judge 505கடந்த சில நாள்களுக்கு முன்பு அடுத்தடுத்து வந்த இரண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அழுத்தமான ஒரு செய்தியைக் கொண்டு வந்திருக்கின்றன. அந்த வழக்குகளின் தீர்ப்புகள் வேறு அடிப்படையில் ஆனவை என்றாலும், அந்த தீர்ப்புக்கு உள்ளே மாநில சுயாட்சி வழியான கூட்டாட்சிக்கு ஒரு பெரும் இடம் கிடைத்திருக்கிறது.

இரண்டு வழக்குகளில் ஒன்றின் மீதான தீர்ப்புதான், 31 ஆண்டு காலம் சிறையில் வாடிய பேரறிவாளனுக்கு விடுதலையைப் பெற்றுத் தந்திருக்கிறது. இன்னொரு தீர்ப்பு சரக்கு வாகன வரி குறித்து ஒரு விளக்கம் தருகிறது. இந்த இரண்டு தீர்ப்புகளோடும் இந்தியக் கூட்டாட்சித் தத்துவம் பின்னிப் பிணைந்து கிடப்பதை நீதிபதிகள் தெளிவாக தங்கள் தீர்ப்பில் விளக்கியிருக்கிறார்கள். முதல் தீர்ப்பில் அவர்கள் தந்திருக்கிற செய்தி மாநில அரசின் அதிகாரத்தில் யார் ஒருவரும் தலையிட முடியாது என்பதுதான். தமிழ்நாட்டின் ஆளுநருக்காகவே சொல்லப்பட்ட செய்தி போல அமைந்திருக்கிறது. இரண்டாவது தீர்ப்பில் இன்னும் துல்லியமாக அவர்கள் ஒன்றை வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள். இந்திய அரசும், மாநில அரசுகளும் இரண்டும் சமமானவை, சமநேரத்தில் செயல்படக் கூடியவை, தனித்தன்மை வாய்ந்தவை (Equal, Simultaneously, and Unique) என்று மூன்று சொற்களை நீதிபதிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

 ஒவ்வொரு சொல்லும் மிக ஆழ்ந்த பொருளுடையது-யாரும் யாருக்கும் இங்கு எஜமானரும் இல்லை, அடிமைகளும் இல்லை என்பதுதான் இந்தச் சொற்களின் சாரம். அதேபோல ஒரே நேரத்தில் கடமையாற்ற இரண்டு அரசுக்கும் உரிமை இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். மூன்றாவதாக ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் வாய்ந்தது என்பதை விளக்குகிறார்கள். அடுத்ததாக, நீதிபதிகள் சொல்லி இருக்கிற இன்னொரு தொடரும் குறிக்கத்தக்கது. ஜனநாயகமும் கூட்டாட்சியும் ஒன்றையொன்று சார்ந்து இருப்பவை (Democracy and Federalism are interdependent) என்று நீதிபதிகள் குறிப்பிடுகிறார்கள். ஆம், கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை ஜனநாயகம்தான். இருப்பினும் இந்தக் கூட்டாட்சி முறை என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் கூறப்படவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. அதற்கான காரணங்களை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இன்றைக்கு இருக்கிற இந்திய அரசமைப்புச் சட்டம் 1949 நவம்பர் 26 அன்று ஏற்கப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் ஏற்கனவே ஆங்கிலேயர்களால் 1935 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்தையே பெரிதும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆங்கிலேயர்கள் தந்த அந்தச் சட்டத்தில் மாநிலங்களுக்கு எந்த ஒரு பெரிய உரிமையும் வழங்கப்படவில்லை. இதனை நாடாளுமன்றத்தில் பலர் கேள்வியாக எழுப்பினர். அப்போது அவற்றுக்கு விடையளித்த சட்ட அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்கர், அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்த உண்மைகளை மறுக்கவில்லை. எனினும் மாநில அரசுகளுக்கு ஓர் இறையாண்மை இருக்கவே செய்கிறது என்று அவர் வாதிட்டார். அரசமைப்புச் சட்டத்தின் 246(A) மற்றும் 161 ஆகிய விதிகளைக் கணக்கில் கொண்டே அவர் அவ்வாறு சொல்லி இருக்க வேண்டும். எனினும் நடைமுறையில் அந்தச் சட்டங்கள் ஏட்டளவில்தான் அமைந்திருக்கின்றன. 161ஆம் பிரிவை ஒன்றிய அரசு ஏற்று இருக்குமானால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் எழுவர் எப்போதோ விடுதலை ஆகியிருப்பார்கள்.

அப்படி நடக்கவில்லை. ஒன்றிய அரசு தனக்குத் தேவைப்படும் போது மட்டும் அந்த உரிமையை வழங்குகிறது. விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் என்பதன் அடிப்படையில்தான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. ஆனால் 2017 ஜனவரியில் தமிழ்நாட்டில் நடைபெற்ற எழுச்சிமிகு போராட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தை ஒன்றிய அரசு ஏற்றது.

 இவ்வாறாக அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள மூன்று பட்டியல்களில், ஒன்றிய அரசுப் பட்டியல், மாநில அரசுப் பட்டியல், ஒத்திசைவுப் பட்டியல் ஆகியவற்றில், ஒத்திசைவுப் பட்டியல் ஒன்றிய அரசின் பட்டியலாகவே மாறிவிட்டது. அதனைப் பொதுப்பட்டியல் என்றும் சிலர் தவறாகக் கூறுகின்றனர். அவ்வாறு இல்லை. தனித்தன்மை வாய்ந்த தனித்தனியாக ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் சட்டம் இயற்றுவதற்கான உரிமையை ஒத்திசைவுப் பட்டியல் நடைமுறையிலும் பெற்றிருக்கவேண்டும். நம் நாட்டுச் சட்டத்தில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. அவற்றை இந்த இரண்டு தீர்ப்புகளும் ஓரளவிற்காவது சரி செய்யும் என்ற நம்பிக்கை வருகிறது.

 தீர்ப்புகள் வந்திருக்கின்றன, தீர்வு எப்போது?

- சுப.வீரபாண்டியன்

Pin It