அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தைத் தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது கொண்டு வந்தார்.
அதற்காக 2007ஆம் ஆண்டு 6 இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆயினும் ஆகமத்தின் பெயரால் இதற்குத் தொடர் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.
தடைகளை வென்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து ஜாதி அர்ச்சகர் பணி நியமனங்களை 14.08.2021 அன்று வழங்கினார். தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படித்த 22 அர்ச்சக மாணவர்கள் உட்பட 57 மாணவர்களுக்கு முறையான நேர்காணல் மூலம் பணி நியமனம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திருச்சி திருவரங்கம் குமார வயலூர் முருகன் திருக்கோவிலில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட திரு. பிரபு, திரு. ஜெயபாலன் ஆகிய இரண்டு பார்ப்பனரல்லாத இந்து சைவ அர்ச்சகர்களின் பணி நியமன உத்தரவுகளை ஆகம விதிகளுக்கு எதிரானது எனக் கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ரத்து செய்துள்ளார். அத்துடன் அங்கு முன்பு அர்ச்சகராக இருந்த பார்ப்பனர்களான மனுதாரர்கள் திரு. கார்த்திக் மற்றும் திரு. பரமேஸ்வரன் ஆகியோரைப் பணி அமர்த்துவது குறித்து அரசு முடிவெடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
ஆகமத்தைப் பின்பற்றும் கோவில்கள் எவை, ஆகமத்தைப் பின்பற்றாத கோவில்கள் எவை என்று முடிவு செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.சொக்கலிங்கம் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு 2021ஆம் ஆண்டு தீர்ப்பளித்துள்ள சூழலில் வயலூர் முருகன் திருக்கோவில் உத்தர காமிக ஆகமத்தைப் பின்பற்றும் ஆகமக் கோவில் என்று நீதிபதி எவ்வாறு முடிவெடுத்தார்?
உத்தர காமிக ஆகமத்தில் முழுமையாக 98 படலங்கள், 7128 சுலோகங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில் வெறும் ஒரு சில பக்கங்கள் மட்டும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதில் ஆதிசைவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
வழக்கைத் தொடுத்த மனுதாரர்கள் திரு. கார்த்திக் மற்றும் திரு. பரமேஸ்வரன் இருவரும் தாங்கள் மேற்குறிப்பிட்ட ஆதிசைவர் உள்ளிட்ட உட்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆவணத்தை, அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பித்த போதோ, நீதிமன்றத்தில் விசாரணையின் போதோ சமர்ப்பிக்க வில்லை. தங்களது பணி விண்ணப்பத்தில் திரு. கார்த்திக் “இந்து - பிராமின்” என்றும்,திரு. பரமேஸ்வரன் “இந்து - குருக்கள்” என்று தான் தங்கள் ஜாதியைக் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் ஆதிசைவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற முடிவிற்கு நீதிபதி எப்படி வந்தார் என்ற விவரம் தீர்ப்பில் இடம்பெறவில்லை.
வயலூர் முருகன் திருக்கோவில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் திரு. பிரபு மற்றும் திரு. ஜெயபாலன் இருவரும் சைவ மரபைப் பின்பற்றும் ஆதிசைவ பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று மிகத் தெளிவாக பதில் மனுவில் தெரிவித்துள்ளது கவனத்தில் எடுத்துக் கொண்டு பரிசீலிக்கப்படவில்லை.
தீர்ப்பிலுள்ள மேற்கண்ட குறைபாடுகளை முன்வைத்து தமிழ்நாடு அரசு, இத்தீர்ப்பிற்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கு இன்னும் தெளிவான சட்டவிதிகளை உருவாக்க வேண்டும்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பது அய்யன் திருவள்ளுவரின் வாக்கு. “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். இதையெல்லாம் மறுதலித்து விட்டு பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஜாதியை முன்வைத்துதான் அர்ச்சகர் நியமிக்கப்பட வேண்டும் என்ற இந்த அநீதியான தீர்ப்பு மக்கள் மன்றத்தில் விளக்கிச் சொல்லப்பட்டு மக்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தியாக வேண்டும்.
- வழக்கறிஞர் இராம.வைரமுத்து