தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17ஆம் கூட்டத்தொடர், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் 18-06-2026 அன்று காலையில் தொடங்கியது. எப்படித் தொடங்கியது?
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது, அவையில். அது சரி! அப்படியே இரண்டாவதாக தேசியகீதமும் அங்கே பாடப்பட்டு இருக்கிறது. இது சட்டமன்ற மரபு மீறல்.
பொதுவாக நிகழ்ச்சியின் நிறைவில் /முடிவில் தேசிய கீதம் பாடப்படுவதுதான் நாட்டின் பொதுவான மரபாகும். அரசு விழாக்கள், பள்ளிகள், பல்வேறு பொது நிகழ்ச்சிகள் முடிவடையும் போது தேசிய கீதம் பாடப்பட்டு நிகழ்ச்சி நிறைவு பெறும், இதுதான் மரபு.
கடந்தகாலங்களில் இதே நடைமுறைதான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பின்பற்றப்பட்டு வந்தது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வற்புறுத்தியும் கூட தமிழ்த்தாய் வாழ்த்து தொடக்கத்திலும், தேசியப் பாடல் இறுதியிலும் தான் பாடப்பட்டது.
இதனால் பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியும் இருக்கிறார். தமிழ்நாடு முன்னாள் முதல்வரின் துணிச்சல் மிக்க ஆற்றல் இது.
நடிகர் விஜய்யின் தவெக ஆட்சியின் பதவியேற்பு நிகழ்வின்போது, இரண்டு முறை தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.
இப்போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டாலும், அதற்குப் பின்னால் ஒட்டி நிற்கிறது தேசிய கீதம். அதுமட்டுமல்ல, ஆளுநர் உரை முடிந்தபின்பு இரண்டாம் முறையும் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.
ஏன் இரண்டு முறை தேசிய கீதம் பாடவேண்டும்? அது ஆளுநரின் விருப்பம், ஆதிக்கம். சரி முதல்வர் விஜய் என்ன செய்கிறார்?
எப்போதும் போல ஊமையாக இருக்கிறார். சட்டமன்ற மரபைப் பேணிக்காக்கும் மனவுறுதி அற்றவராக இருக்கிறார். "அஞ்சியஞ்சி சாவார்; இவர், அஞ்சாத பொருளில்லை அவனியிலே..." பாரதி பாடுகிறார்.
செய்தியாளர்களைச் சந்திக்கக் கூட அஞ்சியோடும் இவர் படிக்கும் வீரவசன மேடைப் பேச்சால் தமிழ்நாட்டின் எதிர்காலம் கேள்விக் குறியாகத்தான் தெரிகிறது.
- கருஞ்சட்டைத் தமிழர்