கடந்த 18.10.2024 அன்று தமிழ்நாட்டின் ஆளுநர் பங்கேற்ற பொதிகைத் தொலைக்காட்சியில் நடைபெற்ற இந்தி தின விழா கொண்டாட்டத்தில் பாடப்பெற்ற தமிழ்த்தாய் வாழ்த்தில் “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற வரிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இது திட்டமிட்டு நடைபெற்ற ஒன்று அல்ல என்று பொதிகைத் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியிருந்தாலும், தொடர்ந்து திராவிடம் என்பதற்கு எதிராக இவ்வாறு நடைபெறுவதைக் கடந்து செல்ல நம்மால் இயலாது.

இது குறித்து நமது முதல்வர் அவர்கள் கடுமையான எதிர்வினையை ஆற்றியிருக்கிறார். “ஆளுநரா? ஆரியரா?” என்ற கேள்வியை எழுப்பி, தமிழ்நாட்டின் சட்டப்படி நடக்க வேண்டிய ஆளுநர், இஷ்டப்படி நடப்பதால் அந்தப் பதவியை வகிக்கவே தகுதி இல்லாதவர் என்றும், திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தி மாத விழாவினை தமிழ்நாட்டின் தொலைக்காட்சியில் கொண்டாடுவதைத் தொடக்கத்திலேயே முதல்வர் எதிர்த்து வந்துள்ளார். பொதிகைத் தொலைக்காட்சிக்கு டி. டி. என்று பெயர் மாற்றியது, அதன் சின்னத்தைக் காவி நிறம் ஆக்கியது, தற்போது தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு என்று தொடர்ச்சியாகத் தமிழர் விரோத நடவடிக்கைகளை ஒன்றிய அரசும், ஆளுநரும் மேற்கொள்வதை நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்தாவிடில் தமிழ்நாட்டு மக்கள் அதற்கான பாடத்தைக் கற்பிப்பார்கள்.

மொழிச் சமத்துவம் குறித்து முன்னெடுக்க வேண்டிய முக்கியமான ஒரு செயல்பாடு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 351-ஐ நீக்குவது என்பது. ஏன் அப்பிரிவை நீக்க வேண்டும் ? ஏன் பிரிவு 351 மொழிச் சமத்துவத்திற்கு எதிரானது?

அப்பிரிவில் கூறப்பட்டுள்ள வாக்கியம் பின்வருமாறு:

 Article 351: It shall be the duty of the Union to promote the spread of the Hindi language. அதாவது இந்தி மொழியைப் பரப்புவது ஒன்றிய அரசின் கடமையாகும் என்கிறது இப்பிரிவு.

இந்த ஒரு உறுப்பைக் காரணமாக வைத்துக் கொண்டே இந்தியானது பல்வேறு இடங்களிலும், பல்வேறு தளங்களிலும் நம் மீது திணிக்கப்படுகிறது.

இந்திய மொழிகளில் ஒன்றான இந்திக்கு, வேறு எந்த இந்திய மொழிக்கும் தரப்படாத முக்கியத்துவம் ஏன் தரப்பட்டுள்ளது ?

இது இந்திக்கு மட்டும் ஒரு சிறப்பான இடத்தையும் மற்ற இந்திய மொழிகளை இரண்டாம் தரமாகக் கருதப்படுவதற்கும் முக்கிய காரணமாக அமைகிறது இல்லையா?

எனவே இப்பிரிவு இந்தி ஆதிக்கத்தை நம் மீது திணிப்பதாலும், மொழிச் சமத்துவத்திற்கு எதிரானது என்பதாலும் மாநில சுயாட்சிக்கான நமது முழக்கங்களில் முக்கியமான ஒரு முழக்கமாக "பிரிவு 351 நீக்கப்பட வேண்டும்" என்பதும் இருக்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

- கருஞ்சட்டைத் தமிழர்