், நிலையான ஒரு முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் தயங்குதைப் பார்க்கும்போது, வழக்கமான தமிழர் விரோதப்போக்குதான் தொடருமோ என்ற அச்சம் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.

தவறினால் சர்வதேச விசாரணைச் சட்டம், இராஜபக்சேவைத் தண்டிக்கும். தமிழக மக்களின் வாக்குச் சீட்டு காங்கிரசைத் தண்டிக்கும்.

Pin It