2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பெரும் வெற்றியினை ஈட்டி உள்ளது. 1971ஆம் ஆண்டு தேர்தலுக்கும், இந்த 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கும் இரு பெரு ஒற்றுமைகள் உள்ளன. ஒன்று, அந்தத் தேர்தல் அறிஞர் அண்ணா அவர்கள் மறைவுக்குப்பிறகு, தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் கண்ட முதல் தேர்தல். இது நமது அருமைத் தலைவர் கலைஞர் அவர்களின் மறைவுக்குப் பின்னால், இளைய கலைஞர் தளபதி அவர்களின் தலைமையில் கழகம் காணும் முதல் தேர்தல். இரண்டாவது, அந்தத் தேர்தலின் போது தந்தை பெரியார் ராமன் படத்தைச் செருப்பால் அடித்தார் என்று கூறி, "ராமனைச் செருப்பால் அடித்தவர்களுக்கா உங்கள் வாக்கு?" என்ற முழக்கத்தை முன்வைத்து துக்ளக்கும், காங்கிரசும் கடுமையாகப் பரப்புரை செய்தன. ஆனால் அப்போது மக்கள் அவர்களின் பரப்புரைகளை ஒதுக்கித் தள்ளி, கழகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை வெற்றியைத் தந்தனர்.

modi 371அதுபோல் இந்தத் தேர்தலிலும், தேர்தல் பரப்புரைக்குச் சம்பந்தம் இல்லாமல், பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் பேசிய ஒரு பேச்சை முதன்மைப் படுத்தி, "கிருஷ்ணனை இழிவுபடுத்தியவர்களுக்கா உங்கள் வாக்கு?" என்று பரப்புரை செய்தனர் அதே துக்ளக்கும், பாஜகவும். இப்போதும் தமிழக மக்கள் அவர்களது பரப்புரைகளை ஒதுக்கித் தள்ளி கழகக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியைத் தந்துள்ளனர்.ஆனால் அந்த வெற்றியை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத நிலையில் மத்தியில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. நாமெல்லாம் எதிர்பாராத வகையில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.

மீண்டும் நரேந்திரமோடி பிரதமராகி விட்டார். பிரதமரும், அவரது அமைச்சரவையும் மே 30 அன்று பதவி ஏற்றனர். பதவி ஏற்பு விழாவுக்குப் பிரதமர் மோடி, அண்டை நாடுகளின் பிரதமர்களை எல்லாம் அழைத்திருந்தார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை அழைக்கவில்லை. கேட்டால், அவர் எதிரி நாட்டின் பிரதமர் என்கின்றனர். ஆனால் அவர்தான் தேர்தலுக்கு முன் பாகிஸ்தானுக்குள் குண்டுபோட்டு அவர்களிடம் மாட்டிக்கொண்ட அபிநந்தன் என்னும் விமானப்படைக் கமாண்டரை இந்தியா கேட்டுக்கொள்ளாமலேயே நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். அவ்வாறு நல்லெண்ண சைகையை வெளிப்படுத்திய சூழலில் அவரையும் அழைத்திருக்க வேண்டும். அது இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் பகையைக் குறைத்து, நட்புச் சூழல் உருவாக வாய்ப்பளித்திருக்கும். ஆனால் நமது பிரதமருக்கு நட்புச் சூழலும் அமைதியும் இருப்பதை விட , போர்ச்சூழலும் கலவரமும்தான் வேண்டி இருக்கிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு.

அதைப்போலவே, நமது நாட்டுக்குள் இருக்கும் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் அழைத்து இருக்கவேண்டும். அதையும் செய்யவில்லை. குறிப்பாக, தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரை அழைத்திருக்க வேண்டும். அதுதான் மரபு, ஆங்கிலத்தில் சொன்னால் PROTOCOL. அதை கிஞ்சிற்றும் மதிக்காமல் பதவி ஏற்பு விழா நடத்தியுள்ளார். நாம்,ஒன்றும், கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மு.க.ஸ்டாலினை அழைக்க வேண்டும் என்று கூறவில்லை. மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியான திமுகவின் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களை அழைக்க வேண்டும் என்று கூறுகிறோம்.. அவர்கள் அழைக்காததால் நமது தலைவருக்கு எதுவும் குறைந்துவிடப் போவதில்லை.ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா ரோஜாதான். கேட்டால் பாஜகவினர், அப்படி எல்லோரையும் அழைக்க வேண்டும் என்று சட்டமில்லை. என்கின்றனர். இதற்கெல்லாம் சட்டம் எதுவும் சொல்லாது, ஆனால் மரபுகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணம் பிரதமருக்கு இருந்திருக்க வேண்டும்.

அதே சமயம் ரஜினிகாந்த், ஜக்கி வாசுதேவ் போன்றோரை அழைத்துள்ளார். அவர்களை அழைத்தது தவறு என்று சொல்லவில்லை .அழைத்து விட்டுப் போகட்டும். எவ்வளவு இறுக்கிப் பிடித்தாலும் நழுவிப்போகும் ரஜினிகாந்தை எப்படியாவது தங்கள் வலையில் விழ வைக்க அவர்களும் ‘பிரம்மப் பிரயத்தனம்’ செய்து வருகின்றனர்.அது அவர்கள் பாடு, ரஜினி பாடு. ஆனால் ஜக்கி வாசுதேவ் என்னும் அந்த சாமியார், தமிழ் நாட்டில் கோவை வனப் பகுதியில் யானைகளின் வழித்தடத்தில் மாபெரும் கட்டடங்களைக் கட்டிவைத்து இயற்கையை, வனத்தைச் சீரழிக்கும் ஒரு குற்றவாளி. அவர் நடத்தும் சிவராத்திரி விழாவுக்குப் பிரதமர் போகிறார்.பிரதமரின் பதவியேற்பு விழாவுக்கு ஜக்கிக்கு அழைப்பு வருகிறது. ஆனால், நாடாளுமன்றத்தில், மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவரை அழைக்கப் பிரதமருக்கு மனம் இருக்காது. இது பாஜகவின் கட்சி விழாவாக இருந்திருந்தால் நாம் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால் இந்த நாட்டின் 120 கோடி மக்களையும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆளப்போகும் பிரதமர் பதவி ஏற்கும் விழாவுக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்த்து அழைப்பது எப்படிச் சரியாகும்? இது ஜனநாயகத்திற்கு எதிரானது. அவர்களின் சிறுமதியைத்தான் வெளிப்படுத்துகிறது. நமது கவலை எல்லாம், இப்படிப்பட்ட ஒரு பிரதமரின் ஆட்சியில் நாடு என்ன பாடுபடப் போகிறதோ என்பதுதான்.

பொதுவாகவே வடநாட்டு அரசியல் தலைவர்கள் பெருந்தன்மையுடனும், அரசியல் கடந்த நட்புடனும் நடந்துகொள்வார்கள் என்று சொல்வார்கள்... தமிழ்நாட்டில்தான் அத்தகைய போக்கைக் காண முடியாது என்பார்கள். அத்தகைய அநாகரிகப் போக்கு இங்கு நிலவுவதற்கு என்றைக்கும் திமுக காரணமாக இருந்தது இல்லை. ஆனால் திமுக தோழர்களுடன் நட்பு பாராட்டியதற்காக அதிமுகவினர் அநேகம் பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். அப்படி நடவடிக்கை எடுத்து அரசியல் அநாகரிகத்தை வெளிப்படுத்தியவர் அம்மையார் ஜெயலலிதா. அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட அம்மையார் ஜெயலலிதா மறைந்து விட்டார் என்றிருந்தோம். ஆனால் அவர் ஆண் ஜெயலலிதாவாக, நரேந்திர மோடியின் வடிவில் இன்னமும் உயிர் வாழ்வதைப் பார்க்கிறோம்.

அரசியல் பெருந்தன்மை என்ன என்பதை, சென்னை மாநகராட்சியின் சார்பில் தனக்குச் சிலை வைப்பதாகச் சொன்ன தனது கட்சி மேயரிடம், "எனக்குச் சிலை வேண்டாம், கல்வி வள்ளல் காமராசருக்குச் சிலை வையுங்கள்" எனச் சொன்ன அறிஞர் அண்ணா அவர்களிடம் தெரிந்து கொள்ளட்டும். அதே காமராசர்அவர்கள் 1971 தேர்தலுக்குப் பின் உதகை "தமிழகம் மாளிகை"யில் ஒரு மாதம் தங்கி ஓய்வெடுக்க முதல்வர் கலைஞரிடம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராசாராம் நாயுடு அனுமதி கேட்ட போது, "காமராசர் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தலைவர் இல்லை, தமிழக மக்களின் தலைவர். அவர் ஒருமாதம் அல்ல, எவ்வளவு காலம் வேண்டுமானாலும் உரிமையோடு அரசு விருந்தினராக அங்கு தங்கலாம்" என்று கூறிய தலைவர் கலைஞரிடம் தெரிந்து கொள்ளட்டும்.

கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, தமிழகச் சட்டமன்றத்தில், ஒரு பிரச்சனையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்து விட்டு வெளியேறி விடுகின்றனர். அதன்பின் மின்சாரத்துறை தொடர்பான ஒரு முக்கிய விவாதம் நடைபெற வேண்டும். அதில் விவாதிக்க அதிமுகவினர் பெரும் ஆர்வத்துடன் இருந்தனர். இப்போது அதிமுக உறுப்பினர்கள் மன்றத்தில் இல்லையே என்று கருதிய முதல்வர் கலைஞர், தளபதி அவர்களையும், மூத்த அமைச்சர்கள் கோசி மணி, வீரபாண்டி ஆறுமுகம், கா.நா.நேரு ஆகியோரையும் அனுப்பி எதிக்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இருக்கும் அதிமுக உறுப்பினர்களை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அவர்களின் தலைவியைக் கேட்காமல் வர முடியாது. அவர் அனுமதி பெறக் காலதாமதமாகி விடும் என்பதால் வரவில்லை என்பது வேறு.

ஆனால் எதிர்க்கட்சியினர் இல்லாமல் சபையை நடத்தக்கூடாது. அவர்கள் சபைக்கு வந்து விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று கருதிய அரசியல் நாகரிகத்துக்குச் சொந்தக்காரர் முதல்வர் கலைஞர். ஜனநாயக மரபுகளைப் பேணி பாதுகாக்கக் கலைஞர் மேற்கொண்ட முயற்சி அது. அப்படிப்பட்ட அரசியல் நாகரிகங்களை பாஜகவினரிடமும், பிரதமர் நரேந்திர மோடியிடமும் எதிர்பார்ப்பது வீண். எட்டி மரத்தில் மாம்பழங்களை எதிர்பார்ப்பது நமது குற்றம்தான்.

Pin It