தவெக, தான் ஆட்சிக்கு வந்த பிறகு, முதன் முதலில் தனக்குக் கிடைத்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்திக்குக் கொடுத்திருக்கிறது!
காங்கிரசுக்குக் கொடுத்திருக்கிறது என்பதைவிட, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியைக் கலைத்துத் தங்களிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிற பிரவீன் சக்கரவர்த்தி என்னும் ஒரு மனிதருக்குக் கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை! எனவே இது வெறும் பதவி மட்டும் இல்லை, கூட்டணியைக் கலைத்ததற்கான பரிசும் கூட!
சமூக நீதிக் கூட்டணி, ஒரு பார்ப்பனருக்கு வழங்கி உள்ள பரிசு! இதுதான் சமூக நீதி! (பொதுவுடைமைக் கட்சிகள், இந்த ஆட்சிக்குத் தாங்கள் ஆதரவளித்தாலும், திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம் என்று தெளிவாகக் கூறியுள்ளன!)
கடந்த டிசம்பர் மாதமே, இதே பிரவீன் சக்கரவர்த்தி, விஜய் வீட்டுக்குச் சென்று இரண்டு மணி நேரம் பேசினார் என்பதை ஊடகங்கள் தெரியப்படுத்துகின்றன!
பார்ப்பனர்களுக்குத் திமுகவின் மீது ஒரு கோபம் இருக்கும் என்பது இயற்கைதான்! பிரவீன் சக்கரவர்த்திக்குக் கூடுதலாக இன்னொரு காரணமும் உண்டு. 2024 நாடாளுமன்றத் தேர்தலில், மயிலாடுதுறைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அவர் விரும்பினார். ஆனால் திமு கழகம் அவரை ஏற்கவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. எனவே தன்னால் முடிந்த தீமைகளைத் திமுகவிற்கு செய்துவிட வேண்டும் என்னும் வன்மமும் அவருக்குள் இருந்திருக்கிறது!
சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அவருக்கு, காங்கிரஸ் தலைமையும் இப்போது உதவியிருக்கிறது! நினைத்தபடி கூட்டணியைப் பிரித்து முடித்து விட்டார்.
தேர்தல் முடிந்ததும், ஒரு நன்றி கூடச் சொல்லாமல், காங்கிரஸ் கட்சி தவெகவுடன் போய்ச் சேர்ந்து, இரண்டு அமைச்சர்களையும், இப்போது ஒரு மாநிலங்களவை உறுப்பினரையும் பெற்றுவிட்டது!
முதுகில் குத்துவதில் முனைவர் பட்டம் பெறும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுள்ள காங்கிரஸோடு, இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்னும் முடிவுக்குத் திமுகழகம் வந்திருக்கிறது! அதன் எதிரொலியாகவே, ஜூன் 8 அன்று நடைபெறவிருக்கும் இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்குக் கூட திமுக மறுத்துவிட்டது!
ஏதோ தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தந்திரம் புரிந்து, 59 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவைக்கும் வந்து விட்டோம் என்று கருதிய காங்கிரஸ் கட்சிக்கு இது ஒரு பலத்த அடி! இந்தியா முழுவதும், காங்கிரஸ் கட்சியின் போக்கு இப்போது பேசு பொருள் ஆகியிருக்கிறது!
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சொல்லியிருப்பது போல, பாஜகவை இந்தியாவில் வளர்த்துக் கொண்டிருப்பது மோடியும், அமித் ஷாவும் இல்லை - அந்தப் படுபாதகச் செயலைச் செய்து கொண்டிருப்பது காங்கிரஸ் கட்சிதான்!
இந்தியா கூட்டணியில் இருக்கும் எல்லா கட்சிகளும் இனிமேல் சிந்திப்பார்கள். இந்தக் கூட்டணியில் நின்று வென்ற பிறகு, காங்கிரஸ் கட்சி எந்தக் கூட்டணியோடு சேர்ந்து, யாரிடம் அமைச்சர் பதவி பெற்று, இந்தியாவில் எந்த ஒரு ஆட்சியை உருவாக்கும் என்பதற்கு எந்த உறுதியும் இப்போது இல்லை!
இனி ஒரு வழிதான் இருக்கிறது! காங்கிரஸ் இல்லாத இந்தியா கூட்டணி விரைவில் உருவாகட்டும்!
- சுப.வீரபாண்டியன்