தமிழகம் நோக்கிய அமித்ஷாவின் வருகை அபாயத்தின் வருகை என்றே மக்கள் உணர்கின்றனர். அவர்களுக்கு இங்கே செல்வாக்கு இல்லை, வாக்குகளும் இல்லை, பிறகு ஏன் அவர்களைப் பார்த்து அஞ்சுகின்றீர்கள் என்று சிலர் கேட்கின்றனர்.

amit shah cartoonஅவர்களுக்கு இங்கு வாக்குகள் இல்லை. ஆனால், மத்திய அரசின் ஆட்சியாளர்கள் என்னும் முறையில் அதிகாரம் இருக்கிறது. கோடி கோடியாய்ப் பணம் இருக்கிறது. எது குறித்தும் கவலை கொள்ளாமல், அரசியல் அறம் பற்றிய சிந்தனையே இல்லாமல், எதனையும் செய்து முடிக்கும் பழைய வரலாறு இருக்கிறது. இதற்கு மேல் என்ன வேண்டும்? அதனால்தான் தமிழகம் அஞ்சுகிறது.

கடந்த நான்காண்டு காலப் பா.ஜ.க. ஆட்சியில் அடித்துக் கொல்லப்பட்ட சிறுபான்மையினர், தலித்துகள், நீட்தேர்விற்குப் பலியான இரண்டு மாணவிகள் நம் கண்முன்னே நிற்கின்றனர். 1000, 500 ரூபாய்த் தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, மணிக்கணக்கில், வங்கிகளின் முன்னே கால் கடுக்க நின்ற நடுத்தட்டு மக்கள் ஒருபுறம், 9000 கோடி, 11,000 கோடி என்று வங்கிக் கடன் பெற்றவர்கள் நாட்டை விட்டே தப்பித்துச் சென்றது மறுபுறம். ஸ்பெயின் தேசத்திலோ, அமெரிக்காவின் ஓர்லாண்டோவிலோ விபத்து என்றால், அடித்துப் பதறி அறிக்கைவிடும் பிரதமர், தூத்துக்குடியில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக வாய் கூடத் திறக்காத கொடுமை! இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த நாட்டை இந்து நாடு என்ற பெயரில், பார்ப்பன நாடாக்கிவிடத் துடிக்கும் அவர்களின் பதற்றம் நம்மைத் திகைக்க வைக்கிறது. உ.பி.யிலோ, கர்நாடகத்த்திலோ தங்கள் கட்சியின் சார்பில் ஒரு இஸ்லாமியரைக் கூடத் தேர்தலில் நிறுத்தாத அந்தக் கட்சி, இன்று, இந்தியாவின் அதிசயம் என்று உலகெலாம் வியந்து பார்க்கும் தாஜ் மகால் தூசி படிந்த மண்டபமாக மாறுவதைக் கண்டு அமைதி காக்கிறது. உங்களால் பாதுகாக்க முடியாது என்றால், இடித்துவிடுங்கள் என்று நீதிமன்றம் சினம் கொண்டு பேசும் நிலை இன்று வந்துள்ளது.

தமிழகத்தில் கூட்டணி அமைத்துப் போராடுவோம் என்கின்றனர் அமித்ஷாவும், இல. கணேசனும். அவர்களோடு இங்கு யார் கூட்டணி அமைப்பார்கள் என்று எண்ணிவிடக் கூடாது. அதற்கெல்லாம் தக்க தரகர்கள் இங்கு உள்ளனர். 2014இல் கூட்டணி அமைந்ததில்லையா! இப்போதும் அந்தத் தரகுப் பணிகள் தொடங்கிவிட்டன.

மம்தா பானர்ஜியும், யெச்சூரியும் கூறியுள்ள சொற்கள் நம்பிக்கை அளிக்கின்றன. காங்கிரசுடனும், பிற கட்சிகளுடனும் கூட்டு சேரச் சம்மதம். பா.ஜ.க.வை எதிர்ப்பதே எங்கள் முதல் நோக்கம் என்று அவர்கள் கூறியுள்ளதை, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வழிமொழிய வேண்டும்.

தமிழினத்தின் அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது!

Pin It