நாம் வாழும் சூழல் பல விதத்திலும் பாதிக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விஷயம். அதே சமயத்தில் இந்த உண்மையை சிலர் ஏற்றுக் கொள்ளும்போதே நாட்டின் வளர்ச்சிக்குத் தான் முன்னுரிமை அளிக்க வேண்டுமேயன்றி சுற்றுச்சூழலுக்கு அல்ல என்று அவர்களே வாதிடுகின்றனர். சுற்றுச்சூழலைப் பொருட்படுத்தாமல் வளர்ச்சியை எப்படி இவர்கள் அடைவது என்ற அடிப்படைக் கேள்வியை யாரும் எழுப்புவதில்லை. ஏனெனில் இது போன்ற அடிப்படைக் கேள்விகளை எழுப்பி மக்களைச் சிந்திக்க வைக்கும் பணியை ஊடகங்கள்தான் மேற்கொள்ள வேண்டும். அதை ஊடகங்கள் ஒருபோதும் செய்ததில்லை. செய்யாது என்பது அனைவரும் அறிந்ததே. ஏன்? இது போன்ற கேள்விகளுக்கு விடை காண இப்பிரச்சினையை மேலோட்டமாக பரிசீலிக்க முடியாது. அது அவ்வளவு எளிமையானதும் அல்ல, மிகவும் சிக்கலானதாகும். முதலில் நாம் இன்றைய ஊடக உலகைப் புரிந்து கொள்ள சில அடிப்படையான செய்திகளுக்குச் செல்வோம்.

சுதந்திரமாக உண்மையான தகவல் பெற முடியுமா?

நாம் வாழும் சமூகம் ஜனநாயகமானதா? சுதந்திரமானதா? ஆம் எனில் நாம் வெளிப்படையான உண்மையான தகவல்களைப் பெறுவதற்கும் நமக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். மக்கள் தங்களது சொந்த விவகாரங்களிலும் அரசிலும் பங்கேற்க தகவல்களைப் பெறுவதற்கு சுதந்திரமான வழிமுறைகள் இருக்க வேண்டும். ஜனநாயகம் என்பதற்கு எந்த அகராதியில் பொருள் தேடினாலும் இதுதான் இருக்கும். ஆனால், ஆளும் வர்க்கங்களும், ஆட்சியாளர்களும் ஜனநாயகத்திற்கு வேறு மாதிரி அர்த்தம் கூறுகிறார்கள். மக்கள் தங்களது சொந்த விவகாரங்களைக் கவனித்துக் கொள்வதிலும் தகவல்களைப் பெறுவதும் முடக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும். மக்களின் சிந்தனைகள் ஒரு போதும் ஆளும்வர்க்க நலன்களுக்கும் ஆட்சி அரசமைப்பிற்கும் எதிரான சிந்தனைகளாக உருவாகிவிடக்கூடாது என்பதற்கேற்ப கட்டுப்படுத்தப்பட்ட செய்தி பரிமாற்றம் அளிக்கப்பட வேண்டும். இதுவே அவர்களின் ஜனநாயகம் குறித்த பொருளாகும்.

பல நூறு ஆண்டுகளாக அரசமைப்பு தோன்றியதிலிருந்தே இதுதான் நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது. செய்தி அளிப்பதல்ல... செய்திகளைக் கட்டுப்படுத்துவதே நடைமுறையாக இருந்து வருகிறது. இணையதளங்கள், இமெயில் என தகவல் புரட்சி காலத்திலும் இப்படியா எனக் கேள்வி எழலாம். இது போன்ற எத்தனை தகவல் புரட்சிகள் வந்தாலும் இந்தப் போக்கில் மாற்றங்கள் ஏற்படாது. ஏனெனில் ஊடகச் சாதனங்கள் மக்களுக்கு செய்தியையும் அறிவையும் அளித்து சேவை புரிவதற்காக நடத்தப்படுபவை அல்ல. அல்லது எப்போதும் சொல்லப்படுவது போன்று ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணும் அல்ல. தமிழ் நாளிதழ்களான தினத்தந்தியும், தினமலரும், தினகரனும், வார இதழ்களான குமுதமும், குங்குமமும், தமிழகத்தின் கடைக்கோடியிலுள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ராமசாமிக்கோ கருப்பாயிக்கோ அறிவு புகட்டி சேவை செய்கிறார்கள் என்றால் யாராவது ஏற்றுக் கொள்ள முடியுமா?

இலாபத்திற்கும் கருத்து பரவலுக்கும்

ஊடகச் சாதனங்கள் முழுக்க முழுக்க இலாபம் நோக்கில் மட்டுமின்றி ஆளும்வர்க்க நலன்களுக்கேற்ற கருத்து பரவலாக்குவதற்கும்தான் நடத்தப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளும்போது ஊடகச் சாதனங்கள் குறித்த மாயைகள் களையப்படும். இப்புரிதலின் பின்னணியில் இப்பிரச்சினையை அணுகுவோம்.

கட்டுப்படுத்தப்படுகிறதா? நடத்தப்படுகிறதா?

ஊடகச் சாதனங்கள் சர்வதேச அளவில் துவங்கி, தமிழகம் வரை யாரினால் நடத்தப்படுகின்றன என்பது யாருக்கும் தெரியாத இரகசியமல்ல. ஸ்டார் டி.வி, நெட்வொர்க், CNN, Sony, ESPN, பிரெஞ்ச் ஹாவாய், ஜெர்மன் உல்ப், பிரிட்டிஷ் ராய்ட்டர், அமெரிக்க அசோசியேட்டட் பிரஸ், AFP, UPI போன்றவையும் தமிழகத்தில் துவங்கி உலகளாவிய அளவில் வளர்ந்துள்ள சன் டி.வி. நெட்வொர்க் போன்றவையும் பெரும் தொழிற் நிறுவனங்களாகும். பெரும் முதலாளிகளின் நிறுவனங்களே இவற்றை நடத்துகின்றன என்பது முக்கியமானது. சுருக்கமாகக் கூறினால் ஊடகங்கள், இந்நிறுவனங்களினால் உருவானவை. ஸ்டார் டிவியும், சன் நெட்வொர்க்கும் தனி பெரும் வணிகக் நிறுவனங்களாகும். எனவே, இயல்பாகவும், இயற்கையாகவும் ஊடக முதலாளிகள் பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களுக்குத் துணை போவரே அன்றி ஒருபோதும் எதிராக நிற்கமாட்டார்கள்.

பங்குதாரர்கள்

இந்தப் பெரும் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த அம்சமாக ஊடகங்கள் இருப்பதால் இவை பங்கு சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதிக இலாபம் ஈட்டுவது, இருக்கின்ற சுரண்டல் ஆட்சி அமைப்பைத் தக்க வைப்பது, நாட்டின் அதிகார பீடங்களை மேலும் உறுதியாக்குவது போன்றவையே இவற்றின் திருப்பணிகளாகும். வளரும் நாடுகளின் சூழலை நாசப்படுத்தியும், சுரண்டியும் கொழுத்த இலாபம் ஈட்டுகின்றன. டூபான்ட், என்ரான், மிச்சுபுஷி, ஹூண்டாய், Protecor and gamble ஸ்டெர்லைட், வால்மார்ட், ஹிந்துஸ்தான், லீவர், கோக், பெப்சி இவற்றுக்கு சிறந்த உதாரணங்களாக திகழ்கின்றன. இந்த நிறுவனங்களின் அபாயகரமான உற்பத்தி செயல்பாடுகளையோ, அவர்களின் உற்பத்தியே நமது வளங்களைக் கொள்ளையடிப்பதாக உள்ளதையோ இந்த ஊடகங்கள் வெளியிடுவதில்லை. இன்னும் கூடுதலாக, இந்த நிறுவனங்களில் ஊடககளின் முதலாளிகளே பங்குதாரர்களாகவும் உள்ளனர். இதில்தான் சன் டிவி நெட்வொர்க் ஏன் ஒருபோதும் இறால் தொழிற்சாலைகள் பற்றியும், முக்கியமாக ஆங்கில  மருந்து நிறுவனங்களின் ஊழல்களைப் பற்றியும் செய்தி வெளியிடாது என்ற மர்மத்திற்கான முடிச்சு உள்ளது.

நாடுகளின் அரசுகளைவிட வலிமையானவை

இவையே இன்றைய ஊடகங்கள்வின் புரவலர்கள். எனவே, ஊடகங்களில் என்ன செய்திகள், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட வேண்டும் என்பதை அதன் முதலாளிகளே முடிவு செய்கின்றனர். இங்கு ஊடக நிறுவனங்கள் ஸ்டார் டிவி போன்ற தேசங்கடந்த தொழிற்கழகங்களாக இருக்கின்றன. இக்கழகங்களின் ஆண்டு வருமானமே சாதாரணமாக ஏழை நாடுகளின் மொத்த சராசரி வருமானத்தைவிட அதிகமானது என்பதையும் அந்நாடுகளின் அரசுகளைவிட வலிமையானவை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். பல நாடுகளின் அரசுகளைக் கவிழ்க்கக் கூடிய அளவில் செயல்படக் கூடியவை.

ஊடகங்கள் சாதனங்களான பத்திரிகைகள் எப்போதுமே அதன் விற்பனையை நம்பி நடத்தப்படுவதில்லை. முழுக்கவே விளம்பரங்களை வைத்தே நடத்தப்படுகின்றன. இப்பத்திரிக்கைகள் விற்காவிட்டாலும் அவற்றில் வரும் விளம்பரங்களின் மூலமே கொழுத்த இலாபம் அடைந்துவிடுகின்றன. (உங்கள் சந்தேகம் எழுந்தால் குமுதத்தில், புதிய தலைமுறையில் வெளியிடப்படும் விளம்பரங்களை எண்ணிப் பாருங்கள்). தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பொறுத்தவரை முழுக்கவே பெரும் முதலாளித்துவக் நிறுவனங்களின் விளம்பரங்களைச் சார்ந்துள்ளன. ஆகவே, வருவாய்க்கு ஆதாரமாக உள்ள நிறுவனங்கள் சூழலுக்கு இழைக்கும் அட்டூழியங்களைப் பற்றி ஊடகங்கள் கண்டு கொள்ள வாய்ப்பில்லை.

இன்னொருபுறம் அரசு விளம்பரங்கள். அரசு தூக்கி எறியும் இந்த எலும்புத் துண்டுகளுக்காக பெரும்பாலான பத்திரிகைகள் அரசை விமர்சிப்பதில்லை. அப்படியே விமர்சிப்பதாக கூறிக் கொள்பவை தடவித்தான் கொடுக்கின்றன.

இந்த ஊடகங்களில் பணிபுரியும் ஒரு சில நேர்மையான பத்திரிகையாளர்கள் நீங்கலாக பெரும்பாலானவர்கள்  பெரும் முதலாளிகளின்/ ஆளும்வர்க்கங்களின் நலன்களுக்காக பொய்களை எழுதினாலும் அல்லது நிறுவனங்கள்/ அரசு அதிகாரிகளின் பொய்யான தகவல்களை அப்படியே எழுத வேண்டும். அதற்கு தாங்கள் எழுதுவதை நம்ப வேண்டும். நம்புவதைத் தான் எழுத முடியும். இந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு பல காலமாகிவிட்டது. உம். சேது சமுத்திரத் திட்டம் வளர்ச்சிக்குத் தான் என்று அரசு கூறுவதை அப்படியே நம்ப வேண்டும். அப்படி நம்ப முடியாதவர்கள் அதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ள முடியாதவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது. இதில் அவர்கள் ஏமாறுவதைப் போல மக்களையும் ஏமாறச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்த சுழற்சியாக அவர்களின் பணி உள்ளது. சூழலையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்கும் அரசின் மெகா திட்டங்களை வெளிப்படையாக  புகழ்ந்து எழுதினால்தான் பத்திரிக்கையாளர்களாக நீடிக்க முடியும் என்பதே இன்றைய நிலை. இதே போன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், உலகமயமாக்கல் கொள்கைகள் அனைத்தையுமே அவர்களும் நம்ப வேண்டும். மக்களையும் நம்ப வைக்க வேண்டும். இந்தப் போக்கை விமர்சித்தால் கூட அவர்கள் அங்கு பணிபுரிய முடியாது. 

புகழ் பெற்ற அரசியல் விமர்சகர் நோம் சாம்ஸ்கி கூறினார்.

அரசிற்கும், இந்த சுரண்டல் அமைப்பிற்கும், அரசின் அனைத்துக் கொள்கைகளுக்கும், மக்களே விரும்பி ஏற்றுக் கொள்ளும்படி அவர்களே இசைவை (ஒப்புதலை) தெரிவிக்க வேண்டும். மக்களின் இசைவை உற்பத்தி செய்யும் புண்ணிய காரியத்தையே ஊடகங்கள் செய்கிறது. இனியும் செய்யும். மக்கள் விழித்துக் கொள்ளாதவரை.

- சேது ராமலிங்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It