அண்மையில் ஆந்திர முன்னாள் முதல்வர், காலம் சென்ற என்.டி.ராமாராவின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நீதிபதி என்.வி.ரமணா, தாய் மொழியின் உரிமைகளைப் பெறுவதில் தமிழர்களைப் போல போராட வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

இது காலம் கருதிய பேச்சாகவும், பேசியவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்பதும் கவனத்திற்கு உரியது.

புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கான கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கை, இந்தி கட்டாய மொழியாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

இதற்குத் தமிழ் நாடு தொடங்கி எழுந்த வலிமையான எதிர்ப்பினால் மனிதவள மேம்பாட்டுத்துறை அறிக்கையில் சிறு மாறுதல் செய்வதாகக் கூறி, இந்தி கட்டாயம் என்பதற்குப் பதில் மூன்றாவது ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறது.

இந்த மும்மொழித் திட்டத்தின் மூலம் இந்தி மறைமுகமாகத் திணிக்கப்படுவதை அமித்ஷா தெளிவாகச் சொல்கிறார்.

நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் 37 ஆம் கூட்டத்தில் பேசும் போது மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார், அமித்ஷா.

ஒரே நாடு, ஒரே கலாசாரம், ஒரே தேர்தல் என்ற வடிவில் ஒரே மொழி சமஸ்கிருதத்தை இந்திய ஒன்றியத்தில் கொண்டு வரத் துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட பி.ஜே.பி. அரசு.

இலக்கிய, இலக்கண, மொழிவளம் இல்லாத, வழக்கொழிந்து போன அம்மொழியை நேரடியாக அரியணை ஏற்ற முடியாது என்பதனால் முதலில் இந்தியைத் திணிக்க முயல்கிறார்கள். அதன் வழியாக சமஸ்கிருதத்தை ஒரே ஆட்சி மொழியாக ஆக்கிவிட வேண்டும் என்ற பார்ப்பனிய சூழ்ச்சிதான் மும்மொழிக் கொள்கையில் அடங்கியிருக்கிறது.

இப்படிப்பட்ட காலத்தில், நேரத்தில் தாய்மொழியைக் காப்பாற்றத் தமிழர்களை அடையாளம் காட்டும் நீதிபதி ரமணா அவர்களின் பேச்சை ஒதுக்கிவிட முடியாது. அதை ஓர் எச்சரிக்கையாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டு மக்கள் என்றும் இரு மொழிக் கொள்கையில் நின்று, இந்தியை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பவர்கள் என்பதைக் கடந்த கால இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் உறுதி செய்துள்ளன.

தமிழர்கள் இனியும் உறுதியாகவே இருப்பார்கள்!

Pin It